மொட்டை மாடியில் துணியை காயவைத்துக் கொண்டிருந்தாள் சந்தியா. பக்கத்து மாடியில் இருந்து அவளைப் பார்த்த நீலாவதி,
“என்னம்மா சந்தியா? உன் நாத்தனார் கல்யாண வேலையெல்லாம் எப்படி போகுது?” என்று பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தார்.
“அதெல்லாம் படு ஜோரா நடந்துகிட்டு இருக்கு சின்ன அத்தை..” என்றவள் செய்யும் வேலையில் கவனமாக இருக்க, அதைப் பார்த்த நீலாவதிக்கு எரிச்சலாக வந்தது.
“என்ன இப்படி சொல்லிட்டு இருக்க? நான் என்ன சொன்னேன்? நீ என்ன பண்ணிட்டு இருக்க?” என்றார் எரிச்சலாய்.
“அத்தை, சொத்த பத்தி பேசுனாலே சண்டை தான் வருது. அதுலயும் என் மாமானரும் மாமியாரும் பாக்குற பார்வையிலேயே என்னை எரிச்சுடுவாங்க போல. நீங்க வேற என் நிலைமை தெரியாம பேசிகிட்டு.” என்றாள் சந்தியா.
“அந்த காதம்பரி ஆட்டத்தை அடக்கனும்னு தான் என் ஒண்ணுவிட்ட அண்ணன் மக உன்னைய அவ வீட்டுக்கு மருமகளா அனுப்புனேன். அதுக்கு எவ்வளவு மெனக்கெட்டோம்.. எல்லாம் மறந்து போச்சா?” என்றார் நீலாவதி.
“சும்மா அதையே சொல்லாதிங்க சின்ன அத்தை. நானும் மனோவும் விரும்பி தான் கல்யாணம் பண்ணிகிட்டோம். என்னமோ நீங்களே எங்க கல்யாணத்தை நடத்தி வச்ச மாதிரி பேசுறிங்க.” என்றாள் எரிச்சலாய்.
“இப்ப அதுவா முக்கியம்? உனக்கு சாமர்த்தியம் பத்தாதுன்றது தான் இப்ப பிரச்சனை. இந்த வேதா கல்யாணம் தான் உனக்குக் கிடைச்ச துருப்புச் சீட்டு. இதை விட்டா அடுத்து உனக்கு வாய்ப்பு கிடைக்கவே கிடைக்காது. முதல்ல, சொத்து எல்லாத்தையும் உன் புருஷன் பேருல மாத்துற வழியைப் பாரு. இல்லையா அவன் கேட்ட மாதிரி வித்து கொடுக்க சொல்லு” என்று நீலாவதி விடமால் தூபம் போட, சந்தியா மீண்டும் யோசிக்க ஆரம்பித்தாள்.
‘சின்ன அத்தை சொல்ற மாதிரி வேதா கல்யாணத்தை சாக்கா வச்சு நாம நினைச்சதை நடத்தி முடிச்சுடனும். என்னால இந்த தோட்டம் காட்டுலயெல்லாம் பின்னாடி வேலை செய்ய முடியாது. எனக்கென்ன தலையெழுத்தா..?’ என்று மனதில் எண்ணியவள்,
“அதுக்கு இப்ப என்ன செய்றது சின்ன அத்தை?” என்றாள்.
“வேதாவுக்கு பேசி முடிச்ச இடம் பெரிய இடமாமே. அவளுக்கு அங்க போன பின்னாடி வசதி வாய்ப்புக்கு ஒரு குறையும் இருக்கப் போறதில்லை. அதனால அதையே சாக்கா வச்சு பேசு. இல்லைன்னா எல்லார் முன்னாடியும் பஞ்சாயத்து பேசுற மாதிரி பேசு சந்தியா” என்றார் நீலாவதி.
“ஏற்கனவே நான் பேசுனதுக்கே மனோ என் மேல கோபமா இருக்கார் சின்ன அத்தை” என்றாள் மனத்தாங்கலுடன்.
“என்னவோ நான் சொல்றதை சொல்லிட்டேன். அதுக்கு மேல உன் பிரியம்” என்று மேம்போக்காய் சொல்வதைப் போல் சொல்லிவிட்டு சென்று விட்டார் நீலாவதி.
போன் பேசுவதற்காக சரண் வீட்டு மொட்டை மாடிக்கு வந்த விஜய ரகு நந்தனின் காதுகளில் இவர்கள் பேசிய விஷயம் அனைத்தும் வார்த்தை மாறாமல் விழ,
‘என்ன மாதிரியான பெண்கள் இவர்கள்’ என்று எண்ணிக் கொண்டான். அவர்களைப் பற்றி யோசித்தவன், பின்பு வந்த வேலையை முடித்துக் கொண்டு, கீழே இறங்க முற்பட,
‘கலகல’ வென்ற சிரிப்பு சத்தத்துடன், இரண்டு பெண்களுடன் மேலே வந்தாள் வேத வர்ஷினி. எதையோ பேசி சிரித்தபடி வந்த வேதாவைப் பார்த்தவனின் இதழ்களில் புன்னகை தானாக வந்து அமர்ந்தது. கீழே செல்ல முற்பட்டவனின் கால்கள், செல்லாமல் அங்கேயே தேங்கி நிற்க ,தென்னங்கீற்றுகள் அசைய, அந்த இளந்தென்றலின் சுகத்தில் அப்படியே சுவற்றில் சாய்ந்து அமர்ந்து விட்டான். பார்வை என்னவோ அலைபேசி திரையை வெறித்துக் கொண்டிருக்க.. செவிகளோ அங்கே பேசிக் கொண்டிருப்பவளின் வார்த்தைகளுக்காக பட்டை தீட்டிக் கொண்டு காத்திருந்தது. காற்றில் சிகை அசைந்தாட, அலைபாயும் மனதை அடக்கும் வழியின்றி அமர்ந்திருந்தான்.
“என்னடி வேதா ஒரே ட்ரீம்ஸா? மேடம் ஒரு போன் கூட பண்றதில்லை.”என்று உடன் இருந்த ஒருத்தி ஆரம்பிக்க,
“வேதா.. உனக்கு வெட்கம் எல்லாம் வரும்னே எங்களுக்கு இப்பதாண்டித் தெரியும். ஆனா சும்மா சொல்லக் கூடாது, வெட்கப்படும் போது நீ இன்னமும் கூடுதலா ஜொலிக்கிற மாதிரி இருக்கு..” என்றாள் ஒருத்தி.
“ஆனா, காலேஜ்ல வேதா வெறியன்ஸ் எல்லாம் ரொம்ப பாவம்டி. உனக்கு கல்யாணம்னு தெரிஞ்சாலே பாதிப் பேர் மருந்தைக் குடிச்சுடுவானுக. அத்தனை பேரும் உன் கால்ல விழுகாத குறை ஒண்ணுதான். என்ன ஒன்னு? அவங்கள்ல யாருக்காவது நீ வாழ்க்கை கொடுத்திருக்கலாம்..” என்றனர் சிரித்துக் கொண்டு.
“காலேஜ் லைப்ல இதெல்லாம் சகஜம் தானடி. அதுக்காக பின்னாடி சுத்துற எல்லாருக்கும் நான் வாழ்க்கை குடுக்க முடியுமா? நம்ம பின்னாடி எத்தனை பேர் சுத்துறாங்கன்றது முக்கியமில்லை. நம்ம மனசு யார் பின்னால் போகுதுன்றது தான் முக்கியம்” என்றாள் வேதா.
“மேடம் மனசு இப்போ நந்தகுமார் பின்னால் சுத்துதோ?” என்றாள் ஒருத்தி. வேதாவின் பதில் அவள் தோழிக்குத் தேவைப் பட்டதோ இல்லையோ, அங்கே விஜய ரகு நந்தனுக்கு தேவைப் பட்டது.
அவளை ஆழ்ந்து பார்த்த வேதா..
“உண்மையை சொல்லனும்னா.. எனக்கே பதில் தெரியலைடி. அவர் பின்னாடி மனசு போகுதா இல்லையான்னு எனக்குத் தெரியாது. இப்போ வரைக்கும் நான் அதிகம் பேசக் கூட இல்லை. இது பக்கா அரேன்ஜ்டு மேரேஜ்.ஆனா, கல்யாணத்துக்கு அப்பறம் கண்டிப்பா என் புருஷனை லவ் பண்ணுவேன். எல்லாரையும் மாதிரி லவ் பண்றதுல என்ன சுவாரஸ்யம் இருந்திடப் போகுது..?கண்டிப்பா இருக்காது. என்னோட காதல் எப்படி இருக்கும் தெரியுமா? நான் இருந்தாலும், இல்லைன்னாலும் என்னோட இடத்தை யாரைக் கொண்டும் நிரப்ப முடியாத ஒரு காதலை, ஒரு தடவையாவது அவருக்குள்ள நான் பதிச்சுடனும்.ஆயிரம் பேர் அவரை ரசிச்சாலும், அனுஅனுவா ரசிக்கிறது நான் மட்டும்மாத்தான்இருக்கணும் அவ்வளவு தான் என்னோட ஆசை..” என்றாள் கனவுகள் மிதக்கும் கண்களுடன்.
“ஹேய் வேதா..! சூப்பர்டி. சத்தியமா இப்படி ஒரு வேதாவை நாங்க எக்ஸ்பெக்ட் பண்ணவே இல்ல. நந்தகுமார் கொடுத்து வச்சவர்..” என்று அவளின் தோழிகள் சொல்ல, அவர்களின் பேச்சு நீண்டு கொண்டே சென்றது.
அவளுடைய பேச்சைக் கேட்ட விஜய்க்கு,ஆச்சர்யம், பாராட்டு, ரசனை என்று உணர்வுகள் மாறி மாறி வந்து போக, அந்த நந்தகுமாரை நினைத்து மனம் மீண்டும் பொறாமைப்பட்டது..
‘இதென்ன? ஒரு சின்ன பொண்ணு பேசுறது என்னை இந்த அளவுக்கு பாதிக்குதா? நானும் சின்னப் பையன் மாதிரி நடந்துக்கிறேன்..’ என்று யோசித்து சிரித்துக் கொண்டிருந்தான். ஆனாலும் அவளின் வார்த்தைகள் அவனுக்குள் ஒரு வித தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது என்னவோ உண்மை.
அவன் அங்கிருந்து கிளம்பி செல்ல, அப்போது அவனைப் பார்த்த வேதாவின் தோழிகள்,
“டி வேதா..! யாருடி அந்த ஹேண்ட்சம்…?ப்பா என்னா ஹைட்டு. செம்மையா இருக்காண்டி” என்று அவர்கள் சைட் அடிக்க, அப்போது தான் விஜய்யை கவனித்தாள் வேதா.
“அவர் எங்க கீர்த்தனா அண்ணியோட ப்ரதர் தாண்டி. சரண் அண்ணா பிரண்ட்..” என்றாள்.
“அப்ப சூப்பரு..! அவரு சிங்கிளா..டி..” என்றனர்.
“எதுக்கு கேட்குறிங்க?” என்றாள் முறைப்பாய்.
“நாங்க மிங்கிள் ஆகத்தான்..” என்றனர் சிரிப்புடன்.
“எப்பவுமே பாரங்கல்லை முழுங்குன மாதிரி ஒரு முகம். எனக்குத் தெரிஞ்சு அவரெல்லாம் மிங்கிள் ஆக வாய்ப்பே இல்லை. இது வரைக்கும் என்கிட்டயே ரெண்டு வார்த்தை சேர்ந்தாப்படி பேசுனது இல்ல.” என்றாள் வேதா.
“அடியேய்..!!!” என்று அவர்களுடன் சிரிப்பில் இணைந்து கொண்டாள் வேதா.
மறுநாள் சந்தியா நினைத்தது சரியாக நடந்து கொண்டிருந்தது. அதிலும் அனைவரின் முன்னிலையிலும்.
திருமணத்திற்கு ஒரு நாளே இருக்க, மண்டப்பத்திற்கு எடுத்து செல்வதற்கான அனைத்து பொருட்களையும் சரி பார்த்து எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் வேதா. அவளுடன் இணைந்து வேலை செய்து கொண்டிருந்த காதம்பரியை ராமச்சந்திரன் அழைக்க.. வெளியே சென்றவர் இன்னமும் வரவில்லை.
‘இந்த அம்மா என்னதான் பண்றாங்க?’ என்று புலம்பியபடி அவரின் புடவையையும் எடுத்து அடுக்கிக் கொண்டிருந்தாள்.
‘வேற ஏதாவது விட்டுப் போய்டுச்சா?’ என்று யோசித்தவளுக்கு, எல்லாம் எடுத்து வைத்ததைப் போல் இருக்க,
‘எதுக்கும் அம்மாகிட்ட ஒரு வார்த்தை கேட்போம்..’ என்று அவளின் அறையை விட்டு கீழே வந்தாள் வேதா.
அவள் வீட்டு ஹாலில் அனைவரும் இருக்க, அது அவளுக்கு வித்யாசமாய் தெரியவில்லை. எப்பவும் வீடு அப்படி தான் இருக்கும். ராமச்சந்திரனைப் பார்க்க, யாராவது வந்து போய் கொண்டு இருப்பர். இப்போது கல்யாண வீடு வேறு. அதனால் வந்த சொந்த பந்தமாக இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டு செல்ல, சந்தியாவின் பேச்சு சத்தம் கேட்டு அதிர்ந்து விட்டாள்.
அங்கிருந்தவர்களை ஒரு முறை பார்வையிட்டாள். சரண்-கீர்த்தனா நிற்க, அவர்களுக்கு அருகில் விஜய் கூட இடுங்கிய பார்வையுடன் நின்றிருந்தான்.
“சந்தியா கொஞ்சம் நேரம் பேசாம இருக்க போறியா இல்லையா? இதைப் பேசுறதுக்கு இது தான் நேரமா? வேதா மேரேஜ் முடியட்டும். நிதானமா பேசிக்கலாம்..” என்று மனோகரன் சொல்ல,
“முடியாதுங்க..! எனக்கு இப்பவே பதில் தெரிஞ்சாகனும். அவ தான் சொத்து வேணாம்னு சொல்லிட்டாலே. அதை உங்களுக்கு மாத்தி தர்றதுல இவங்களுக்கு என்ன பிரச்சனை?” என்றாள் விடாமல்.
“ஏம்மா அதை கேட்க நேரம் காலம் இல்லையா? வீட்ல விசேஷத்தை வச்சுகிட்டு இப்படி பேசுறது நல்லா இல்லை..” என்று ஒரு பெரியவர் சொல்ல,
“அண்ணி..! நான் தான் சொன்னேன்ல எனக்கு எந்த சொத்தும் வேண்டாம்னு. என்மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?” என்றாள் வேதா.
“வேதா உன்னைய யாரு இங்க வர சொன்னது. நீ உன்னோட ரூம்க்கு போ..” என்று காதம்பரி அதட்டினார்.
“எப்படிம்மா என்னால பேசாம இருக்க முடியும்? இந்த சொத்து தான பிரச்சனை. நான் வேணும்னா விடுதலைப் பத்திரம் எழுதிக் கொடுத்திடுறேன்..அப்பவாவது என்னைய நம்புறாங்களான்னு பார்ப்போம்.” என்றாள்.
“நீ விடுதலைப் பத்திரத்துல கையெழுத்து போட்டுத்தான் உன்னைய நம்பணும்னு எந்த அவசியமும் இல்லை. முதல்ல சொத்த கேட்குற உரிமை யாருக்குமில்லை.” என்ற காதம்பரி, சந்தியாவைப் பார்த்து முறைத்தவாறு,
“நீ ஏன் இப்ப இப்படி பேசுற? யார் சொல்லி பேசுற? இதெல்லாம் எனக்குத் தெரியாம இல்லை சந்தியா. என் பையன் வாழ்க்கை கெட்டுப் போய்டக் கூடாதுன்னு பொறுமையா போறோம். எங்க பொறுமைக்கும் ஒரு அளவு இருக்கு..” என்றார் காதம்பரி நிதானமாய்.
“அம்மா..! பிளீஸ்..! ஒரு கையெழுத்து தானே..! நான் போட்டா பிரச்சனை முடிஞ்சுடும்..” என்றாள் வேதா.