ஓம் சரவணபவ

முந்தானையில் சிறையானேன்.. 01

காலை நேரம் 5:30 மணி..

அந்த தெருவில் வீட்டுப் பெண்கள் அனைவரும் எழுந்து வாசல் தெளித்து கோலம் போட்டு கொண்டிருந்தார்கள்..

அந்த தெரு மக்களின் பெரும்பாலான குடும்பத்துப் பிள்ளைகள் படித்து வேலைக்கு செல்வது.. கல்யாணம் என செட்டில் ஆகிவிட்டதால் அவர்களுக்கு நேரத்தோடு எழுந்து சமைக்க வேண்டும்.. சுறுசுறுப்பாக வேலை செய்ய வேண்டும்.. என்ற கட்டாயம் எதுவுமில்லை..

அவர்களாக விரும்பும் நேரத்தில் காஃபி போட்டு குடித்துவிட்டு. வெளியே வாங்கும் காலை உணவை சாப்பிட்டு ஆறுதலாக, பொறுமையாக மதியத்திற்கு சமைப்பார்கள் அதனால் அவர்களுக்கு ஊர் கதை பேச நிறைய நேரமிருந்தது..

அப்படி அவர்கள் பேசிக் கொண்டே கோலம் போட்டுக் கொண்டிருக்கும் போது வெடி சத்தம் அதிகமாக கேட்டது..

விடிந்தும் விடியாத அந்த காலைப் பொழுதை வரவேற்கும் விதமாக வெடி சத்தம் காதை நிறைக்கும் படி தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தது..

“ அடியேய்..! சாந்தி என்னடி இது நல்ல செய்தியா?.. கெட்ட செய்தியா?.. என்று தெரியலையே.. தொடர்ந்து இப்படி வெடிச்சத்தம் கேட்டுகிட்டே இருக்கு.. ” என்றாள் மணி..

“ நேரு தெருவுல தாண்டி சத்தம் கேக்குற மாதிரி இருக்கு.. ”

“ இன்னும் கொஞ்ச நேரத்துல இட்லி விக்கிற வசந்தி அக்கா வருவாங்க.. அப்ப என்ன விஷயம்ன்னு தெரிஞ்சுடபோகுது அதுக்குள்ள நம்ம வீட்டு வேலையை போய் பார்த்துவிடுவோம்.. ” என்று வனிதா கூறிவிட்டு அவரவர் வீட்டுக்குள் சென்று விட்டார்கள்..

அவர்கள் குளித்து பூஜை அறையில் பூஜை செய்து காபி கப்போடு அவர்கள் பேச கூடும் இடத்திற்கு வரவும் வசந்தி இட்லி எடுத்து வரவும் சரியாக இருந்தது..

“ என்ன விஷயம் வசந்தி அக்கா?.. வெடி சத்தம் கதை அடைக்குது.. ” என்றாள் மணி..

“ அதுவா நம்ம ராணி பொண்ணு வாணி வயசுக்கு வந்துட்டாளே.. அதுக்கு தான் நம்ம கண்ணன் கடைக்கு போய் அவங்களை எழுப்பி வெடி வாங்கி வெடிக்கிறாங்க நான் வரும் போது.. இன்னைக்கு இட்லி கொஞ்சம் அதிகமா வாங்கினாங்க.. அந்த தெருவில வேற யாருக்கும் இட்லி கொடுக்கல.. நீங்க மூணு பேரும் எனக்காக வெயிட் பண்ணுவீங்கனு வந்தேன்.. ” என்றார்..

என்று தகவலை கூறிவிட்டு மணி கொடுத்த காஃபி வாங்கி குடித்துவிட்டு வீட்டுக்கு சென்றார் வசந்தி..

முகத்தில் சிரிப்பு அதிகமாக இருந்தது..

வெயிலில் வெளியே வேர்த்து விறுவிறுக்க இட்லி விக்கி தேவையில்ல.. அனைத்தும் அங்கேயே விற்கப்பட்டதால் இன்று நேரத்தோடு வீட்டிற்கு செல்லலாம்.. சற்று ஓய்வு எடுக்கலாம்.. என்ற சந்தோஷம் அதனால் முகத்தில் சிரிப்பு அதிகமாக தாண்டவம் ஆடியாது வசந்திக்கு..

“ சாந்தி எல்லாரும் ரெடி தானே போய் ஒரு எட்டு பார்த்துட்டு வருவோம்..” என்றாள் வனிதா..

அவர்கள் மூவரும் ரெடியாக இருந்ததால் அங்கிருந்தே ராணி வீட்டிற்கு கிளம்பினார்கள்..

ராணி வீட்டில் ராணி மிகவும் பரபரப்பாக இருந்தாள்..

முப்பத்தி ஐந்து வயது பெண் ராணி..

அவள் கணவன் ரமேஷ் பிழைப்பு தேடி வெளிநாட்டிற்கு சென்று ஆறு மாதங்கள் தான் ஆகிறது..

ராணிக்கு அப்பா இல்லை.. அம்மா மட்டுமே.. அம்மாவும் கிட்டத்தட்ட 10 வருடங்களாக வெளிநாட்டில் தான்.. உடன்பிறந்த சகோதரர்கள் என்று யாரும் இல்லை..

மகள் கலைவாணி, மகன் ராஜா, மற்றும் ராணி மூவருமே அந்த வீட்டில்..

ராணியின் அம்மா சந்திராவின் கூட பிறந்தவர்கள் ஐந்து பெண் சகோதரிகள். ஒரு ஆண் சகோதரன்.

நேரு தெருவில் ராணியின் வீடு ஆரம்பித்து காந்தி தெருவில் ராஜியின் அதாவது ராணியின் கடைசி சித்தியின் வீடு முடிவடையும்..

அந்த காணியில் ஆறு வீடுகள் உள்ளது..

நேரு தெருவில் ராணி, சாரதா மற்றும் மாலதியின் விடும் அவர்களுக்கு பின்பக்கம் காந்தி தெருவை பார்த்து கலா மற்றும் ராஜி, சந்திராவின் வீடும் உள்ளது..

நேரு தெருவில் மூன்று வீடு தள்ளி ராணியின் இரண்டு சித்தியின் ரெண்டு மகள்கள் இருக்கிறார்கள்..

அதாவது கலாவின் இரண்டாவது மகள் விஜி..

சந்திராவின் அடுத்த தங்கை சாரதாவின் மகள் வேணி..

இவர்களுக்கு இரண்டு தெரு தள்ளி காளி கோவில் வீதியில் அவர்களின் தம்பி மூர்த்தி இருக்கிறார்..

சந்திரா, சாரதா இருவருக்கும் கணவன் இல்லை..

மாலதி, கணவன் பாலாஜி, கலா கணவர் குமார், இரண்டு பேரும் வெளிநாட்டில்..

ராஜியின் கணவர் சந்திரன் மற்றும் ராணி இருவரும் சென்று ராணியின் மாமா மூர்த்தியின் வீட்டு கேட் முன் நின்றார்கள்..

“ லதா அத்தை.. ” என்றாள் ராணி..

அழைத்ததும் லதா வெளியே வந்தார்..

“ நீயா?.. என்ன விஷயம்.. ”

“ அத்தை வாணி வயசுக்கு வந்துட்டா. மாமா வந்து கூற முடி போடனும் எல்லாரும் வாங்க.. சொல்லிட்டு போக வந்தேன்.. ” என்றாள்..

“ ஓஹோ.. அந்த வாயாடி. ஒரு வழியா பதினாலு வயசுல மூலையில குக்காந்துட்டாளா?.. நல்லது.. ஆனா நாங்க வரமாட்டோம்..
வேற யாராவது வச்சு செய்.. ” என்று கூறிவிட்டு சென்றுவிட்டார் லதா..

“ ஏய்..! யாருடி அது.. என்னவாம்?. ” என்றார் மூர்த்தி..

“ எல்லாம் உங்க அக்கா பொண்ணு ராணியும் என் அருமை அண்ணன் சந்திரனும் வந்தாங்க.. ராணி பொண்ணு வாணி வயசுக்கு வந்துட்டா. அதுக்கு நம்மளை முறை செய்ய வரட்டுமாம்..

நல்லா இருக்கே அவங்க கதை..

சண்டை பிடிச்சு வீட்டை விட்டு வெளிய போக சொல்லும் போது நாளைக்கு நாம தேவை படுவோம்னு யாருக்கும் தெரியல.. இப்ப நாம வெளிநாடு போய் கஷ்டப்பட்டு உழைச்சு காசு பணத்தோட நகை நட்டு சேர்த்து இப்ப ஊர்ல கொஞ்சம் வசதியான உடனே நம்மை தெரியுது அவங்களுக்கு.. யாரும் வரமாட்டோம்னு சொல்லிட்டேன்.. ” என்றாள் லதா..

“ சரி அந்த பேச்சை விட்டுட்டு.. எனக்கு காஃபி எடுத்துட்டுட்டு வாடி.. ” என்றார் மூர்த்தி..

நல்ல நாள் அதுவுமாக ராணியின் முகம் சோர்ந்து காணப்பட்டது.. எப்படி இந்த சடங்கை சிறப்பாக செய்து முடிக்க போகிறேன். என்ற நினைப்புதான் மனது முழுவதும்..

வீட்டிற்கு வந்ததும் வாணியை பார்க்க வந்தவர்களுக்கு காஃபி கலந்து கொடுத்துவிட்டு நேரத்தை பார்த்து விட்டு வெளிநாட்டில் இருக்கும் தாய்க்கும், கணவனுக்கும் குரல் வழி தகவலை அனுப்பினாள்..

“ என்ன ராணி ரொம்ப பரபரப்பா இருக்க?.. இந்த நேரத்துல அப்படித்தான் டென்ஷனா இருக்கும்.. இருந்து பொறுமையா எல்லாரோடையும் கலந்து பேசி தான் என்ன செய்யணும்னு முடிவு எடுக்கணும்.. வா இப்படி வந்து இரு அடுத்தது என்ன செய்யலாம்ன்னு பேசலாம்..” என்று சித்தி ராஜி அழைக்கவும் அவர்களுக்கு பக்கத்தில் வந்து இருந்தாள்..

“ முதலாம் தண்ணிக்கு இன்னைக்கு எல்லாருக்கும் சொல்ல போறியா?.. ” என்றாள் கலா..

“ ஆமா சித்தி எனக்கு பெரிய அளவில் செய்ய வசதி இல்ல.. நம்ம சொந்தம் அக்கம் பக்கம் நான் போனவங்க வந்தவங்க எல்லாருக்கும் கொஞ்சம் ஓரளவுக்கு சொல்லி இன்னைக்கு கடையில பிரியாணி சாப்பாடு எடுத்து செய்யலாம்னு இருக்கேன்.. ”

“ பேப்பரும், பேனாவும் எடுத்து வா.. முதல் என்ன தேவைன்னு வாங்க வேண்டிய பொருள் எல்லாம் லிஸ்ட் போடுவோம்.. அப்புறம் யாருக்கெல்லாம் சொல்லணும் என்று லிஸ்ட் போடணும்.. இப்படி செய்வதற்கு காசு வச்சிருக்கியா?.. காசு எவ்வளவு இருக்கு?.. ” என்றார் சந்திரன்..

“ காசு இப்ப கைல இல்லை.. இன்னும் இரண்டு நாள் ஆகுமே அம்மா போட.. வனிதா அக்கா உங்ககிட்ட இருக்கா?.. ”

“ இருக்கு ராணி.. நீ காச பற்றி கவலைப்படாத.. அம்மா போட்டதும் ஆறுதலாவே குடு.. என்கிட்ட இருக்கு நான் போய் எடுத்துட்டு வரேன்.. புள்ளைக்கு நல்லபடியா நல்லது செய்வோம்.. ”

“ இருங்க அக்கா.. இப்ப அவசரம் இல்ல.. நானும் உங்க கூட வந்து காசு வாங்கிட்டு டவுனுக்கு போறேன் சாமான் வாங்க.. ” என்றாள் ராணி..

ராணி பேப்பர் எடுத்து வந்ததும் அவளது சித்தி கலா வாங்க வேண்டிய பொருட்களை சொல்லச் சொல்ல கவனமாக குறித்துக்கொண்டாள்..

அதன் பின் யார் யாருக்கு சொல்ல வேண்டும் என பெயர் பட்டியலும் எடுக்கப்பட்டது..

அப்போது ராணியின் கணவன் ரமேஷ் அழைப்பு விடுத்தான்..

“ சூப்பர் டி சந்தோஷம்.. என் பொண்ண நல்லா பாத்துக்கோ.. கேக்குறது எல்லாம் வாங்கி கொடுங்க.. சந்தோசமா செய்ங்க.. நான் வீடியோ கால்ல பார்க்கிறேன்.. எனக்கு பக்கத்துல இருந்து பார்க்கதான் கொடுத்து வைக்கலை.. இவ்வளவு காலம் அங்க இருந்து இப்பதான் இங்க வந்து ஆறு மாசம். அதுக்குள்ள என் பொண்ணு வயசுக்கு வந்துட்டா.. ” என்றான் ரமேஷ்..

“ ரமேஷ் காசு இப்ப கையில இல்ல.. என்ன செய்யன்னு தெரியல.. உங்க அக்கா கிட்ட இருந்தா கேட்டுப்பாருங்க.. ரெண்டு மூணு நாளில் கொடுக்கலாம்.. அப்படியே உங்க பெரிய அக்காட செல் நம்பர் எனக்கு அனுப்பி விடுங்க. நான் எடுத்து சொல்லி வர சொல்லனுமே. அவங்க தானே அத்தை முறை செய்யணும்.. அத்தை தானே முதல் தண்ணி வாக்கணும் எல்லாம் செய்யணும்.. நீங்களும் கால் பண்ணி பேசுங்க.. இங்க வேலைக்கு, உதவிக்கு யாருமே இல்ல. அவங்களை சீக்கிரம் வந்து செஞ்சி தரச் சொல்லுங்க.. ” என்றாள் ராணி..

ரமேஷின் குடும்பம் பக்கத்து ஊரில் தான் இருக்கிறார்கள்..

ஒரு அக்கா, ஒரு தங்கை, ஒரு அண்ணா, அம்மா வயது போனதால் நடக்க முடியாமல் வீட்டிலேயே இருக்கிறார்.. அப்பா இல்லை..
ரமேஷ் அத்தை, சித்தப்பா, பெரியப்பா அவர்கள் குடும்பம் பிள்ளைகள் என பெரிய ஒரு குடும்பம்..

ரமேஷ் கைபேசி எண்ணை அனுப்பவும் ராணி அவர்களுக்கு அழைப்பு விடுத்தாள்..

“ அண்ணி நான் ராணி பேசுறேன்.. வாணி வயசுக்கு வந்துட்டா நீங்க தான் வந்து அத்தை முறைக்கு எல்லாம் எடுத்து செய்யணும்.. உங்களுக்கே தெரியும் உங்க தம்பி இப்ப ஊர்ல இல்ல. எனக்கு கை உதவிக்கும் ஆண் துணை என்று யாரும் இல்லை.. நீங்க தான் அண்ணா,பிள்ளைகள் எல்லாரும் வந்து விசேஷத்தை நல்லபடியா முன்னாடி நின்னு எடுத்து செய்து தரணும்.. அப்படியே நம்ம சொந்தங்களுக்கு எல்லாம் நீங்களே அவங்களுக்கு சொல்லிருங்க.. இப்ப என்னால தனியா அவ்வளவு தூரம் வந்து நேரில் சொல்ல முடியல.. என்னோட சூழ்நிலையை எடுத்து சொல்லுங்க கோவிக்காமல் வந்துட சொல்லுங்க..

நீங்களும் சின்ன அண்ணியும் கொஞ்சம் சீக்கிரம் வந்துருங்க மத்தவங்க உங்களோட வந்தாலும் சரி இல்ல சாயங்காலம் வந்தாலும் சரி..” என்றாள் ராணி

“ நல்லது ராணி சந்தோஷம் வந்துடுவோம்.. ” என்று பேசிவிட்டு அழைப்பை துண்டித்தாள்..

அடுத்து ரமேஷ் தங்கைக்கு எடுத்துப் பேசி அழைப்பு விடுத்து வைத்தாள்..

அடுத்து வீட்டுக்கு ராஜியை காவலுக்கு வைத்துவிட்டு சந்திரனோடு அவளும் ஆட்டோ பிடித்து தேவையான சாமான்களை வாங்குவதற்கு வனிதா விடம் காசை வாங்கிக் கொண்டு டவுனுக்கு சென்றார்கள்..

அதன் பின் சித்திமார்கள் வீட்டை சுத்தப்படுத்தி மற்ற வேலைகளை செய்ய ஆரம்பித்தார்கள்..

அவர்கள் கடைக்குச் சென்று வரும் போது நேரம் பத்து மணி ஆகிவிட்டது..

தேவையான அனைத்தையும் எடுத்து ஒழுங்குப்படுத்தி வைத்துவிட்டு டீ ஒன்று குடித்துவிட்டு ராணி விஜியை ஸ்கூட்டியில் ஏத்திக்கொண்டு ஆட்களுக்கு சொல்வதற்கு சென்றுவிட்டாள்..

வாணியை பார்க்க வந்தவர்களுக்கு காஃபி குடுத்து இனி வருபவர்களுக்கு வாங்கிய கேக், பலகாரங்கள் கொடுக்க அதை பெக்கிங் பண்ணி வைத்து என மற்ற வேலைகளை வீட்டிலிருந்தவர்கள் செய்ய ஆரம்பித்தார்கள்..

“ எத்தனை பேருக்கு சொல்லவாம்?.. ” என்று வந்த ஒரு பெண் கேட்டாள்..

“ நூறு பேருக்கு சொல்லவாம் சாப்பாட்டுக்கு சொல்லி இருக்கு.. ” என்றாள் ராஜி..

இப்படியே அவர்கள் பேசிக் கொண்டு வேலை செய்து விட்டு நேரத்தை பார்க்க இரண்டு மணி ஆகிவிட்டது..

அழைக்க போன ராணியும், விஜியும் வந்து விட்டார்கள்.. ஆனால் இன்னும் ரமேஷ் அக்கா, தங்கை குடும்பங்கள் வரவில்லை..