“என்னாச்சு வேதா? ஏன் காலையிலேயே இவ்வளவு கோபம்?” என்றான் சரண். அப்போது தான் நிஜம் உரைத்தது அவளுக்கு.
“சாரிண்ணா..! ஏதோ ஒரு கோபத்துல என்னை மீறி கத்திட்டேன்..” என்றவள் தலையைப் பிடித்துக் கொண்டு,
“சாரி அகரா” என்றாள்.
“என்னாச்சு வேதாக்கா? தலை வலிக்குதா?” என்றான் அகரன் எதுவும் நடவாததைப் போல். அவள் பட்டென்று பேசியது கஷ்ட்டமாக இருந்தாலும், அது அவள் இயல்பு அல்ல என்று அவனுக்குத் தெரியுமே.
“அதெல்லாம் ஒன்னுமில்லைடா..” என்றாள். அப்போதுதான் அவள் கழுத்தில் இருந்த தாலியை கவனித்தான் சரண்.
“ஹேய் வேதா..! நான் தாலியை கழட்டி வச்சுட்டு தான காலேஜ்க்கு வர சொன்னேன். நீ இதை கழட்டவே இல்லையா?” என்றான் அதிர்ச்சியாய்.
“யாராவது தாலியை கழட்டி வைப்பாங்களா?” என்றாள்.
“எந்த காலத்துல இருக்க வேதா. எல்லாம் மனசுல இருந்தா போதும். தாலி போட வேண்டாம்னு சொல்லலை. ஆனா, காலேஜ்க்கு வேண்டாம்.” என்றான்.
“என்னால கழட்டி வைக்க முடியாதுண்ணா. காலேஜ்ல தெரிஞ்சா தெரியட்டும். நான் மேரிட்னு தைரியமா சொல்லுவேன்..” என்றவள்,
“நீங்களே சொல்லுங்க ரகு அண்ணா..!” என்றாள் விஜய ரகு நந்தனைப் பார்த்து.
ஏற்கனவே அவளை நோக்கி செல்லும் பார்வையை தடுக்க முடியாது திண்டாடிக் கொண்டிருந்தவனை, அவளின்கழுத்தில் தொங்கிய தாலி செருப்பால் அடித்ததைப் போன்று உண்மையை உரைத்துக் கொண்டிருக்க, அதோடு சேர்த்து ‘ரகு அண்ணா’ என்ற அவளின் வார்த்தைகள் அவன் நிலையை மொத்தமாக முடித்து விட்டிருந்தது.கை நரம்புகள் புடைத்து, அவன் பார்வை நிலைகுத்தியிருக்க,
“என்னாச்சு ரகு அண்ணா..” என்றாள்.
தனக்கு என்னானது என்று அவனுக்கே தெரியாத போது அவளின் கேள்விக்கு எங்கிருந்து பதில் சொல்லுவான். ஆனால் அவளின் அண்ணா என்ற வார்த்தையை மட்டும் அவனால் சகிக்க முடியவில்லை. கொஞ்சம் கூட யோசிக்காமல்,
“டோன்ட் கால் மீ அண்ணா. கால் மீ விஜய்” என்று அழுத்தமான குரலில் கூறியவனை சரண் ஆச்சர்யமாகப் பார்த்தான். அவனாக விஜய் என்று அழைக்கும் படி சொல்லிக் கொண்டிருக்கிறான். அதுவும் ஒரு பெண்ணிடம். அதனால் வந்த ஆச்சர்யம் தான் அவனுக்கு.
“ஏன்? அகரன் அப்படித்தான கூப்பிடுறான்..” என்றாள்.
“வேதா..! உனக்கும் அகரனுக்கும் என் அண்ணன் மாமா முறை வேணும். நீங்க ரெண்டு பேரும் முறையையே மாத்துறிங்க?” என்றாள் கீர்த்தனா.
“நான் அம்மாவை ஹாஸ்பிட்டலுக்கு அழைச்சுட்டு போறேன் சரண். மேல் போர்ஷன் சாவியை கொடுத்துட்டு போகலாம்னு வந்தேன்..” என்று சொல்லி, சாவியை சரண் கைகளில் திணித்தவன், முகத்தை கடுமையாக வைத்துக் கொண்டு வெளியேறிவிட்டான்.
‘இப்ப எதுக்கு இப்படி முகத்தை வச்சிருக்கான்’ என்ற சரணுக்கு ஒன்றும் புரியவில்லை.
அண்ணா, சாப்பிட்டு போய் அந்த வீட்டை கிளீன் பண்ணனும் என்ற வேதாவை அவன் சிரிப்புடன் பார்க்க,
“இப்ப எதுக்கு சிரிக்கிறிங்க..?” என்றாள்.
“அதென்ன? பாழடஞ்ச பங்களாவா? கிளீன் பண்ண? அவனைப் பத்தி தெரியாதுல உனக்கு. சார்க்கு கொஞ்சம் தூசி இருந்தா கூட ஆகாது. எல்லாமே ரொம்ப சுத்தமா இருக்கணும். ஆள் கூட விடாம அவனே கிளீன் பண்ணாதான் அவனுக்கு திருப்தி ஆகும். இப்ப போனா கூட இலை போட்டு சாப்பிடுற மாதிரி க்ளீனா வச்சிருப்பான் வீட்டை ..” என்றான் பெருமையாய்.
வேதாவின் பார்வை நக்கலாய் சரணின் வீட்டை சுற்றி படர, அதை உணர்ந்த கீர்த்தனா,
“அண்ணனை மாதிரியே தங்கச்சி இருக்கணும்னு எந்த அவசியமும் இல்லை வேதா..” என்றாள்.
“சான்சே இல்ல அண்ணி. எப்படி இப்படி டக்குன்னு புரிஞ்சுக்கிறிங்க?” என்றாள்.
உங்க கூட இருந்துகிட்டு இது கூட தெரியலைன்னா எப்படி? என்றாள் கீர்த்தனா.
மார்னிங் டிபன் முடித்த கையோடு, கிளம்பி விஜய்யின் வீட்டிற்கு சென்றனர். வேதா இப்போது தான் முதன் முறையாக அங்கு செல்கிறாள். சரண் வீட்டில் இருந்து பார்த்திருந்தாலும், உள்ளே சென்றதில்லை.
தூரத்தில் இருந்து பார்த்ததை விட அழகாய் இருந்தது வீடு. வீட்டின் முன்புறம் கேட்டில் ஆரம்பித்து, வழி நெடுகிலும் பல வண்ண பூச்செடிகளும், அழகுக்கு வளர்க்கப்படும் குரோட்டன் செடிகளும், பல வண்ணங்களில் பூத்திருந்த ரோஜாக்களும், மனம் வீசிய மல்லிகை செடிகளும், ஏதோ பூந்தோட்டத்திற்குள் நுழைந்த அனுபவத்தைக் கொடுத்தது அவளுக்கு. பல வகையான பழ மரங்கள் கூட இருந்தது.
“அண்ணி சான்சே இல்லை..! இந்த சிங்கார சென்னையில இப்படி ஒரு வீடா..? ரொம்ப ரசிச்சு கட்டியிருக்கீங்க. அதுலயும் இந்த செடி, இந்த கார்டன் செட்டப் எல்லாம் பார்த்தா ‘வாவ்’ பீலிங் தான். ரொம்ப ரசனையான ஆட்களால தான் இப்படி மெயின்டெய்ன் பண்ண முடியும்..” என்றாள் ரசனையாக. அவளுடைய பிடித்தம் அவள் முக மலர்ச்சியிலேயே தெரிந்தது.
ஒரு கிட்சன், ஹால், ஒரு மாஸ்டர் பெட்ரூம் அதை ஒட்டி பால்கனி, ஒரு நார்மல் பெட்ரூம், முன் வராண்டா கூடாரம் போன்று அமைத்து, அதில் தொங்கிக் கொண்டிருந்த ஊஞ்சல், அதைச் சுற்றி படர்ந்திருந்த கொடிகள் என்று வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தாள். ஹாலில் மறுபுறம் இருந்த ஒரு கதவில் உட்புறமாக பூட்டு தொங்கிக் கொண்டிருந்தது.
“இதென்ன டோர் அண்ணி? பூட்டியிருக்கு?” என்றாள்.
“அது உள்ள கூடி அமைச்ச படியோ டோர்.. டு இன் ஒன் பர்ப்பஸ். தேவை ஏற்பட்டா ரெண்டு வீட்டையும் ஒருத்தரே யூஸ் பண்ற மாதிரி” என்றாள்.
“ஹோ..நைஸ்” என்றவள்,
“அண்ணா..! கண்டிப்பா வாடகை அதிகமா தான் இருக்கும். எங்க ரெண்டு பேருக்கு எதுக்கு இவ்வளவு பெரிய வீடு” என்றாள் தவிப்பாய்.
“அது சரியா வராதுண்ணா..! வேற வீடு கூட பார்க்கலாம்” என்றாள்.
“இப்ப என்ன பிரச்சனை வேதா. ஒன்னு நம்ம வீட்ல இரு. இல்லைன்னா இங்க இரு. வாடகையைப் பத்தி எல்லாம் கவலைப் பட வேண்டாம். அதெல்லாம் அப்பா பார்த்துப்பார்” என்றவன்,
“நீ நம்ம வீட்ல இருக்க மாட்டேன்னு சொல்றதுக்கு வேற ஏதாவது காரணம் இருக்கா வேதா?” என்றான் சரண், வெகு நாட்களாய் மனதில்உறுத்திக் கொண்டிருந்த கேள்வி.
“அண்ணா..!” என்று தயங்கினாள்.
“உண்மையை சொல்லுவன்னு எதிர்பார்க்குறேன்.” என்றான்.
“அதில்லை அண்ணா..! மனோ அண்ணா இனி அடிக்கடி என்னைப் பார்க்க வரேன்னு வருவார். அவர் கூட சந்தியா அண்ணி வர்றதுக்கும் வாய்ப்பிருக்கு. நான் அங்க இருந்தா அங்க தான் வருவாங்க. அவங்க ஏதாவது வார்த்தையை விட்டு, கீர்த்தனா அண்ணி சங்கடப் படுற மாதிர் ஆகிடக் கூடாதுல்ல அதான். ஏற்கனவே அவங்க பேச்சு கீர்த்தனா அண்ணிக்கு பிடிக்காது” என்றாள் தயங்கியபடி.
“நீ இவ்வளவு யோசிச்சியா வேதா? நானும் மனோ அண்ணாவும் அப்படி பிரச்சனை நடக்க விட்ருவோமா என்ன?” என்றான் புரியாமல்.
“பிரச்சனை வர்றதுக்கு முன்னாடி அதைத் தவிர்க்கிறது நல்லது தானண்ணா. அது மட்டுமில்லாம, நாளை பின்ன, சிவாப்பாவும், நீலாம்மாவும் உங்க வீட்டுக்கு வரும் போது நான் இருந்தா அவ்வளவு நல்லா இருக்காது. அதுவும் ஒரு காரணம்.” என்றாள்.
‘இவ்வளவு யோசிக்கிறாளா..?’ என்று நினைத்த சரணுக்கு, பழைய வேத வர்ஷினி ஞாபகத்திற்கு வந்தாள். சரணுடன் உரிமைப் போராட்டம் நடத்திய வேதா, கனி மொழியுடன் மல்லுக்கு நின்ற வேதா, நாத்தனார் முடிச்சை நான் தான் போடுவேன் என்று சண்டை பிடித்த வேதா… மனோகரனை எதற்கும் எதிர்பார்க்காத வேதா என்று பல வேதாக்கள் அவன் கண் முன் வந்து சென்றார்கள். இன்று இருப்பது முற்றிலும் புதிய வேதா என்றே அவனுக்குத் தோன்றியது.
“உனக்கு என் மேல கோபம் எதுவும் இருக்கா வேதா?” என்றான் சரண்.
“என்னண்ணா திடீர்ன்னு?” என்றாள் புரியாமல்.
“எனக்கும் இப்பல்லாம் உன்னை புரியவே மாட்டேங்குது ..” என்று கலங்கிய குரலில் கூறியவனின் கைகளை இறுகப் பற்றிக் கொண்ட கீர்த்தனா, அவனைப் பார்த்து கண்களை அமர்த்த, சட்டென்று சகஜ நிலைக்கு மாறினான்.
“வீடு பிடிச்சிருக்கா வேதா” என்றாள் கீர்த்தனா.
“கண்ணு இல்லாதவங்க கூட பிடிக்கலைன்னு சொல்ல மாட்டாங்க அண்ணி. நானும் அகரனும் இன்னைக்கே இங்க ஷிப்ட் ஆகுறோம். நீங்களும், அண்ணனும் இந்த வீக் எண்டை என்ஜாய் பண்ணுங்க.” என்று கீர்த்தனாவைப் பார்த்து கண் அடித்தாள் வேதா.
“ஹேய் வாலு..” என்ற கீர்த்தனா வெட்கப் பட,
“இனி இந்த கரடிங்க தொல்லை எல்லாம் உங்களுக்கு இல்லை அண்ணி..” என்றாள் சிரிப்புடன்.
அவர்கள் இறங்கி வருவதற்கும் விஜய்யின் கார் உள்ளே நுழைவதற்கும் சரியாக இருந்தது.
காரை விட்டு இறங்கியவன், வீல் சேரை எடுத்து, அதில் அவன் அன்னை அமுதாவை காரில் இருந்து தூக்கி அதில் அமர வைத்தான். பாதி நரைத்த முடியும், வெளிறிய முகமுமாய் அமைதியாய் இருந்தார் அமுதா.
அவரைப் பார்த்தவுடன் ஓடிய கீர்த்தனா,
“எப்படியிருக்கிங்க பெரியம்மா?” என்றாள் அவரைக் கட்டிக் கொண்டு. அவரால் பேச முடியாது என்பதால் ஆதூரமாய் சிரித்தவர், நடுங்கிய கையால் அவள் தலை தொட்டார்.அவர் கைகளை பிடித்துக் கொண்டவள்,
“டாக்டர் என்ன சொன்னாங்க அண்ணா?” என்றாள்.
“எப்பவும் சொல்றது தான்டா” என்றான் விஜய்.
அவனின் அம்மா முடியாமல் இருக்கிறார் என்று வேதாவிற்கு தெரியும். ஆனால் இப்படி ஒரு நிலையில் இருப்பார் என்று தெரியாது. ஏனோ அவளுக்கு அவள் அன்னையின் நினைவு வர, கண் கலங்கியவள்..
“வணக்கம் ஆன்ட்டி” என்றாள் வரவழைத்துக் கொண்ட புன்னகையுடன். அங்கிருந்த புதியவளைப் பார்த்து அவர் முகம் யோசனையைக் காட்ட,
“ம்மா..! நான் சொல்லியிருக்கேனே..! என் தங்கச்சி வேத வர்ஷினி. அந்த வாலு இவதான்மா..” என்றான் சரண் சிரிப்புடன். அவனை பார்த்து பாசமாய் சிரித்தவர், மீண்டும் வேதாவைப் பார்க்க, அந்த பார்வையின் பொருள் தான் அவளுக்குப் புரியவில்லை.
“வீடு ஓகே வா..” என்றான் விஜய் மொட்டையாய்.
“யார்கிட்ட கேட்குறார்..?” என்று வேதா திரும்பிப் பார்க்க,
“உங்ககிட்ட தான் கேட்டேன்” என்றான்.
“ங்கான்..! ஓகே தான்..” என்றாள் திக்கித் திணறி.
“என்ன அண்ணா இப்படி கேட்டுட்டிங்க? இன்னேரம் வரைக்கும் வீட்டை அப்படி ரசிச்சுட்டு இருந்தாங்க அம்மணி. அதுலயும் உங்க ரசனையை புகழ்ந்து தள்ளிட்டு இருந்தா” என்று அகரன் சொல்ல,
“அகரா..” என்று பல்லைக் கடித்துக் கொண்டு முறைத்தாள் வேதா.
உதட்டோரம் பூத்த புன்னகையை மறைத்தவன்,
“பிடிச்சிருந்தா சரித்தான்” என்றான். அவள் அதிர்ந்து அவனைப் பார்க்க, அவனும் அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.