“எதுக்கு கீர்த்தனா இந்த விஷப் பரீட்சை எல்லாம். நான் வேணும்னா வெளிய ஆர்டர் போடட்டுமா?” என்று ரகு கேட்க,

“போதும் நீங்க ஓட்டுனது. ஆனா, நானும்  நல்லா சமைச்சு, ஒரு நாள் இல்ல ஒரு நாள்..” என்று பேசிக் கொண்டிருக்கும் போதே,

“இந்த சபதம் எல்லாம் வேண்டாம் அண்ணி . அதுக்குள்ள எல்லார் உசுரும் ஊசல் ஆடிடும்.. அதுவும் எங்களைப் போட்டுத் தள்ள நீங்க தனியா விஷம் எல்லாம் வைக்கத் தேவையில்லை. கொஞ்சம் ரசம் வச்சாலே போதும். அதனால வேண்டாம் அந்த விஷப்பரீட்சை..” என்றான் அகரனும் இணைந்து கொண்டு.

“பாருங்க மாமா..! இவங்க ரெண்டு பேரையும்” என்று பெரிய மாமனாரிடம் பஞ்சாயத்து வைக்க,

“என் மருமக சமைச்சுப் போடுறதே பெரிய விஷயம். இதுல உங்களுக்கு கிண்டலா.. பேசாம இருங்கடா..” என்றவர்,

“ போய் எல்லாரும் சாப்பிடுங்க..!” என்றார்.

“நீங்களும் வாங்க அங்கிள்..!” என்றவனின் பார்வை அவர் மடியில் தலை வைத்து உறங்கிக் கொண்டிருந்த வேதாவைப் பார்த்து வைக்க, அவளோ சிறுபிள்ளையாய், நிர்மலமான முகத்துடன் உறக்கத்தில் ஆழ்ந்திருந்தாள்.

“அதெல்லாம் அவர் அப்பவே சாப்பிட்டாச்சு அண்ணா..! வேதாவுக்கு அவர் ஊட்ட, வேதா அவருக்கு ஊட்ட.. ஒரு அபியும் நானும் படமே ஒட்டி முடிச்சுட்டாங்க. நாளைக்கு அப்பா ஊருக்கு கிளம்புறதால,மேடம் இன்னைக்கு அவரை நகர விடலை..” என்றான் அகரன்.

ரகுவின் பார்வை கேள்வியாய் சரணைப் பார்க்க,

“அது இங்க வந்ததுல இருந்து அவ சரியா தூங்கவே இல்லை ரகு.   ஸ்லீப்பிங் பில்ஸ பால்ல கலந்து கொடுத்தாலாவது கொஞ்சம் தூங்குவான்னு சொல்லி  கீர்த்தனா கொடுத்தா. அதான் இப்படி ஒரு தூக்கம்.

சரண் சொல்லிக் கொண்டிருந்தாலும் ரகுவின் பார்வை என்னவோ வேதாவின் மீது தான் இருந்தது. 

“வா மச்சான் சாப்பிடலாம்” என்று சரண் அவனை இழுத்துக் கொண்டு போனான்.

சரணும், அகரனும் அமைதியாய் சாப்பிட, ரகுவிற்கு தான் யோசனையாய் இருந்தது.

“ரொம்ப யோசிக்காம சாப்பிடு மச்சான்..” என்றான் சரண்.

“முதல் வாய் உணவை அவன் எடுத்து வைக்க, பதட்டத்தில் இருந்த முகம் கொஞ்சம் வியப்பிற்கு மாறியது. மீண்டும் ஒரு வாய் எடுத்து வைத்தவனுக்கு ஆச்சர்யம்.

“என்ன அதிசயம்? என்னால நம்பவே முடியலை கீர்த்து குட்டி. உன்னோட சபதத்துல நீ சீக்கிரமே ஜெயச்சு இந்த அண்ணன் மானத்தைக் காப்பாத்திடுவ போலயே. இன்னைக்கு வித்யாசமா நல்லா டேஸ்டியா சமைச்சிருக்கியே..” என்றான் ரசனையுடன்.

“டக்குன்னு தப்புக் கணக்கு போடாதிங்க ரகு அண்ணா. இன்னைக்கு சமைச்சது உங்க உடன்பிறப்பு இல்லை. எங்க உடன்பிறப்பு. எங்க உடல்நலனை கருத்தில் கொண்டு வேதா தான் இன்னைக்கு சமைச்சா..” என்றான் அகரன் சிரித்துக் கொண்டே.

வியப்பில் ரகுவின் புருவம் உயர, மீண்டும் பார்வை வேதாவை நோக்கியது.

‘என்ன இது..? இந்த பொண்ணைப் பார்க்க கூடாதுன்னு நினைச்சாலும், இந்த கண்ணு பார்த்து வைக்குதே. தப்பாச்சே’ என்று நினைத்தவன், வேகமாய் சாப்பிட்டு முடித்துவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டான். கிளம்பி வெளியே வந்தவனுக்குள் ஒரு ஆசுவாச பெருமூச்சு.

மறுநாள் விடியல் எப்போதும் போல் விடிய… தூக்க மாத்திரையின் உபயத்தில் நன்றாக தூங்கி எழுந்து, தெளிந்திருந்தாள் வேத வர்ஷினி.

“அப்பா ஊருக்கு கிளம்புறேன்டா..! நீ பார்த்து பத்திரமா இருந்துக்குவ தானே?” என்றார் மீண்டும் மீண்டும் மகளிடம்.

“நான் ஓகே தான்ப்பா. நீங்க என்னைப் பத்தி கவலைப் படாம உங்க உடம்பைப் பார்த்துக்கோங்க..!” என்றாள் தெளிவான குரலில்.

“வேதா கிளம்பலாமா?” என்றபடி வந்து நின்றான் அகரன்.

“நான் ரெடி தான்” என்றாள் வேதா.

“காலேஜ்க்கு டைம் ஆச்சு ராம் அப்பா. நாங்க கிளம்புறோம். நீங்க பார்த்து ஊருக்குப் போயிட்டு வாங்க. வெளிய டிரைவர் ரெடியா இருக்கார்.அம்மாவையும், அப்பாவையும் கேட்டேன்னு சொல்லுங்க” என்றான் பெரிய மனித தோரணையுடன்.

“நீ கூட வளர்ந்துட்ட அகரா. சின்ன பையனாட்டம் இருந்த. இப்போ எவ்வளவு பொறுப்பா பேசுற?” என்றார் ராமச்சந்திரன். அவரின் வார்த்தைகளுக்கு அவனின் புன்னகையே பதில். 

“ரெண்டு பேரும் என்கூட வாங்க..! நானே காலேஜ்ல ட்ராப் பண்றேன்..” என்று சரண் சொல்ல,

“ஆணியே புடுங்க வேண்டாம். நீங்க அண்ணியை ஆபீஸ்ல டிராப் பண்ணிட்டு வாங்க. நாங்க அண்ணி ஸ்கூட்டில காலேஜ் போறோம்..” என்ற சரண், ஸ்கூட்டி சாவியை வேதாவிடம் நீட்ட,

“தம்பிடா..!” என்று அணைத்துக் கொண்டாள்.

கல்லூரியில்…

ஸ்கூட்டியை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு இருவரும் உள்ளே நுழைய, சீனியர் மாணவர்கள் பலர், ‘யாருடா இந்த  பிகர்’ என்ற ரீதியில் பார்த்துக் கொண்டு சென்றனர்.

“வேதா..! எல்லாரும் உன்னையத் தான் பார்க்குறாங்க..” என்றான் அகரன்.

“உனக்கு மனப் பிராந்தி தம்பி. பார்க்காத முகமா இருக்கேன்னு பார்த்திருப்பாங்க..! அதெல்லாம் கண்டுக்கக் கூடாது” என்றாள்.

“உன்னைய யாரும் ரேகிங் பண்ணலையா?” என்றான் ஆச்சர்யமாய்.

“இது வரைக்கும் இல்ல.. இனிமேலும் பண்ண மாட்டாங்கன்னு நினைக்கிறேன். நான் ஒன்னும் பர்ஸ்ட் இயர் ஸ்டூடன்ட் இல்லையே ரேகிங் பண்ண..” என்றவள்,

“சரி அகரா..! நான் என்னோட கிளாஸ்க்கு போறேன்..!” என்றபடி நகர்ந்துவிட்டாள்.

வகுப்பறைக்குள் நுழைய இருந்தவள்,

“வெல்கம் வேதாஆஆஆஅ” என்று கத்திய கத்தலில் திடுக்கிட்டு நின்றாள்.

“என்னாச்சு பயந்துட்டியா?” என்றவர்கள்,

“எப்படி எங்க வரவேற்பு?” என்றனர். அவர்களை முறைத்தவள்,

“நாட் பேட்” என்றாள் சிரிப்புடன்.

“ஹாய் வேதா..! நீ தான் அந்த நியூ அட்மிஷன் பார்ட்டியா..! நான் ரம்யா” என்று அவள் அறிமுகமாக..

“ஹாய் ரம்யா..!” என்றாள்.

“சிட்..! இனி என் பக்கத்துல தான் உட்காரனும். நான் தான் உனக்கு பிரண்ட்..” என்றாள் கட்டளையாக.

“இதென்னா ரெண்டு நிமிஷ நூடுல்ஸ் மாதிரி, டக்குன்னு பிரண்ட்” என்றாள் வேதா சிரித்துக் கொண்டு.

“ஏன் சிரிக்க மாட்ட..! பாவம் புது பிள்ளை கொஞ்சம் பயந்து போய் இருப்ப.. நாம உதவிக் கரம் நீட்டுவோம்னு பார்த்தா.. கொஞ்சம் கூட பயம் இல்லையே உனக்கு..” என்றாள் ரம்யா .

“உதவிக் கரம் தான.. அதெல்லாம் ஏற்கனவே நிறைய கரம் நீட்டியாச்சு. நீ தான் லேட்” என்றான் ஆனந்த்.

“டேய் சோடா புட்டி. நான் லீவ்ல இருந்ததை சாக்கா வச்சு எல்லாரும் ஒன்னாகிட்டிங்களா?” என்றாள்.

“நாங்களும் என்ன தான் பன்றது? இருக்குற கேர்ள்ஸ்ல பார்க்குற மாதிரி யாராவது இருந்தா நாங்க ஏன் புது முகத்துக்கு எல்லாம் உதவிக் கரம் நீட்ட போறோம்?சரி, நம்ம டிப்பார்ட்மென்ட் தான் இப்படி பார்த்தா.. முக்கால்வாசி டிப்பார்மென்ட் கேர்ள்ஸ் எல்லாம் அப்படித்தான் இருக்காங்க. நல்லா இருக்குற ஒன்னு ரெண்டும் கமிட்டாகி சுத்துதுங்க. எங்களுக்கு வேற வழி தெரியலை ஆத்தா..” என்றான் ஒரு மாணவன்.

“டேய்..! ஏன்? என்னையப் பார்த்தா பொண்ணா தெரியலையா?” என்றாள் ரம்யா பல்லைக் கடித்துக் கொண்டு.

“தெரியலையே..! அதான பஞ்சாயத்து. இப்போதைக்கு வேதா தான் நம்ம கிளாஸ் பியூட்டி..” என்றனர் கோரசாய். அவர்களைப் பார்த்து சிரித்த ரம்யா,

“நீ எதுவும் தப்பா எடுத்துக்காத வேதா..! நம்ம பசங்க ரொம்ப ஜாலி டைப். பேச்சு தான் கொஞ்சம் ஓவரா பேசுவானுங்க. பட் ஏதாவது பிரச்சனைன்னா அவங்கதான் முன்னாடி நிப்பாங்க. ரொம்ப கேரிங்கான பசங்க..” என்றாள் ரம்யா.

“அது வந்த அன்னைக்கே எனக்கு தெரிஞ்சது ரம்யா.!” என்ற வேதாவை அப்பொழுது தான் நிதானமாகப் பார்த்தாள் ரம்யா.

ஆகாய வண்ணத்தில் சுடிதார் அணிந்து, பட்டியாலா பேண்ட்டும், பின் செய்யப்பட்ட ஷாலும், பின்னலிடப்பட்ட நீண்ட கூந்தலும், நெற்றியில் சிறிய பொட்டும், ஒரு கையில் வாட்சும், மற்றொரு கையில் மெல்லிசான தங்க பிரேஸ்லெட்டும் அணிந்து, பார்க்கத் தெவிட்டாத அழகுடன் இருந்தாள்.

“பசங்க சொன்ன மாதிரி நிஜமாவே நீ அழகா இருக்க வேதா” என்றாள் ரம்யா, எந்த விகல்பமும் இல்லாமல்.

“தேங்க்ஸ் ரம்யா..” என்றாள் சின்ன சிரிப்புடன். லயாவும் ஹரிணியும் இவர்களைக் கடுப்புடன் பார்த்துக் கொண்டிருக்க, சட்டென்று அமைதியானது வகுப்பறை.

“என்ன இவ்வளவு சைலன்ட்?” என்றெண்ணிய வேதா நிமிர்ந்து பார்க்க, உள்ளே வந்து கொண்டிருந்தான் விஜய ரகு நந்தன்.

‘இவர், சரண் அண்ணா பிரண்ட் மாதிரி இருக்காரே..’ என்று எண்ணியவள், ‘மாதிரி என்ன அவரே தான்..’ என்று மனம் உறுதியளிக்க,

‘இவரும் இங்க தான் வொர்க் பண்றாரா..? சரண் அண்ணா சொல்லவே இல்ல..’ என்று நினைத்துக் கொண்டிருந்தாள்.

“ஹேய் வேதா..! இப்ப எதுக்கு விஜய் சாரையே பார்த்துட்டு இருக்க..” என்று ரம்யா கையை கிள்ளவும் தான், அவ்வளவு நேரம் அவனையே பார்த்தது புரிந்தது அவளுக்கு. சட்டென்று பார்வையை மாற்றினாள்.

“இவர் தான் விஜய் சார். டிஸ்க்ரீட் மேத்மெட்டிக்ஸ் பேப்பர் எடுக்குறார். நம்ம டிப்பார்ட்மென்ட் ஹெச்ஓடி..” என்றாள் ரம்யா.

“ஹெச்ஓடியா?” என்று வேதா வாயப் பிளக்க, அமைதியான வகுப்பறையில், அவர்களின் பேச்சுக் குரல் மட்டும் கேட்க,

“லிசன் ரம்யா..! அங்க என்ன பேச்சு” என்றவனின் குரலில் இருவரும் அவனைப் பார்த்தனர்.

“சாரி சார்..! வேதா நியூ அட்மிஷன். அதான் உங்களைப் பத்தி சொல்லிட்டு இருந்தேன்..” என்றாள் ரம்யா.

“என்னைப் பத்தி சொல்ல என்ன இருக்கு?” என்றான் கடுமையாய்.

“நீங்க என்ன பேப்பர் எடுக்குறிங்கன்னு சொல்லிட்டு இருந்தேன் சார்..” என்றாள் பவ்யமாய்.

“கிளாஸ் டைம்ல பேசணும்ன்னா வெளிய போய் பேசிட்டு வாங்க..” என்றவன், பின் என்ன நினைத்தானோ,

“ஓகே சிட்..!” என்றவன்,

“நீங்க நியூ அட்மிஷனா?” என்றான் வேதாவைப் பார்த்து.

“ஆ..ஆமா சார்..” என்றாள்.

“ஓகே..! நோட்ஸ் எல்லாம் பக்கத்துல வாங்கி காப்பி பண்ணிக்கோங்க. அன்ட் கிளாஸ் டைம்ல அன் நெசசரியா பேசுறது எனக்குப் பிடிக்காது. சிட்” என்றான்.

வேதாவிற்கு அதிர்ச்சியாக இருந்தது. வெளியே காட்டிக் கொள்ளாமல் இருக்க பெரும்பாடு பட்டுப் போனாள். அவனோ அப்படி ஒருத்தியை யாரென்றே தெரியாது என்பதைப் போல் நடந்து கொண்டான்.

“என் ஆளு.. இன்னைக்கு ரொம்ப ஹேண்ட்சமா இருக்கார்ல” என்றாள் லயா, ஹரிணியிடம்.

“அவர் எப்பவுமே ஹேண்ட்சம் தான..?” என்றாள் ஹரிணி.

“ஆனா, இன்னைக்கு கொஞ்சம் கூடுதலா இருக்காரே..! என்னா அழகு? என்னா ஸ்டைலு..?” என்று சொல்ல,

“பேசாம இருடி..! தயவு தாட்சண்யமே இல்லாம வெளிய அனுப்பிடுவார்..” என்றாள் ஹரிணி.

இவர்கள் பேசியது லேசாக வேதாவின் காதில் விழ,

“அடியாத்தி? இவங்க என்ன சாரையே சைட் அடிக்கிறாங்க..” என்று அதிர்ந்தவள்,ரம்யாவைப் பார்க்க,

‘இது எப்போதும் நடப்பது தான்’ என்பதை போல் அவள் தீவிரமாக கிளாசை கவனித்துக் கொண்டிருந்தாள். அப்படியே நிமிர்ந்து விஜயைப் பார்க்க, அவனோ அவளை வெகுவாய் முறைத்துக் கொண்டிருந்தான்.

“ஆத்தி..! மறுபடியும் நான் தான் மாட்டுனேனா?” என்ற ரீதியில் பார்த்துக் கொண்டிருந்தாள் வேத வர்ஷினி.