“ம்ம்..! என்னவோ தெரியலை. அப்ப இருந்து அவளோட முகம் என் மனசுக்குள்ள பதிஞ்சு போய்டுச்சு. ஏற்கனவே மேரேஜ் பிக்ஸ் ஆன பொண்ணு. சின்ன பொண்ணு வேற. இதெல்லாம் சரிப்பட்டு வராதுன்னு எவ்வளவு சமாதானம் எனக்கு நானே சொல்லிகிட்டாலும், மனசு என்னவோ அவளை நினைக்கிறதை நிறுத்தவே இல்லை.
ஒருவழியா இதெல்லாம் ஒரு ஈர்ப்புன்னு என்னை நானே தேத்திகிட்டு வந்தா, மேரேஜ்க்கு முதல் நாள் மண்டபத்துக்கு கிளம்பி மறுபடியும் அதே பொண்ணு பட்டுபுடவையில் தேவதை மாதிரி கண்ணு முன்னாடி நிக்கிறா. அந்த நிமிஷம் எனக்குள்ள அப்படி ஒரு பீல். அந்த யாழினி கிட்ட கூட அப்படி உணர்வை நான் உணர்ந்ததில்லை.
விடிஞ்சா இன்னொருத்தருக்கு மனைவியாகுற பொண்ணை இப்படி பார்க்குறது தப்புன்னு என்னை நானே சமாதனப் படுத்திப் பார்த்தேன். முடியவே இல்லை. ஏதோ எல்லாமே என்னை விட்டு போற மாதிரி ஒரு பீல். எனக்குன்னு யாருமில்லாத பீல். அதான் அன்னைக்கு கீர்த்தனாவை என் கூட வரசொல்லி கூப்பிட்டேன்.
அவனையே இமைக்காமல் பார்த்திருந்தவள்,
“நல்லவேளை அண்ணியை அன்னைக்கு உங்க கூட கூட்டிட்டு வந்திங்க. இல்லைன்னா, எங்களோட சேர்த்து அவங்களுக்கும் ஏதாவது ஆகியிருக்கும்” என்றவளுக்கு கண் கலங்க,
“உன்னை ரத்த வெள்ளத்துல பார்த்தப்பதாண்டி உணர்ந்தேன், அதுக்கு பேர் ஈர்ப்பு இல்லை, காதல்னு. எப்படி ஒரு சூழ்நிலையில என் காதலை உணர்ந்திருக்கேன் பாரு. வேடிக்கையா இல்ல” என்றான்.
“போதும் எதுவும் சொல்ல வேணாம்” என்றவளின் கண்ணீரைக் கண்டவன்,
“எப்ப பார்த்தாலும் அழுகையா?” என்றான்.
“இது சந்தோஷத்துல தானா வருது. நான் என்ன பண்ண?” என்றாள்.
“வேதாமா நீ சந்தோஷமா இருக்கியா?” என்றான் ஒரு விதமான மோன மனநிலையில.
“எனக்கு ஒரு ஹக், ஒரு கிஸ் எல்லாம் பத்தாதுன்னு சொல்ல வந்தேன். உயிரும் உணர்வுமா எனக்கு எப்பவுமே நீங்க வேணும். உங்க காதல் வேணும்” என்றாள் அவனுள் புதைந்தபடி.
மதுரையின் அந்த மிகப்பெரிய திருமண மண்டபமே கலை கட்டியிருந்தது. அன்று கிரிதரனுக்கு திருமணம். மாப்பிள்ளையாய் அமர்ந்திருந்தவனைப் பார்த்து பெருமூச்சு விட்டான் அகரன்.
“நான் தான் சொன்னேன்ல. அந்தா இருக்கார் விஜய் அண்ணா” என்று அகரன் சொல்ல திரும்பினாள் வேதா. பட்டு வேஷ்டி சட்டையில் தனி மிடுக்குடன், தன் ஒரு வயது மகள் மேக வர்ஷினியை பாந்தமாய் மடியில் அமர்த்தியபடி இருந்தவனை கண்ணெடுக்காமல் பார்க்க,
“பப்ளிக்..பப்ளிக்” என்றான் அகரன் சிரிப்புடன்.
“போடா” என்றவள் கணவனை நோக்கி சென்றாள்.
அதற்குள் விஜயின் அருகில் வந்து நின்றிருந்தனர் இருவர். ஒருவன் சித்தார்த் சரண், இன்னொருவன் துருவ் மனோகரன். அவர்கள் இருவரையும் ஒரு கையால் அணைத்துக் கொண்டான் விஜய்.
“மாமா.. பாப்பா ஏன்க்கு..” என்று துருவ் மழலை குரலில் கேட்க, சித்தார்த்தோ அவனை முறைத்தபடி நின்றான். இதற்கும் துருவ் ஏழு மாதம் மூத்தவன்.ஆனால் சித்தார்த் தான் பெரியவன் தோரணையில் அவனை முறைத்தான்.
வேதா வரவும் இருவரும் அவளைப் பற்றிக் கொண்டனர்.
“அத்த..பாப்பா” என இருவரும் கேட்க,
“என் செல்ல குட்டிங்க ரெண்டு பேருக்கும் பாப்பா வேணுமா?” என்றாள்.
“ஆமா” என்று ஒன்றாய் தலையை ஆட்டினர்.
“நீங்க ரெண்டு பேரும் குட்டி பையன்ஸ். பாப்பா உங்களை விட குட்டி பொண்ணு. உங்களால தூக்க முடியாது. நீங்க பெரிய பையனா வளர்ந்தப்பறம் தூக்கலாம் சரியா?” என்றாள்.