அத்யாயம் 5:

காலேஜ் கேன்டீனில் அமர்ந்திருந்த வேதா அகரனைக் கடுப்புடன் முறைத்துக் கொண்டிருக்க,

“இப்ப எதுக்கு வேதா வந்ததுல இருந்து முறைச்சுட்டே இருக்க?” என்றான். அவனுக்கு காரணம் தெரியாமல் தலையே வெடித்து விடும் போல் இருந்தது.

“ஏன்னு உனக்குத் தெரியாதாடா எருமை..” என்று அவள் மீண்டும் பல்லைக் கடிக்க,

“சொன்னாத்தான தெரியும்” என்றான்.

“அடேய்..! சரண் அண்ணா பிரண்டு அந்த ரகு இங்க தான் வொர்க் பண்றாரா? அதுவும் எங்க டிப்பார்ட்மென்ட் ஹெச்ஓடி வேற.. இதைப் பத்தி நீயும் சொல்லலை. சரண் அண்ணாவும் சொல்லலை..”என்றாள் ஆதங்கமாய்.

“இப்ப என்ன பிரச்சனை உனக்கு? அவர் இங்க வேலை பார்க்குறதா? இல்லை உங்க டிப்பார்ட்மென்ட்ல இருக்குறதா?” என்றான்.

“எனக்கென்ன பிரச்சனை இருக்க போகுது..? இருந்தாலும் தெரிஞ்ச ஒருத்தர் நமக்கு கிளாஸ் எடுக்கும் போது ஒரு மாதிரி இருக்குடா. கொஞ்சம் பயமா கூட இருக்கு” என்றாள்.

“உனக்கு பயம்னா உலகம் அழிஞ்சுடும். உன்கிட்ட சொல்லக் கூடாதுன்னு இல்லை. நீ அவரைப் பத்தி இது வரைக்கும் ஏதாவது கேட்டிருக்கியா? நீ கேட்டு நாங்க சொல்லாம இருந்திருந்தா தான் தப்பு..” என்றான் அகரன்.

“இருந்தாலும் கீர்த்தனா அண்ணி கூட ஒரு வார்த்தை சொல்லல..” என்றாள் பழைய பல்லவியுடன்.

“அம்மா தாயே..! கொஞ்சம் நிறுத்துறியா? இப்ப சொல்றேன் கேட்டுக்க, ரகு அண்ணா இங்க தான் வொர்க் பண்றார்.  அவர் தான் சிஎஸ் டிப்பார்ட்மென்ட் ஹெட்.  மோஸ்ட் எளிஜிபில்,வெரி ஷார்ப், அன்ட் ஹைலி இன்டெலிஜென்ட் மேன்.. இது தான் இதுவரைக்கும் அவரைப் பத்தி எனக்குத் தெரிஞ்சது. இது போதுமா இல்ல இன்னும் வேற ஏதாவது தெரியனுமா?” என்றான்.

“கோவிச்சுக்காத அகரா. அவரை திடீர்ன்னு கிளாஸ்ல பார்க்கவும் ஒரு மாதிரி நெர்வஸ் ஆகிடுச்சு. பர்ஸ்ட் ஹவரே பயங்கர திட்டோட தான் ஆரம்பிச்சது இன்னைக்கு” என்றாள் சோகமாய்.

“அதான் விஷயமா? என்னடா நம்ம அக்கா  கேள்வியா கேட்குறாளேன்னு நினைச்சேன். அவர் உனக்கு கிளாஸ் எடுக்க வந்தது பிரச்சனை இல்லை. உன்னைத் திட்டினது தான் பிரச்சனை..” என்று சிரித்தான்.

“சிரிக்காதடா..!”  என்று அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே 

“வேதா அப்படியே அங்க பாரு” என்றான். அவள் திரும்பிப் பார்க்க, சரணும்,விஜய்யும் வந்து கொண்டிருந்தனர்.

“இவங்க எதுக்குடா இங்க வர்றாங்க?” என்றாள்.

“கேண்டீனுக்கு எதுக்கு வருவாங்க?” என்றவன், அப்படியே அந்த கேர்ள்ஸ் பக்கம் பாரேன்” என்றான் சின்ன சிரிப்புடன். அவள் அவர்கள் பக்கம் பார்க்க, அவர்களின் பார்வை விஜய் மீதே இருந்தது.

“இங்கேயுமா?” என்று சலித்தாள்.

“இங்கேயுமான்னா..? வேற எங்க பார்த்த?” என்றான்.

“எங்க கிளாஸ் கேர்ள்ஸ் கூட இவரை சைட் அடிக்கிறாங்கடா..” என்றாள்.

“ரகு அண்ணாக்கு ரசிகைகள் பட்டாளம் ஏராளம் தான் போல.மனுஷன் செம்மையா வாழ்றார் இல்ல. என்ன இருந்தாலும், எல்லா பொண்ணுங்களும் நம்மை சைட் அடிக்கிறாங்கன்னு தெரிஞ்சும், தெரியாத மாதிரி இருந்துகிட்டு, அதை மனசுக்குள்ள பீல் பண்றதெல்லாம் வேற லெவல் என்ஜாய்மென்ட். ம்ம்.. நமக்கு அந்த கொடுப்பினை இல்லை” என்றான் ஏக்கப் பெருமூச்சுடன்.

“வாடா நல்லவனே! உனக்கு இந்த கவலை வேற இருக்கா? நான் வேணும்னா பாலப்பா கிட்ட சொல்லி உன்னோட குறைய தீர்த்து வைக்கச் சொல்லவா..?” என்றாள்.

“எதுக்கு? அந்த மனுஷன் என்னை ஊரு கடத்தவா..? நல்ல வருவடி நீ..” என்று பேசிக் கொண்டிருக்கும் போதே,

“இங்க என்ன பண்றிங்க ரெண்டு பேரும்..?” என்றபடி வந்தான் சரண்.

“நீ என்ன லூசா?” என்பதைப் போல் அகரன் பார்த்து வைக்க,

“ஆமால்ல..! கேண்டீனுக்கு எதுக்கு வருவாங்க..” என்ற சரண் 

“வேதாம்மா..! ஏதும் சாப்பிடுறியாடா..” என்றான் அக்கறையாய்.

அவனை முறைத்த வேதா…

“ஒன்னும் வேண்டாம் சார்..!” என்று அந்த ‘சாரில்’ ஒரு அழுத்தம் கொடுத்தவள், அவனை முறைத்துக் கொண்டே சென்று விட்டாள்.

‘என்னாச்சு இவளுக்கு’ என்பதைப் போல் சரண் பார்த்து வைக்க, அருகில் இருந்த விஜய்க்கு காரணம் தெளிவாய் தெரிந்தது.

“உன் தங்கச்சி என்னை இந்த காலேஜ்ல, அதுவும் அவங்க கிளாஸ்ல எதிர்பார்த்திருக்க மாட்டாங்க. அதான் இந்த அழுத்தம்னு நினைக்கிறேன்..” என்றான் விஜய்.

“எப்படிண்ணா கரெக்ட்டா கண்டுபிடிச்சிங்க?” என்று அகரன் கேட்க,

“கேம்பஸ்க்கு உள்ள நான் எப்பவும் சார் தான்..கால் மீ சார் அகரன்” என்றான் விஜய ரகு நந்தன்.

“ஓகே அண்ணா..” வந்த வார்த்தையை விழுங்கியவன்,”ஓகே சார்..” என்றபடி அங்கிருந்து கிளம்பிவிட்டான்.

“நீ தேர்ட் இயர் கிளாஸ்கு இன்னைக்கு போனியா ரகு” என்றான் சரண்.

“ம்ம்..! பர்ஸ்ட்  பீரியட்  தேர்ட் இயர் தான்..” என்றான்.

“வேதா..கிளாஸ்ல நார்மலா தான இருக்கா?” என்றான் யோசனையுடன்.

“நார்மலா இருக்க மாதிரி தான் இருந்தது. உன் தங்கச்சியை கவனிக்கிறது தான் என் வேலையா..?” என்றான் எரிச்சலுடன்.

“வெளிய ரொம்ப நார்மலா இருக்கா ரகு. அவ ரூம்குள்ள போற வரைக்கும். அதான் ஒரு டவுட்டுக்கு கேட்டேன்” என்றான்.

“மறுபடியும் முதல்ல இருந்தா.. ஆளை விடுடா சாமி. நான் காபி குடிக்க போறேன். உனக்கு வேணுமா? வேண்டாமா?” என்று பேச்சை மாற்றி விட்டான் விஜய ரகு நந்தன்.

வேத வர்ஷினி அந்த கல்லூரியில் சேர்ந்து ஒரு வாரம் ஆகியிருந்தது. சென்னை வாழ்க்கைக்கு ஓரளவு பழகிவிட்டாள். கல்லூரி வாழ்க்கையும் அதான் போக்கில் போய் கொண்டிருந்தது. விஜய ரகு நந்தன் அவள் வகுப்பிற்கு சென்றாலும், எப்போதும் போல், தெரியாதவனைப் போலவே நடந்து கொண்டான். அவளும் அவனைத் தெரிந்த மாதிரி காட்டிக் கொள்வதில்லை. காட்டிக் கொள்ளும் அளவிற்கு அவன் பழக்கமும் இல்லை. 

ஆனால், முதல் நாளைப் போல் அல்லாமல் வெகு ஜாக்கிரதையாய் இருந்தாள், அவனிடம் திட்டு வாங்கக் கூடாது என்பதில். அவன் வகுப்பில் இருந்தால், மறந்தும் கூட வாயைத் திறக்க மாட்டாள். அது அவனுக்கும் தெரிந்தே இருந்தது. ஒரு வார காலமும், விட்டுப் போன பாடங்களையும், அதான் குறிப்புகளை எழுதுவதிலும் தான் அவள் நேரம் முழுவதும் சென்றது.அவள் இயல்பிலேயே படிக்க கூடிய மாணவி என்பதால், பாடங்கள் அவ்வளவு கடினமாக இருக்கவில்லை. அப்படி இருந்த ஒன்றிரண்டு சந்தேகங்களையும், சரணிடம் கேட்டுத் தெரிந்து கொண்டாள். 

அன்று கல்லூரி விடுமுறை…

சீக்கிரம் எழுந்து, வேகமாய் கிளம்பி செல்ல வேண்டிய அவசியமின்றி நிதானமாக எழுந்தாள் வேத வர்ஷினி. அருகில் டேபிளில் இருந்த தாய் தந்தையரின் படத்தை எடுத்தவள்,

“குட் மார்னிங் ப்பா..குட் மார்னிங் ம்மா..!” என்று அவர்களின் முகத்தை வருட, சொல்ல முடியாத ஏக்கம் அவளை சூழ்ந்து கொண்டது.

“வேதாம்மா.. சீக்கிரம் எழுந்திரு..! இன்னைக்கு சனிக்கிழமை.. தலைக்கு எண்ணெய் வச்சு குளிக்கணும்.” என்று எப்போதும் கேட்கும் காதம்பரியின் குரல் இப்போதும் அவள் செவிகளில் ஒலிப்பதைப் போல் இருக்க, கலங்கிய கண்களை தடுத்துவிட்டு, எழுந்துவிட்டாள். காலைக் கடன்களை முடித்தவள், சென்னை வெயிலில் வறண்டிருந்த தலை முடிக்கு, நிதானமாக எண்ணெய் வைத்து,  சில நிமிடங்கள் மசாஜ் செய்து, தூக்கி கொண்டையிட்டாள்.

கண்ணாடியில் தெரிந்த  தன் பிம்பத்தை பார்த்துக் கொண்டிருந்தவளின் பார்வை தன் கழுத்திற்கு செல்ல, அதில் தொங்கிக் கொண்டிருந்த தாலியைப் பார்த்தவளுக்கு, சட்டென்று மனமும் உடலும் ஓய்ந்து போனது. மெல்லிய செயினில் அணிந்திருந்த தாலியை வெறித்துக் கொண்டிருந்தாள். அதற்கு எந்த மதிப்பும் இருப்பதைப் போல் அவளுக்குத் தெரியவில்லை. இருந்தாலும், தன் அம்மாவின் ஆசை என்பதால் மட்டுமே அதை அணிந்திருக்கிறாள். தாலியைப் பார்த்தவுடன், அதைக் கட்டியவனின் நினைவும் வர, தன்னைத் தானே வெறுத்தாள் வேதா. சில நொடிகளை அப்படியே கடந்தவள், தன் போனில்  நந்தகுமாரின் எண்களைத் எடுத்து, அவனுக்கு அழைப்பெடுக்க போன கரங்களை கட்டுப் படுத்தினாள்.

‘என்ன செய்ற வேதா? வேண்டாம். உன்னோட நினைப்பு இல்லாதவங்களுக்கு, நீ முக்கியத்துவம் கொடுக்கத் தேவையில்லை. இனி இப்படி ஒரு முட்டாள் தனத்தைப் பண்ணாத..’ என்று தனக்குத் தானே சொல்லிக் கொள்ள,

“அங்க அவங்க சூழ்நிலை என்னன்னு தெரியாம கோபப்படாத வேதா.வேணும்னு யாராவது செய்வாங்களா?’ என்று மற்றொரு மனம் சொல்லியது. செல்போனை வெறித்துப் பார்த்தவள் ஒரு முடிவுக்கு வந்தவளாக,

“ஹாய்” என்று ஒரு மெசேஜைத் தட்டிவிட்டாள். அனுப்பிய பிறகும் கூட அவளால் இயல்பாக இருக்க முடியவில்லை. அதை அழித்துவிடலாமா என்று கூட எண்ணினாள். ஆனால், பதில் வருகிறதா இல்லையா என்று பார்க்க ஒரு மனம் அவளை உந்தித் தள்ள, அதை அழிக்கவில்லை அவள். 

குளித்து முடித்து வந்தவள் வேகமாக போனை  எடுத்துப் பார்க்க, அவள் அனுப்பிய ஹாய் படிக்காமல் அப்படியே ஹாயாக இருந்தது. மெல்லிய ஏமாற்றம் மனதிற்குள். 

‘என்ன எதிர்பார்க்கிறேன் நான்? என்ன வேணும் எனக்கு?’ என்று கலங்கிக் கொண்டிருந்தவளை அழைத்தது சரணின் குரல்.

“வேதா..!”

“வரேண்ணா” என்றவள், எண்ணங்களை மறந்து வெளியே சென்றாள்.

குளித்து முடித்து நைட்டியில் இருந்தவள், தலையில் கட்டிய துண்டுடன், வெளியே வர, ஹாலில் நடுநாயகமாக அமர்ந்திருந்தான் விஜய ரகு நந்தன். அவனை அந்த நேரத்தில் அங்கு எதிர்பார்க்காதவள்,சட்டென்று சங்கோஜ உணர்வு வர, மீண்டும் உள்ளே செல்ல முற்பட்டாள்.

“என்ன வேதா இவ்வளவு நேரம்? டிபன் சாப்பிடுற எண்ணம் இல்லையா?” என்றான் சரண்.

“தலைக்கு எண்ணெய் வச்சு குளிக்க லேட் ஆகிடுச்சுண்ணா” என்றாள் அமைதியான குரலில்.

ஊரில் சனிக் கிழமைகளில் காதம்பரியுடன் சேர்ந்து அவள் செய்யும் அலப்பறைகள் ஞாபகத்திற்கு வந்தது சரணுக்கும், அகரனுக்கும்.

“தலையைத் துவட்டலையாக்கா..” என்ற அகரன் , அவள் தலையில் இருந்த துண்டை எடுக்க முற்பட,

“விடுடா..! நானே துவட்டிக்கிறேன்..” என்றாள் .

“எப்பவும் காதும்மா தான துவட்டி,சாம்பிராணி புகை  காட்டுவாங்க. இன்னைக்கு நான் பண்றேன்” என்றான் அகரன்.

ஏற்கனவே  அன்னையின் நினைவு தந்த அலைகழிப்பும், உடையவனுக்கு ‘ஹாய்’ அனுப்பி அதற்கு பதில் வராத எரிச்சலிலும் இருந்தவள்,

“ஒன்னும் வேண்டாம் அகரா..! ஏன் என்னையப் போட்டு படுத்துறிங்க. எல்லாரும் காதும்மா ஆக முடியாது. என்னை எனக்கே பார்த்துக்க தெரியும். என்னைய பேம்ப்பர் பன்றேன்ற பேருல சாகடிக்காதிங்க..” என்று தன்னை மீறி கத்தி விட்டாள்.