Advertisement

முள்ளில் மலர்ந்த காதல்.

அத்தியாயம் 13

கொடிமங்கலத்தில் வேந்தனின் ரைஸ் மில் மற்றும் கயிறு பேக்டரியில் தான் தமிழ் மேற்பார்வையாளராக வேலை செய்கிறான்.

இசை அறிவை தேடிச்சென்றுவிட்டதால் அவனால் தொழிலை கவனிக்கமுடியாது. என்று தமிழின் கண்கானிப்பில் விட்டுச்சென்றான்.

இசை வாரம் இருமுறை இங்கு வந்து தொழிலை பார்வையிடுவதால் பிழைகள் களவு போன்றன இல்லாமல் இருந்தது. ஆனால் அவன் தொழிலை நடத்தும் நிலையில் இல்லாமல் அவனின் வாழ்வை தேடி சென்றுவிட்டதால் இசை இனி எப்பொழுது வருவானோ வரமாட்டானோ, என்று கயிறு மற்றும் தேங்காய் . தும்புத்தடி போன்ற பொருட்களின் எண்ணிக்கை தற்பொழுது குறைவது போன்று இருக்கிறது என்று ஜானிடம் தமிழ் ஒரு வாரத்தின் முன் கூறியிருந்தான்.

ஜான் இசைக்கு அழைத்து தமிழ் கூறியதை கூறினான்.

அதற்கு இசை ” ஹலோ ஜான் நான் இப்ப தொழிலில் ஈடுபடும் மனநிலையில் இல்லை. அதனால என்கிட்ட மணி வீட்டிற்கு வரும் வரை வேறு எதையும் என்னிடம் கொண்டுவராத ஓகே. அங்க என்ன நடந்தாலும் நீயும் தமிழும் பார்த்துக்கொள்ளுங்க நான் உங்க ரெண்டு பேருக்கும் முழு உரிமையும் தாறேன். உங்களுக்கு ஏதாவது தவறு நடக்கிறதுன்னு தெரிஞ்சா ஆதாரத்தோட சட்டநடவடிக்கை எடுங்க. நான் அந்த ஏரியா இன்பெக்டரிடம் பேசுறேன். தமிழுக்கு இந்த தொழில் புதுசு அவருக்கு நீ தான் எல்லாவகையிலயும் பக்கபலமா இருக்கணும். தமிழ் கேட்கும் அனைத்து சந்தேகத்தையும் பொறுமையா தீர்த்து வேலையை சொல்லிக்குடு. இனி வேலை சம்மந்தமா நீ எனக்கு கால் பண்ணாத. மற்றது பிரஸும் . ஸ்கூலும் அந்த அந்த நிர்வாகிகளிடம் தினமும் பைலை பார்த்து சரிபண்ணிடு எதுக்கும் சைன் தேவைன்னா அப்பாவை கேளு வச்சித்தருவார். அவரும் நான் இல்லாததால் தொழிலை பார்த்துப்பார். இனி எதுவா இருந்தாலும் நீ அப்பா தமிழ் மூணு பேரும் பார்த்துக்கோங்க. நான் அழைக்காம என்னை கால் பண்ணி தொல்லை பண்ணாதீங்க. அப்பத்தான் என்னால ஒரே மைண்ட்செட்ல என் டாலியை தேடமுடியும். நான் தமிழிடமும் பேசுறேன். ” என்று ஜானிடம் நீண்ட நேரம் பேசிவிட்டு வைத்தான் இசைவேந்தன்.

அன்று ஏனோ தமிழ் ஒரு நாளும் இல்லாத புதுவேலையாக மலரிடம் மனதிலிருப்பதை கொட்டிவிட்டு வந்துவிட்டான். வெளியே வந்ததும் ஏனோ மனம் படபடப்பாக தவிப்பாகா இருப்பதாக புதுவிதமாக உணர்ந்தான்.

அவனுக்கென்று ஒதுக்கியிருக்கும் அறையில் அமர்ந்திருக்கும் பொழுது இசையிடம் இருந்து அழைப்புவந்தது.

” ஹாய் தமிழ் ஹவ் ஆர் யூ?.” என்றான் இசை.

” நாங்க நலம் சார் நீங்க இப்ப எந்த ஊர்ல எப்டி இருக்குறிங்க?.” என்றான் தமிழ்.

” நான் என்ன சொல்லுறது தமிழ் டோன்ட் கால் மீ சார். இசை ஆர் வேந்தன் சொல்லணும் இனி ஓகே. நான் தொலைத்த வாழ்வை தேடி ஊர் ஊரா சுத்துறேன் தமிழ். நீ மலரை கவனமாக பார்த்துக்கோ என்னை மாதிரி கையில கிடைத்த வாழ்வை தொலைச்சிட்டு அலையாத. அப்புறம் தொழில் சம்மந்தப்பட்ட அனைத்து நடவடிக்கையும் நீயே எடுக்கலாம் அதுக்கான உரிமை பத்திரம் ஜான் நாளைக்கு உன் கையில தருவான். அங்க நடக்கிற தவறுகள் அனைத்துக்கும் ஆதாரம் இருந்தா தாராளமாக நீ தண்டனை குடுத்து சட்டநடவடிக்கை எடு தமிழ். அதுக்கு பிறகு வரும் பிரச்சினையை அப்பா பார்த்துப்பார். நீங்க ரெண்டு பேரும் உங்க சின்ன பருவத்துல ரொம்ப கஷ்டம் பட்டுட்டிங்க இனிவரும் காலம் வாழ்வை அனுபவித்து சந்தோசமாக வாழுங்க தமிழ். உன்னை நம்பித்தான் மலர் அவளோட குடும்பத்தையும் பார்த்துக்கிறா. நாளை அந்த நம்பிக்கையை நீ காப்பாத்தணும். உனக்கு நான் சொல்லணும்னு இல்ல வாழ்க்கை போகும் போக்கில அதை நமக்கு சாதகமா அமைச்சிக்கணும் அவன்தான் சக்சஸ்ஃபுல் மேன். நான் பிசினஸ்ல காட்டின அக்கறையை என் வாழ்க்கையில காட்டல. எடுத்தோம் கவுத்தோம்னு ஆரம்பித்து இப்ப தடுமாறுறேன். நீ அப்டி இருக்கக்கூடாது. உன்னை விட இரண்டு வயசு பெரியவன் அதனால அனுபவத்துல சொல்லுறேன். நீ அட்வைஸ் பண்ணி அறுக்குறேன்னு தப்பா நினைச்சா அது உன் பிரச்சினை. என்னை பத்தி கவலை படாத நான் டாலியை கண்டுபிடிக்கிறதுக்காக நல்லா மூணு வேலையும் சாப்பிட்டு ஆரோக்கியமாக தான் இருக்கிறேன். மதுரை வந்தா மணியோடதான் வருவேன். ஓகே டேக் கேர் பை தமிழ். ” என்று தமிழுடனும் நீண்ட நேரம் அவன் கேட்ட கேள்வி மற்றும் கேட்காத கேள்வி என அனைத்திற்கும் பதில் பேசினான் இசைவேந்தன்.

இசை பேசிய அனைத்தையும் மீண்டும் ரீவைன்ட் பண்ணி பார்த்தான் தமிழ். அதில் அவன் வாழ்வை பற்றி சொன்ன கருத்துக்களை நன்றாக கிரகித்தான். அது அவனுக்கு மிகவும் தேவைப்பட்டது.

ஜான் மூலம் இசையின் குடும்ப நிலையை தெரிந்துகொண்ட தமிழ். இசையின் வீட்டிற்கு அழைப்புவிடுத்தான்.

” ஹலோ நான் தாமரை மீனாட்சி இல்லத்தில் இருந்து பேசுறேன். நீங்க யாரு? ” என்றார்.

” ஹலோ நான் தமிழ் பேசுறேன் மா இசை சாரோட ரைஸ்மில்ல புதுசா வேலை பண்ணுறேன். இசை சார் ஒரு பொது தொலைபேசியில இருந்து நேத்து என்கிட்ட பேசினாரு. நல்லா இருக்கிறாதா சொன்னார். அறிவு மேடத்தை தேடிட்டு இருப்பதாகவும் அவங்க கிடைக்காம வீட்டுக்கு பேச விருப்பமில்லைனும் சொன்னார். உங்களை எல்லாம் கேட்டார் மா ஆரோக்கியமாக இருக்கிறதா சொன்னார். நீங்க பாட்டி பெரிய சார் எல்லாரும் அவரை நினைத்து வருந்தாம ஆரோக்கியமாக இருக்கணும்னு சொல்லச்சொன்னார். மேடத்தை அழைத்துக்கிட்டு சீக்கிரமா ஊருக்கு வந்துடுவாராம். அதனால நீங்க யாரும் கவலைபடாதீங்க மா சார் நல்லா இருக்கிறார். ” என்றான் தமிழ்.

” நீ நல்லா இருக்கணும் தம்பி உன்னை நான் பார்த்தலில்ல. என் மகன் மருமகளை பற்றி எதுவும் தெரியாம இந்த வீடே இருண்டு போய் கிடக்கு. இசை தோல்வியை தாங்க மாட்டான். அதனாலதான் அவன் அறிவு இன்னும் கிடைக்கல அதை எங்களுக்கு அழைச்சி சொல்லுற பக்கும் அவனுக்கு இல்ல. இப்ப உன் மூலமா இசையை பற்றி தெரிஞ்சிக்கிட்டேன். ரொம்ப சந்தோசம் தம்பி இசை வந்ததும் நீ இங்க உன் குடும்பத்தை அழைச்சிக்கிட்டு வரணும். இதை சொன்னா அத்தையும் இசை அப்பாவும் ரொம்ப சந்தோசப்படுவாங்க. நீ சொன்னதை பார்த்தால் இசை உன்கிட்ட சொல்ல சொல்லி இருக்கமாட்டான்னு தெராயுது நீயேதான் எங்களுக்கு சொல்லுற. உன் மனசுபோல சந்தோசமா இரு. ” என்று தமிழுடன் பேசிவிட்டு அதை மீனாட்சியிடம் சொல்லுவதற்காக அவரின் அறைக்கு சென்றார் தாமரை.

அப்பொழுதுதான் மீனாட்சியும் அறிவிற்கு அழைத்து பேசினார். தாமரை வருவது தெரியவும் அழைப்பை துண்டித்துவிட்டு சாதாரணமாக இருந்தார்.

ஆனால் அவர் பேசியது தாமரைக்கு நன்கு கேட்டது. அறைக்குள் வந்த தாமரை ” என்னவாம் அத்தை உங்க மக வயித்து பேத்தி நல்லா இருக்கிறாளா?. ஏன் அத்தை என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லல. நான் என்ன உங்களுக்கு வேண்டாத மருமகளாகிட்டனா?. ஏன் அத்த இப்டி பண்ணுனிங்க?. நானும் இசை அறிவுக்கு பண்ணின கொடுமைக்கு தண்டனை கொடுத்தேன் தானே. அவன் பண்ணினது தப்புன்னுதானே நானும் சொல்லுறேன். அப்டி இருக்கும் போது ஏன் நீங்க ரெண்டு பேரும் என்னை விட்டுட்டு இப்டி ஒரு முடிவு எடுத்தீங்க?. அறிவு இங்க இல்லாததனால ஆசையா மகளை பற்றி சொல்ல வந்த ஜானகிக்கும் நாம நல்லது பண்ணமுடியல. ஏன்னா ஜானகி சொன்ன அத்தனையும் அறிவுகிட்ட நாம பார்த்திருக்கிறோம். அப்ப அறிவுதானே ஜானுவோட மகள். ஆனா அதை ஜானகி பார்க்கலன்றதுதான் காலக்கொடுமை. இப்ப நீங்க அவளோட சேர்ந்து இப்டி பண்ணாம இருந்திருந்தால் ஜானகி வரும் போது அறிவு இங்க இருந்திருந்தால் இதுதான் உன் பொண்ணுனு சொல்லி அந்த தாயோட மனசை குளிர்விச்சிருக்கலாமே. இப்ப பாருங்க உங்க மகள் மருமகள் மகன் பேரன் பேத்தி இவ்வளவு பேருக்கும் கஷ்டம்தானே. நீங்க ரெண்டு பேரும் பண்ணின காரியத்தால என் மகன் பாதிக்கப்பட்டு அறிவை தேடி ஊர் ஊரா சுத்துறான். ஸாரி அத்த உங்க மனசு நோக பேசிருந்தா ஸாரி. நீங்கதான் இந்த வீட்டு பெரியவங்க கஷ்டப்படுறது உங்க உறவுகள் இதை வளரவிடாம இதுக்கு சீக்கிரமா என்ன முடிவு எடுக்கணுமோ எடுங்க. மற்றது இசை நல்லா இருக்கிறானாம். அறிவை தேடி அழைச்சிக்கிட்டுதான் இங்க வருவானாம். தமிழ்னு ஒரு தம்பி சொல்லிச்சி. அதை சொல்லத்தான் நான் வந்தேன். ஆனா நீங்க பேசினத அறிவுனு பேர் அடிபடவும் கேட்டுட்டேன். ஒட்டு கேட்கிறது என்னோட பழக்கம் இல்ல அதுக்காவும் ஸாரி. நான் கிட்சன் போறேன் உங்களுக்கு டீயா? காபியா?.” என்று எதுவும் நடக்காதது போன்று கேட்டு மீனாட்சியின் பதிலுக்காக மனக்கவலையோடு நின்றார் தாமரை.

” இப்ப எனக்கு எதுவும் வேணாம் தாமரை. நான் அறிவை அனுப்பும் போது அவ என் பேத்தின்னு தெரியாது. தெரிஞ்சிருந்தா நான் அதுக்கு ஏற்ற மாதிரி முடிவு எடுத்துருப்பேன். நீ சொன்ன மாதிரி இதனால என் உறவுகள்தான் பாதிக்கப்படும்னு நான் நினைக்க மறந்துட்டேன். இதை எப்டி சரி பண்ணணும்னு ரெண்டு பேரும் யோசிப்போம். என்னை தனியா விட்டுறாத தாமரை நீ தான் என்னோட பலம். நான் உன்னை மருமகளாவோ வேற்று ஆளாகவோ நினைக்கல. சொல்லப்போனா நான் பெத்த ஜானகியை விட நீதான் எனக்கு பொண்ணா என்னை பார்த்துக்கிற நடந்துக்கிற தாமரை. அதனால ரெண்டு பேரும் சேர்ந்து இனியும் அவங்களை கஷ்டப்பட விடாம சேர்த்து வைக்கிறதுக்கு வழி பண்ணுவோம். நீ என்னை தவறா எடுத்துக்காத.” என்று கூறிவிட்டு தாமரையின் கையை பிடித்துக்கொண்டார் மீனாட்சி.

அதன் பின் இருவரும் அடுத்து பண்ணும் வேலையை பார்க்க சென்றுவிட்டார்கள்.

நேரம் இரவு ஏழுமணி இசையின் ரைஸ்மில்லில். ” ஏன்டா மச்சான் இந்த மில்லுக்கு சொந்தக்காரன் கொஞ்ச காலம் இங்க வரவேயில்ல. அதுதான் நம்ம முதலாளி ஆகிடலாம். கணக்கு பார்க்கும்போது நெல் மூட்டை. கயிறு இது எல்லாம் குறைஞ்சி இருக்கேன்னு யாராவது அதுதான் புதுசா வந்திருக்கானே தமிழ்னு ஒருத்தன் அவனே கேட்டாலும் அறுவடை முடிஞ்சி கூலிக்காறங்க நெல் எடுத்துட்டு போயிட்டாங்கன்னு பலியை அவங்க மேல போட்டுடலாம். அதே மாதிரி கயிறு பேக்டரில கயிறு தும்புத்தடி , தேங்காய்கள். எல்லாம் குறையுதுனு சொன்னா அதையும் பேக்டரில வேலை பண்ணுறவங்க மேல ஈசியா பழியை போட்டுடலாம். ஏன்னா அதுங்க எல்லாம் படிக்காத ஜென்மங்க கணக்கு வழக்கு தெரியாது. நாம இதுக்கு முதல் நேர்மையா இருந்த மாதிரி நடிச்சதெல்லாம் அந்த இசை கெட்டிக்காரன் கண்டுபிடிச்சிடுவான்னுதான். ஆனா இப்பத்தான் அவன் இல்லயே. இந்த தமிழும் படிக்காத கூமுட்டை தான். அது இல்லாம கொலைகாரன் வேற. அதனால ரொம்ப ஈசியா அவனையும் ஏமாத்திட்டு சுருட்ட வேண்டியதெல்லாம் சுருட்டி வித்துட்டு பணத்தை கையில வாங்கிறனும். இதெல்லாம் அந்த இசை திரும்ப இங்க வரமுன்ன பண்ணிடனும். நம்ம நேர்மைக்கு யாரும் நம்மலை சந்தேகப்படமாட்டாங்க. சரி சரி சொன்னதெல்லாம் அந்த தமிழ் கண்ணுல படும்முன்ன சீக்கிரம், பண்ணி வாகனத்தை எடுத்துகிட்டு கிளம்பிடுங்க.” என்றான் மில்லில் வேலை செய்யும் பெரியவன்.

அவன்தான் இந்த மில் ஆரம்பித்த காலத்தில் சிறுவயதில் இருந்து இங்கு வேலை செய்கிறான். தற்போது தொழிலாளர்களுக்கு அவன்தான் பெரியவன் மாரி. அவன்தான் தற்போது பொருட்களை கடத்துகிறான்.

தமிழ் வீட்டிற்கு செல்வதற்கு வெளியே வந்துவிட்டான். ராமு வேலை முடித்து வீட்டிற்கு சென்றுவிட்டான்.

ஆனால் தமிழால் வீட்டிற்கு செல்லமுடியவில்லை. ஏனென்றால் அவனது வாழ்வை பற்றி சிந்தித்து ஒரு முடிவெடுக்கும் நிலையில் இருந்தான். இசை பேசியே அவனது மனதில் வாழ்வை பற்றி முதன் முறையாக பயத்தை ஏற்படுத்திவிட்டான்.

விரும்பியோ விரும்பாமலோ தமிழ் தவறு செய்து அதன் மூலம் ஒரு தேவதையே அவனுக்கு வாழ்க்கை துணையாக அமைந்துவிட்டாள். இனி அதை காப்பாற்றிக்கொள்வது அவனது கையில். குழந்தை பிறக்கும் முன் அவன் சரியான கணவனாக அப்பாக ஆகவேண்டும்.

அதனால் நன்றாக யோசித்து ஒரு முடிவு எடுப்பதற்காக தனிமை தேவைப்பட்டது தமிழுக்கு. அதனால் மீண்டும் மில்லில் இருக்கும் அவனது அறைக்கு வந்தான்.

அங்கு நின்ற இரவு நேர காவலாளி ” என்ன சார் ஏதாவது விட்டுட்டு போயிட்டியா? என்னான்னு சொல்லு எடுத்தாறேன். நீ இங்கயே நில்லு” என்றான்.

” இல்ல அண்ணே நான் ரூம்ல கொஞ்சம் தனிய இருக்கணும் அதனால உள்ள போறேன். ” என்று கூறிவிட்டு உள்ளே சென்றான் தமிழ்.

சொன்னது போன்றே அவன் அறையில் அரைமணி நேரம் இருந்தான். அப்பொழுது இரவு நேர அமைதியையும் மீறி ஆட்கள் பேசும் சத்தம் கேட்கவும். யாரேனும் இன்னும் வீட்டிற்கு போகவில்லையா? என பார்க்கச்சென்றான்.

மில்லை சுற்றி வளைத்து பார்த்துவந்தான். தெற்கு பக்கம் காடு போன்று மரங்கள் அடர்ந்து இருக்கும் அதனால் அங்கு இருக்கும் எதுவும் பார்ப்பவருக்கு தெரியாது. அதனால் அந்த மாரி கடத்தலுக்கு அந்த இடத்தை தெரிவு செய்தான்.

பகல் நேரத்திலே யாரும் அந்த பக்கம் போகமாட்டார்கள். அதனால் தமிழும் அந்தப்பக்கம் போகவில்லை. ஆனால் சத்தம் எங்கிருந்து வருகிறது என தேடியபடியே சென்றவன் அங்குதான் மாரியின் களவையும் துரோகத்தையும் பார்த்தான். உடனே ராமுவிற்கு அழைத்து சத்தம் இல்லாமல் காவலாளியையும் அழைத்துக்கொண்டு வருமாறு கைபேசியில் கூறினான்.

தமிழ் அழைத்து ஜந்து நிமிடத்திலே ராமுவும் காவலாளியும் வந்தார்கள்.

தமிழ் காவலாளியிடம் ” ஏன் அண்ணே இது எத்தனை நாளா நடக்குது. இதுக்காகத்தான் என்னை உள்ள போகவேண்டாம்னு சொன்னிங்களா? ” என்றான் கோபத்தோடு.

அவன் கோபமாக பேசியதை கேட்டதும் ” இல்ல சார் நான் வேலை பண்ணுற இடத்துக்கு துரோகம் பண்ணமாட்டேன். நானும் இரவு சுற்றிபார்க்கும் போது பயத்துல இந்த இடத்துக்கு வரமாட்டேன். என்ன நம்புங்க.” என்று வேலை போய்விடுமோ என பயந்து கெஞ்சினான்.

ராமு உடனடியாக அவனது கைபேசியில் வீடியோ எடுத்தான்.

அதன் பின் தமிழ் இங்கு வைத்து எதுவும் பண்ணவேண்டாம். இன்னும் என்னவெல்லாம் செய்கிறார்கள் என அவர்களை தொடர்ந்து கண்கானித்து காலையில் முடிவெடுக்களாம். என ராமுவிடம் கூறி. அதே போன்று இருவரும் பின் தொடர்ந்து சென்று அனைத்தையும் வீடியோ எடுத்தார்கள்.

அந்த வேலையை முடித்துக்கொண்டு இருவரும் வீட்டிற்கு வந்ததும் தான் மலர் குழந்தையுடன் பேசியதை கேட்டார்கள்.

அதை கேட்டதும் ராமு சிரித்தபடியே ” அண்ணே உங்களுக்கு எதிரா ஒரு கூட்டனி உருவாகுது பிற்காலத்துல ரொம்ப கவனமா இருங்க. ” என்று கூறிவிட்டு தமிழை பாவம் போல் ஒரு லுக் விட்டு சென்றான்.

தமிழும் அவன் இருக்கும் அறைக்கு சென்று குளித்து பிரஸ்ஸாகி ஒரு கைலியை கட்டிக்கொண்டு மேலே கையில்லாத ஒரு பனியன் அணிந்துகொண்டு வெளியே வந்தான்.

அப்பொழுதுதான் ராமுவும் வந்தான். ராமு தமிழை பார்க்கும்போது எல்லாம் சிரித்தபடி இருந்தான். தமிழ் ராமுவை முறைத்துவிட்டு. மலர் இருந்த அறையை எட்டிப்பார்த்து தொண்டையை செருமினான்.

அந்த சத்ததில் ஒருவித மோன நிலையில் குழந்தையுடன் லயித்து இருந்தவள். அன் நிலை கலைந்தது பிடிக்காமல் அதை முகத்தில் காட்டியபடியே வெளியே வந்தாள் மலர்.

ராமு நீலாவை அழைத்தான் சாப்பிடுவதற்கு. நீலா வந்ததும் உணவு அனைத்தையும் மேசையில் எடுத்துவைத்ததும். மலர் மூவருக்கும் பரிமாறினாள்.

” நீயும் இரு எங்களோட சாப்பிடுவியாம்.” என்றான் தமிழ். எங்கோ பார்த்துக்கொண்டு.

அவளுக்கும் பசி எடுத்தது அதனால் அவன் கூறியதும் உடனே இருக்கையில் இருந்தாள். நீலா அவளுக்கு தட்டு வைத்து இட்லியும் வைத்தாள். அதை உண்டதும். ராமு ” ஆஹா என்ன சுவை அருமையான சட்னி சாம்பார் அறுசுவையும் நின்னு தாண்டவமாடுது. உப்பு புளி காரம் எல்லாம் அளவா போட்டு தூள் கிளப்பிட்டிங்க அண்ணி. இதுதான் உங்க கையால முதல் முறை சாப்பிடுறேன் செம்ம போங்க.” என்று பாராட்டு பத்திரம் படித்தான்.

ஆனால் தமிழ் எவ்வித ரியாக்ஷனும் முகத்தில் காட்டாமல் உண்பதை கணகச்சிதமாக செய்துகொண்டிருக்கிறான்.

ஒருவழியாக நால்வரும் இரவு உணவை முடித்ததும். மலர் பால் கலந்து எடுத்துவந்தாள்.

நீலா ராமு இருவருக்கும் குடுத்துவிட்டு தமிழிடம் நீட்டினாள். அதை கையில் எடுக்காமல் அவளை பார்த்துக்கொண்டிருந்தான்.

” அண்ணே அண்ணியை சைட் அடிச்சதுபோதும் அவங்க பால் கையில எவ்வளவு நேரமா வச்சிக்கிட்டு நிக்கிறாங்க பாவம் கால் வலிக்கும் சிக்கிரம் வாங்கி குடிங்க அண்ணே பாதாம் கலந்திருக்கும் போல பால் நல்ல ருசியா இருக்கு நீங்களும் குடிங்க.” என்றான் ராமு.

தமிழும் ராமு சொன்னதை நம்பி பாலை ஒரு சிப் குடித்துவிட்டு கண்முழி பிதுங்கிவிடும் போன்ற ஒரு ரியாக்ஷன் கொடுத்தபடி இருந்தான்.

அவனையே ஒர விழியால் பார்த்து கள்ளச்சிரிப்பு சிரித்தபடி இருந்தாள் அவனின் மனையாள்…

Advertisement