காலையிலேயே மீண்டும் அழைப்பு விடுத்த ரமேஷ் அக்கா,தங்கை இருவரிடமும் தற்பொழுது கையில் பணம் இல்லை என்றும்.. கேட்டதும் கொடுப்பதற்கு இல்லாததால் கோவிக்க வேண்டாம் என்றும் கூறியதாக சொன்னான்.

 ரமேஷ் முன்பு இரண்டு முறை வெளிநாடு செல்வதற்காக ஏஜென்சை நம்பி பணம் கட்டி ஏமாந்து விட்டான்..

 அதனால் தான் ராணியிடம் தற்பொழுது கையில் பணம் இல்லை..

 ரமேஷ் ஆறு மாதத்திற்கு முன்பு செல்லும் போது தான் தாலி கொடியையும் மற்ற நகைகளையும் அடகு வைத்து தான் ரமேஷை கடன் படாமல் வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்தாள்.. அவளிடம் தற்பொழுது மூன்று செயின்கள் மட்டுமே உள்ளது..

 அதனால் மகளின் விசேஷம் அன்று அடகு வைக்காமல் பணத்தை கடனாக வாங்கினாள்.. விசேஷம் முடிந்ததும் வரும் மொய் காசையும் வைத்து பாத்தாமல் போனால் நகையை அடகு வைத்து வனிதாவிற்கு அந்த பணத்தை கொடுக்கும் திட்டத்தில் தான் வாங்கினாள்..

  ராமேஷின் சொந்தம் பணம் தந்தும் உதவி செய்யவில்லை..நேரத்திற்கு வந்தும் வேலையில் உதவி செய்யவில்லை.. 

 மாலை மூன்று மணி அளவில் ராணியின் சித்திகள் மூவரும் சேர்ந்து அவர்களுக்கு தெரிந்த முறையில் சாயந்திரம் வாணிக்கு தண்ணீர் வாக்கும் நேரம் ஆலத்தி சுற்றுவதற்கு தேவையானவற்றை தயார் செய்தார்கள்.. 

“ ராஜி முதல் களி செஞ்சிடுவோம் அப்புறம் சோறு,குழம்பு,சொதி, சுண்டல்.. செய்வோம் ” என்றார் மாலதி..

“ ஆமாம் அக்கா, களிக்கு நான் மாவு அரைச்சு வச்சுட்டேன்.. எடுத்துட்டு வரேன்.. ” என்று கூறி தேவையான பொருட்களை அவர்களுக்கு பக்கத்தில் இருக்குமாறு ஒன்றுப்படுத்திவிட்டு அவர்கள் செய்ய ஆரம்பிக்கும் போது  

 வனிதா அங்கே வந்தார்..

“ ராணி உன் மச்சாளுங்க வராங்களாமா?.. என்ன சொன்னாங்க இன்னும் வரலையே..!” என்றாள் வனிதா.

“ அட அதை ஏன் அக்கா கேக்குறீங்க?.. காலைல இருந்து ரெண்டு தடவ கால் பண்ணி நான் சொல்லிட்டேன். நாங்க எல்லாரும் வருவோம்னு தான் சொல்றாங்க. எப்ப எத்தனை மணிக்கு வருவாங்கன்னு ஒன்னும் சொல்லலை.. வந்தா இனி பாத்துக்க வேண்டியது தான்.. ”  

“ சரி ராணி விடு.. அவங்களுக்கு அங்க என்ன சூழ்நிலையோ.?. என்ன பிரச்சனையோ?. அவங்க வேலை எல்லாம் முடிச்சுட்டு வரட்டும்.. நம்ம எல்லாத்தையும் பார்த்து செய்து வைப்போம்.. அவங்க வந்து பிள்ளைக்கு தண்ணி வாத்து ஆலத்தி எடுக்க சரியா இருக்கும்.. ” என்று வனிதா கூறினாள்..

“ பாக்க போனால் இங்க இருக்கிற எல்லாரும் தல பிள்ளை ஆம்பிளை பிள்ளை பெத்த நாம தானே.. எல்லாரும் செய்யலாம். எந்த யோசனையும் தேவையில்லை.. ” என்று கலா கூறினாள்..

“ ஒன்னு அத்தை, மாமி இருந்தா செய்யணும்.. அப்படி இல்லாட்டி தல பிள்ளை ஆம்பள புள்ள பெத்தவங்க சுமங்கலி வந்து தண்ணி ஊத்தணும்.. நமக்கு எல்லாரும் இருக்காங்க யாருக்கு வசதி படுதோ அந்த நேரம் தண்ணி ஊத்தலாம்..” என்று ராஜி கூறினாள்..

“ வனிதாவும், ராஜியும் களியும், சோறும் செய்ங்க. நானும் கலா அக்காவும் சொதி, குழம்பு, சுண்டல் செய்றோம்.. ” என்று அவர்களுக்கு பேசிய பிரித்துக் கொண்டார்கள்..

 பச்சரிசியை நன்றாக குலைய அவித்து அதில் உருண்டை பிடித்து ஒன்றை தட்டை ஆக்கி அதைச் சுற்றி மூன்றும் கொழுக்கட்டை பிடித்து வைத்து குண்டுமணியில் கண்,மூக்கு, வாய் வைத்தார்கள்..

 பச்சரிசி மாவு அரைத்து சுடு தண்ணீர் ஊற்றி குலைத்து வட்டமாக தட்டினார்கள்.. அதிலும் குண்டுமணி பதித்து வைத்தார்கள்..

 தேங்காய் பாலில் மஞ்சள் தூள் கரைத்து அருகம்புல் சேர்த்து வைத்து அதை சொதி ஆக்கினார்கள்..

 தண்ணீரில் குங்குமத்தை கரைத்து அதிலும் அருகம்புல் சேர்த்து குழம்பு ஆக்கினார்கள்..

சுண்டலுக்கு தேங்காய் துருவி பால் எடுத்த தேங்காய் பூவை எடுத்து அதில் மஞ்சள் கலந்து ஒரு உருண்டையாகவும், நீலம் கலந்து உருண்டை பிடித்தும் சிகப்பாக குங்குமம் கலந்து உருண்டை பிடித்து மூன்றையும் வட்டமாக வடிவமைத்து வைத்தார்கள்..

 ஐந்து வகையான ஆலத்தையும் ரெடி பண்ணி தனியாக எடுத்து வைத்துவிட்டு பச்சை ஈக்கில் எடுத்து வந்து அதில் நூல் துணியை சுற்றி எண்ணையில் ஊற வைத்தார்கள்..

ஆலத்தி எடுக்கும் நேரம் அந்த ஈக்கில் திரியில் நெருப்பு பற்ற வைத்து இரண்டு கைகளிலும் தட்டோட சேர்த்து பிடித்துக் கொண்டு எடுப்பார்கள்..

 ஆலம் கரைத்து முடித்ததும் இனி நிறை குடம் வைக்கணும்..

“ நம்ம முறைக்கு புள்ளைக்கு அத்தான் முறை தானே பாளை வெட்டி நிறை குடம் வைக்கணும்.. அத்தை யே இன்னும் வரல.. அத்தானுக்கு எங்க போறது?..” என்றார் கலா..

“ நாலு மணி ஆயிடுச்சு இன்னும் அவங்களை காணல.. அவங்க வருவாங்களா?. மாட்டாங்களான்னு யாருக்கும் தெரியாது.. அதனால ராஜி உன் மகன் வாணிக்கு தாய் மாமா தானே.. கூப்பிடுங்க அவனை வச்சு பாளை யை வெட்டி நிறைகுடம் வைப்போம்.. இருக்க இருக்க நேரம் போய்க்கொண்டே இருக்குமே தவிர வேலை ஒன்னும் நடக்காது.. கடைசி நேரத்துல நம்ம தவிச்சிட்டு நிக்க கூடாது.. ” என்று வனிதா கூறவும் ராஜி வீட்டிற்கு போய் மகனை அழைத்து வந்தார்.. 

“ தமிழ் நீ அந்த சின்ன தென்னை மரத்துல ஏறி பாளை யை அடியோட வெட்டி கீழ பக்குவமா உங்க அப்பா கிட்ட குடு.. ” என்றார் வனிதா..

 அவனும் அதே போல் செய்து கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டான்.. 

 வனிதாவும், ராஜியும் பாளை யை வைத்து நிறைகுடம் வைத்து அதற்குரிய வேலைகள் அனைத்தையும் செய்து முடித்துவிட்டு அமர்ந்து டீ குடித்துக் கொண்டிருந்தார்கள் நேரம் ஐந்து மணி ஆகியது..

“ ராணி இரு நான் போய் குளித்து ரெடி ஆயிட்டு வரேன்.. நீங்களும் போய் குளிச்சு ரெடி ஆயிட்டு வாங்க புள்ளைக்கு சரியான நேரத்துக்கு வெள்ளி கண்டு தண்ணி வாக்கணும் தானே.. ” என்று கூறிவிட்டு வனிதா சென்று விட்டார்.. 

 அதன் பின் கலா, மாலதி,ராஜி மூவரும் வீட்டுக்கு சென்று குளித்து பிள்ளைகளை தயார்படுத்தி அவர்களும் தயாராகி ஐந்து முப்பதுக்கு வந்து சேர்ந்தார்கள்.. அதற்குள் ராணியும் குளித்து ரெடி ஆகி காத்துக்கொண்டிருந்தாள்.. 

ராணியின் சித்திகள் மூவரும் மற்றும் வனிதா ,மணி, சாந்தி.. அவர்கள் மூவரும் வரவும். ரமேஷின் அக்கா தங்கை என அவரின் சொந்தங்கள் பதினைந்து பேர் ஒரு வேனில் வந்து இறங்கவும் சரியாக இருந்தது.. 

 அவர்கள் வந்து இறங்கவும் ராணி அவர்களை ரமேஷுக்கு வீடியோ கால் மூலம் காட்டினாள்..

 அதே போல் காலையில் இருந்து அவளின் சித்திகள் செய்த வேலை மற்றும் வனிதா செய்த ஆலத்தி, நிறைகுடம் அனைத்தையும் உடனே ரமேஷிற்கு வீடியோ கால் மூலம் காட்டிக் கொண்டுதான் இருந்தாள்.. 

 ராணி அவர்களை வரவேற்று அவர்களுக்கு குடிக்க சோடா கொடுத்து இருக்கையில் அமர வைத்தாள்..

“ ராணி இங்க வா.. ” என்று ரமேஷின் அக்கா சுந்தரி அவளை அழைத்தார்.. 

“ என்ன அண்ணி.. ”

“ வெள்ளி கண்டு தண்ணி வாக்க இன்னும் ஒரு மணி நேரத்துக்கு கிட்ட இருக்கு தானே.. எப்படியும் ஆரேமுக்கால் ஆகும் தானே.. நாங்க எங்க முறை எல்லாம் செய்யறதுக்கு எல்லாம் ரெடி பண்ணுறோம்.. பக்கத்துல வந்து எல்லா பொருளையும் எடுத்து தா ராணி.. ” என்றாள்..

“ என்ன முறை அண்ணி.. ” 

“ என்ன ராணி எதுவும் தெரியாத மாதிரி கேக்குற?.. அத்தை வந்துதானே ஆலத்தி கரைக்கணும்.. அத்தை மகன் தானே பாளை வெட்டி நிறைக்குடம் வைக்கணும்.. அத்தை தானே தல தண்ணி வாக்கணும்.. இவ்வளவும் செய்யணும்.. நேரம் போயிட்டு இருக்கு நீ மச மசன்னு நிக்கிற?.. ” என்றாள்..

“ அண்ணி அதெல்லாம் நாங்க செய்துட்டோம்.. வந்து சரியான்னு பாருங்க.. நீங்க டைமுக்கு புள்ளைக்கு செய்ய வேண்டிய முறை செஞ்சீங்கன்னா சரி..” என்றாள் ராணி..

“ என்ன ராணி சொல்ற?.. கூறுகெட்ட தனமா பேசுற?. நாங்க வந்து எங்க கைப்பட தானே இந்த முறையை எல்லாம் செய்யணும்.. நீங்க செய்து வைச்சதை நாங்க வந்து எடுக்கறதுக்காகவா இவ்ளோ தூரம் வந்தோம்.. உங்களுக்கு அவ்வளவு என்ன அவசரம்.. இன்னும் ஒரு மணி நேரத்துக்கு கிட்ட இருக்கு தானே?. நாங்க இத்தனை பேர் வந்து இருக்கோம்.. எங்க முறைப்படி எங்க தம்பி பிள்ளைக்கு நாங்க சரியான முறையில் செய்ய மாட்டோமா என்ன?.. உங்களை யாரு இவ்வளவு அவசரப்பட்டு செய்யச் சொன்னது..” என்றாள் சுந்தரி..

“ அப்படித்தான் நல்லா கேளுக்கா.. எப்ப ரமேஷ் அண்ணா இவளை கல்யாணம் கட்டிக்கிட்டு இங்க வந்தானோ.. அப்போ இருந்து எல்லாமே அவ விருப்பப்படி தான் அண்ணா நடக்குறான்.. எப்பவும் நம்ம விருப்பப்படி எதுவும் செய்றதில்லை.. இது எப்பயோ தெரியும்.. அண்ணா இனி எப்பவுமே நமக்கு இல்லை…. ” என்று ரமேஷ் தங்கை கோபி நடக்கும் பிரச்சினையை பெரிது பண்ணி ஏற்றிவிட்டாள்..

“ இங்க பாருங்க. நீங்க செய்தது ரொம்ப பெரிய பிழை. நாங்க வந்து இந்த முறையை செய்வோம்னு ராணி கால் பண்ணி உங்களுக்கு பேசும்போது நீங்க சொல்லி இருக்கணும்.. 

எதுவும் சொல்லாம கடைசி நேரத்துல வந்து நாங்க தான் திரும்ப செய்வோம்னு சொல்றது எந்த விதத்திலும் சரி இல்லை.. 

 இது என்ன எடுத்த உடனே செய்யும் வேலையா?.. நாங்க நாலு மணி வரைக்கும் பார்த்துட்டு நீங்க வராம இருக்கவும் தான் உங்க தம்பிக்கு கால் பண்ணி பேசி அவர் செய்ய சொன்னதுக்கு அப்புறம் தான் நாங்க செய்ய ஆரம்பிச்சோம்.. 

 புள்ளையோட விசேஷம் நடக்குற இடத்துல சண்டை வேணாம்.. அத்தையா வந்து நீங்க உங்க முறையை செய்ங்க கோவித்துக் கொள்ளாமல்.. ” என்று கலா பேசவும்..

 அதற்கு இன்னும் எதிர்த்து எதிர்த்து கோபியும், சுந்தரியும் பேசவும் விசேஷ வீட்டில் சண்டை பெரிதாகியது..

 சித்திகளுக்கு பரிந்து பேசுவதா?..கணவனின் சொந்தத்திற்கு பரிந்து பேசுவதா?.. என்று தெரியாமல் ராணி குழம்பி அழுது கொண்டு நின்றாள்.. 

“ இப்ப நீ எதுக்காக நல்ல நாள் அதுவுமா அழுது கண்ணீர் வடிக்கிற?.. பிள்ளையோட விசேஷத்துக்கு இப்படி அழுதுட்டு நிக்கிறது நல்லாவா இருக்கு? யாரும் என்னமோ பேசிட்டு போகட்டும் நீ அமைதியா கண்ண துடைச்சிட்டு இரு.. ” என்றாள் வனிதா.. 

“ இங்க பாருங்க நீங்க உங்க முறைப்படி என்னமோ செய்யுங்க.. ஆனா நாங்க கஷ்டப்பட்டு செய்து வைத்திருந்த ஆலத்தியை ஊத்திட்டு திரும்ப நீங்க செய்யாதீங்க.. அதை எவ்வளவு கஷ்டப்பட்டு செஞ்சோம்னு எங்களுக்கு தான் தெரியும்.. ” என்றாள் கலா..

“ இங்க பாரு ராணி நீங்க செஞ்சதை வச்சு நாங்க இங்க முறை செய்ய வரல.. விரும்பினால் நாங்க செய்துதான் முறை செய்வோம்.. அப்படி இல்லையா நாங்க எதுவும் செய்யாம ஒதுங்கி இருக்கிறோம்.. நீயே உங்க ஆளுங்களை வச்சு பிள்ளைக்கு தண்ணி ஊத்தி முறை செய்.. ” என்று சுந்தரி கூறிவிட்டு அவர்களது ஆட்களை அழைத்து கொண்டு ஒரு ஓரமாக ஒதுங்கி நின்று விட்டாள்..

 அவர்கள் கூறியதை பார்த்து கலாவும்,ராஜியும் கோவித்துக் கொண்டு அவர்கள் வீட்டிற்கு சென்று விட்டார்கள்..

“ இங்க பாரு ராணி. நாங்க அங்க வரல.. அவங்க விருப்பப்படி திரும்ப முதல் இருந்து எல்லாத்தையும் செய்து புள்ளைக்கு முறை செய்யட்டும்.. நாளைக்கு பிறகு மருமகனுக்கு கால் பண்ணி நாங்க தான் முன்னாடி நின்னோம்.. அவங்களை ஒதுக்கி வைச்சிட்டோம்னு மாறி பேசுவாங்க.. அவங்க விருப்பபடி எல்லாம் செய்யட்டும் நாங்க ஒதுங்கி இருக்கிறோம்.. பிரச்சினை இல்லாமல் பிள்ளையோட விசேஷம் நல்லபடியா நடந்த எங்களுக்கு சந்தோசம்.. அதுக்காகத்தான் காலைல இருந்து நாங்க இவ்வளவு கஷ்டப்பட்டோம் .. ” என்றாள் கலா..

 வனிதாவும், ராணியும் அவர்களை சமாதானப்படுத்தி அழைத்து வந்தார்கள்.. 

“ இங்க பாரு ராஜி அவங்க தான் அவங்க முடிவை சொல்லிட்டாங்க.. இப்ப தலைப்பிள்ளை ஆம்பள புள்ள பெத்த நீதான் தண்ணி ஊத்தி முறை செய்யப் போற.. வெளி ஆளுங்க வர ஆரம்பிச்சுட்டாங்க இனி எந்த பிரச்சனையும் யாரும் பண்ணாம பிள்ளைக்கு நல்லபடியா முறை செய்து விசேஷத்தை முடிப்போம் வாங்க.. ” என்று அவர்களை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தார்கள்..

 ரமேஷின் சொந்தங்கள் சொன்னது போல் எந்த ஒரு வேலையிலும் பங்கு கொள்ளாமல் அவர்கள் ஒதுங்கியே இருந்தார்கள்.. 

 ராணியின் சொந்தங்கள் தான் அனைவரும் ஐந்து பேர் ஐந்து குடம் தண்ணீரை எடுத்துக் கொண்டு வந்து வைத்து வெள்ளை சேலை விரித்து பிள்ளையை சுற்றி சேலை பிடித்து பெண்கள் நிற்க ராஜியும், வனிதாவும் தண்ணீர் ஊற்றி,ஆலம் சுற்றி வாணியை உள்ளே அழைத்து சென்று அவளுக்கு உடல் முழுவதும் மஞ்சள் பூசினார்கள்.. 

 வந்தவர்களை வரவேற்று பொட்டு வைத்து,பன்னீர் தெளித்து அவர்ளுக்கு டீ,பலகாரங்கள் கொடுத்தாள் வேணி..

 சந்திரன் போய் பிரியாணி சாப்பாட்டையும் எடுத்துக்கொண்டு வந்தார்.. 

 வந்தவர்கள் அனைவருக்கும் எட்டு மணியை போல் சாப்பாடு கொடுத்து அனுப்பினார்கள்.. அவர்கள் வாணிக்கு மொய் வைத்துவிட்டு சென்றார்கள்..

 வேணி சுந்தரி டீம்க்கு பொட்டு வைக்கப் போகவும் வேணாம் என்றார்கள்.. விஜி அவர்களுக்கு டீ கொடுக்கவும் அதையும் வாங்கி குடிக்கவில்லை..

சாப்பாடும் எடுத்துக் கொள்ளவில்லை.. அப்படியே நின்ற மாதிரி நின்று விட்டு பிள்ளையின் கையில் காசை மட்டும் வைத்துவிட்டு எதுவும் சாப்பிடாமல் அவர்கள் அங்கிருந்து எட்டு மணி போல் சென்று விட்டார்கள்..

 போகும் போது சுந்தரியின் மாமியார் சும்மா போகாமல் “ இங்க பாரு சுந்தரி உன் தம்பி மக உன் மருமகளா வருவான்னு நீ கனவு கண்டுட்டு இரு.. ராணியின் கடைசி சித்தி ராஜி தான் முறை எல்லாம் செஞ்சு இருக்கா.. இப்ப அவ மகன் மட்டும் தான் கல்யாணம் கட்டமா இருக்கான்.. அவன் பாளை வெட்டி இருக்கான். தாய் மாமனும் கூட பக்கத்துலயே வேற இருக்காங்க.. எப்படியும் இனி அவங்க தான் அடுத்த முறை எல்லாம் பண்ணுவாங்க.. அப்போ அவன் கூட தானே அதிக நெருக்கம் வரும் ஒவ்வொரு நாளும் பார்த்து பேசிப்பாங்க.. 

 ஏதோ சூதானமா உன் தம்பியோட இப்பவே பேசி தம்பி மகளை உனக்கு மருமகளா கொண்டு வர பாரு..  

இன்னும் தள்ளி போட்டால் பெரிய பிரச்சினை வந்து முடியும்.. அவன்தான் வாணியை தூக்கிட்டு போவான்.. ஆள பார்த்த தானே எப்படி இருக்கான்..” என்று அந்த அம்மா சுந்தரியை ஏற்றிவிட்டாள்..

 கலைவாணிக்கு அத்தை முறை செய்ய கிடைக்கவில்லை.. 

 ஒருபடியாக பல குளறுபடிகள் நடந்தும் அவளது விசேஷம் நல்லபடியாக நடந்து முடிந்தது..

 முதலாம் தண்ணீர் ஊற்றவே இவ்வளவு பிரச்சினை என்றால் இனி சடங்கு செய்வதற்கு இன்னும் எவ்வளவு பிரச்சனைகளை சந்திக்க வேண்டுமோ என்று நினைத்து ராணி ஒரு பக்கம் கவலையாக இருந்தாள்..

தமிழும் அவன் பிரெண்ட்ஸ், சின்ன பிள்ளைகளும், என்று சொந்தங்கள் பாட்டு போட்டு ஒரு பக்கம் டான்ஸ் அடிக்கொண்டு இருந்தார்கள்..  

மறுபக்கம் சமையல் அறையில் சுத்தமும் செய்து கொண்டிருந்தார்கள் அவள் சித்திகள்..

 இப்படியாக இரவு நேரம் 11 மணி நெருங்கவும் அனைவரும் அவரது வீட்டுக்கு போய் உறங்கி ஓய்வெடுக்க சென்று விட்டார்கள்..

 ஒரு நாள் என்பது சாதாரண விஷயம் இல்லை.. விடிந்து நாள் முடியும் வரை ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் பல திருப்பங்களை கொண்டு வரும்..

 அதேபோல் கலைவாணியின் வாழ்க்கையிலும் என்னென்ன திருப்பங்கள் வர காத்திருக்கிறதோ?..

யார் அறிவர்..