Advertisement

அத்தியாயம் 16.

மீனாட்சி  அவர் ஆரம்பித்து வைத்ததை எவ்வாறு யாருக்கும் எவ்வித பாதிப்பும் வராமல் முடித்து வைப்பது என தீவிரமாக யோசித்தார்.

நேரம் மாலை 5.30 அறிவு வேலை களைப்பில் சோர்வாக வீட்டிற்கு வந்தாள். அவளை பார்த்த மீனாட்சி அருகில் சென்று கையில் வைத்திருந்த அவளின் பேக்கை வாங்கி மேசையில் வைத்துவிட்டு. பாத்ரூமில் ஹீட்டர் போட்டுவிட்டு வந்து ” குளிச்சிட்டு வா மா அறிவு நான்  காபி தர்றேன்.” என்று கூறிவிட்டு சிறிய சமையல் அறைக்குள் சென்றார் மீனாட்சி.

சற்று நேரத்தில் அறிவும் குளித்து வந்ததும். காபி குடித்தபடியே ” ஏன் பாட்டி இன்னைக்கு ரொம்ப டல்லா தெரியுறிங்க?. அங்க ராசாத்தி மாதிரி இருந்த இடத்துல இருந்தா உங்களுக்கு  எல்லாம் பண்ண அத்த மற்ற வேலையாள் எல்லாரும் இருக்கிறாங்க. அதையெல்லாம் விட்டு ஏன் பாட்டி எனக்காக இந்த வயசுல இப்டி கஷ்டப்படுறிங்க. இதை பார்க்க எனக்கு கஷ்டமா இருக்கு பாட்டி. ” என்று மனம் வருந்தினாள் அறிவு.

” இதுல எனக்கு எந்த கஷ்டமும் இல்ல மா. சும்மா இருந்து சாப்பிட்டா கண்ட நோயும் வரும். சின்ன சின்ன வேலைதானே இது கஷ்டமில்ல. உனக்கு பண்ணாம யாருக்கும் பண்ணப்போறேன். எனக்கு இப்ப வேற பிரச்சினை மா. நான் சொல்லுறேன். நீயே என்ன பண்ணலாம்னு சொல்லு. ” என்று கூறிவிட்டு. ஜானகி வீட்டிற்கு  அழைத்து பேசியதையும். அவர் வருவார் என அவர்களுக்கு தோணுவது போலவும் சொன்னார்.

” நீயே சொல்லு அறிவு நம்ம வீடு இருக்கிற நிலையை உன் அம்மா பார்த்தா நம்மலை உண்டு இல்லனு பண்ணிடமாட்டாளா? அதை தடுக்க நாம ரெண்டு பேரும் ஊருக்கு போகலாமே. இசையை கேட்டா அவன் பிஸினஸ் விசயமா ஃ பாரின் போயிருக்கானு சொல்லிடலாம். அங்கதான் இசை இல்லயே நீ வந்திருக்கிறதை இசைக்கு தெரியாம நான் பார்த்துக்கிறேன். அது என் பொறுப்பு.” என்றார் மீனாட்சி.

” அவங்களை அம்மா சொல்லாதீங்க பாட்டி என்னை பெத்த அம்மாவா இருந்தா எனக்கு இப்டி கஷ்டம் வர விட்டு இருப்பாங்களா? எனக்கு பிடிக்காத இடத்துக்கு  நான்  போய் எப்டி சந்தோசமா வாழுவேன்னு நினைச்சாங்க.  உங்க பேரன் விருப்பத்தை மதிச்சு நான் அன்னைக்கு விருப்பமில்லனு அவ்வளவு சொல்லியும் கேட்காம அவர் பண்ணினதுக்கு ஆதரவு காட்டினதாலதானே.  என்ன பண்ணினாலும் இவளுக்கு கேட்க ஆள் இல்லனு இவ்வளவு கொடுமையும் எனக்கு பண்ணினாரு  அதனாலதானே அவரை பார்க்கப்பிடிக்காம நான் இவ்வளவு தூரம் தனிய வந்து இந்தா இதையும் சுமந்துகிட்டு கஷ்டப்படுறேன். இனி அவங்களை அம்மானு சொல்லாதிங்க பாட்டி பிலீஸ் பத்தோட ஒன்னா நானும் அங்க வளர்ந்தேன் அவ்வளவுதான். வளர்த்தாங்க படிக்கவச்சாங்க. நல்லா துணிமணி எடுத்து தந்தாங்க யாரும் இல்லானு பீல் பண்ணவைக்காம எல்லா பண்டிகையும் கொண்டாடினோம். அங்க இருந்தவரை குறை எதுவும் இல்ல நல்லா பார்த்துக்கிட்டாங்க. எங்க எல்லாருக்கும் தெய்வம் மாதிரிதான் இருந்தாங்க. “

” ஆசிரமம் நடத்துரது அவ்வளவு ஈசி இல்ல பாட்டிமா எங்களுக்காக அப்பா இறந்தபிறகும் தனி ஆளா நின்னு ரொம்ப கஷ்டப்பட்டு இருக்காங்க. இந்த காலத்துல ஒரு குடும்பமே ஆண்  தலைவர் இல்லாம நடத்துரது பொருளாதார  ரீதியாக எவ்வளவு கஷ்டம். அவங்க பிஸினஸ்ல வர பணம் எல்லாம் இதுக்குதான் போட்டுருக்காங்க. நான் அங்க பத்து வயசுலதான் வந்தேனாம். அதுக்கு முன்ன எங்க இருந்தேன்னு எனக்கு நினைவு இல்ல பாட்டி. அங்க வந்து சேர்ந்ததுல இருந்து நான் எந்த கஷ்டமும் பட்டதுல்ல மூணு நேர சாப்பாடும் வாய்க்கு ருசியா இருக்கும். மொத்ததுல ஆசிரமம் என்ற பேருல கடமைக்கு பண்ணாம அனுபவித்து நேர்மையா உணர்ந்து நடத்தினாங்க. ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கிறாங்க. “

” படிச்ச நாங்க எங்களால முடிஞ்ச அளவு பண உதவி பண்ணுறோம். அங்க இருந்தவரை சின்ன பசங்களுக்கு பாடம் சொல்லிக்கொடுத்தோம். இப்டி பண்ணினோம். படிப்பு வராத பொண்ணுங்க ஆசிரமத்துக்கு உதவியா இருந்தாங்க அங்க இருக்கிற சின்ன பசங்களை கவனிச்சிப்பாங்க. இப்டி உதவி பண்ணணும் என்ற எண்ணமே அவங்களை பார்த்துதான் எனக்கு வந்துது. சொல்லப்போனா என் ரோல் மாடலே அவங்கதான். தெய்வமா நினைச்ச அவங்களை இப்ப நான் வெறுக்க காரணம் உங்க பேரன் தான். நான் அவங்களை பார்க்க விரும்பல பாட்டி. அவங்க எனக்கு பண்ணின பெரிய உதவிக்கு பரிகாரமா நானே இன்னும் சில வருசங்கள் போனதும் தனிய ஆசிரமம் ஆரம்பித்து அவங்களை மாதிரியே ஆதரவு இல்லாத குழந்தைகளுக்கு அன்பா அரவணைச்சி ஆதரவு கொடுப்பேன். இதுதான் என் இலட்சியம் பாட்டி. ” என்று நீண்ட நேரம் மனதில் உள்ளவற்றை எல்லாம் கொட்டி தீர்த்தாள் அறிவுமணி.

” நான் சொல்லுறேன்னு தப்பா நினைக்காத அறிவு. ஜானகி என் பொண்ணுதான். இருந்தாலும் சொல்லுறேன். என் பொண்ணை பத்தி என்னை விட அதிகமா நீ பேசி நான் தெரிஞ்சிக்கிட்டேன். கேட்கவே ரொம்ப சந்தோசமா இருக்கு அறிவு. ஆனா இவ்வளவு நல்லது பண்ணின ஜானகி உன் திருமண விசயத்துல தவறா முடிவெடுத்திருப்பாளா?. ஜானகி இங்க வந்து போகும் போது அவளோட பேச்சு அதிகமா உன்னை பற்றி தான் பேசுவா. நீ சிரிச்சா அழகா  இருப்ப.  நீ படிப்புல கெட்டி. நீ என்ன படிக்க விரும்புறியோ அதுக்கு என்ன செலவானாலும் சொத்தை வித்தாவது படிக்கவைக்கணும். ஏனோ தெரியல மத்த பிள்ளைகளை விட எனக்கு அதிகமா அறிவை பிடிக்குது. அப்டினு ஜானு அதிகமா உன்னை பத்திதான் பேசுவாள். அவளோட பேச்சை கேட்டே உன்னை எங்களுக்கு பார்கத்தோணும். ஆனா எல்லாரையும் விட்டு உன்னை அழைச்சிட்டு வந்தா அது தப்பாகிடும் நீங்க கண்டிப்பாக அறிவை பார்ப்பிங்க அப்டிங்கிற நம்பிக்கை எனக்கு இருக்குனு சொல்லுவா அறிவு. “

மீனாட்சி சொன்னதை கேட்டதும் அறிவின் மனதில் ஜானகி  அவளை வளர்த்த விதம் கண்முன் வந்து சென்றது. தண்ணீர் குடித்து தொண்டையை செருமி அறிவை அவரின் பேச்சை கேட்கும் படி பண்ணிவிட்டு தொடர்ந்து பேசினார் மீனாட்சி.

” நீ ஒருத்தன் மேல ஆசைப்படுற.  அவன்  உனக்கு செட் ஆவான் உன் இலட்சியத்துக்கு உதவி பண்ணுவான்னு நினைச்சி நீ யாரையாவது ஒருத்தனை கல்யாணம்  பண்ணுறன்னே வைப்பம். ஆனா அவனோடான வாழ்க்கை உனக்கு பொய்யாகிடுச்சின்ன  என்ன பண்ணுவ அறிவு. அப்புறம் இருந்து அழுது என்ன ஆகப்போகுது. உங்களுக்கு இவ்வளவு நன்மை பண்ணின ஜானு உனக்கு திருமணம் விசயத்துல கெட்டதா பண்ணும். ஏன் இசை மட்டுதான் உனக்கு விருப்பமில்லாம உன்னை கட்டினான். அவசரப்பட்டு வாழ்க்கையை ஆரம்பிச்சான். அதுக்கும் அவன் சைட்ல ஒரு காரணம் இருக்கும். அவன் அப்டி பண்ணிட்டான்னு நானும் தாமரையும் அவனை ஒதுக்கி வச்சிட்டோம். இப்ப எங்க எப்டி இருக்கிறானோ என் பேரன் அதுவே எங்களுக்கு தெரியாது. இது எல்லாம் யாருக்காக உனக்காக. ஏன் இத்தனை வருசத்துல நான் என் மருமக தாமரைகிட்ட எதுவுமே மறைச்சதே இல்ல ஆனா அதுக்கும் தெரியாமதானே உன் மனக்கஷ்டம் புரிஞ்சி ஆறுதலுக்காக இங்க அனுப்பி வச்சேன். அப்போ நாங்க கெட்டவங்களா? தெரியுறமா? உனக்கு.” என்றார் அவர்களையும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை என்கிற ஆதங்கத்தில் பேசினார்.

” நான் உங்களை யாரையும் வேணாம் கெட்டவங்கன்னு நினைக்கல பாட்டி.”  என்றாள் பதட்டத்துடன்.  எங்கு பாட்டி கோவித்துக்கொள்வாரோ. என்று பயந்தாள் அறிவு.

” இரண்டு மூணு வருசத்துல உன் மனக்காயம் ஆறினதும் இசையோட சேர்ந்து வாழ்ந்து பாரு அப்ப அவனோட மனசு புரியும். உன்னையும் பாதுகாப்பா பார்த்துப்பான். உன் இலட்சியத்தையும் நிறைவேற்றி உனக்காக வாழ்வான். ஆனா நீ இசையை வரச்சொல்லும் வரை நாங்க அவனுக்கு நீ வீட்டுக்கு வந்த விசயத்தை சொல்லமாட்டோம். அவனா யார் மூலமாவது தெரிஞ்சு வந்தா நீ அவனை சேர்த்துகிறதும். சேர்க்காமபோறதும் உன் விருப்பம். அது உன் வாழ்க்கை நான் எதுவும் தடை சொல்லமாட்டேன். நேரம் ஒன்பது மணி ஆகிட்டு இப்ப தூங்கு. நாளைக்கு யோசித்து பதில் சொல்லு. ”  என்று நீண்ட நேரம் பேசிய களைப்பில் தண்ணீர் குடித்தார் மீனாட்சி.

அவரின் மகளும் பேத்தியும் சேரவேண்டும். பேத்தி தாயை தவறாக நினைக்ககூடாது. அவள் பேரனை மன்னித்து இருவரும் காலத்துக்கும் சேர்ந்து வாழவேண்டும். என பல கனவுகளோடு அதை செயற்படுத்த தனி ஒருவராக மூவருக்கும் இடையில் போராடுகிறார் மீனாட்சி.

அறிவும் மீனாட்சி குடுத்த பாலை குடித்துவிட்டு படுத்துக்கொண்டாள்.

அவளும் இரவு முழுவதும் நன்கு யோசித்துவிட்டு அவளின் மனதை மதித்து தக்க சமயத்துல அவளுக்கு யாரும் செய்ய முன் வராத ஒரு பெரிய உதவியை அந்த வீட்டு தலைவியே பண்ணியிருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் வயது முதிர்ந்த காலத்தில் இந்த குளிரிலும் வீட்டு வேலைகள் செய்து கஷ்டப்படுகிறார். என அனைத்தையும் யோசித்தாள் அறிவு.

 அடுத்த நாள் காலையில் எழுந்து மீனாட்சிக்கு காபி கலந்து கொடுத்து அவளும் குடித்துவிட்டு. ” பாட்டி உங்களுக்காக  இன்னும் ரெண்டு நாளில் நாம ஊருக்கு போகலாம். ஆனா திடீரென்று உங்க பேரன் வந்தா அதுக்கு நீங்க சரியான முடிவு எடுக்கணும். எனக்கு மனம் மாறும்னு நான் நினைக்கல. நீங்க தான் பார்த்துக்கணும். இதுக்கு சரின்னா நாம போகலாம். இன்னைக்கு நான் ஸ்கூல் போய் வேலையை ரிசைன் பண்ணுறேன். ” என்று கூறிவிட்டு பள்ளிக்கு போவதற்கு தயாராகினாள் அறிவு.

” சரி மா நீ வா பார்த்துக்கலாம்.” என்று விட்டு காலை உணவிற்கு இட்லி ஊத்தினார் மீனாட்சி.

மீனாட்சியும் அவர் தோழி காமாட்சி வீட்டிற்கு  சென்று அவர்கள் ஊருக்கு புறப்படும் விசயத்தை கூறிவிட்டு சற்று நேரம் பழைய விசயங்களை பேசிவிட்டு மாலை அறிவு வீட்டிற்கு வரும் நேரம் வந்தார்.

அவரும் வந்து ஐந்து நிமிடத்தில் அறிவும் வந்துவிட்டாள்.

” பாட்டி வேலையை ரிசைன் பண்ணிட்டேன். எல்லாம் எடுத்துவைக்கலாம் இன்னைக்கு நைட்டே போகலாம்.  நான் இட்லி ஊத்துறேன். எடுத்துட்டு போகலாம். ஏன்னா இரவு நேரம் பயணம் பண்ணுறது எனக்கு ரொம்ப பிடிக்கும் நாளைக்கு காலையில போறதை விட இன்னைக்கே கிளம்பி காலையில வீட்டு போயிட்ட ரெஸ்ட் எடுக்கலாம்.”  என அவர் கேட்காமலே பதில் கூறினாள் அறிவு.

அவரும்  சரி எப்படியோ ஜானகி வரும் முன் அறிவு மட்டுமாவது வீட்டில் இருந்தால் தான் அவரை சமாளிக்க முடியும். என நினைத்து அவரின் உடைகளை எடுத்துவைக்க சென்றார்.

அவர்கள் இன்றே புறப்படுவது அவளின் தோழிக்கு தெரிந்ததும் இரவு உணவை தாயாரித்து எடுத்துவந்தாள்.

பின் பெண்கள் இருவரும் சிறு வயது கதைகளை பேசியபடியே அறிவின் பெட்டியை அடுக்கினார்கள் இருவரும்.

அதன் பின் அவர்கள் செல்லும் போது அறிவின் தோழி ஆசரமத்திற்கு பணமும் ஜானகிக்கு ஒரு கடிதம் புடவை சின்ன குழந்தைகளுக்கு புது உடை என குடுத்தாள்.

அதையும் வாங்கி வைத்துவிட்டு பாய் காட்டி விட்டு  காரில் சென்றார்கள்.

அடுத்த நாள் காலையில் தான் வீட்டிற்கு வந்தார்கள். ஓட்டுநர் இரவு நேரம் என்பதால் வேகம் குறைத்துதான் ஓட்டினார். வீட்டிற்கு வந்து காலிங் பெல் அடிக்கவும் ஜானகி என நினைத்து பயந்தபடிதான் தாமரை கதவை திறந்தார்.

அங்கு அறிவும் மீனாட்சியையும் பார்த்தவள் உறைந்துவிட்டார். சற்று மேடிட்டு இருந்த அறிவின் வயிறு அவருக்கு பல கதைகளை சொல்லியது. அறிவிடம் எதுவும் பேசாமல் மீனாட்சியின் கையில் இருந்த பேக்கை வாங்கிக்கொண்டு உள்ளே சென்றார் தாமரை.

இந்த நேரத்தில் யார் என பார்ப்பதற்கு வீட்டில் இருந்தவர்கள் ஹாலிற்கு வந்துவிட்டார்கள்.

இருவரிடமும் யாரும் எதுவும் பேசவில்லை. முத்தரசனுக்கு கேள்விகள் மண்டையை குடைந்தது. கோவில் சென்ற அம்மாவும். வீட்டை விட்டு சென்ற அறிவும் இந்த நேரத்தில் இங்கு எப்படி என்று யோசித்தபடி நன்கு விடிந்ததும் தாயிடம் கேட்டுக்கொள்ளலாம் என நினைத்து அவரும் சென்றுவிட்டார்.

இரண்டு நாள் டைம் கேட்ட அறிவு               ‘ அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் ‘ என்ற பழமொழிக்கு  ஏற்ப அவசரத்தில் வேறு ஒரு ஆணை சைட் சேப்பில்  பார்த்து இசை என நினைத்து எங்கு அவளை பார்த்துவிடுவானோ என நினைத்து.  அவன் அவளை கண்டுபிடிக்கும் முன் அவனின் வீட்டிற்கு செல்வதே மேல் என நினைத்து  அவசரமாக அன்றே மதுரை புறப்பட்டு வந்துவிட்டாள்.

கோயம்புத்தூர் கங்கா மருத்துவமனை.

” என்ன சார் சென்னை கோவை பஸ் விபத்துல இன்னும் ஒரு பேசண்ட் மட்டும் தான் உறவுகள் யார்னே தெரியாம அவரை பற்றிய விபரமும்  எதுவும் தெரியாம  இருக்கு. மேலிடமும் நமக்கு பிரசர் கொடுக்கிறாங்க. சேர்த்தவங்க சேர்த்துட்டு போய்ட்டாங்க. பத்திரிக்கையில கொடுக்கலாம்னு பார்த்தா அதுக்கும் நம்ம கை காசுதான் போடணும். சரி அப்டியாவாது பண்ணலாம்னு பார்த்தா கண்ணாடி குத்தி முகமெல்லாம் காயம் சரியா ஆளை அடையாளம் காண முடியல. த்ரி டேஸ் ஆகிட்டு பேசன்ட் இன்னும் கண் முழிக்கல. நாம என்னதான் பண்ணமுடியும். ” என்று டாக்டர்கள் இருவர் பேசிக்கொண்டார்கள்.

தமிழ் இரண்டு நாட்களாக ஒரு முக்கிய தேவைக்காக இசையை அழைத்தபடியே இருக்கிறான். அவனின் கைபேசி நிறுத்திவைக்கப்பட்டிருப்பதாக பதிவு செய்த பெண் குரல்  அழைக்கும் நேரமெல்லாம் சொல்லியே தமிழை பதட்டப்பட வைத்தது.

ஜான் தினேஷ் இருவரிடமும் கூறினான் அவர்களும் அழைத்து ஓய்ந்து போனார்கள்.

அன்று வேலையை முடித்து தாமதமாகத்தான் வீட்டிற்கு வந்தான் தமிழ்.

மலரும் அவனுக்கு உணவு கொடுத்ததும் இரவு பாலும் கொடுத்தாள். பாலை தமிழ் பார்த்துவிட்டு மேசையில் வைத்துவிட்டான்.

அதைபார்த்த ராமு நீலா இருவரும் சிரிக்கவும் மலர் அவனை முறைத்துவிட்டு. ” ஒரு நாள் பண்ணினா தினமும் அப்டியே பண்ணுவாங்கன்னு இல்ல ஒழுங்கா பாலை குடிச்சிட்டு உள்ள வா ” என்று கோபத்தில் ஒருமையில் பேசிவிட்டு அவளின் அறைக்குள் சென்றுவிட்டாள்.

தமிழும் மலரின் பின் சென்றான்.

” பாலை குடிச்சியா இல்லயா? என் மேல நம்பிக்கை வரலயா? என்ன.”என்றாள் அமைதியாக.

” குடிச்சிட்டேன் நான் எங்க அப்டி சொன்னேன்.” என்றான் தமிழும் பட்டும் படாமலும்.

” குடிச்ச மாதிரி தெரியலயே எனக்கு பின்னாடியே வந்து நிக்கிற. இப்பதான் பால் காச்சி சுடச்சுட கலந்து தந்தேன். அதை எப்டி நீ இவ்வளவு வேகமா குடிச்சிட்டு வரமுடியும்.” என்றாள்.

யார் சொல்வது சூடு நெருப்பு எல்லாம் அவனுக்கு மட்டும் குளிரும் என.

” சூடு எனக்கு ஒரு பிரச்சினையே இல்ல.” என்றான்.

” ஓஹோ சரி அது இருக்கட்டும். ஆமா நீ உன் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்கிற என்னை பத்தி. இவ லூசு யாருமில்லாதவ. இப்டிதானே நினைக்கிற அதனாலதான் நீ உன் விருப்பத்துக்கு நடந்துக்கிற. சரி என்னை விடு இது உனக்கும் பிள்ளைதானே இதுக்காக இதுவரை நீ என்ன பண்ணிருக்க ஏதாவது ஒன்னு சொல்லு பார்ப்போம். ” என்றாள் குழந்தையை காட்டி.

” நான் என்னையே மன்னிக்கமுடியாம இருக்கிறேன் எதுக்காக நான் ஜெயிலுக்கு போனேனோ. அந்த தவறை நானே பண்ணிருக்கேன். அப்போ எப்டி சாதாரணமாக உன்னோட என்னால பேசவோ வாழவோ முடியும். இது என்ன நாம முறைப்படி கல்யாணம் பண்ணி சந்தோசமாக காதலோட வாழ்ந்து வந்த பிள்ளையா?. நீ இதை கலச்சிருக்கணும். ஏன் அப்டி பண்ணல?” என்றான் தலையை குனிந்தபடி.

அவனின் அருகில் வந்து சட்டையை பிடித்து கத்தினாள் மலர். ” என்ன சொன்ன இப்ப என்ன சொன்ன நீ கலச்சிடனுமா? ஏன் நானும் இதுவும் உனக்கு பாரமா இருக்கிறோமா? ஆமான்னு ஒரு வார்த்தை சொல்லு நானும் என் குழந்தையும் நீலாவும் இந்த நிமிசமே இந்த ஊரை விட்டே போயிடுறோம். நீ முன்ன மாதிரி உன் வழியை பார்த்துட்டு போ ” என்றாள் கண்ணில் நீர் வந்தது.

” ஏய் பஞ்சுமிட்டாய் வாயை மூடுடி விட்டா ஓவரா பேசிட்டே போற” என்று கையை ஓங்கிய படி சத்தமாக கத்தினான் தமிழரசு.

அவனது சத்தம் ஓங்கி ஒலிக்கவும் மலர் மிரண்டு கண்களை உருட்டியபடி கட்டிலில் இருந்துவிட்டாள்.

இந்த ஊடல் தீருமோ? இல்ல பெரிதாகுமோ? காலத்தின் கையில்.

Advertisement