Advertisement

அத்தியாயம் 15.

தாமரை இலை தண்ணீர் போன்று ஒட்டியும் ஒட்டாமலும் மலரின் வாழ்க்கை
சென்றது. தமிழ் அவள் கேட்டால் பதில் சொல்வான். இல்லையென்றால் வீட்டில் இருக்கும் நேரம் அடிக்கொருதரம் அவளை பார்த்துக்கொண்டிருப்பான்.

மலரும் அவனுடன் முன்புபோன்று அதிகமாக பேசுவதில்லை. அவளால் அவள் பேசி அதற்கு அவன் பதில் மட்டும் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வாழும் காலம் வரை எங்கு வாழ்க்கை இவ்வாறே சென்றுவிடுமோ என்கிற பயம் அவளை ஆட்கொண்டது.

முதல் குழந்தை அதை எவ்வாறு பெற்றெடுப்பது என பயம். தமிழும் அவளை அன்பாக ஆதரவாக அரவணைத்து செல்லவில்லை என்கிற கோபம். என அனைத்தும் அவளை ஒருவழியாக்கியது. இதை யாரிடமும் பகிரவில்லை.

முன்பு போல் ராணியையும் சந்திப்பதில்லை. அவளின் மனக்கவலையை பயத்தை அவளிடம் சொல்லி ஆறுதல் தேட வழியின்றி அவளுக்குள்ளேயே ஒரு பிரளயத்தை உருவாக்கினாள். ஆனால் புதுவிதமாக தமிழுடன் பேச நினைப்தை அவளின் குழந்தையுடன் பேசினாள் மலர்.

தினமும் அவள் வேலை முடித்து ஓய்வாக இருக்கும் நேரத்தில் குழந்தையுடன் பேசுவாள். அதே போன்று இன்று அவளுக்கு ஸ்கேன் எடுத்தார்கள். அதில் அவளை பார்க்கும் பெண் டாக்டர் ” ஏன்மா செக்கப் வரும் பொண்ணுங்க முதல் ஸ்கேன்லயே என்ன குழந்தைன்னு தெரிஞ்சிக்க ஆர்வமா இருப்பாங்க. நீ என்ன இது உனக்கு மூணாவது கடைசி ஸ்கேன் நானும் கேட்பனு பார்க்கிறேன். நீ அதைபற்றி நினைக்கிற மாதிரியே தெரியலயே. இல்ல உனக்கு இதெல்லாம் தெரியாதா?. ” என்றார் டாக்டர்.

அதற்கு மலரோ ” இல்ல மேடம் முதலாவது ஸ்கேன்ல எனக்கு தெரியாது கேட்கணும்னு. ஆனா இரண்டாவது ஸ்கேன் வரும்போது என்னை ஆழைச்சிட்டு வந்த மாலதி அக்கா எல்லாம் விபரமா சொல்லித்தந்தாங்க. நானும் எல்லாம் கேட்டுக்கிட்டேன். அப்புறம் தான் நினைச்சேன். இது நமக்கு முதல் குழந்தை எனக்கு இந்த குழந்தை தான் வேணும் அப்டின்னு எந்த எதிர்பார்ப்பும் இல்ல. ஆணோ பெண்ணோ இரண்டும் நான் தான் பெறப்போறேன். இரண்டுக்கும் ஒரே வலிதான். பெண் வேணும் நினைச்சி ஆண் பிறந்தா வேணாம்னா சொல்லப்போறேன். இல்லயே என் குழந்தையை நான்தான் தாலாட்டி சீராட்டி வளர்க்கப்போறேன். பழைய அம்மாக்களுக்கு இதெல்லாம் கிடையாது பிறந்ததும் தான் பார்த்து தெரிஞ்சிப்பாங்க. அதுல ஒருவித சந்தோசம் இருக்கும். அதே மாதிரி நானும் குழந்தை பிறந்ததும் தெரிஞ்சிக்கிறேன். எங்க அம்மா பொண்ணா பிறந்திருக்கா? இல்ல அவரோட அப்பா ஆணா எங்களுக்கு பிள்ளையா பிறந்திருக்காரானு தெரிஞ்சிக்கிறேன். இப்ப சொல்லுங்க பிள்ளை எப்டி இருக்கு.” என்றாள் வயிற்றில் கை வைத்து தடவியபடியே.

” நீயும் சரி உன் பிள்ளையும் சரி ரொம்ப ஆரோக்கியமா இருக்குறிங்க முன்ன விட இப்ப எவ்வளவோ முன்னேற்றம். போன முறை ஐந்தாவது மாதத்துல சொன்னதுதான் மூளை இதயம் மற்றைய உறுப்புகள் எல்லாமே நல்லா செயல்படுது. நீ எதையும் நினைத்து கவலைபடாத மா. இது ஏழாவது மாதம். மெக்சிமம் சுகப்பிரசவத்துக்கே ட்ரை பண்ணலாம். ஓகே நீயும் நல்லா வேலை எக்சசைஸ் எல்லாம் பண்ணு. பட் உனக்கு வெயிட் போடல இன்னும். அதுவே ஒரு பிளஸ் தான். ஒன்பதாவது மாதம் உனக்கு டேட் அதுக்கு முதல் நாள் வந்து சேர்ந்தா போதும் வலி வரும்வரை வீட்ல இருக்கவேணாம். ” என அனைத்தையும் சொல்லிக்கொடுத்து ஆறுதலாக தோள் தட்டி அனுப்பிவைத்தார்.

மாலதியும் மலரிடம் டாக்டர் சொன்னவற்றை கேட்டு தெரிந்து கொண்டார். மாலதிதான் மாதம் மாதம் செக்கப்பிற்கு அழைத்து வருவார்.

இருவரும் அருகில் இருந்த ஹோட்டல் சென்று ஜூஸ் குடித்துவிட்டு டாக்சி பிடித்து வீட்டிற்கு வந்தார்கள்.

மாலதி மலரை அவளின் வீட்டில் விட்டுவிட்டு அவர் அவரின் வீட்டிற்கு சென்று விட்டார்.

ஜானகி இரண்டு நாட்களாக அதிக மன வருத்ததுடன் இருந்தார். அவரால் தாய் வீட்டிற்கு சென்ற போது அறிவை பார்க்கமுடியாமல் போனது ஏதோ தடை என நினைத்தார்.

அவர் இருக்கும் பொறுப்பினால் நினைத்ததும் மதுரை செல்லமுடியாது. அவர்களின் தொழில் ஆசிரமம் என இரண்டையும் அவரே பார்க்கவேண்டியதால். அவரால் மீண்டும் செல்ல முடியாது. அதனால் மீனாட்சி இல்ல தொலைபேசிக்கு அழைத்தார். அதை குழலி தான் எடுத்தாள்.

“ ஹலோ யார் பேசுறிங்க நான் குழலி மீனாட்சி இல்லம் மதுரையில இருந்து பேசுறேன். நீங்க யாரு?” என்றாள்.

“ யாரு குழலியா? நான் திருச்சியில இருந்து அத்தை பேசுறேன் மா. நீ எப்ப வந்த? எப்டி இருக்கிற மாப்பிள்ளை, பேரன் எல்லாரும் எப்டி இருக்கிறாங்க.” என்று அனைவரையும் நலம் விசாரித்தார்.

“ எல்லாரும் நல்லா இருக்கிறோம் அத்த நீங்க எப்டி இருக்கிறிங்க?. நான் அம்மாவை பார்க்கலாம்னு வந்தேன்.” என்றாள் குழலி.

குழலி வந்ததும் அங்கு நடந்த அனைத்தையும் ஒன்றுவிடாமல் தாமரை மகளிடம் சொல்லியிருந்தார். அதனால் அவளுக்கு வீட்டு நிலை தெரியும் என்பதால் அழைத்த ஜானகியிடம் பதமாக பேசினாள்.

“ நான் நல்லா இருக்கிறேன் மா. சரி எங்க அம்மா அண்ணி யாரையாவது கூப்பிடேன்.” என்றார்.

“ பாட்டி கோவில் யாத்திரை போயிருக்காங்க. அப்பா ஆபிஸ் போயிருக்கார். அண்ணனும் அண்ணியும் இன்னும் ஊட்டியில இருந்து வரல அத்த. அதுதான் அம்மாக்கு துணையா நான் வந்திருக்கிறேன். அம்மா கோவிலுக்கு போயிருக்காங்க. நான் போகக்கூடாது. அதனால வீட்டுல இருக்கிறேன்.” என்றாள்.

“ ஏன் குழலி மூணு நாலு மாசம் ஆகிட்டு என்ன நடக்குது அங்க அறிவு விருப்பமில்லாம இசையோட கட்டாயத்துல நடந்த கல்யாணம் அது. ஆனா அறிவு அவ்வளவு ஈசியா மனசு மாறிட்டாளா? என்ன இசையும் ஒரேடியா தொழிலை விட்டு இப்டி பொறுப்பில்லாம ஊர் சுத்த மாட்டான். அங்க என்னதான் நடக்குதுனு நீ சொல்லுறியா? இல்ல வேலையை போட்டது போட்டபடி விட்டுட்டு அங்க என்ன பிரச்சினை பார்த்து தெரிஞ்சிக்க வரட்டுமா?” என்றார் ஜானகி மிரட்டும் தொனியில் சொன்னார்.

அதை கேட்டதும் குழலி சற்று நேரம் நிலை தடுமாறினாள். ‘ இந்த அத்த திடீரென்று வந்துட்டா என்ன பண்ணுறது?. இந்த அம்மா இப்ப வந்தா நாம தப்பிச்சிடலாம்.’ என மனதோடு பேசி நின்றாள்.

அந்த பக்கம் ஜானகி ஹலோ ஹலோ என அழைத்துவிட்டு தொலைபேசியை வைத்துவிட்டார். பேசி வைத்த சத்தம் கேட்டதும் தான் குழலி தன் நிலைக்கு வந்து சற்று அசுவாசமானாள். “ கொஞ்ச நேரம் கதி கலங்க வச்சிட்டு இந்த அத்த” அடுத்து அவர் வந்துவிடுவாரோ! என பயந்தாள்.

சற்று நேரம் கழித்து தாமரை பேரன் க்ருஷ் அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வந்தார். வந்தவருக்கு தண்ணீர் கொடுத்துவிட்டு. ஜானகி அழைத்து பேசியதை தாயிடம் கூறினாள் குழலி.

அதை கேட்ட தாமரை உடனே மீனாட்சிக்கு அழைத்தார்.
“ அத்த ஜானகி சீக்கிரம் வரும் போல இருக்கு. அது குழலிகிட்ட பேசினது அப்டித்தான் இருக்கு. இதை ஆரம்பிச்ச நீங்களே ஒரு முடிவெடுங்க. ஜானகிக்கு அழைத்து பேசுங்க இங்க வராம தடுக்கிறது உங்க பொறுப்பு. அது வளர்த்த மகளை இசை கேட்டான் அது பிறந்த வீட்டுல வளர்ப்பு மகளும் சந்தோசமாக வாழும்னு நினைச்சி கட்டாயத்திருமணத்துக்கும் எதுவும் சொல்லல. இப்ப அறிவு ஜானகி பெத்த சொந்த பொண்ணு இப்டி கஷ்டப்படுதுன்னு தெரிஞ்சா என்னவாகுமோ?. ஜானகியோட கோபம் உங்களுக்கு தெரியும்தானே ஏதாவது பண்ணி சமாளிங்க.” என்று கூறிவிட்டு வைத்துவிட்டார் தாமரை.

தாமரையிடமும் அறிவு கருவுற்று இருப்பதை சொல்லவில்லை. சொன்னால் மிகவும் வருத்தப்படுவார் என நினைத்தார் மீனாட்சி.

அதையே நினைத்து என்ன பண்ணலாம் என யோசித்தபடி இருந்தார் மீனாட்சி.

மாங்காய் புளிக்குழம்பு வைத்து சாதம் வைத்து கருவாடு சுட்டு என இருவருக்கும் தேவையான சிறிய சமையலை முடித்துவிட்டு அறிவின் வரவிற்றாக காத்திருந்தார் மீனாட்சி.

மாலை நேரம் ஜந்து மணி மலர் என்று அழைத்தபடி ராணி வாணி மரகதம் பாட்டி மாலதி என நால்வரும் பூ பழம் எனவாங்கிக்கொண்டு வந்தார்கள்.

அறையில் இருந்த மலரை நீலா தான் அழைத்துவந்தாள். “ வாங்க எல்லாரும் உள்ள வாங்க. இருங்க காபி எடுத்துட்டு வர்றேன்.” என பெரியவர்களை வறவேற்றவள் ராணியை பார்த்து முறைத்துவிட்டு சமையலறைக்குள் சென்றாள் மலர்.

அவளின் கோபம் ஏன் என புரிந்தவள் எழுந்து அவளும் உள்ளே சென்றாள்.

“ எங்க வெள்ளச்சி ஏன் இப்டி கோபமா இருக்காளாம்.” என்றாள் மலரின் முகத்தை திருப்பி.

“ ராணி மகாராணி க்கு இந்த ஏழையோட வீடு தெரியுமா என்ன? ஊர்ல இல்லாத பொல்லாத வேலைக்கு போறா! போடி இவளே,ஏதாவது பேசிடப்போறேன்.” என்று திரும்பினாள் ராணியை பார்க்காமல்.

ராணியும் கடும் சிரமப்பட்டு பேசி ஒருவழியாக ஆருயிர் தோழியை சமாதானப்படுத்தினாள். “ இங்க பாருடி மலரு இனி தினமும் சாயந்தரம் இங்கதான் வருவேன். தமிழ் அண்ணாகிட்ட சொல்லி வேலை நேரத்தை முன்னாடியே முடிக்கச்சொல்லணும். சரியா இப்ப சிரிடி.” என்று தாஜா பண்ணினாள்.

“ உன்கிட்ட நிறைய விசயம் பேசணும்டி அதுதான் ரொம்ப தேடினேன். என்னாலையும் முன்ன மாதிரி தூரம் நடக்கமுடியலடி அதுதான் நான் உன்னை பார்க்க வரமுடியல.” என்றாள்.

“ அப்டி சொல்லுடி என் மருமகன் உன்னை அப்டிதான் பாடுபடுத்துறானா? நல்லது. அவன் வெளிய வந்ததும் அவனும் நானும் நல்லா ஆட்டம் போடுவமே.” என்று மலரின் கன்னம் கிள்ளி சிரித்தபடி அவளே காபி கலந்து எடுத்துச்சென்றாள் ராணி.

அவளின் பின் தேர் போன்று அசைந்து வந்த மலரை பார்த்து “ மாப்பிள்ளை வர இன்னும் தாமதம் ஆகுமா? ஒரு நல்ல விசயம் பேசணும். அவரும் இருக்கணும். நல்ல நேரம் முடியுறதுக்குள்ள வரச்சொல்லு மா மலர்.” என்றார் வாணி.

மலரும் உள்ளே சென்று அவளுக்கு என தமிழ் வாங்கி கொடுத்த நியூ மாடல் டச் போனை எடுத்து ‘ஆலமரம்’ என சேவ் பண்ணி வைத்திருந்த நம்பருக்கு அழைத்தாள்.

அரிசி லோட் ஏற்றும் கணக்குகளை பார்த்திருந்தவன் மலரின் புகைபடம் போட்ட கால் வரவும் எடுத்து ஆன் பண்ணி காதில் வைத்து ஹலோ என்றான் தமிழ்.

இங்கு மலர் “ பெரியவங்க வந்துருங்காங்க உங்களை சீக்கிரமா வரட்டுமாம் ஏதோ பேசணுமாம் வாங்க.” என்றாள்.
“ சரிடி கொடி இதோ வர்றேன்.” என்று பேசி நேரத்தை கடத்தாமல் புறப்பட்டு அவனது புல்லட்டில் வந்தும் விட்டான் தமிழ்.
அவனும் வந்ததும் வாணிதான் ஆரம்பித்தார். “ மலருக்கு இது ஏழாவது மாசம் வளகாப்பு பண்ணணும். நீங்க என்ன சொல்லுறீங்க? என்றார்.

“ நான் இதுல சொல்ல என்ன இருக்கு எல்லாம் தெரிஞ்ச நீங்களே பண்ணவேண்டியதை பார்த்து பண்ணுங்க. இதுக்கு நான் என்ன பண்ணணும்னு சொல்லுங்க அதை பண்ணிடுறேன்.” என்றான் தமிழ்.

“இதை சொல்லத்தான் ஆள் இல்லாம இருக்கு. வந்துட்டாரு தொரை.” என்று ராணியின் காதில் கிசுகிசுத்தாள் மலர்.

அதை பார்த்த மாலதி “ மலர் ஏதாவது சொல்லணும்னா சத்தம்மா சொல்லுமா” என்றார்.

அவளுக்கா பயம் “ இதை அடுத்த மாசம் பண்ண முடியாதா? அக்கா.” என்றாள்.

அவளுக்கு இந்த நிலையில் தமிழின் முகத்தை கூட பார்க்க முடியாமல் மாலதி வீட்டிற்கு செல்ல பிடிக்கவில்லை. அதனால் தள்ளிப்போட்டாள்.

மரகதம் பாட்டி “ இந்த மாசம் விட்டா இனி ஒன்பதாவது மாதம் உன் பேறு காலத்துக்கு முன்ன ஒரு நல்ல நாள் பார்த்து பண்ணலாம். ஆனா நாள் இருக்காணு இப்பவே பார்த்துடனும் அப்டி இருந்தா மட்டும்தான் தள்ளி போடலாம் மலர்.” என்று காலண்டர் எடுத்து நாள் பார்த்தார்.

அவர்களின் விருப்படியே மலரின் பேறு காலத்திற்கு ஐந்து நாள் முன் வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று நாள் சிறப்பாக இருந்தது. அன்றே வைக்கலாம் என ஒரு மனதாக அனைவரும் பேசி முடித்தார்கள்.

அதன் பின் வந்தவர்கள் சென்றதும்
“ க்கூம் எனக்கு மட்டும்தான் இங்க அடிச்சிக்கிது. இந்த மைனரை பார்க்கணும் இங்க இருக்கணும் அப்டினு தோணுது. இந்த மனுசன் எப்படா தொல்லையை தொலைச்சி அனுப்பலாம்னு நாள் பார்க்கிறாரு போல. பொண்டாட்டி மேல ஆசா பாசம் இருந்தா மத்த புருசன்கள் மாதிரி இவருதானே நாளை தள்ளி வச்சிருக்கணும். பொண்டாட்டியை பிரிஞ்சி இருக்கமுடியலனு. ஆனா இங்க எல்லாம் நாமலே பண்ண வேண்டியதா இருக்கு.” என்று தோளில் முகவாயை இடித்துவிட்டு இரவு டிப்பன் பண்ணுவதற்கு சென்றுவிட்டாள் மலர்.

தமிழ் இன்னும் அவன் பண்ணிய குற்றத்தினால் குற்ற உணர்ச்சியுடன் இருக்கிறான். ஒரு வேலை மலர் அவனை ஏற்றுக்கொள்ளாமல் இருந்திருந்தால் ‘ சரிதான் போடினு’ விட்டிருப்பான். ஆனால் அவளோ அவனை மன்னித்து அவனுடன் வாழ நினைக்கிறாள். அதை எவ்வாறு சரி பண்ணுவது என தெரியாமல் மலர் பேசும்பொழுது பதில் மட்டும் கூறிவிட்டு கடந்துவிடுவான்.
அவனும் நினைப்பான் அவளுடன் இணக்கமாக நடக்க வேண்டும் என ஆனால் அவனால் அன்று அவன் பண்ணியதை மறக்கமுடியவில்லை. அதில் இருந்து விடுபட வழி தேடுகிறான். தமிழ்

அவன் தாய் தந்தையுடன் வளர்ந்திருந்தாளோ இல்லை நாலு விசேசங்களுக்கு சென்றிருந்தாளோ அவனுக்கும் நடை முறை தெரிந்திருக்கும். ஆனால் இது எதுவும் இல்லாமல் குடும்பம் என்ற அமைப்பில் அவன் வளரவில்லை அவனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. என மலர் புரிந்துகொள்ளாமல் அவனின் மனதை ரணப்படுத்திவிட்டு சென்றாள்.

அவளும் உணர்வு போராட்டம். குழந்தை பெறும் பயம். யாரிடமும் அவளின் பயத்தை பகிரந்துகொள்ள முடியவில்லை. என்ற தவிப்பு போன்ற பலவிதமான உணர்வுகளின் போராட்டத்தில் அவனும் அவளை நெருங்கவில்லை என்ற கோபம். என அனைத்தையும் வார்த்தையாக்கி அவனிடம் கொட்டிவிட்டு சென்றாள்.

தமிழ் மலர் அழைத்ததும் வேலையை இடையில் விட்டு என்னவென்று தெரியாமல் அவசரமாக வந்தான். அதனால் மீண்டும் வேலையை முடிப்பதற்காக நீலாவிடம் சொல்லிவிட்டு சென்றுவிட்டான்.

அவன் சென்றது தெரியாமல் காபி எடுத்துவந்தவள் அவன் இல்லாததை பார்த்து நீலாவிடம் விசாரித்தாள். அவள் போய்விட்டான் என்று சொன்னதும். முகம் வாடி இனி அவனுடன் தானும் பேசுவதில்லை. வரட்டும் இன்று இதற்கு ஒரு முடிவு எடுக்கவேண்டும். என நினைத்தாள்.
“ வரட்டும் இருக்கு அவனுக்கு இன்னைக்கு பூஜை. வந்ததும் நல்லா வேப்பிலை அடிச்சி மந்திரிச்சிவிடணும்.” என்று நினைத்துக்கொண்டு வேலையை செய்தாள் மலர்.

ஜானகி தாயின் பேச்சையும் கேட்காமல் புறப்பட்டுவிட்டார் மதுரைக்கு.

வந்தால் என்ன பிரளயம் வெடிக்குமோ.

Advertisement