Advertisement

சப்பாத்தி, அடுத்து சாம்பார் , கூட்டு என்று சாப்பிட்டவள், அதற்கு மேல் முடியாது என்பது போல தயிர் கப்பை கையிலெடுத்து பின்னுக்கு நகர்ந்து அமர்ந்தாள்.

“என்ன அவ்வளவுதானா? குழந்தை கூட இதைவிட அதிகமா சாப்பிடும். ரசம் சாப்பிடு”, என்று உபசரித்தான்.

“இல்லை. அதிகமா சாப்பிட முடியாது, இப்படியே பழகிருச்சு. பட் சாப்பாடு வேஸ்ட் பண்ண வேணாம். பாக் பண்ண சொல்லு, நான் எடுத்துக்கறேன்”

“இதென்ன ஹோட்டலா? வேணும்னா சொல்லு, நைட்டுக்கு புதுசா பாக் பண்ணித் தர சொல்றேன்” என்றவனை, “அதெல்லாம் வேணாம். வேஸ்ட் பண்ண வேணாம்னுதான் நினைச்சேன்” என்றாள்.

“அதெல்லாம் காம்போஸ்ட் ஆகி உரமாகிடும். நீ சொல்லு. வேலைக்கு ஓக்கேவா? அங்கேயே தங்கற மாதிரி கேட்டிருந்தான் வருண். அதே சொல்லிடலாம்மில்ல?”

“ஹ்ம்ம்… ஆனா எங்கிட்ட செர்ட்டிஃபிகேட்ஸ் இல்லை. ஸ்கூல் ஃபைனல் முடிக்கலை. அதுவும் சொல்லிடுங்க. நாலு பாஷை பேசுவேன். கம்ப்யூட்டர் தெரியும், ஸ்கூல்ல கத்துகுடுத்தாங்க”, என்றாள் நக்கலாக ஒரு பார்வை பார்த்தபடி.

“ஹ்ம்.. ஸ்கூல்ல சொல்லி தந்ததுன்னா, அப்ப ஆப்பரேட் பண்ண தெரியாதுன்னே சொல்லிடலாம். நீதான் க்ளாசுக்கே வர மாட்டியே”, என்று அவளை சீண்டினான். அவந்தான் அவள் படிக்கும்போது கம்ப்யூட்டர் லேப் இன் சார்ஜ். வருவதே பெரிய விஷயம். வந்தாலும், இவளுக்கு வேலை செய்ய வருண் தலைமையில் ஒரு அல்லக்கை கூட்டம் இருக்கும்.

என்னவோ அவள் எதற்கும் அசராது இருப்பது அவனை அரித்தது. எதாவது செய்து அவளை கொஞ்சமாவது அசைத்துப் பார்க்க வேண்டும், அந்த திமிர் பார்வையை உடைக்க வேண்டும் என்று ஆசை.

“சொல்லிக்கோ” என்று அவனைத்தான் கடுப்பாக்கினாள். “நீ வேலை வாங்கிதர வேண்டாம். ஒரு இன்டர்வ்யூக்கு மட்டும் ஏற்பாடு பண்ணு போதும். எனக்கு திறமை இருக்குன்னு நினைச்சா வேலை தரட்டும். இல்லைன்னா வேண்டாம்”, என்றாள் கூடவே.

‘லூசா நீ?’, என்பதாகப் பார்த்தவன், “போய் நேரா அப்பாயின்ட்மென்ட் ஆர்டரை வாங்கறதை விட்டுட்டு எதுக்கு இப்படி?”, என்று கேட்டான்.

“அப்பறம் நாந்தான் உனக்கு வேலை வாங்கிக் குடுத்தேன் இல்லைன்னா நீ இன்னும் வெயிட்டராத்தான் இருந்திருப்பன்னு நக்கலடிப்ப. ஒரு வாய்ப்பு ஏற்பாடு பண்ணதா மட்டும் இருக்கட்டும். அதுவும் வருணுக்காக. அதுக்குமேல வேணாம்”, என்றாள் தன் நிலை இறங்காமல்.

‘சாப்பாட்டை காணாததைக் கண்ட மாதிரி சாப்பிடறா. அடுத்த மாசம் இருக்க வீடு கிடையாது. ஆனாலும் அசராம இருக்காளே’, அவள் திடம் கண்டு லேசாக வியப்பு வந்தது.

“எலக்ஷன் வரையில வருணை பார்க்கக்கூடாது. ஹ்ம்ம்..யோசிக்கறேன். நீ சொல்றது எந்த அளவு உண்மைன்னு தெரியறதுக்கு ரொம்ப  நேரம் ஆகாது. அவங்க எஸ்டேட்ல கஞ்சா பயிர் பண்றாங்கன்னா ஒரு ரெயிட்டுக்கு ஏற்பாடு பண்ண வேண்டியதுதானே? எதுக்கு இன்னும் விட்டுவெச்சிருக்கீங்க?”, அவள் முடிவை மேலும் விவாதிக்க இடம் கொடாமல், அடுத்த விஷயத்திற்கு தாவினாள் சஹானா.

“போன வருஷம் முயற்சி பண்ணோம் ஆனா கஞ்சா செடி எல்லாம் இந்த க்ளைமேட்டுக்கு வளராது. அதுக்கு நிறைய சூரிய வெளிச்சம் வேணும். இது டைம் வேஸ்ட்ங்கற மாதிரி மாத்திட்டாங்க. போலீஸ்லையும் ஆள் வெச்சிருக்கான். முதல்ல பதவியை பிடுங்கினாத்தான் மத்த எதுவும் பண்ண முடியும்”, சுதர்ஷன் விளக்கினான்.

ஹில்மாரி எஸ்டேட்டில் கிட்டதட்ட இரண்டு மாதத்திற்குப் பின் கால் வைக்கிறார் மீனாட்சி. பார்வை மருமகள் வீட்டை சரியாக பராமரித்திருக்கிறாளா என்று அளவெடுத்தது.

“வாங்க அத்தை”, என்று வந்த மருமகளின் வரவேற்பில் திரும்பியவர், அவளது வாடிய முகம் தெரியவும்,  “என்ன ரேகா? முகம் வாடியிருக்கு ? நான் வந்துட்டனேன்னு சோகமா?” என்று யாருமே சிரிக்காத ஜோக்குக்கு தான் சிரித்தார்.

“கொஞ்சம் வயித்து வலி அத்தை. அங்க ரஞ்சனி குழந்தைங்க நல்லாயிருக்காங்களா?”, அவர் கேட்டிருந்த தேநீர் வர, செண்பகத்திடமிருந்து ட்ரேயை வாங்கி இவள் கொடுத்தாள்.

“ம்ம்.. இந்த மாசமும் வந்துடுச்சா? ம்க்கும் உன் நாத்தனார் என்னமோ நான் இல்லைன்னா உடனே புள்ளை தங்கிடுங்கற அளவுக்கு பேசி கூட்டிட்டுப் போனா? மாத்திரை எல்லாம் ஒழுங்கா எடுக்கறியா?”, விசாரணை, குத்தல் குடைச்சல் எல்லாம் ஒரே  நேரம் ஆரம்பமானது.

“எடுக்கறேன் அத்தை”, என்றவள் கண்கள் கணவனைத் தேட, அவன் வாயிலில் போன் பேசிக்கொண்டிருந்தான்.

அவள் நாத்தனார் ரஞ்சனி கொஞ்சம் ஃப்ரீயா இருங்க அண்ணி என்று அம்மாவை தன்னோடு அழைத்துக்கொண்டாள். வருணும் ரேகாவும் நிஜமாகவே இணைந்து இயைந்து இந்த இரண்டு மாதங்களை கொண்டாடிக்கொண்டிருந்தனர். அந்த சூனியக்காரி வந்தது முதல் அழுகை , அடுத்து மாதாந்திர தொல்லை வந்து துளிர் விட்டிருந்த கனவை அழித்தது. இதோ இறுதியாக, கொத்திக்கொண்டே இருக்கும் மாமியாரும் வந்து இறங்கிவிட்டார்.

“தாங்க்ஸ் சுதிர்”, என்று பேசிக்கொண்டே அன்னையின் அருகில் அமர்ந்தவன், வாடியிருந்த மனைவியைக் கண்டு உள்ளுக்குள் ஒரு பெருமூச்சுவிட்டான். அவனுக்குமே வருத்தம்தான். என்னவோ, இந்த முறை நடக்கும் என்ற நம்பிக்கை தகர்ந்தது. ரேகாவை என்ன சொல்லி ஆறுதல் படுத்த என்று கூட தெரியவில்லை. அவனிடம் எந்த பிரச்சனையும் இல்லை. அவளது கரு முட்டை உற்பத்தியில் என்னவோ, அதற்குத்தான் மாத்திரை எடுக்கிறாள். உடல் ஆரோக்கியத்துடன், மனமும் உற்சாகமாக இருக்கவேண்டும் என்று மருத்துவர் சொல்ல, அதைத் தெரிந்து ரஞ்சனி செய்த ஏற்பாடு. ஆனால் இரண்டு மாதத்திற்கு மேல் அங்கே இருக்க முடியாது என்று சொல்லியே சென்றார் மீனாட்சி.

‘அம்மா போதாதென்று இப்போது சஹானாவை நினைத்து மேலும் வருத்திக்கொள்கிறாள். என்ன சமாதானம் சொன்னாலும் ஏற்றுக்கொள்ளவில்லை. சஹானாவும் அவள் பங்குக்கு முரண்டுகிறாள். இதோ வேலை கூட சுதர்ஷன் வாங்கித்தருவதாக சொல்லியும், சஹி வெறும்  நேர்காணலுக்கு ஏற்பாடு செய்தால் போதும். தன் முயற்சியில் வாங்கிக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டாளாம். அவன் வாங்கிதருவதென்றால், இப்படி சொல்லியிருக்க மாட்டாள்.’

“டேய்… என்ன யோசனை? இரண்டு வாட்டி கூப்பிட்டா உன் பொண்டாட்டி”, என்று அம்மா அதட்டவும் அவரைப் பார்த்தவன், “ஹ..எல்லாம் இந்த எலக்ஷந்தான் மா. சாரி..என்ன ரேக்ஸ்?”, என்று மனைவியைப் பார்த்தான்.

“டீ இங்க எடுத்து வரட்டுமா இல்லை ஆஃபீஸ் ரூமா?”

“அதையாவது கொஞ்சம் சிரிச்சமாதிரி கேளேன், இப்படி மெஷின் கணக்கா கேட்டா என் பிள்ளை டீயே வாணாம்னு போயிடுவான்”, மீனாட்சி சிடுசிடுக்க,

“அம்மா.. டயர்டா இருப்பீங்க. நீங்க போய் ரெஸ்ட் எடுங்க.  அவளுக்கு உடம்பு முடியலைம்மா. நீ  நம்ம ரூமுக்கு எடுத்துட்டு வர சொல்லிட்டு போ ரேக்ஸ், நான் இப்ப மேல வரேன்”, என்று அவளை அனுப்பி வைத்தவன்,

“அம்மா… ப்ளீஸ். ஏற்கனவே ஏமாற்றத்துல இருக்கா. வந்ததும் வராததுமா இன்னும் பேசி நோகடிக்கறதுல என்ன லாபம்? கொஞ்ச நாளைக்கு குழந்தை பத்தி பேசாம இருங்கம்மா. எனக்காக. இப்ப என்ன வயசாகிடுச்சு எங்க இரண்டு பேருக்கும்?”, என்று சொல்லவும், ரோஷமாக எழுந்த மீனாட்சி,

“ஒன்னும் பேசலைப்பா உன் பொண்டாட்டிகிட்ட. நான் இல்லாத நேரம் நல்லா முந்தானையில இறுக்கி முடிஞ்சு வெச்சிருக்கா உன்னை. போ..போய் அவளை பாரு”, என்று அவர் அறைக்கு சென்றுவிட்டார்.

“என் பேச்சை தப்பாவே அர்த்தம் பண்ணிக்கறதுல மட்டும் மாமியாரும் மருமகளும் ஒத்துமை”, என்று முனகிக்கொண்டே சென்றான் வருண்.

அவன் செய்த தாஜாவும், சஹானா வேலையில் சேர்ந்துவிட்டாள் என்று மட்டும் தெரிந்துகொண்டு வேறு எந்த தொடர்பும் கொள்ளாமல் இருந்தது, அவன் அம்மா பெரிதாக குழந்தை பற்றி பேசாதது எல்லாம் மீனாட்சி சஹானாவை வீட்டுக்கு அழைத்து வரும் வரையில்தான். அது தெரியாமல் வீடு அமைதியாகிவிட்டது என்ற பிம்பத்தில் தேர்தல் நிமித்தம் மற்ற டீ எஸ்டேட்காரர்களை சந்தித்துக்கொண்டிருந்தான்.

Advertisement