Advertisement

முள்ளில் மலர்ந்த காதல்.

அத்தியாயம் 11

ஊட்டி நீலகிரி மாவட்டத்தின் குன்னூரில். ப்ரெவிடன்ஸ் மகளிர் கல்லூரியில் தமிழ் ஆசிரியர் தங்கம் மாணவிகளுக்கு பாடம் நடத்திக்கொண்டிருக்கிறாள்.

அவளது பாட நேரம் என்றால் மாணவிகள் விரும்பி பாடத்தில் கவனம் செலுத்துவார்கள். தமிழ் என்றாலும் அதை சுவாரஸ்யமாக நடத்துவாள் தங்கம். அவளின் பாடத்தை தொடர்ந்து மதிய உணவு நேரம்.

இரண்டு மூன்று நாட்களாக அவளுக்கு அதிகமாக பசி எடுத்தது. அதனால் அவளின் டிப்ன்பாக்ஸை எடுத்துக்கொண்டு டீச்சர்ஸ் ரூமிற்கு சென்றாள்.

சென்று அவளும் டிபன் பாக்ஸை திறக்கும் பொழுது அவளது மாணவியர் விசிறிகள் வந்தார்கள். ” ஹாய் மேம் நாங்களும் உங்களோடு இருந்து சாப்பிடலாமா?.” கேள்வி எழுப்பினார்கள்.

தங்கமோ ” ஓ எஸ் வாங்க எல்லாரும் கிளாஸ் ரூம் போகலாம் இங்க மத்த டீச்சஸ்க்கு டிஸ்டப் இருக்குமே.” என்று எழுந்தாள். அவளுடன் அந்த பட்டாளமும் சென்றது.

மாணவிகள் அவர்களின் உணவை பகிர்ந்துகொள்வதை பார்த்த தங்கம். ” ஏன் பொண்ணுகளா எனக்கு உங்க சாப்பாடு சேர் பண்ணமாட்டிங்களா?.” என்றாள். அவர்களின் வகை வகையான உணவுகள் அவளின் பசியை என்னும் அதிகப்படுத்தியது அதனால் வாய்திறந்து கேட்டுவிட்டாள்.

மாணவியர் அவர்களுக்குள் கிசு கிசுத்தனர். ” என்ன தரமாட்டிங்களா?.” என்றாள் தங்கம் மீண்டும்.

ஒரு மாணவி ” இல்ல மேம் நீங்க போய் எப்டி எங்க சாப்பாடு அதுதான் யோசிக்கிறோம்.” என்றாள்.

” ஓஹோ அதுதான் பிரச்சினையா தந்து பாருங்களேன். எப்டி சாப்பிடுவேன்னு சாப்பிட்டே காட்டுறேன். இப்ப தருவிங்களா?.” என்றாள்.

” ஸாரி மேம் இந்தாங்க எடுத்துக்கோங்க.” என்றார்கள்.

அதன் பின் அவளின் வாய்க்கு ஏற்றபோல் உணவை சப்புக்கொட்டி உண்டாள் தங்கம்.

இவ்வாறே அவள் எடுக்கும் தமிழ் பாடங்களினால் அனைத்து வகுப்பு மாணவியரும் அவள் விசிறி யாகிவிட்டார்கள்.

தனி ஒருவருக்கு அதிகம் வாடகை கொடுக்காமல் குறைந்த வாடகையில் ஒரு அறை அளவான ஒரு கூடம் அதை சிறய அளவாக பிரித்த சமயலறை அட்சாச் பாத்ரூம் எனா ஒருவருக்கு தேவையான வசதிகளுடன் இருந்தது அந்த சிறிய வீடு.

மாலை நேரம் அவளின் வீட்டுக்கதவு தட்டப்பட்டது. குளிர் தெரியாமல் இருக்க ஸால் போர்த்தியிருந்தாள் தங்கம் அதை நன்றாக போர்த்திக்கொண்டு கதவை சிறிது திறந்து யாரென்று பார்த்தாள்.

அங்கு நின்ற அவளின் தோழி வனிதா ” ஏன் தான் இப்டி பயப்பிடுறியோ தெரியலடி நானும் என்னன்னு கேட்கிறேன் சொல்லமாட்டுற கதவை திற.” என்றுவிட்டு கதவு திறந்ததும் உள்ளே சென்றாள்.

” இந்தா இதுல சூடா சப்பாத்தியும் உருளைக்கிழங்கு குருமவும் இருக்கு நீ எதுவும் உனக்கு செய்துடுவியோன்னு இப்ப எடுத்து வந்துட்டேன். உனக்கும் அஸைன்மெண்ட் வேலை இருக்குனு சொன்னியே சாப்பிட்டு அதை பாரு. நான் வர்றேன் கிஷானி எழுந்தப்பா.” என்றுவிட்டு சென்றாள்.

அவளின் இரண்டு வயது மகள் கிஷானி எழுந்தால் வீடே இரண்டாகிவிடும் அவ்வளவு பெரிய சத்தம் இட்டு கத்துவாள். அதற்கு பயந்துதான் வனிதா சீக்கிரமாக ஓடுகிறாள்.

தோழி கொடுத்த உணவை எடுத்து உண்டுவிட்டு அவளின் வேலையில் ஆழ்ந்தாள் தங்கம்.

இங்கு மதுரையில் பயணக்களைப்பில் சற்று நேரம் உறங்கிவிட்டு எழுந்து வெளியே வந்தார் ஜானகி.

மீனாட்சி, முத்தரசன். தாமரை மூவரின் முகமும் ஜானகியை பார்த்தபின் கடமைக்காக சிரித்துவைத்தார்கள்.

தாமரை எழுந்து சென்று காபி வைத்து எடுத்துவந்தார். ” காபி சாபிடுங்க அண்ணி.” என்றார் சிரித்தபடி.

அதை கையில் வாங்கிய தாமரை ” அறிவும் இசையும் எங்க காணோம் நான் வந்தது தெரியாதா? நீங்க யாரும் சொல்லலயையா?.” என்றார்.

மீனாட்சி முந்திக்கொண்டு ” நீ வந்ததும் ரெஸ்ட் எடுக்கட்டுமேன்னு சொல்லல ஜானு உன் மாப்பிள்ளையும் பொண்ணும் தேன் நிலவு கொண்டாட ஊட்டி போயிருக்காங்க அறிவு சொல்லத்தான் ட்ரை பண்ணினா உன் கைப்பேசி பிஸியா இருந்துதாமே அதுதான் நான் சொல்லிக்கிறேன் நல்ல நேரத்துல நீங்க புறப்படுங்கன்னு சொல்லி இரண்டு நாளைக்கு முதல் அனுப்பி வச்சிட்டோம் மா. இன்னும் எங்களுக்கும் பேசல. சரி அவங்களே கூப்பிடட்டும்னு விட்டுட்டோம் சின்னஞ்சிறுசுக நாம ஏன் தொல்லை பண்ணுவானே.” என்றார் மீனாட்சி.

தாய் சொன்னதும் மகள் வேறு எதுவும் கேட்காமல் அதை நம்பினார். அவரின் வளர்ப்பு மகளுக்கு இவ்வாறு நேர்ந்தது என்று பின்பு தெரிந்தால் என்னவாகுமோ? மூவரின் நிலையும்.

” சரி நீ வந்ததும் ஏதோ சந்தோசமான விசயம்னு சொன்னியே மொத அதை என்னன்னு சொல்லு ஜானு.” என்று பேச்சை மாற்றினார் முத்தரசன்.

” அது ம்மா போன வெள்ளிக்கிழமை உச்சிபிள்ளையார் கோவிலுக்கு போயிருந்தேன். அங்க என்னை ஒரு அம்மா சந்தித்து பேசினாங்க.” என்று அன்று நடந்ததை கூறினார் ஜானகி.

ஜானகி வெள்ளியன்று உச்சிப்பிள்ளையார் கோவில் செல்வது வழமை அதே போன்று அன்று காலை வோவிலுக்கு சென்றார். அங்கு பூஜை முடிந்து திரும்பி வரும்பொழுது ஒரு வயது முதிர்ந்த அம்மா ஜானகியை அழைத்தார்.

” அம்மா பச்சைசேலை நில்லுமா.” என்றார். ஜானகி அதை கவனியாமல் சென்றார். அந்த அம்மா மீண்டும் சற்று உரத்தகுரலில் அழைத்தார். அப்பொழுதுதான் ஜானகி தன்னை குனிந்து பார்த்தார். அவரும் பச்சை சேலை கட்டியிருந்தபடியால் திரும்பி பார்த்தார்.

” உன்னைத்தான் நில்லுமா வர்றேன்.” என்று வயது முதிர்வினால் சற்று மெதுவாக நடந்து வந்தார்.

அவரும் வந்ததும் இருவரும் ஒரு நிழலில் இருந்தார்கள். ” ஏன்மா உன் பேர் என்ன மறந்துட்டேன் இருபத்தி இரண்டு வருசமாகிடுச்சி நியாபகம் இல்ல. ஆனா உன்னை மறக்காம அடையாளம் கண்டுபிடிச்சிட்டேன்.” என்றார் அந்த அம்மா பெருமையாக.

” நீங்க யாருன்னு எனக்கு தெரியலயே மா” என்றார் ஜானகி.

” நீயும் மறந்திருப்பதானே. அதுசரி உன் பொண்ணு இப்ப கல்யாணம் பண்ணுற வயசு வந்துருக்குமே. பண்ணி குடுத்துட்டியா? இல்ல இப்பதான் மாப்பிள்ளை பார்க்கிறியா? தாயி. ஏன்? கேட்க்கிறேன்னா என் பேரன் அமெரிக்காவில் டாக்டரா இருக்கிறான். அவனுக்கும் நாங்க பொண்ணு தேடுறோம். அதுதான் உன் பொண்ணை கேட்கலாம்னு கொஞ்ச காலமாக தோணிக்கிட்டே இருக்கு ஆனா உன்னை திருச்சியில எப்டி கண்டுபிடிக்கிறதுனு தெரியல. இந்த பிள்ளையார் தான் நம்மலை சந்திக்க வச்சிருக்காரு பாரு அவரோட சக்தியே சக்தி தான். ” என்றார் கன்னத்தில் போட்டபடி.

ஜானகி அதிர்ச்சியாகி.” என்னம்மா சொல்லுறிங்க எனக்கு பொண்ணா? நீங்க வேற யாரையோ பார்க்கணும் போல அது நான் இல்ல. ஏன்? அப்டி சொல்லுறேன்னா எனக்கு குழந்தையே இல்லம்மா. எனக்கு பிறக்கும் போதே குழந்தை இறந்துதான் பிறந்துச்சாம். அப்புறம் அடுத்து வேற பிள்ளையே உண்டாகலம்மா டாக்டர்கிட்ட செக்கப் போனபோது எனக்கு அடுத்த குழந்தையை தாங்க சக்தி இல்லயாம் கர்ப்பபை வீக்கா இருக்குன்னு அதை எடுத்துட்டாங்க. அதுக்கப்புறம் தான் எங்க சொத்து கொஞ்சம் வித்து சின்னதா என்னால முடிஞ்சளவு ஆதரவில்லாத குழந்தைகளை வளர்க்கிறேன். இதுதான் என் வாழ்க்கை ம்மா.” என்றார் கவலை தோய்ந்தமுகத்துடன்.

” ஐயோ என்ன தாயி சொல்லுற உனக்கு பிரசவம் பார்த்த டாக்டரே நான் தானே இந்த பிள்ளையார் சாட்சியா சொல்லுறேன். உனக்கு பிறந்தது தங்க விக்கிரகமாட்டம் பொண்ணுதான். அதுக்கு எந்த குறைபாடும் இல்ல நோய் நொடியும் இல்ல. நல்ல ஆரோக்கியமான குழந்தையை நான் இதே கையாலதான் தொட்டு தூக்கினேன். எனக்கு கொஞ்சம் எங்க குடும்ப பாரம்பரிய படி ஜோசியம் பார்க்கத்தெரியும். உன் பொண்ணு பிறந்த அப்பவே அவளோட வாழ்க்கையை கணிச்சிட்டேன். நல்ல ராணி மாதிரி வாழக்கூடிய ஜாதகம். குழந்தை பருவத்தில கொஞ்சம் கஷ்ட ஜாதகம் அதை கடந்து சில சோதனை காலத்தையும் கடந்து வந்துட்டா வாழ்க்கை அமோகமா இருக்கும் உன் பொண்ணு பலபேருக்கு சம்பளம் குடுக்கிற கை மா அவளோடது மகராசியான பொண்ணு. “

” எனக்கு என்னவோ நீ உனக்கு முதல் நடந்த குழந்தை பேறு பத்தி சொல்லுறன்னு தோணுது. அன்னைக்கு என் செல்ல பேரனுக்கு பிறந்தநாள். என் பேரன் பிறந்த அன்றே பேரனுக்கு உன் பொண்ணு ஜோடியா பிறந்துடுச்சினு சந்தோசப்பட்டேன். அந்த சந்தோசத்துல அப்புறம் உங்களை எல்லாம் மறந்திட்டு டியூட்டி முடிச்சி வீட்டுக்கு போயிட்டேன். அந்த பொண்ணுக்கு நீண்ட காலமா குழந்தை இல்லாம இருந்து பிறகு உண்டாச்சி அந்த சந்தோசத்துல அவங்க வீட்டு ஆளுங்க அதிகமா கொழுப்பு இனிப்பு இப்டி சாப்பாட்டை குடுத்து அந்த பொண்ணு அதிக வெயிட் போட்டுடா அது பேறு காலத்துல கஷ்டமாகிடுச்சி ஆண் பிள்ளை இறந்துதான் பிறந்துச்சி. அதுக்கு அரைமணி நேரம் கழிச்சு உனக்கு வலி வந்துடுச்சி அப்புறம் உனக்கு பேறு பார்த்துதான் பொண்ணு பிறந்துச்சி மா. இதுதான் உண்மை இந்த கோவில்ல வச்சி சொல்லுறேன் இதுதான் சத்தியம். அப்புறம் நான் வீட்டுக்கு போய் ஒரு டூர் போனோம் அதுல மறந்துட்டேன். “

” கொஞ்ச வருசம் கழிச்சித்தான் உன்னை பார்க்கணும்னு அடிக்கடி தோணிக்கிட்டே இருந்துச்சி நீ திருச்சின்னு தெரியும் முகவரி தெரியாது. எங்க இருந்தாலும் இந்த கோவிலுக்கு வருவாங்க. அப்டி உன்னையும் பார்க்கமாட்டோமான்னு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இங்க வருவேன். அப்டியும் உன்னை இதுநாள் வரை பார்க்கமுடியல இப்பதான் அதுக்கும் காலம் அமைஞ்சிருக்குப்போல தாயி எல்லாம் இறைவன் செயல். ” என்றார் அந்த டாக்டர் அம்மா.

” நீங்க சொல்லுறதை என்னால நம்மவும் முடியலம்மா ஏதோ சினிமா மாதிரி இருக்கு. அப்போ அவங்கதான் என் குழந்தையை எடுத்துக்கிட்டு அவங்க குழந்தையை என்கிட்ட வச்சிருக்காங்க போல.” என்றார் ஜானகி கவலையுடன்.

” எல்லாம் காலத்தோட செயல் தாயி மனக்கவலை படாத. நீ பண்ணுற புண்ணிய காரியம் உன் பொண்ணை உன்கிட்ட சேர்க்கும். சோதனை காலம்னு தெரிஞ்சிக்கிட்டேன். ஆனா இப்டி தாயும் பொண்ணும் பிரிஞ்சிடுவிங்கன்னு நினைக்கல.” என்றார் கவலையுடன் டாக்டர்.

” இப்ப நான் என் பொண்ணை எங்க எப்டி தேடி கண்டுபிடிப்பேன் ம்மா.” என்றார் ஜானகி.

” நீ விரும்பினா? சோலி போட்டு பார்க்கலாம்.” என்றார்.

” சரிங்கம்மா பாருங்க.” என்றார் ஜானகி.

அவரும் சோலி போட்டு பார்த்தார். ” உன் பொண்ணுக்கு சோதனை காலம் இன்னும் இருக்கு. ஆனா தாயும் பிள்ளையும் பிரிஞ்சிடலன்னு சோலி பலன் சொல்லுது தாயி. இப்ப உன் பொண்ணு மலைநாட்டுல இருக்கிறா தாயி உயிருக்கு ஆபத்தில்ல. உன் பிள்ளைக்கும் கரு உருவாகிருக்கு அது வெளிய வரும் காலத்துல உன் பொண்ணு உன்னை தேடி வருவா. அதோட அவளோட கஷ்ட காலம் முடியுது. அதுக்குப்பிறகான அவளோட வாழ்க்கை ராணி மாதிரி இருக்கும்.” என்றார் பயபக்தியுடன்.

” நான் எப்டிமா என் பொண்ணை கண்டுபிடிக்கிறது.” என்றார் ஜானகி.

” உன் பொண்ணு வித்தியாசமானவ வலது கையில ஆறு விரல். இடது காலுல ஆறு விரல் இருக்கும். ஆறு விரல் பெரிய விசயமில்ல ஆனா யாருக்கும் இப்டி இருக்கிறது குறைவு சிலருக்கு ஏதாவது கையிலயோ இல்ல கால்லயோ இருக்கும். ஆனா இப்டி வலது இடதுனு இருக்கிறது அபூர்வமானது. அத்தோட அந்த வலது கை ஆறுவிரல் ஒட்டி இருக்கும். இரண்டுக்கும் பொதுவா ஒரு கறுப்பு மச்சம் இருக்கும். இது நான் அவளை கையில தூக்கும் போதே பார்த்துட்டேன். அதுவும் ஒரு அதிஸ்டம். இதை வச்சி உன் மகள் உன்னை தேடி வரும்போது நீ கண்டுபிடிக்கலாம். அப்புறம் அதை உண்மை படுத்த சயன்ஸ் முறைப்படி டீ என் ஏ டெஸ்ட் மூலம் தெரிஞ்சிடும்.” என்றார் டாக்டர்.

” எனக்கு நீங்க சந்தோசமான விசயம் சொல்லிருக்கீங்க இப்ப நீங்கதான் எனக்கு தெய்வம் ம்மா இதை என் அம்மாக்கு சொல்லணும். சொந்த பிள்ளை இல்லையேனு கவலை பட்ட நான் பிள்ளைகளை வளர்க்க ஆரம்பித்தேன். அதன் மூலம் என் மன சந்தோசம் கிடைச்சிது. இப்ப நான் பெத்த பொண்ணே உயிரோட இருக்கிறான்னு தெரிஞ்சதும் ரொம்ப சந்தோசம். என்ன இந்த நல்ல செய்தியை பார்க்க அவங்க அப்பாக்கு குடுத்துவைக்கல. இப்ப என் பொண்ணு கல்யாணமும் பண்ணி அவளுக்கும் பிள்ளை உண்டாகிடுச்சா? அப்போ பேரப்பிள்ளையோடதான். என் பிள்ளையை பார்க்கப்போறேன். ” என்றார் திடீரென்று கிடைத்த சந்தோசமான செய்தியில் மகிழ்ச்சி அடைந்தார் ஜானகி.

நீண்ட நேர உரையாடல் முடிந்ததும். இருவரும் அவரவர் முகவரி கைபேசி எண்களை பரிமாறிக்கொண்டார்கள். ” அப்போ நான் புறப்படுறேன் தாயி உன்னை பார்த்தது சந்தோசம் என்ன உன் பொண்ணு என் பேரனுக்கு இல்ல. அது கவலை தான். ஆனாலும் பரவாயில்லை. உன் பொண்ணு கிடைச்சதும். நீ குடும்பத்தோட எங்க வீட்டுக்கு வரணும் தாயி அப்போ நான் வர்றேன். நீ கவனமா போ.” என்று கூறிவிட்டு சென்றார் டாக்டர்.

” சரிம்மா நீங்களும் கட்டாயம் எங்க வீட்டுக்கு வரணும். நீங்க எனக்கு அப்டி ஒரு மன சந்தோசத்தை தந்திருக்கிறீங்க. ரொம்ப நன்றி ம்மா உயிர் இருக்கிற வரை நான் உங்களை மறக்கமாட்டேன்.” என்று அவரின் கையை பிடித்து நன்றி கூறி விடைபெற்றார் ஜானகி.

நடந்தவற்றை அவரின் வீட்டில் சொன்னார் ஜானகி. ” நானும் முதல் நம்பலம்மா ஆனா என்னால நம்பாம இருக்கவும் முடியல நல்லா யோசிச்சு பார்த்துட்டேன். எனக்கு பொண்ணு இருக்கிறா ம்மா. நான் இனி தனியாள் இல்லம்மா. நாங்க இரண்டு பேரும் சந்திப்போமாம். அந்த நாளுக்காக என் தேவதையை கொண்டாட காத்திருக்கிறேன் ம்மா. ” என்றார் பரவசத்தோடு.

” எங்களுக்கும் தான் நம்ப முடியல ஆனா நம்ம வீட்டு பொண்ணு கிடைச்சிட்டா சந்தோசம் அண்ணி அதையே நீங்களும் நினைங்க.” என்றார் தாமரை.

அவர்கள் பேசிக்கொண்டிருக்கவும் முத்தரசன் இசைவேந்தனுக்கு தொடர்ந்து கைபேசியில் அழைக்கிறார். ஆனால் அவன் அதை எடுக்காமல் தற்போது சென்னையில் இருக்கிறான். அவனின் மணியைத்தேடி. நாளுக்கு நாள் அவனின் கோலம் அதிகமாகியது.

அவன் எடுக்கவில்லை என்றதும் தினேஷிற்கு அழைத்தார். அவன் ஏடுத்ததும் ” ஹலோ சொல்லுங்க அங்கிள்.” என்றான்.

” நீ இசைக்கு கூப்பிட்டியாப்பா ? என் மகன் இப்ப எங்க எப்டி இருக்கிறானாம். என் மருமகள் பத்தி எதுவும் தெரிஞ்சிதா?.” என்றார் ஜானகிக்கு கேட்காத படி ஆனால் பதட்டத்துடன்.

” இல்ல அங்கிள் அவனும் என்னை கூப்பிடல நான் கூப்பிட்டும் அவன் எடுக்கல இன்னும் அறிவு சிஸ்டரை கண்டுபிடக்கலப்போல. நீங்க கவலை படாதீங்க அங்கிள். எல்லாம் நல்லதே நடக்கும். இசை எனக்கு கூப்பிட்டா நான் உங்களுக்கு அழைக்கச்சொல்லுறேன்.” என்று கூறிவிட்டு வைத்துவிட்டான் தினேஷ்.

முத்தரசன் வந்ததும் ” நான் இசையோடையும் அறிவோடயும் வீடியோ கால்ல பேசி அவங்களை பார்த்தாத்தான் நிம்மதி. எனக்கு சந்தோசத்துல அதிகமா பசிக்கிது ம்மா இன்னைக்கு உங்க கையால சாப்பிடப்போறேன். அப்புறம் அவங்களோட பேசலாம்.” என்று சந்தோசமாக தாய் வீட்டில் நீண்ட வருடத்திற்கு பிறகு சீராட வந்திருக்கிறார் ஜானகி.

ஜானகிக்கு உண்மை தெரிந்தால் என்னவாகுமோ காலத்தின் கையில்.

Advertisement