Advertisement

அத்தியாயம் 12.

மலர்க்கொடி அந்த வீட்டிற்கு போய் ஒரு வாரமாகிவிட்டது. அந்த வீட்டில் அவள் பழகி பின் அந்த வீட்டு பெரிய சமையலறையை அவளின் கை வசம் கொண்டுவருவதற்குள் நன்றாக சிரமப்பட்டுவிட்டாள்.

அங்கு போனதில் இருந்து இருவரும் பேசிக்கொள்ளவில்லை முன்பு போன்று ஒரே வீட்டில் இருந்து வேறு வேறு அறையில் இருக்கிறார்கள். அவர்களின் வேலைகளை செய்துகொண்டு ஆளுக்கு ஒரு மூலையில் இருக்கிறார்கள். தமிழும் மலரும்.

மூன்று படுக்கையறை சாப்பாட்டறையை ஒட்டிய பெரிய சமையலறை , பூஜையறை பெரிய கூடம். என அவன் பேங்லோன் போட்டு இந்த வீட்டை கட்டியிருக்கிறான் தமிழரசு.

கார்த்திகாவிற்கு பள்ளி திறக்கும் வரை அவளை மாலதியக்கா வீட்டில் அவரே பார்த்துக்கொள்வதாக கூறி அழைத்துச்சென்று விட்டார். அவருக்கு பயம் எங்கு ராமுவோட சேர்த்துவைத்து தவறாக பேசி அந்த பேதை பெண்ணின் மனதை கெடுத்துவிடுவார்களோ இந்த ஊர் பெண்கள். அதன் பின் அவளின் படிப்பு கெட்டுவிடும் கார்த்திகாவும் நீலாவும் நன்கு படிக்கும் பிள்ளைகள் அவர்களை படிக்கவைத்துவிட்டால் அதன் பின் அவர்களே சம்பாதித்து அவர்களின் திருமண வாழ்க்கைக்கு தேவையானதை தேடிக்கொள்வார்கள். இனியேனும் மலர் கொஞ்சம் சந்தோசமாக அவளது வாழ்வை அவளுக்காக அவளின் குடும்பத்துடன் வாழட்டும் என அவளின் நலனில் அக்கறை காட்டும் அந்த நல் உள்ளங்கள் நினைத்தார்கள்.

தமிழ் மலர் அவனின் வாழ்வில் வருமுன் எவ்வாறு இருந்தானோ? அதில் சிறு மாற்றமும் இல்லாமல் இன்றும் அவனது காலை கடன்களை முடித்துக்கொண்டு ரைஸ் மில் சென்றுவிட்டான்.

அங்கு சென்று ஒருமணி நேரம் கடந்துவிட்டது. காலை எட்டு மணி. ராமுவை அழைத்து காசு கொடுத்து மலருக்கும் நீலாவுக்கும் உணவு வாங்கிக்கொடுக்கச்சொல்லி அனுப்பிவைத்தான்.

ராமு இட்லி வாங்கிக்கொண்டு வீட்டிற்கு சென்றான். ” அண்ணி ” என்று அழைத்தபடியே உணவு மேசையில் உணவு பார்சலை வைத்துவிட்டு ” நீலா பாப்பா இங்க வா ” என்றான்.

” ஹலோ நான் பாப்பா இல்ல ஓகே நீலா மட்டும் சொல்லணும். இனி நோ பாப்பா. என்ன புரிஞ்சிதா? ” என்றாள் கையை இடுப்பில் வைத்து முறைத்தபடி.

அதன் பின் மீண்டும் ராமு நீலா என்று அழைத்தப்பின் வந்தாள். ” என்ன மாமா ஏன் கூப்பிட்டிங்க?.” என்றாள்.

” நான் அண்ணியை கூப்பிட்டும் வரலயே எங்க போயிட்டாங்க.” என்று கேட்டான்.

” அக்காவா மாலதி சித்தி வீட்டுக்கு சின்ன அக்காவை பார்க்கப்போயிருக்கா. ஏன் மாமா எதுவும் அவசரமா பார்க்கணுமா? நான் போய் கூப்பிட்டுவரவா?.” என்றாள்.

” இல்லம்மா காணோம்னு கேட்டேன். உங்க தமிழ் மாமா சாப்பாடு அனுப்பிருக்காரு நீ சாப்பிடு அண்ணி வந்து சாப்பிடட்டும்.” என்றான்.

” இல்ல மாமா அக்கா வயித்துல பாப்பா இருக்குல்ல அதுவும் பசியோட இருக்கும் அதனால அக்காவும் பாப்பாவும் சாப்பிட்டதும் நான் சாப்பிடுவேன். நீங்க சாப்பிட்டிங்கலா? மாமா. ” என்றாள்.

” ஆமாம் நீலா சரி நீ கவனமா இரு சாப்பாடு இரண்டு பேருக்கும் அதிகமாத்தான் வாங்கியிருக்கேன். நீ பசிச்சா சாப்பிடு அண்ணி வர தாமதம் ஆகும் போல நான் போயிட்டுவர்றேன்.” என்றுவிட்டு சென்றான்.

மலர் களைத்து சோர்வாக வந்தாள். அதை பார்த்த நீலா ஓடிச்சென்று தண்ணீர் எடுத்துவந்து கொடுத்தாள். ” இதை குடிக்கா. அப்புறம் மாமா சாப்பாடு அனுப்பியிருக்காரு. அதை ராமு மாமா தந்துட்டுப்போனாரு க்கா. பாப்பாக்கு பசி வந்துடுச்சி அதுதான் நீ சோர்ந்து தெரியிற. உள்ள வா போட்டுத்தாறேன் சாப்பிடுவியாம். ” என்றாள் எட்டுவயது தங்கை அக்காவிற்கு தாயாகினாள்.

நீலாவே தட்டில் இட்லி வைத்து எடுத்துவந்து அக்காவிற்கு ஊட்டி விட்டாள். ” நீ சாப்பிட்டியா? நீலா ” என்றாள் மலர்.

” நீயும் பாப்பாவும் சாப்பிட்டதும் சாப்பிடுவேன்கா இந்த இன்னும் கொஞ்சம் சாப்பிடு. ” மேலும் உணவை ஊட்டினாள் நீலா.

தட்டில் இருந்த உணவை எடுத்து மலரும் நீலாவிற்கு ஊட்டினாள். அதை பார்ப்பதற்கு அழகிய ஓவியம் போன்று இருந்தது.

இருவரும் சாப்பிட்டதும் தமிழ் வீட்டிற்கு வந்தான். அதை பார்த்த மலர். ” என்னவாம் தொரைக்கு என்னைக்கும் இல்லாம புதுசா இன்னைக்கு வேலைக்கு நடுவில வீட்டுக்கு வந்திருக்கிறாரு. என்னன்னு சொன்னா முத்து கொட்டிடுமாக்கும்.” என்றாள் மலர் தமிழின் பின்னே சென்று.

தமிழ் திரும்பி மலரின் அருகில் வந்து ” என் ஆசை பொண்டாட்டியை பார்க்காம வேலை செய்யவே தோணமாட்டிங்கிது. அவளை கட்டிப்புடிச்சி இச்சு கொடுக்கணும்னு தோணுது. அவ வயித்துல கை வச்சி என் பிள்ளையோட கொஞ்சி கொஞ்சி என் பொண்டாட்டி மடிசாஞ்சி பேசணும் போல இருக்கு. ஒரு ஆப்பிளை இரண்டு பேரும் இரவு முழுவதும் காக்கா கடி கடிச்சி சாப்பிட்டுக்கிட்டே ஒருவரை ஒருவர் மறந்து காதல்ல மூழ்கணும் போல இருக்கு. என் பொண்டாட்டி ஊட்டி அதை நான் சாப்பிட்டு செல்லமா அவளோட விரலை கடிச்சிவைக்கணும் போல இருக்கு. இந்த அனாதைக்கு இப்டி பல ஆசைகள் எல்லாம் மனசுல இருக்கு. ஆனா அது எதுவும் நடக்காது நான் ஒருதடவை பண்ணுன தப்பே ஆயிசு முழுக்க எந்த கங்கை காவேரில முழ்கினாலும் தீராது. இதுல இந்த மாதிரி ஆசை எண்ணம் எல்லாம் எனக்கு வருதுனு சொல்லமுடியுமா? என்ன அதுதான். சும்மா ஒரு வேலையா வந்தேன் அதோட வீட்டுக்கு போயிட்டு வரலாமேனு இங்கயும் வந்தேன். இனி வேலை முடியாம வீட்டுக்கு வரமாட்டேன்.” என்று பேசிப்பேசியே அவளை கட்டிலில் இருக்கவைத்துவிட்டு ” மதியம் சாப்பாடு ராமுக்கிட்ட குடுத்தனுப்புறேன். சமைக்கிறேன்னு கஷ்டப்படத்தேவையில்ல. நீலா.” என்று கூறியபடி நீலாவை அழைத்தான்.

அவளும் வந்து ” என்ன மாமா? ” என்றாள். ” அக்காவை சமையல் கட்டு பக்கம் போகமா பார்த்துக்கோ என்ன பாவம். ரொம்ப சோர்ந்து மெலிஞ்சி போயிருக்கா தானே அதுதான் மாமா சாப்பாடு வாங்கி கொடுத்துவிடுறேன். சரியா? இந்தா இதை நீ சாப்பிடு.” என்று ஒரு சாக்லேட் கொடுத்து அவளின் தலையை தடவி விட்டுச்சென்றான்.

” என்ன ஆச்சி இந்த மனுசனுக்கு ஏதேதோ பினாத்திட்டு போறானே லூசாகிட்டானோ.” என்று நினைத்தாள் மலர் தமிழின் இன்றைய புதிய பேச்சும் செயலும் அவளை அவ்வாறு நினைக்கவைத்தது.

அவன் சென்று வெகு நேரமாகியும் மலர் இருந்த இடத்தில் அப்படியே இருந்தாள். நேரம் ஒரு மணி ஆகிவிட்டது. ராமுவும் மதிய உணவை கொடுத்துவிட்டு சென்றான்.

நீலாதான் மலரை தட்டி அழைத்து கட்டாயப்படுத்தி உணவை சாப்பிடவைத்தாள். அதன் பின் மலரும் படுத்துக்கொண்டாள். நீலா மாலதி விட்டிற்கு சென்றுவிட்டாள்.

இங்கு மதுரையில் ஜானகி எவ்வளவு முயன்றும் இசை அறிவு இருவருக்கும் அழைப்பு போகவில்லை என்ற கவலையில் மூன்று நாள் மட்டும் தாய் வீட்டில் இருந்துவிட்டு திருச்சிக்கு சென்றுவிட்டார்.

ஜானகி சென்றதும் தான் தாமரை மீனாட்சி முத்தரசன் மூவரும் இயல்பாக தங்களது உணர்வுகளை முகத்தில் காட்டினார்கள்.

ஜானகி இருந்தவரை அவருக்கு உண்மை தெரியாமலிருக்க மூவரும் சிரித்து பேசி நன்றாக உண்டு உடுத்தி என அவர்களின் தற்போதைய இயல்பிற்கு மாறாக இருந்தார்கள்.

நீண்ட வருடத்திற்கு பின் தாய் வீட்டிற்கு சீராட சந்தோசமான விடயத்துடன் வந்த மகளுடன் தாய் சந்தோசமாக பேசி சிரித்து மகிழ்ந்து மகளை கவனித்து அனுப்ப வேண்டிய தாயே மகள் எப்பொழு இங்கிருந்து செல்வாள். என்று நினைக்கும் படி வைத்த காலத்தை சபித்தபடியே அறிவை தொடர்பு கொண்டார் மீனாட்சி.

ஊட்டியில் அறிவு தங்கம் எனும் பெயரில் ஆசிரியராக பணியில் இருக்கிறாள். அவளும் அந்த நேரம் வீட்டை பற்றித்தான் நினைத்தபடி இருந்தாள்.

அப்பொழுது அவளின் கைபேசி அழைத்தது அதை எடுத்து காதில் வைத்தவள். ” சொல்லுங்க பாட்டி நானும் உங்களுக்கு பேசணும்னுதான் இருந்தேன். நீங்களே கூப்பிட்டிங்க. அங்க நிலைமை இப்ப எப்டி பாட்டி இருக்கு. அவரு இன்னும் வீட்டுக்கு வரலயா?.” என்றாள் அறிவு.

” இல்லமா வேந்தன் எங்க இருக்கிறான்னே தெரியல. நான் அழைச்சாக்கூட பேசுறானே இல்ல. அவனுக்கு இது தேவை அப்பத்தான் பக்குவம் பொறுமை வரும். ஒண்ணு நினைத்ததும் கிடைத்தால் அதோட மதிப்பு தெரியாது. தேடி அலைந்து காத்திருந்து கஷ்டப்பட்ட பிறகு கிடைச்சாத்தான் அதோட மதிப்பு தெரியும். இதோட வேந்தனோட பிடிவாதம் கோபம் எல்லாம் குறையனும். அறிவு உங்க ரெண்டு பேரையும் பத்திதான் கவலை வீடே கலையிலந்து போயிடுச்சி. ஆனா அதுக்காக நீ உன் மனசை மாத்திக்கிட்டு இங்க வரவேணாம். என் பேரன் உனக்கு பண்ணின கொடுமைக்கு நீ அவனை கொலையே பண்ணிருக்கணும். ஆனா விட்டுட்ட. உன் மனசு எப்ப மாறுதோ எப்ப நீ அவனை சந்திச்சா அவனோட வாழமுடியும்னு தோணுதோ அப்பத்தான் நீ இங்க வரணும். அப்புறம் இந்த வீடே சந்தோசத்துல மிதக்கும். அதுக்காக நான் காத்திருப்பேன். நீயும் நடந்ததை மறக்கப்பாரு அறிவு. அதிக நாள் நீங்க இல்லாம எங்களுக்கும் தாங்காது. சரி நான் வச்சிடுறேன். தாமரை பார்த்தா பிறகு கஷ்டமாகிடும்.” என்று கூறி வைத்துவிட்டார் மீனாட்சி.

இசை தற்போது சென்னையில் மால்களில் அவளை எங்காவது பார்க்கமாட்டோமா? என கண்களில் தவிப்புடன் தேடிக்கொண்டிருக்கிறான்.

அவன் அனுப்பிய டிடக்டிவ் அழைத்தால் மட்டுமே கைபேசியை எடுத்து பேசுவான். அதன் பின் வீட்டில் யார் அழைத்தாலும் பேசமாட்டான். எடுத்து பேசினால் அவனால் அவளை இன்னும் கண்டுபிடிக்கமுடியவில்லை என்று கூறமுடியாது. அழகாக அமைய வேண்டிய வாழ்வை தொலைத்துவிட்டான்.

மீண்டும் நல் வாழ்விற்க்காக வாழ்வை சீர் பண்ணுவதற்காக அவனின் இதய மணியோசையை ஊர் ஊராக தேடியலைகிறான் இசைவேந்தன்.

ஜானகி திருச்சி சென்றதும் ஆசிரமத்தில் அவருக்காக ஒரு பார்சல் காத்திருந்தது.

கொடிமங்கலத்தில். நேரம் இரவு எட்டுமணி நீலா அவளின் அறையில் படித்துக்கொண்டிருக்கிறாள். ராமு இன்னும் வீடு வரவில்லை.

மலர் அவளின் வயிற்றில் கை வைத்து
” உங்க அப்பனுக்கு கொஞ்சமும் அறிவே இல்ல பட்டு. நீயும் உன் அப்பனை மாதிரி கூமுட்டையா எப்பவும் இருக்காத பட்டு சரியா?. ” என்று தொடர்ந்து பேசுகிறாள் மலர்.

“பிள்ளையை வயித்துல சுமக்கிறாளே அவளுக்கு ஏதாவது ஆசை இருக்கும். நாம அவளை சந்தோசமா வச்சிருந்தா தானே பிள்ளை நல்லபடியா? பிறக்கும். யார்தான் தப்பு பண்ணல. உங்க அப்பா தப்பு பண்ணினார் தான். அதுக்காக அதையே பிடிச்சி தொங்கினா இருக்கிற ஒரு வாழ்க்கையும் வீணாப்போயிடுமேன்ற அறிவு இல்லவே இல்ல. தெரிஞ்சி யாரும் தப்பு பண்ணுவாங்களா? அவளுக்கு அம்மா அப்பா இல்லயே நாமதான் எல்லாமா இருந்து அவளை கவனிச்சிக்கணும். இப்டி ஒதுங்கிப்போகக்கூடாதுனு தோணுதா? உன் அப்பனுக்கு கோபம் மட்டும் மூக்குக்கு மேல வந்திடும். அவரு மனசுல இருக்கிற ஆசை எல்லாம் நான் பண்ணவா? நினைக்கவான்னு என்கிட்ட கொட்டி தீர்த்துட்டாரு. நான் ஒரு பொண்ணு அவர் பண்ணின தப்புக்கு நானே வெட்கம் இல்லாம போய் சிரிச்சி பேசுவேன்னு உன் அப்பன் பகல் கனவு கண்டான்னு வை. அது கனவாவே போய்டும். அவரா வந்தா மன்னிக்க முயற்சி பண்ணலாம். அதுவும் உனக்காக. பார்ப்போம் உன் அப்பனுக்கு எப்ப உன் அம்மாவை தேடுதுன்னு அதுவரை நாம காத்திருப்போம்.” என்று வயிற்றில் இருக்கும் பிள்ளையுடன் பேச்சிவார்த்தை நடத்தினாள் மலர்க்கொடி.

வீட்டிற்கு வந்த ஒருவர் அதை கேட்டு வந்த சுவடு தெரியாமல் மீண்டும் வெளியே சென்றார்.

Advertisement