அத்யாயம் 32:

அன்று காலை எழுந்ததில் இருந்தே வெட்கத்துடனும் யோசனையுடனும் சுற்றிக் கொண்டிருந்தவளை கண்டும் காணாமல் ரசித்திருந்தான் விஜய். ஹாலில் குறுக்கும் நெடுக்கும் நடந்தபடி நகத்தைக் கடித்துக் கொண்டிருந்தவள் ஓரக்கண்ணால் அவனைப் பார்த்தாள்.

குளித்து முடித்து ட்ராக் பேண்ட்,உள் பனியன் மட்டும் அணிந்திருந்தவன், தீவிரமாக சமைத்துக் கொண்டிருந்தான். அவனைப் பார்ப்பதும், நடப்பதுமாக இருந்தவளை கண்டவனுக்குள் புன்னகை தோன்ற, “என்னதான் செய்கிறாள்?” என்று பார்த்துக் கொண்டிருந்தான்.

மெல்ல அவனருகில் வந்தவள் தலையை குனிந்து கொண்டு பாவமாய் நிற்க,

“என்னடி பிரச்சனை? எதுக்கு இப்ப குட்டி போட்ட பூனை மாதிரி நடந்துட்டு இருக்க?” என்றான் சிரிப்புடன்.

“நீங்க ஏன் சமைக்கிறிங்க? நான் செய்வேன்ல” என்றாள்.

“யாரு நீ? நானும் எந்திருச்சப்ப இருந்து பார்க்குறேன், நகம் கடிக்கிற வேலையை மட்டும் தான் சிறப்பா செய்ற” என்றான் கிண்டலாய்.

“கிண்டல் பண்றிங்களா?” என்றாள் முறைப்பாய்.

“மேடம்க்கு தெரிஞ்சிடுச்சா?” என்றான் சிரித்துக் கொண்டு.

அவனை இடையோடு பின்னிருந்து அணைத்து அவன் முதுகில் ஒய்யாரமாய் சாய்ந்து கொண்டு கன்னத்தை தேய்க்க,

“காலையிலேயே மனுஷனை சோதிக்கிறடி. இன்னைக்கு காலேஜ் போன மாதிரி தான்” என்றான்.

“அதைத்தான் நானும் சொல்ல வந்தேன்” என்றாள் மெதுவாய்.

“என்னன்னு?”

“இன்னைக்கு காலேஜ் போகனுமா?” என்றாள் பாவமாய்.

“வாவ்..! அப்போ லீவ் சொல்லிடுவோமா?” என்றான் ஆசையாய்.

“உங்களை” என்று பல்லைக் கடித்தவள்,

“எனக்கு ஷையா இருக்கு” என்றாள்.

“எதுக்கு காலேஜ் போறதுக்கா?” என்றான்.

“ம்ம்”

“என்ன திடீர்ன்னு?” என்றான் புரியாமல்.

“அது.. அன்னைக்கு நீங்கதான் என் ஹஸ்பண்ட்னு கிளாஸ்ல எல்லார் முன்னாடியும் சொல்லிட்டு வந்துட்டேன்” என்று அவள் நிறுத்த, அவளை தன் முன்னால் இழுத்து நிறுத்தினான்.

“சரி, அதுக்கும் நீ ஷையா பீல் பண்றதுக்கும் என்ன சம்பந்தம்?” என்றான், நமட்டு சிரிப்புடன்.

“சிரிக்காதிங்க பிளீஸ்” என்றாள்.

“இதென்னடி வம்பா இருக்கு? எப்படி இருந்தாலும் காலேஜ் போய்த்தான் ஆகணும். இதையெல்லாம் பேஸ் பண்ணித்தான் ஆகணும்” என்றான்.

“பிரண்ட்ஸ் எல்லாம் கிண்டல் பண்ணுவாங்க. ஓட்டியே தள்ளிடுவாங்க. அதுலயும் வீட்டுக்கு வந்து ரம்யாக்கு கால் பண்றேன்னு சொல்லிட்டு வந்தேன். அதுவும் பண்ணலை” என்றாள் பாவமாய்.

“ஏன் கால் பண்ணலை?” என்றான் வேண்டுமென்றே.

“நீங்க எங்க விட்டிங்க” என்றவளுக்கு வெட்கம் வந்து குடியேற, அவன் நெஞ்சில் புதைந்து கொண்டாள்.

“வேதாமா நிஜமாவே காலேஜ் போகனுமா?” என்றான் கரகரப்பான குரலில்.

“இப்போ உங்களுக்கு என்னாச்சு?” என்றாள்.

“எனக்கு வேத மார்க்கத்தை படிக்கனும் போல இருக்கு” என்றான்.

“ஏன் ரெண்டு நாளா படிச்சதெல்லாம் பத்தலையா?” என்றாள் சிரிப்புடன்.

“நான் எங்கடி உருப்படியா படிச்சேன். ஜஸ்ட் குறிப்பு தான் எடுத்திருக்கேன். இன்னும் டீட்டெயிலா படிக்கலை” என்றவனின் குரலில் அவளுக்குத் தான் ‘அய்யோ’ என்றிருந்தது.

“அப்படி என்ன கிண்ட்ஸ் எடுத்திங்க?” என்றவள் வாயை வைத்துக் கொண்டு அமைதியாய் இருந்திருக்கலாம்.

“கிண்ட்ஸ் தான” என்றவன் அவள் காதருகில் அதற்கு விளக்கம் சொல்ல, ‘இப்படியெல்லாம் பேசுவானா?’  என்று நினைத்தவளுக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது.

அவனின் கைப்பிடியில் இருந்து நழுவப் பார்க்க,

“எங்கடி போற?”

“இதுக்கு காலேஜே போய்டுவேன். நீங்க பேசுறதை கேட்குறதுக்கு என் பிரண்ட்ஸ் ஓட்டுறதே மேல். ஆளைவிடுங்க சாமி” என்று ஓடப் பார்த்தவளை இழுத்து, நிறுத்தி, நிதானமாய் இதழில் குறிப்பெடுத்த பிறகு தான் விடுவித்தான்.

வேதா அகரனுடன் வருவதாய் கூற, அவளைத் தன்னுடனேயே அழைத்து சென்றான் விஜய்.

“இன்னைக்கு ஒரு நாள் நான் அகரன் கூட போயிருப்பேன். பாருங்க அதுக்கும் ஓட்ட போறாங்க” என்றாள்.

“வேதா, நீ இவ்ளோ ஷையா பீல் பண்ண வேண்டியதே இல்லை. ஜஸ்ட் மூவ் ஆன். உன்னோட பிரண்ட்ஸ் தான” என்றவன்,

“என்ன பாவம் அந்த தருண் பையன்” என்று சிரித்தான்.

“இப்படி அடிக்கடி சிரிக்காதிங்க” என்றாள் முறைப்புடன்.

“ஏன்டி இந்த கொலைவெறி உனக்கு?”

“இப்படி சிரிச்சு வச்சா, உங்களைப் பார்க்கத் தோணும், அப்பறம் சைட் அடிக்கத் தோணும். கிளாஸ்ல கான்சன்ட்ரெட் பண்ண முடியாது” என்றாள் உள்ளே போன குரலில்.

“நான் வேணுனா ஸ்பெஷல் கிளாஸ் எடுக்கவா?” என்றான் மந்தகாசமாய்.

“ஆத்தாடி ஆத்தா… நீங்க எப்படி ஸ்பெஷல் கிளாஸ் எடுப்பிங்கன்னு தெரியும். நீங்க எப்பவும் ஸ்ட்ரிக்ட் ஆபீசராவே இருங்க. அதுதான் எல்லாருக்கும் நல்லது” என்றாள்.

அவளின் கல்லூரி வருகைக்காகவே காத்திருந்தது அவளின் நண்பர்கள் பட்டாளம்.

அவள் இறங்கி வெளியே வந்தது தான் தாமதம், ரம்யாவும் ஆனந்தும் பிடித்துக் கொண்டனர்.

“அப்பறம் மச்சான் எப்படி இருக்க?” என்றான் ஆனந்த்.

“பார்த்தா தெரியலையா மச்சான், மேடம் மப்பும் மந்தாரமுமா கொப்பும் குலையுமா இருக்குறாங்க? இல்லையா மச்சி” என்றாள் ரம்யா.

“ரம்யா..! பிளீஸ்” என்றாள் வேதா பாவமாய்.

“யாரோ வீட்டுக்கு போய்ட்டு கால் பண்றேன்னு சொன்னாங்க. அவங்களை பார்த்த நீ” என்றாள் ரம்யா.

“கொஞ்சம் பிசியா இருந்துட்டேன்டி. அதான் மறந்துட்டேன்” என்றாள்.

“நீ எந்த அளவுக்கு பிசியா இருந்தன்னு தான் நாங்க பார்த்தோமே மச்சான்” என்றான் ஆனந்த்.

“என்ன சொல்றான் இவன்?” என்ற ரீதியில் பார்த்து வைக்க,

“அதுவா..! நீ பார்த்த முதல் நாளே பாட்டு ஒன்னு தான் படிக்கலை. மத்தபடி பைக்ல விஜய் சார் முதுகுல தொத்திட்டு போன அந்த கண்கொள்ளா காட்சியை பார்த்த அதிர்ச்சியில இருந்தே இன்னும் நான் வெளிய வரலை” என்றான் ஆனந்த்.

“நீ எப்போடா பார்த்த?” என்றாள் வேதா அதிர்ச்சியுடன்.

“ஏன்? சென்னையின் சாலைகள்  வேதாவின் தனியுடைமையா? வேற யாரும் போக மாட்டாங்களா?” என்றான் கிண்டலாய்.

“சரி சரி கோவிச்சுக்காதிங்க மச்சான்” என்றாள் சிரிப்புடன்.

“அடிப்பாவி, தினமும் ரெண்டு பேரும் ஒரே கலர்ல டிரஸ் பண்ணிட்டு வரீங்கன்னு நான் சொன்னப்ப என்னமா கோபப்பட்டு சீன் போட்ட. அதெல்லாம் நடிப்பா கோபால்” என்றாள் ரம்யா.

“அதெல்லாம் நடிப்பில்லை கோபால். அக்மார்க் உண்மை” என்றாள் வேதா.

“அது சரி. அண்ணனை சைட் அடிக்கக் கூடாதுன்னு நீ அழுத்தி அழுத்தி சொல்லும் போதே நான் சுதாரிச்சிருக்கனும். நம்ம டோலி நம்மளை ஏமாத்த மாட்டான்னு நினைச்சேன். நெஞ்சுல குத்திட்ட மச்சி” என்றாள் ரம்யா.

“ஓவரா பேசாம வாடி கிளாஸ்க்கு போகலாம். இன்னைக்கு பர்ஸ்ட் ஹவரே வாத்து மூக்கன் வாத்தி கிளாஸ் தான்” என்றாள் சிரிப்புடன்.

“இந்த வாத்து மூக்கன் வாத்தின்ற பேர்ல தான்டி நான் ஸ்லிப் ஆகிட்டேன். இல்லைன்னா டீப்பா அனலைஸ் பண்ணியிருப்பேன்” என்றாள் ரம்யா பல்லைக் கடித்துக் கொண்டு.

“என்ன இருந்தாலும் நான் உன் டோலி”

“அது நேத்து வரைக்கும்” என்றாள் ரம்யா.

“அப்போ இன்னைக்கு இருந்து “ என்றாள்.

“வேற வழி, என் தலையெழுத்து உன்னை அண்ணியா அக்சப்ட் பண்ணிக்கிறேன்” என்றாள் போனால் போகுதென்று.

“அப்போ விஜய் சார் உனக்கு அண்ணன் தான?” என்றாள் வேதா சிரிப்புடன்.

“அப்படித்தான இனி நினைச்சு ஆகணும். ஆனா, அந்த வலி இருக்கே வலி” என்று வராத கண்ணீரை துடைக்க,

“பிரேக்ல கேண்டீன் போவோம். வலி எல்லாம் வழி தெரியாம போய்டும் மச்சி” என்றாள்.

“மரியாதையா இன்னைக்கு பிரியாணி வாங்கிக் குடு” என்றாள்.

“உனக்கில்லாததா?”

“எனக்கு மட்டன் பிரியாணி” என்றான் ஆனந்த்.

“ஒரு பிரியாணில சமாதானம் ஆவிங்கன்னு தெரியாம போச்சு மச்சான்” என்று சிரித்தபடி வகுப்பிற்குள் நுழைய, அப்போதும் அவளை முறைத்து தான் பார்த்தாள் லயா.

மற்ற மாணவர்கள் வேதா என்று கத்தும் போதே உள்ளே வந்தான் விஜய்.

பிளாக் பேண்ட் வொயிட் ஷேர்ட்டில் மற்ற நாளை விட அன்று கூடுதல் பொலிவுடன் கம்பீரமாய் வந்து நின்றவனைப் பார்த்தவர்கள் அப்படியே அமைதியாக, எப்போதும் போல் அவனைப் பார்த்தவுடன் மயங்கித்தான் போனாள் லயா. விஜயை பார்த்தவள் திரும்பி வேதாவைப் பார்க்க, வேதாவோ அவளைத்தான் முறைத்துக் கொண்டிருந்தாள்.

“போடி..! அப்படித்தான் பார்ப்பேன்” என்பதைப் போல் இருந்தது லயாவின் பார்வை.

“ஏன்டி இப்ப இப்படி அவளை வெறுப்பேத்திட்டு இருக்க?” என்றாள் ஹரிணி.

“எப்படியும் விஜய் சார் இல்லைன்னு ஆய்டுச்சு. அதுக்காக சைட் அடிக்கக் கூடாதுன்னு சொல்றதுல ஞாயம் இல்லை. கொஞ்ச நாள் அவளை வெறுப்பேத்துவோம்” என்றாள் லயா.

“அடிப்பாவி” என்பதைப் போல் பார்த்திருந்தாள் ஹரிணி.

“சார் ஒரு பைவ் மினிட்ஸ் பர்மிஷன் கிடைக்குமா?” என்றான் தருண்.

“எஸ்” என்றான் விஜய்.

“எனக்கு பேசணும் சார்” என்றான்.

“பேசு”

“வாத்தியார் எல்லாம் மாணவர்கள் வாழ்க்கையில ஒளியேத்தி வைப்பாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன்” என்றான் பாவமாய்.

“அதுக்கு” என்றான் விஜய் புரியாமல்.

“ஆனா, நீங்க ஏற்கனவே எனக்குள்ள எறிஞ்சுகிட்டு இருந்த ஒளியை அனைச்சுட்டிங்க சார்..அனைச்சுட்டிங்க” என்றான்.

“என்னடா பிரச்னை உனக்கு?” என்றான் விஜய் சிரிப்புடன்.