Advertisement

அத்தியாயம் 10.

மீனாட்சி இல்லம் இருள் சூழ்ந்தது போன்று அமைதியாக இருந்தது. யாரின் முகத்திலும் சிரிப்பில்லை வீட்டிலும் சந்தோசம் இல்லை. அங்கு குழலியின் ஐந்து வயது மகன் க்ருஷ் தான் அங்கும் இங்கும் ஓடி மழலை மொழியில் கதை பேசி சத்தமிட்டு அவ் வீட்டை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர முயற்சிக்கிறான்.

ஆனால் அவனின் சத்தம் யாரின் மனதிலும் பதியவில்லை. இசையின் நிலை வார்த்தையால் சொல்ல இயலாது. கண் மட்டுமே வெளியே தெரியும்படி இருந்தது அவனின் முகம். இரண்டு மாதமாக தாடி மீசை என எதுவும் எடுக்கவில்லை அது நன்றாக வளர்ந்து அவனை யாருக்கும் இலகுவில் அடையாளம் காணமுடியாதபடி முகத்தை மூடியிருந்தது. அதைத்தான் அவனும் விரும்பினான். எங்கேனும் அவனை அவ்வாறு அறிவு கண்டால் ஓடி ஒழிய மாட்டாள். யாரோ என்று கடந்து செல்வாள். அப்படியாவது அவளை கண்டுவிடலாம் என இசை அவ்வாறே அவனது தோற்றத்தை மாற்றிக்கொண்டான்.

காதல் ஒருவனை பித்தனாக்கியது.

இவ்வளவு நடந்தும் அவன் மதுவை தேடிப்போகவில்லை அவனின் மனைவி அறிவுமணியை தேடிச்சென்றுவிட்டான். அவன் எப்பொழுது எங்கு செல்கிறான். என்ன செய்கிறான், என எதுவும் அவன் அறியாதது. ஏனெனில் அவனின் மனைவி அறிவு அவனைவிட்டு கடிதம் மூலம் தேட வேண்டாம் அவனையும் இந்த வாழ்க்கையும் பிடிக்காமல் இங்கிருந்து செல்வதாகவும் தேடி விளம்பரம் செய்தால் அவளின் வாழ்வை முடித்துக்கொள்வாள் என்றும் எழுதி வைத்துவிட்டு அனைவரையும் விட்டு சென்றுவிட்டாள் அறிவு.

இசை மலரின் அம்மாவின் நினைவு நாளிற்கு சென்றுவிட்டுவந்தான். அந்த ஒருமாத காலமும் அறிவு வீட்டைவிட்டு எங்கும் செல்லவில்லை. தாமரைதான் அவளை அவ்வாறு பார்க்க முடியாமல் அவளிடம் சென்று மீண்டும் ஸ்கூலிற்கு செல்லும்படி கூறினார். அவளும் இரண்டு நாள் யோசித்து சரி என்று கூறினாள்.

ஏனெனில் வீட்டில் இசையின் தொல்லை அதிகமாகியது அதிலிருந்து தப்புவதற்காக அவள் பள்ளிக்குச்சென்றாள். வீட்டிலும் சரி அவள் பள்ளியில் வேலை செய்யும் போது என அவனின் பார்வை அவளை மொய்த்தது. ஆனால் இருவரும் பேசிக்கொள்ளவில்லை.

அன்று ஒருநாள் இசையால் அறிவை பின்தொடர முடியவில்லை காரணம் முத்தரசன் இசையை வேலை விசயமாக சென்னை சென்றுவரும் படி கூறினார்.

அவனும் தட்டாமல் சென்றான். அவன் சென்ற அடுத்தநாள் அறிவு அவளின் சர்ட்டுபிக்கேட் மூன்று செட் உடை அவளின் சம்பளப்பணம் என அனைத்தையும் எடுத்துக்கொண்டு அவளுக்கு தாமரை கொடுத்த நகைகள் தாலியை தவிர ஏனையவற்றை கழட்டி அவள் தங்கியிருந்த ரூமினுள் வைத்து கடிதமும் வைத்துவிட்டு சென்றுவிட்டாள் அறிவு.

அன்றிரவு மணி ஏழாகியும் அறிவை காணவில்லை என தேடினார்கள் அவள் ஸ்கூலில் இருந்து மாலை ஐந்துமணிக்கெல்லாம் சென்றுவிட்டதாக கூறினார்கள். அவள் மீண்டும் பள்ளிக்கு சென்றாலும் இசையின் மனைவி என யாரிடமும் கூறவில்லை வீட்டிலும் முறைப்படி இருவரும் சேர்ந்ததும் ஆட்களுக்கு தெரியப்படுத்தலாம் என விட்டுவிட்டார்கள்.

அறிவை காணாமல் தேடியவர்கள் முத்தரசன் மூலம் இசைக்கு தகவல் சொன்னார்கள். இதை கேட்டதும் அவனால் ஒரு நொடி கூட அங்கு இருக்கமுடியவில்லை இரவு விமானத்தில் மதுரை வந்துவிட்டான்.

அவனும் வேறு இடங்களில் தேடினான். அவள் கிடைக்கவில்லை. மதுரையில் இருந்து திருச்சி சென்ற பஸ் புகையிரதம் விமானம் என அனைத்து நிலையங்களிலும் அவளின் பெயரில் பதிவு செய்திருக்கிறதா? என தேடினான். எதற்கும் சரியான பதில் கிடைக்கவில்லை.

தாமரைதான் அறிவின் அறையில் தேடிப்பார்த்து நகையும் கடிதத்தையும் எடுத்துவந்தார். அதை பார்த்ததும் அவளே விரும்பி வீட்டைவிட்டு சென்றுவிட்டாள் என தெரிந்ததும் அனைவரும் மனமொடிந்து தொய்ந்தார்கள்.

இதை இசைக்கும் முத்தரசன் தெரியப்படுத்தினார். அவனும் வீட்டிற்கு வந்து அவன் தற்போது தங்கியிருந்த அறைக்கு சென்றான். அங்கு அவனுக்கும் ஒரு கடிதம் காத்திருந்தது.

” நான் அறிவுமணி சுய சிந்தையுடன் தங்களுக்கு எழுதுவது. உங்களிடம் பணமிருந்தாலும் பெண்ணை மதிக்கும் மனமில்லை. என்னை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து எனது விருப்பமின்றியே என்னுடன் வாழ்ந்து விட்டீர். நான் இங்கு இருந்த ஒருமாத காலமும் உங்களது காதல் பார்வையை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இங்கிருப்பது முள்ளின் மேல் இருப்பது போல் இருக்கிறது. உங்கள் அம்மா கொடுத்த தண்டனை படி நீங்க வீட்டை விட்டு சென்றிருந்தால் நான் இங்கு இருந்திருப்பேன். ஆனால் நீங்க செல்லாமல் உங்களது நண்பரிடம் கூறிய காரணத்தை நான் கேட்டேன். அதனால் உங்களுக்கு சிரமம் தராது நானே இங்கிருந்து செல்கிறேன். தற்கொலை பண்ணமாட்டேன். உயிருடன் வாழ்வேன். என்னை தேடவேண்டாம் நீங்கள் தேடுவதை நான் அறிந்தால் எனது முடிவு வேறுமாதிரி இருக்கும். இதே இந்தியாவில் ஏதோ ஒரு மூலையில் நான் இருப்பேன். தொடர்ந்து இருப்பதும் இல்லாமல் இருப்பதும் உங்கள் கையில்.

இப்படிக்கு.
யாருமற்ற தனிப்பறவை அறிவுமணி.” என்று அக்கடிதம் முடிந்திருந்தது.

அதை படித்ததும் இசை அவனது முட்டாள் தனத்தை எண்ணி நொந்தான்.

இசை மீண்டும் சட்டம் பேசி வீட்டிற்கு வந்த சில நாள் கழித்து அவனின் நண்பன் தினேஷிடம் இருந்து கைபேசிக்கு அழைப்பு வந்தது.

அதை எடுத்து காதில் வைத்தவன். ” ஹலோ என்ன மச்சான் இப்பதான் என்னை நினைவு வந்துச்சா?.” என்றான்.

தினேஷோ ” இல்ல மச்சான் புதுசா கல்யாணம் பண்ணினவன் உன்னை ஏன் தொல்லை பண்ணணும் அதுதான் கால் பண்ணல. சரி சொல்லு லைப் எப்டி போகுது.” என்று கேட்டான்.

அதற்கு இசை அவனின் தற்போதைய நிலைவரை சொன்னான்.

” என்னடா மச்சான் அப்போ நீ வீட்டை விட்டு போகலயா?.” என்றான் சந்தோசத்துடன். ஏனென்றால் அவனும் இசையை அவனது வீட்டிற்கு அழைக்கிறான். ஆனால் இசை இதுநாள் வரை போகவில்லை அந்த கோபத்தில் தினேஷும் இசையும் பேசாமல் இருந்திருக்கிறார்கள்.

தற்போது வீட்டை விட்டு வெளியேரும் நிலையிலாவது நண்பன் தன் வீட்டிற்கு வரமாட்டானா என்று தான் ஏன் வெளியே போகவில்லை என சந்தோசமாக கேட்டான் தினேஷ்.

அதற்கு இசை ” நான் வெளிய போனா மணியை எப்டி காதலிக்கமுடியும். என் காதலை அவளுக்கு எப்டி புரியவைக்கமுடியும். இப்ப வீட்டுல இருக்கிற கடுமையான நிலையில் நான் அவளை பார்த்துகிட்டு இருந்தா போதும். அப்டியே கொஞ்சம் கொஞ்சமாக என்னை அவளுக்கு புரியவைச்சி நானும் அவளும் சந்தோசமா குடும்ப வாழ்க்கை வாழணும்டா அதுதான் இப்ப எனக்கு இருக்கிற ஒரே வேலை. அதுக்குப்பிறகுதான் வேற எதுவா இருந்தாலும். நீ என்ன பண்ணு நண்பன் பொண்டாட்டியோட சேர்ந்து சந்தோசமா வாழணும் கோவில்ல அர்ச்சனை போடு பூஜை பண்ணு சரியா? இனி அவளோடதான் நான் உன்னை பார்ப்பேன். ஓகே பாய் மச்சான்.” என்று வைத்துவிட்டான் இசைவேந்தன்.

இவர்கள் பேசியதை அறிவு கேட்டுவிட்டாள். அப்போது இருந்துதான் அவளுக்கு இங்கிருந்து போகும் எண்ணம் தீவிரமாகியது.

அதன்படியே சாலினிக்கும் கூறாமல் திட்டப்படி சென்றுவிட்டாள்.

முத்தரசனும் டிடக்டிவ் மூலம் யாருக்கும் தெரியாமல் தேடிக்கொண்டிருக்கிறார். இசையும் தொழில் வீடு என அனைத்தையும் போட்டது போட்டபடி விட்டுவிட்டு ஊர் ஊராக செல்கிறான் அறிவை தேடி.

இவ்வாறே அவள் சென்று இன்றுடன் இரண்டு மாதம் ஆகிவிட்டது இதுவரை யாரிடமும் எவ்வித தகவலும் வரவில்லை.

மேலும் இரண்டு நாள் கழித்து திடீரென்று திருமணம் முடித்து சென்று மிகவும் சொர்ப்பமான தினங்களே தாய்வீட்டிற்கு வந்து சென்ற ஜானகியம்மா இன்று தகவல் சொல்லாமல் வந்து இறங்கினார்.

திருச்சியில் இருந்து இரவு பஸ்ஸிற்கு புறப்பட்டவர் அதி காலையில் வந்துவிட்டார்.

தாய்வீட்டிற்கு வந்து காலிங் பெல் அடிக்கவும். அறிவு சென்றதில் இருந்து இசையும் வீட்டில் இல்லை அதனால் அங்கு யாருக்கும் சரியான உணவோ தூக்கமோ இல்லை அதனால் முதல் சத்தத்திற்க்கே தாமரை எழுந்து வாசல் கதவு பக்கம் வந்துவிட்டார்.

அவர் வந்து கதவின் அருகில் செல்லும்வரை பல தெய்வங்களை பிரார்த்தனை பண்ணியிருப்பார். இது அறிவாக இருக்கவேண்டும். இல்லையேல் அறிவை பற்றிய தகவலாவது இருக்கவேண்டும் என. நினைத்துக்கொண்டு கதவை திறந்தார்.

ஆனால் அங்கு சற்றும் எதிர்பார்க்கவில்லை ஜானகியை.

தாமரைக்கு தலை சுற்றாத குறைதான். அதிர்ச்சியில் உறைந்துவிட்டார் என்றே சொல்லலாம். இப்டி எவ்வித அறிவிப்பும் இல்லாமல் ஜானகி வரக்கூடும் என்று யாரும் கனவிலும் நினைக்கவில்லை.

அங்கு நடந்த எதையும் யாரும் ஜானகிக்கு சொல்லவில்லை. இப்பொழுது ஜானகி அறிவை கேட்டால் என்ன பதில் சொல்வது என திகைத்தனர்.

கதவு திறந்து சத்தம் கேட்டும் வீட்டினுள் இன்னும் யாரையும் காணோம் என முத்தரசன் மீனாட்சி என அனைவரும் கூடத்திற்கு வந்தார்கள்.

அவர்களும் ஜானகியின் வரவை எதிர்பார்க்கவில்லை என அவர்களின் அதிர்ந்த முகமே காட்டியது.

” என்ன அம்மா , அண்ணி நான் உங்க ஜானகிதான் என்னை மறந்துட்டிங்கலா? என்ன எல்லாரும் பேயை பார்த்த மாதிரி ஸாக் ஆகிட்டிங்க.” என்றார்.

தாமரை தான் சற்று தெளிந்து ” உள்ள வாங்க அண்ணி.” என்றார். தாமரையை விட ஜானகி ஐந்து வயது பெரியவர்.
அதனால் சற்று மரியாதையாகதான் இருவரும் பேசிக்கொள்வார்கள்.

ஜானகி உள்ளே வந்ததும் தாமரை குடிப்பதற்கு தண்ணீர் கொடுத்தார். அதை வாங்கி குடித்ததும். ” நான் ஒரு சந்தோசமான விசயம் சொல்லத்தான் நேரில் வந்தேன். அதை கைபேசியில் சொல்ல விருப்பமில்லை அதோட உங்களை எல்லாம் பார்த்து ரொம்ப மாதமும் கடந்துடுச்சி. இரண்டு மாதமா இசையும் திருச்சி வரல அவனும் போன்ல கூப்பிட்டா சரியா பேசுறானே இல்ல அதுதான். நேர நானே வந்துட்டேன். ம்மா எப்டி இருக்க?. சரி நான் கொஞ்சம் ரெஸ் எடுக்கிறேன். களைப்பா இருக்கு. அறிவும் மாப்பிள்ளையும் எழுந்ததும் வெளிய எங்கையும் போகவேணாம்னு சொல்லுங்க. நான் வந்திருக்கிறேன்னு அறிவுகிட்ட சொல்லிடாதிங்க ஒரு இன்ப அதிர்ச்சியா இருக்கட்டும். ” என்று கூறிவிட்டு அவர் வந்தால் தங்குவதற்கு என இருக்கும் அறைக்கு சென்றார் ஜானகி.

அவர் உள்ளே சென்றதும் இவர்கள் மூவரும் பயம் கவலை யார் எப்படி ஜானகியிடம் எடுத்துச்சொல்வது. அதை அவர் எவ்வாறு எடுத்துக்கொள்வார். என தெரியாமல் தவித்தார்கள்.

ஜானகி அவரின் தாய் வீட்டில் அறிவு சந்தோசமாக நிம்மதியாக வாழ்வாள் என நினைத்துதான் அறிவு இசையை திருமணம் பண்ணப்போவதாக சொன்னதும் பெரிதாக தடை சொல்லாமல் இருந்தார். ஆனால் அவரின் நம்பிக்கை இங்கு பொய்த்துவிட்டதை அறிந்தால் என்ன முடிவெடுப்பாரோ என நினைத்து பயந்தார்கள் அவர்கள் மூவரும்.

இங்கு கொடிமங்கலத்தில் தமிழ் வெகு நேரம் மலரை அழைத்துவிட்டு காத்திருந்தான். அவளும் வெகு நேரம் யோசித்து ஒரு முடிவெடுத்தவளாக அவளை சற்று தயார் படுத்திக்கொண்டு முகம் கழுவி பவுடர் போட்டு பொட்டுவைத்து வெளியே வயிற்றின் கீழ் ஒரு கைவைத்தபடி மெல்லிய உடலுடன் பெரியவயிற்றையும் வைத்துக்கொண்டு தேர் ஒன்று அசைந்து வருவது போன்று நடந்து வந்தாள் மலர்.

அவர்களின் வீட்டில் ஒரு கதிரை தான் இருந்தது அதில் தமிழ் இருந்தான். மற்றவர்கள் அவனை சுற்றி கீழே பாயில் இருந்தார்கள்.

அவள் வருவதை பார்த்ததும் தமிழ் எழுந்துவிட்டான். ” இங்க வா வந்து இதுல இரு.” என்று கதிரையை அவளின் பக்கம் நகர்த்தினான்.

ஆனால் அவள் அவன் சொன்னதை காதில் வாங்காமல் ” புள்ளதாச்சி கீழதான் இருந்து எழனும் அப்பதான் புள்ளைக்கு நல்லது இது எங்க அப்பனுக்கு தெரியப்போகுது. ” பெரிய மனுசியாக சற்று சத்தமாகவே சொன்னாள். அது அங்கிருந்த அனைவருக்கும் நன்கு தெளிவாக கேட்டது.

அவளது பேச்சில் தமிழே விழித்தான். அருகிலிருந்த ராமுவிடம் ” என்னடா இவ சொன்னா?.” என்றான் தமிழ்.

” அண்ணி சரியாத்தான் சொல்லிருக்கு புள்ளையோட அப்பனுக்கு ஒண்ணும் தெரியாதாம் அண்ணே. அப்போ அது நீங்கதானே உங்களுக்குதான் சொல்லிருக்காங்க.” என்றான் ராமு.

” இவ்வளவு விபரமா யாரும் உன்கிட்ட கேட்டாங்கலா வாயை மூடுடா.” என்று ராமுவிற்கு மட்டும் கேட்கும் படி சத்தமிட்டுவிட்டு மலரின் பக்கம் திரும்பினான்.

அங்கு சற்று நேரம் அமைதி நிலவியது. அதை மலரின் தங்கை நீலாதான் கலைத்தாள். மலரின் அருகில் இருந்து வயிற்றில் கைவைத்து தடவியபடி ராணியுடன் பேசினாள். ” எங்க அக்கா வயித்துக்குள்ள பாப்பா இருக்காம் ராணியக்கா அது வெளிய வந்ததும் நான் யாருக்கும் தரமாட்டேன். நானே வச்சி விளையாடுவேனே.” என்றாள் கண்களை விரித்து பாவனை காட்டினாள் பெண்.

அவனின் மனைவியை நன்கு பார்த்துவிட்டு மாலதியின் பக்கம் திரும்பினான். ” நான் ஆரம்பத்துலயே சொன்னதுதான் அங்க வீடும் கட்டி முடியுது ஒரு நல்ல நாள் பார்த்து பால் பொங்கி அன்னைக்கே இவங்க அங்க வாரது மாதிரி பாருங்க.” என்றான் தமிழரசு.

” எங்களுக்கு ஒரு முறை சொன்னா காது நல்லா கேட்கும் ஒரே தேஞ்ச ரெக்கார்ட் மாதிரி பேசவேணாம். ” என்று தமிழிடம் காய்ந்துவிட்டு. மாலதியிடம் திரும்பி ” அன்னைக்கு அம்மாவோட நான் பேசும் போது நீங்களும் ராணியும் வந்ததையும் உடனே வெளி திண்ணையில இருந்தது எல்லாத்தையும் நானும் பார்த்தேன். மாலதிக்கா அதனால நான் அங்க இனி போகமாட்டேன்னு சொல்லவும் மாட்டேன். அதுக்கு நீங்க என்னை அன்னைக்கு நடந்ததை சொல்லி கட்டாயப்படுத்தவும் வேணாம். நல்ல நாள் பாருங்க நான் போறேன். பெரிதா எதுவும் பண்ணவேணாம் நாம எல்லாரும் இருந்து சிம்பிலா பால் காச்சினா போதும்.” என்றாள் மலர்.

அவள் இவ்வளவு பேசுவாளா? என தமிழ் வாய் பிளந்து பார்த்திருந்தான்.

ராமு அவனின் தோள் தட்டி ” அண்ணே வாயை மூடுங்க ஈ உள்ள போயிடப்போகுது.” என்றான் முகத்தை சீரியசாக வைத்து. அதற்கு தமிழ் அவனை முறைத்துவைத்தான்.

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது அருகிலிருந்த கார்த்திகாவை ராணி சுரண்டினாள். ” என்னக்கா?” என்றாள்.

” அடியேய் கார்த்தி என்னடி இது மலராட்டம் இஸ் பேக் போல இனி உன் மாமா கதை கந்தல் தான் போல. உங்க அப்பா இருந்த நேரம் மலர் எப்டி துடிப்பா வாயாடியா இருந்தான்னு அப்ப இருந்து அவளை பார்க்கிற ஒரு சிலருக்குதான் தெரியும். நீ எல்லாம் சின்ன பொண்ணு. உனக்கு தெரியாது. தினமும் ஏதாவது புகார் மலர் மேல வரும். படிப்புல ரொம்ப கெட்டி அதுக்கு ஏத்தமாதிரி சேட்டையும் அதிகம். எப்ப உங்க அப்பா செத்தாரோ அப்ப பாதி குறைஞ்சிடுச்சி அப்புறம் உங்க அம்மா நோய்பட்டதும் குடும்ப பொறுப்பு சின்ன வயசுலயே அவளுக்கு வர இருந்த கொஞ்ச துடினமும் இல்லாம போய் அவளை அவளே அமைதியா பொறுமைசாலியாக மாத்திக்கிட்டா. இது உங்க மாமாவுக்கு தெரியாது பாரு அதனால உங்க அக்கா ரொம்ப அமைதினு தப்பா நினைச்சிட்டாரு இந்த இடைப்பட்ட காலத்துல உங்க அக்காவை பார்த்து மனுசன் தப்பா நினைச்சிட்டாரு. இப்ப அவளுக்கு பொறுப்பு கொஞ்சம் குறைஞ்சிருக்கு மாசாமா இருக்கிறா அவளோட அமைதி குழந்தையை பாதிக்கும்னு நினைச்சிருப்பா போல இனி வேலை கஷ்டம் எல்லாம் கொஞ்சம் குறைஞ்சிடுச்சு தானே அதனால மலர் இஸ் பேக் இனி உங்க மாமா நிலைதான் பரிதாபம் அவளை இப்டி ஆக்கினதுக்கு சிறப்பா வச்சி செய்யப்போறா. என் மலரை இப்டி மீண்டும் பார்க்கணும்னு தான் நான் ஆசைப்பட்டேன் அது இப்போ நடந்துடுச்சி இனி நானும் ஹாப்பி நீயும் ஹாப்பியா இருடி.” என்றாள்.

அவர்கள் பேசிவிட்டு திரும்பும்போது அங்கு கார்த்திகாவின் பேச்சு எடுபட்டது.

மாலதிதான் பேசினார். ” நான் சொல்லுறேன்னு யாரும் தப்பா எடுத்துக்கவேணாம். கார்த்திகாவும் ராமுவும் வயசு புள்ளைங்க நாளைக்கு அவங்க ஒரே வீட்டுல இருந்தா அது சரியில்ல நம்ம பிள்ளைகளை பற்றி நமக்கு தெரியும் நாளப்பின்ன இந்த ஊர் ஏதாவது தப்பா பேசினா ரெண்டு பேர் வாழ்க்கையும் அது பாதிக்கும். கார்த்திகா நல்ல பொறுப்பான பொண்ணு இனி விபரம் தெரியுற வயசுதான். அவளை நாம மதுரை ஹாஸ்டல்ல தங்கி படிக்கிறது மாதிரி ஏற்பாடு பண்ணலாமே. புள்ள பரிட்சை லீவுக்கு வீட்டு வந்துட்டுபோகட்டுமே இதுக்கு மலர் நீ என்ன சொல்லுற.” என்றார்.

தமிழ் கார்த்திகாவிடம் விருப்பம் கேட்டான் அவளும் நிலை புரிந்து சரி என்றாள். அதன் பின் கார்த்திகாவை ஹாஸ்டலில் போடுவது முடிவாகிவிட்டது.

மலர்தான் மரகதம் பாட்டியிடம் ” நல்ல நாள் பாருங்க பாட்டி” என்று கலென்டர் எடுத்துக்கொடுத்தாள்.

பின் அவளே எழுந்து அனைவரும் டீ போட்டு எடுத்துவந்து கொடுத்தாள். அதை அனைவரும் வாங்கி குடித்தார்கள்.

அதன் பின் தமிழ் புது வீட்டிற்கு ஒரு குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி போட்டான்.

வீடு குடி போகும் நாளும் அழகாக விடிந்தது மரகதம் பாட்டி சொன்ன நாளில் நல்ல நேரத்தில் வீட்டிற்குள் மலர் வலது காலை எடுத்துவைத்து உள்ளே சென்றாள்.

இனியாவது புது வீட்டில் மலரின் வாழ்வு மலருமோ?.

Advertisement