அகரனுக்கு ஒரு பிராண்டேட் பேண்ட்டும் ஷேர்ட்டும் எடுத்த வேதா, ஒரு ப்ராண்டேட் வாட்சும் எடுத்தாள். ஒவ்வொரு வருடமும் அவள் எடுத்துக் கொடுப்பதைத் தான் அவன் அணிய வேண்டும் என்று எழுதப்படாத சட்டம் ஒன்றை வைத்திருந்தாள்.
“டேய் தம்பிப் பையா..! நாளைக்கு இதைத் தான் போடணும்” என்றாள் செல்லமாய்.
“அது தான உலக வழக்கம்” என்றான் அகரனும் சிரித்துக் கொண்டே.
“பர்த்டேக்கு சர்பிரைஸ் கிப்ட் எல்லாம் இல்லையா வேதா?” என்று கீர்த்தனா கேட்க,
“எப்பவுமே இது தான் வழக்கம் அண்ணி. என்ன வாங்கித் தரணும்னு தோணுதோ, அதை நேராவே கூட்டிட்டு போய் வாங்கிக் கொடுத்துடுவோம். அதை சாக்கா வச்சு மதுரையையே ஒரு சுத்து சுத்துவோம். அப்பா பர்ஸை நாங்க காலி பண்ணாம வந்ததா சரித்திரம் இல்லை. எப்பவும் ராம் அப்பா கூட வருவார். அவர் வர முடியாதப்போ பாலப்பா கூட வருவார். யார் வந்தாலும் பாரபட்சம் எல்லாம் பார்க்க மாட்டோம், செலவு ஒன்னு தான். பட் இவனோட ட்ரஸ் செலவு மட்டும் என்னோட பாக்கெட் மணி சேவிங்க்ஸ்..” என்றாள். மதுரை ஞாபகங்களுடன்.
அவள் முகத்தில் தெரிந்த பாவனையில்,
“வீட்டை மிஸ் பண்றியா வேதா?” என்று கீர்த்தனா கேட்க,
“இல்லைன்னு பொய் சொல்ல மாட்டேன் அண்ணி. நான் மட்டுமில்லை, நாங்க எல்லாருமே மிஸ் பண்றோம் இல்லையா அகரா?” என்று அவனைத் துணைக்கு அழைக்க,
“இல்லையா பின்ன? நாம என்ன சாதரணமாவா இருந்தோம்? நம்மோட சரித்திர சாதனைகள் என்னென்னன்னு ஒரு பட்டியலே போடலாமே? நாம இல்லாம எத்தனை பேர் அங்க நிம்மதியா இருப்பாங்கன்னு நமக்குத் தான தெரியும்” என்று அகரன் நமட்டு சிரிப்புடன் சொல்ல,
“டேய்..! அங்க நீங்க பண்ணதுக்கு பேர் சாதனை இல்லை… சோதனைடா சோதனை” என்று சரண் சொல்ல,
“ப்ரோ..! அதை நீங்க சொல்லக் கூடாது. ஸ்கூல் படிக்கும் போதே, கிளாஸ் டீச்சருக்கு லவ் லெட்டர் கொடுத்தவரு தான நீங்க” என்ற வேதா, கீர்த்தனாவைப் பார்க்க,
“கிளாஸ் டீச்சருக்கா?” என்று வாயப் பிளந்தாள் அவள்.
“ஆமா..ஆமா..!கட்டுனா அந்த டீச்சரைத் தான் கட்டுவேன்னு ஒரே அடம்..” என்றான் அகரன்.
“அப்பறம்?” என்றாள் கீர்த்தனா அதிர்ச்சி மாறாமல்.
“அப்பறம் என்ன? அந்த டீச்சரோட புருஷன் அப்பாகிட்ட வந்து கம்ப்ளைன்ட் பண்ண.. அப்பா துரத்த, அண்ணன் ஓட, அவர் அடிக்க, அண்ணன் குதிக்க ஒரே கூத்தா இருந்துச்சு..கடைசில அந்த டீச்சர் தான் கிடைக்கலை. அவங்களை மாதிரியே நான் வாத்தியார் தான் ஆவேன்னு அடம் புடிச்சு வாத்தியார் ஆனான்.” என்றாள் வேதா வடிவேல் பாணியில்.
“அப்பவும் படிச்சு வாத்தியார் ஆகலை. அடம் புடிச்சு தான் வாத்தியார் ஆகியிருக்கான்” என்று சிரித்தான் அகரன்.
இவர்கள் பேசுவது காதில் விழாது போல் நின்றிருந்த விஜய்க்கு கூட சிரிப்பு வந்தது. சரண் பாவமாய் முகத்தைக் வைத்துக் கொண்டு,
“இப்ப இதெல்லாம் கேட்டாங்களா வேதாம்மா?” என்றான்.
“சொல்றது எங்க கடமை இல்லையாண்ணா..?” என்றவள்,
“அண்ணி இதென்ன பிரம்மாதம்.. சரண் அண்ணா ஒரு நாள்..” என்று அவள் ஏதோ சொல்ல வர, அவள் வாயை மூடினான் சரண்.
“என் வாழ்க்கையில கும்மி அடிக்கிறதையே பொழப்பா வச்சிருக்கிங்க ரெண்டு பேரும். இன்னைக்கு இது போதும். இதுவே இன்னும் கொஞ்ச நாளைக்குத் தாங்கும்” என்றான் பாவமாய்.
“நீங்க இப்படி இருப்பிங்கன்னு நான் நினைக்கவே இல்லை சரண்” என்று கீர்த்தனா முறைக்க,
“ஏற்கனவே நிறைய இருக்குண்ணா. இப்ப எதுக்குத் தேவையில்லாம?” என்றாள்.
“இருந்தாலும் பரவாயில்லை, எடுங்க” என்று முடித்து விட்டான் சரண்.
கீர்த்தனா தனக்கு இரண்டு குர்தா செட் எடுக்க, வேதா எதை எடுப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.
“ஏதும் பிடிக்கலையா வேதா?”
“அப்படி இல்லை அண்ணி” என்று பார்த்தவள், தக்காளிச் சிவப்பில் இருந்த, அதிகம் வேலைப்பாடுகள் இல்லாத, ஒரு பேணல் கட் அனார்கலி சுடிதார் செட் ஒன்றை எடுத்தாள்.
“ஹேய் வேதா..! இந்த டிரஸ் செம்மையா இருக்கு. லைக், சிம்பிள் அண்ட் எலகன்ட்..” என்றாக் கீர்த்தனா.
“அக்கா செலக்சன் எப்பவுமே நல்லா இருக்கும் அண்ணி” என்றான் அகரன்.
“உங்களுக்கு பிடிச்சிருந்தா இதை நீங்க எடுத்துக்கோங்க அண்ணி” என்றாள் வேதா.
“நோ..நோ..! எனக்குப் பிடிச்சிருக்கு. பட் என்னை விட உனக்குத்தான் இந்த டிரஸ் இன்னமும் அழகா இருக்கும்..” என்றாள்.
அவர்கள் அருகில் இருந்தாலும், தன் மொபைல் போனையே பார்த்துக் கொண்டிருந்த விஜய், நிமிர்ந்து அவள் கையில் இருந்த ஆடையைப் பார்க்க, கீர்த்தனா கூறியதைப் போல், அழகாக இருந்தது.
‘பெர்பெக்ட்’ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டான். எடுத்த அனைத்தையும் பில் கௌன்ட்டருக்கு வேதா கொண்டு செல்ல, அதை அவளிடம் இருந்து பிடுங்கிய விஜய், பில் போட்டு பணத்தையும் செலுத்திவிட்டு, அதை வாங்கிக் கொண்டு வந்தான்.
“உன்னோட அண்ணா கொடுத்தா என்ன? என்னோட அண்ணா கொடுத்தா என்ன?. நாம இப்ப சாப்பிட போகணும். பசி வந்தா நான் நானா இருக்க மாட்டேன்” என்றாள் கீர்த்தனா.
“ம்ம் ஓகே..!” என்றாள் அரை மனதாக. விஜய் பில் கட்டியது அவளுக்குப் பிடிக்கவில்லை.
‘இந்த சரண் அண்ணா பில் பே பண்றப்ப எங்க போனார்..?” என்று சிந்தித்துக் கொண்டிருந்தவள், அதே யோசனையில் கவனிக்காமல், எதிரே வந்தவர் மீது மோதியதில் தடுமாறி விழப்போக,
“ஹேய் பார்த்து..!!!” என்று வார்த்தைகளால் அவளைத் தடுத்து நிறுத்தியிருந்தான் நந்தகுமார்.
தடுமாறித் தானாகவே சமாளித்து நின்றவள், ஏற்கனவே இருந்த யோசனையில் இரண்டு எட்டு முன்னால் வைக்க, அப்பொழுதுதான் தடுத்து நிறுத்தியவனின் முகம் கண் முன்னால் வர, சட்டென்று திரும்பிப் பார்த்தாள் வேத வர்ஷினி. அவள் திரும்புவாள் என்று தெரிந்து தானோ என்னவோ, அவனும் அவளையே பார்த்திருந்தான்.
இத்தனை மாதங்கள் கழித்து அவனைப் பார்த்தவளுக்கு, பேச்சே வரவில்லை. நம்பவும் முடியவில்லை. கண் முன்னே இருப்பவனைப் பார்த்து நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.
“நீ..நீங்க..நந்தா..” என்று அவள் திக்கித் திணற, அவளைக் காணாமல் திரும்பிப் பார்த்த மற்றவர்களின் பார்வை வட்டத்திலும் விழுந்தான் நந்த குமார்.
“ஹாய் வேதா..! எப்படி இருக்க?” என்றான் நந்த குமார்.
“நா.. நான் நல்லா இருக்கேன்..நீங்க” என்றாள் திணறியபடி.
“வேதா இங்க என்ன பண்ற?” என்று சரண் அவள் அருகில் வர, அவனைப் பார்த்த நந்தா..
“ஹாய் சரண் எப்படி இருக்கீங்க?” என்றான் .
சரண் முகத்தை சாதரணமாக வைக்க பெரும்பாடு பட்டுப் போனான். முகத்தை சாதரணமாக வைத்தவன்,
“நான் நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க?” என்றான் சம்பிரதாயமாய்.
“ஐம் குட்” என்றான் நந்தகுமார் ரத்தின சுருக்கமாக.
அடுத்து என்ன பேசுவதென்று புரியாமல் இருவரும் அமைதியா இருக்க, வேதாவோ எப்படி உணர்ந்தாள் என்றே தெரியவில்லை. அன்று அவள் அனுப்பிய ‘ஹாய்’ என்ற மெசேஜ்ஜைத் தவிர அவளும் அதற்கு பிறகு எதுவும் அனுப்பவில்லை. அவனிடமிருந்து இத்தனை நாட்களில் ஒரு நாள் கூட ஒரு அழைப்பு கூட வரவில்லை. இன்று திடீரென்று நேரில் பார்க்கவும், வார்த்தைகள் வர மறுத்தது. அவளின் நிலை அவனுக்கும் புரிந்திருக்க வேண்டும்.
“நான் வேதா கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்” என்றான் நந்த குமார்.
“இத்தனை நாள் இல்லாம இன்னைக்கு என்ன திடீர்ன்னு?” என்றான் சரண்.
“பிளீஸ்” என்றான் நந்த குமார்.
“வேதாவுக்கு ஓகேன்னா எனக்குப் பிரச்சனையில்லை.” என்று சரண் கூற, வேதாவின் முகத்தைப் பார்த்த நந்தா,
“பிளீஸ் வேதா..! எனக்குப் பேசியே ஆகணும்” என்றான்.
“ம்ம்” என்று அவள் தலை தானாக ஆடியது.
“நாங்க புட் கோர்ட் போறோம். நீங்களும் அங்கயே வந்து பேசுங்க..” என்ற சரண் அவளை அழைத்துக் கொண்டு முன்னால் செல்ல, அங்கு நடந்த அனைத்தையும் கைகளைக் கட்டிக் கொண்டு ஒரு அழுத்தமான பார்வையுடன் பார்த்திருந்தான் விஜய ரகு நந்தன். அவன் எடுத்து வைத்த வேக எட்டுக்களில் அவன் அழுத்தம் தெரிய, முகமோ பழைய இறுக்கத்திற்கு சென்றிருந்தது.
புட் கோர்ட் சென்றவர்கள் அவர்களுக்கு சற்று தள்ளி அமர்ந்து கொள்ள, நந்தகுமாரும்,வேதாவும் ஒரு டேபிளில் அமர்ந்திருந்தனர். சில நிமிடங்களை அமைதியே ஆக்கிரமிப்பு செய்திருந்தது.
“நான் இந்த சாரியை முன்னமே கேட்ருக்கணும்..” என்றான் குற்ற உணர்வுடன்.
“ஹோ..! இந்த சாரிக்கு எந்த வேல்யூவும் இல்லை. இத்தனை நாள்ல ஒரு நாள் கூடவா என்கிட்டே பேசனும்னு தோணலை உங்களுக்கு” என்றாள். அவள் குரலில் அப்படி ஒரு விரக்தி.
“நான் பேசணும்னு நிறைய முறை ட்ரை பண்ணேன் வேதா. பட் என்னால முடியலை. அப்ப இருந்த சிச்சுவேஷன்ல என்னோட பேரண்ட்ஸ மீறி என்னால எதுவும் செய்ய முடியலை. அதான் அவங்களோட போக வேண்டியதா போய்டுச்சு. உனக்கு இப்போ ஹெல்த் வைஸ் எல்லாம் ஓகே தானே” என்றான் அக்கறையாய்.