வீடு வந்து சேர்ந்த பின்னும் அவள் அமைதியாகவே இருக்க, சரணுக்கு உள்ளுக்குள் ஒரு பயப்பந்து உருண்டது. அதிலும் யாரின் முகத்தையும் பார்த்து அவள் பேசவில்லை. அதுவே அவனுக்கு சந்தேகத்தை கிளப்ப,
“உடம்புக்கு இப்போ ஓகே வா வேதாம்மா..! வேற எதுவும் பிரச்சனையில்லையே?” என்றான்.
அவனை தீர்க்கமாகப் பார்த்தாள் வேதா. அந்த பார்வையின் பொருளை அவனால் அறிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் அந்த பார்வையை எதிர்நோக்கும் சக்தி இல்லாததைப் போன்று தலை குனிந்தான். அதைப் பார்த்தவளின் உதட்டில் ஒரு ஏளனச் சிரிப்பு வர, அவனைப் பார்த்தும் பார்க்காததும் போல திரும்பிக் கொண்டாள்.
தைரியம் வரப் பெற்றவனாய்…
“உனக்கும், நந்தாக்கும் இடையில என்ன நடந்தது வேதாம்மா? எதுக்காக அப்படி வேகமாக கண்மண் தெரியாம நடந்து போன?” என்றான்.
பதில் சொல்ல முடியாது என்பதைப் போல் தான் இருந்தது அவளின் முகமும், நடவடிக்கையும்.
“சரண் கேட்டுட்டே இருக்கார். நீ அமைதியா இருந்தா என்ன அர்த்தம் வேதா?” என்றாள் கீர்த்தனா.
“பதில் சொல்ல விருப்பம் இல்லைன்னு அர்த்தம் அண்ணி” என்றாள் பட்டென்று. அவளின் பதில் கீர்த்தனாவைக் குழப்பியது.
“இப்ப என்ன நடந்தது வேதா? எதுக்காக இப்படி பேசுற? நாங்க என்ன பண்ணோம்? அப்படி என்ன கோபம் உனக்கு?” என்றாள் விடாமல்.
“பேச விருப்பம் இல்லைண்ணா விட்டுருங்க அண்ணி. எனக்கு இப்போ உடம்புக்கு ஒன்னும் இல்லை. அப்படியே எதுவும் வந்து போய் சேர்ந்தாலும் எனக்கு சந்தோசம் தான்..” என்றாள் பட்டென்று.
“ஏங்க, அவ இப்போ முடியாம இருக்கா, இப்ப எப்படி விட்டுட்டு போக முடியும்?” என்றாள்.
“அதெல்லாம் அவ நல்லாத்தான் இருக்கா. இவ்வளவு தூரம் வாய் பேச முடியுதுல்ல. அப்ப உடம்புக்கும் ஒண்ணுமில்லை. நாம தான் தேவையில்லாம பதறிப் போறோம்னு நினைக்கிறேன். அவங்க இப்பல்லாம் பெரிய மனுசி ஆகிட்டாங்க. அவங்களுக்கு நம்ம உதவித் தேவைப் படாது. அப்படி தேவைப் பட்டாலும், அகரன் இருக்கான். அவன் பார்த்துப்பான்.” என்று வெறுமையான குரலில் சொன்னவன்,
“போகலாம்” என்றான்.
சரணின் பேச்சு வேதாவிற்கு கோபத்தைத் தூண்டியிருக்க,
“இப்ப எதுக்காக இப்படி பேசுறிங்க அண்ணா?” என்றாள் கூர்மையான பார்வையுடன்.
“பதில் உனக்குத் தெரியும்னு எனக்கும் தெரியும். உன் முகத்தை வச்சே உனக்குள்ள என்ன ஓடுதுன்னு கண்டு பிடிக்கிறவன் நான்..” என்றான் சரண்.
“நான் எது செஞ்சாலும் அது சரியாத்தான் இருக்கும்னு ஒரு காலத்துல என் தங்கச்சி சொல்லுவா? ஆனா, இப்பல்லாம் அவளுக்கு என் மேல நம்பிக்கை இல்ல போல?” என்றான் அவனும் அதே ஏளனச் சிரிப்புடன்.
“இதை உங்ககிட்ட நான் எதிர்பார்க்கலை” என்றாள் கலங்கிய குரலுடன். அவளைக் கண்டு கலங்கிய மனதைத் திடப்படுத்தியவன்,
“காதம்பரி அம்மா முடிவு தான் எல்லாமே. அவங்க முடிவை ஏத்துக்கறதும், வேண்டாம்னு போறதும் உன்னோட கைல தான் இருக்கு. நீ சொன்ன மாதிரி உன்னை ஒரு அளவுக்கு மேல நாங்க பேம்பர் பண்ண முடியாது இல்லையா?. உன்னோட வாழ்க்கையை நீ தான் பார்த்துக்கணும். உனக்குத் தான் உன்னைப் பார்த்துக்க தெரியுமாச்சே?” என்றான் சரண்.
“அய்யோ..! நிறுத்துங்க ரெண்டு பேரும். நீங்க பேசுற எதுவுமே புரியலை. ஏன்? சாதரணமாவே பேசத் தெரியாதா உங்களுக்கு? இப்ப எதுக்கு பொடி வச்சு பேசிட்டு இருக்கீங்க ரெண்டு பேரும்? அப்படி என்ன தான் பிரச்சனை?” என்றாள் கீர்த்தனா பொறுக்க மாட்டாமல்.
“நான் போகலாம்னு சொன்னேன் கீர்த்தனா” என்று சரண் அழுத்தமாக கூற, அதற்கு மேல் அவளாலும் ஒன்றும் பேச முடியாத சூழ்நிலை. சரணுடன் கிளம்பி சென்று விட்டாள். அவர்கள் சென்றவுடன், ஒரு ஹாட் பாக்சுடன் மேலே வந்தான் அகரன்.
“என்ன சரண் அண்ணா கிளம்பிட்டான்?” என்றான் புரியாமல்.
“தெரியாது அகரா..” என்றவள்,
“கையில என்ன?” என்றாள்.
“டிபன் சாப்பிட வேண்டாமா? நீ வேற டயர்டா இருக்க? நடந்த கூத்துல மால்லயும் ஒருத்தரும் ஒன்னும் சாப்பிடலை. அதான் ரகு அண்ணா குக் பண்ணிக் கொடுத்தார்.” என்றான் அவன் யதார்த்தமாக.
“ஒழுங்கு மரியாதையா இதை எடுத்துட்டு போய் கொடுத்துட்டு வந்துடு. கண்டவங்க அக்கறை எல்லாம் நமக்குத் தேவையில்லை..அவர் யாரு நமக்கு சமைச்சு குடுக்க?” என்றாள் பட்டென்று.
“வேதா..!!” என்று அதிர்ந்து போனான் அகரன். காரணம் அவள் அப்படி பேசக் கூடியவளே அல்ல. யாரையும் எடுத்தெறிந்து பேசும் குணம் அவளிடத்தில் அறவே இல்லை. அப்படிபட்டவள் இன்று இப்படி பேசவும் அவன் புரியாமல் நிற்க,
“உன்னைத் தான் அகரா..” என்றாள் அழுத்தமாக.
“சாரி வேதா! உன்கிட்ட இருந்து இதை நான் எதிர்பார்க்கலை. ரகு அண்ணாக்கு இருக்குற ஆயிரத்தெட்டு வேலையில, நமக்காக இதைப் பண்ணிக் கொடுத்தார். உன்னை மாதிரி என்னால அப்படி சட்டுன்னு பேச முடியாது. உனக்கு வேணாம்னா நீ சாப்பிடாத. ஆனா நான் சாப்பிடுவேன்..” என்றபடி திரும்ப, அவர்களையே அழுத்தமாக பார்த்தபடி நின்றிருந்தான் விஜய்.
“அண்ணா..!!” என்று அகரன் ஒரு நிமிடம் அதிர, வேதாவும் சட்டென்று திரும்பிப் பார்த்தாள். அவன் வந்து நிற்பான் என்று அவளும் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் அங்கு குடி வந்த பிறகு, ஒரு முறை கூட அவன் மேலே வந்தது இல்லை. இப்போது தான் முதன் முறை வருகிறான்.
“அண்ணா, வேதா ஏதோ டென்ஷன்ல அப்படி பேசிட்டா.. நீங்க எதுவும் தப்பா எடுத்துக்காதிங்க” என்று அகரன் திணறிய படி பதில் சொல்ல, விஜய்யின் பார்வையோ அவனைக் கடந்து வேதாவை அழுத்தமாகப் பார்த்தது. அவன் பார்வையை எதிர்நோக்க முடியாமல் அவள் வேறு புறம் பார்வையைத் திருப்ப,
அகரனின் கையில் இருந்த ஹாட் பாக்ஸை வாங்கியவன்,
“இந்த கண்டவன் குக் பண்ண புட் எல்லாம் உங்களுக்கு வேண்டாம் அகரா. நீங்க வெளிய ஆர்டர் பண்ணிக்கங்க” என்றவன், அழுத்தமான வேக நடையுடன் திரும்பி சென்று விட்டான். அவன் அப்படி செய்வான் என்று வேதாவும் கூட ஒரு நிமிடம் யோசிக்கவில்லை.
“இப்ப உனக்கு சந்தோஷமா வேதா? நாம இங்க வந்ததுக்கு மறுநாள் காபி போட்டு கொடுத்தார். அதுக்கப்பறம் இத்தனை நாள் கழிச்சு, அதுவும் உனக்கு உடம்பு சரியில்லைன்னு அவர் குக் பண்ணி கொடுத்தார். மத்த படி தேவையில்லாம அவர் நம்ம இருக்கற பக்கம் கூட வந்தது இல்லை. அவரைப் போய் இப்படி பேசிட்ட. அது மட்டுமில்லாம, அவர் ஒன்னும் கண்டவங்க இல்லை. கீர்த்தனா அண்ணியோட அண்ணன். சரண் அண்ணா பிரண்ட். அதை மறந்துடாத.” என்று கோபமாய் சொன்னவன்,
“உனக்கு என்ன வேணும்னு சொல்லு, நான் புட் ஆர்டர் பண்றேன்.” என்றான்.
“உனக்கும் சேர்த்து நான் இட்லியே ஆர்டர் பண்றேன்..” என்றான்.
‘அகரன் சொன்ன மாதிரி நாம அப்படி பேசியிருக்கக் கூடாதோ?’ என்று அவள் யோசிக்க,
‘அவர் வந்து நிப்பாருன்னு நான் என்ன கனவா கண்டேன்?’ என்று தன்னுடைய கேள்விக்கு தானே பதிலும் கூறிக் கொண்டாள்.
‘அப்போ வந்து நிக்கலைன்னா என்ன வேணும்னாலும் பேசுவியா?’ என்று கேட்க,
‘என் விஷயத்துல தலையிட்டா கண்டிப்பா பேசுவேன்’ என்று தீர்மானமாய் கூறிக் கொண்டவளுக்கு, நடந்த நிகழ்வுகள் நினைவடுக்கில் உலாப் போக, அதற்குள் ஆழ்ந்து போனாள்.
சரண்-கீர்த்தனா திருமணம் முடிந்து, மறுவீட்டு சம்பிரதாயங்கள் அனைத்தும் முடிந்திருக்க, அடுத்த சில நாட்களிலேயே வேத வர்ஷினி- நந்தகுமார் திருமண வேலைகளும் ஜரூராய் நடந்து கொண்டிருந்தது. வேதாவோ எப்போதும் போல் கல்லூரி சென்று வந்து கொண்டிருந்தாள். அந்த திருமணத்தின் மீது அவளுக்கு எதிர்பார்ப்பும் இல்லை. அதே சமயம் எதிர்ப்புமில்லை. காரணம் காதம்பரிதான். வேதாவிற்கு கிடைத்த ஆகச்சிறந்த நல்ல விஷயங்களுக்கு சொந்தக்காரர் அவர் மட்டுமே. திருமணம் முடிந்து நந்தகுமார் அமெரிக்கா செல்வதாக இருக்க,நந்த குமாரின் பூர்வீகமும் மதுரை என்பதால்,படித்து முடிக்கும் வரை வேதா மதுரையிலேயே இருப்பது என்று இரண்டு வீட்டாரும் முடிவெடுத்துக் கொண்டனர்.
நான்காவது செமஸ்டரின் இறுதித் தேர்வினை முடித்துவிட்டு சந்தோஷமாக வீடு வந்தவளுக்கு வீட்டின் நிலை அத்தனை உவப்பாகத் தெரியவில்லை. காதம்பரியின் முகம் வேதனையை சுமந்து கொண்டிருக்க, ராமச்சந்திரனோ இறுகிப் போயிருந்தார். அவள் திருமணத்திற்காக பத்து நாட்கள் விடுமுறையில் வந்திருந்த மனோகரன் எப்போதும் போல் இருக்க, சந்தியாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்துக் கொண்டிருந்தது.
அண்ணன் மனைவியுடனான உறவுமுறையில் அவ்வளவு நெருக்கமில்லை அவளுக்கு. அதிலும் வேதா என்றாலே சந்தியாவிற்கு ஆகாது என்ற நிலை தான். அங்கிருந்த அனைவரும் ‘வேதா வேதா’ என்று அவள் நாமம் பாட, மனோகரனை மணம் முடித்து வந்த நாட்களில் சந்தியாவிற்கு அவளறியாமலேயே வேதா மீது ஒரு வெறுப்புணர்வு வந்திருந்தது. அது வேதாவிற்கும் தெரிந்து தான் இருந்தது.
இப்போது கீர்த்தனாவுடன் வேதா நன்றாக ஒட்டிக் கொள்ள, சந்தியாவிற்கு அது சுத்தமாகப் பிடிக்கவில்லை.
‘என்கிட்டே பேச மட்டும் தான் காசு கேட்பா..! ஆனா, அந்த கீர்த்தனாகிட்ட மட்டும் அப்படி என்னத்தை தான் பேசுவாளோ தெரியாது” என்று மனோகரனிடம் மனத்தாங்கலுடன் பேசுவதைப் போல், குற்றப்பத்திரிக்கை வாசித்து வைப்பாள்.
“அவ சின்ன பொண்ணு சந்தியா. நானும் கொஞ்சம் கலகலன்னு பேச மாட்டேன். ஆனா, அவ எனக்கு நேர்மாறா இருப்பா. சரணும், அகரனும் அவளோட வைப்க்கு ஒத்து போவாங்க. இப்போ சரண் வொய்பும் அவளோட செட்டாகிட்டாங்க போல..” என்று மனோகரன் பதில் சொல்லி வைப்பான்.
“அதான? உங்க தங்கச்சியை ஒரு வார்த்தை சொல்லிடக் கூடாதே..! உடனே சப்போர்ட் பண்ணிட்டு கிளம்பிடுவிங்களே!” என்ற வார்த்தைகள் தான் அவள் வாயில் இருந்து வரும்.
அன்றும் அது போல் ஏதாவது நடந்திருக்கும் என்று எண்ணிய வேதா,
“எக்ஸாம் எழுதிட்டு ஒருத்தி டயர்டா வருவாளே.. அவளுக்கு ஏதாவது சாப்பிடக் கொடுப்போம்னு இல்லாம, எல்லாரும் இப்படி முகத்தைத் தூக்கி வச்சுட்டு இருந்தா என்ன அர்த்தம்?” என்றாள் மிரட்டலுடன்.
அவளை அமைதியாக பார்த்த காதம்பரி,
“வேதாம்மா..! மாப்பிள்ளை வீட்ல இருந்து வரேன்னு சொன்னாங்க. இங்க பக்கத்துல சொந்தக்காரங்க வீட்டுக்கு பத்திரிக்கை வைக்க வந்திருக்காங்களாம். நீ பிரஷ் ஆகிட்டு, வேற டிரஸ் மாத்துறதுன்னா மாத்திக்கோமா” என்றார்.
“இந்த டிரஸ் நல்லா தான இருக்கும்மா. இதுவே இருக்கட்டும்..” என்றாள்.
“சரி..! நீ போய் முகம் கழுவிட்டு வா..! அம்மா சூடா டீ போட்டுத் தரேன்” என்று சொல்ல,
“நீங்க உட்காருங்க..! நான் உங்களுக்கு டீ போட்டுத் தரேன். நீங்க தான் இப்போ என்னவோ மாதிரி இருக்கீங்க.. உங்களுக்குத் தான் வேதாவோட ஸ்பெஷல் டீ தேவை” என்றவள், காதம்பரிக்கு பிடித்த மாதிரி இஞ்சி ஏலக்காய் எல்லாம் தட்டிப் போட்டு டீ போட்டுக் கொண்டிருக்க,
மகளின் அன்பிலும், தன் முகம் பார்த்தே ஏதோ விஷயம் என்று கணித்த அவள் புரிந்துணர்விலும் அவருக்கு கண்கள் கலங்கியது.
“காதும்மாவுக்கு என்ன பிரச்சனை? என் அம்மா இப்படி டல்லா இருக்க மாட்டாங்களே, அதுவும் சம்பந்தி வீட்ல இருந்து வரேன்னு சொல்லியும் இப்படி இருக்கிங்கன்னா சம்திங் ராங்..” என்று இழுத்தாள்.