“உன் வண்டவாளம் எல்லாம் தெரிஞ்சு தான் வந்திருக்கேன். இன்பேக்ட் அவனைப் பார்த்துட்டு தான் வந்திருக்கேன். இப்போ கூட அவன் உன்னை விட்டு போகலை. நீதான் அவனை விட்டுட்டு வந்திருக்க. என்ன ஜென்மம்டி நீயெல்லாம்? உனக்கு வேதாவை பேச என்ன தகுதி இருக்குன்னு பேசிட்டு இருக்க? இவ வேணும்னா கருணை காட்டலாம். என்கிட்டே அதையெல்லாம் எதிர்ப்பார்க்காதிங்க. நீங்களா கிளம்பிட்டா உங்களுக்கு நல்லது. என்னோட குணமும் தெரியும். என்னோட கோபமும் உங்களுக்கு தெரியும்னு நினைக்கிறேன்” என்றான்.
“இதுக்குமேல இங்க இருந்தா இவங்களை விட ஒரு கேவலமான பிறவி இருக்கவே முடியாதுண்ணா” என்றாள் கீர்த்தனா.
போட்ட திட்டமும் நடக்காமல், எண்ணி வந்த வேலையும் முடியாமல் வேறு வழியின்றி அங்கிருந்து கிளம்பினர் யாழினியும் அவளின் அம்மாவும்.
“ஒரு நிமிஷம்” என்றவன்,
“இப்போ கூட நான் நினைச்சா உங்க மேல கம்பளைன்ட் பண்ணலாம். திருமண பரிசா எழுதி வாங்குன சொத்து, அப்பறம் என் அம்மாகிட்ட ஏமாத்தி வாங்குன நகைங்கன்னு அதுவே ஒரு பெரிய அமௌன்ட்ல வந்து நிக்கும். போனா போகுதேன்னு விடுறேன். இனிமே சொந்தம் கொண்டாடிகிட்டு இந்த வீட்டு பக்கம் யாரையாவது பார்த்தேன், இப்படியெல்லாம் பேசிட்டு இருக்க மாட்டேன் ஜாக்கிரதை” என்றான் கோபமாய்.
அவர்கள் சென்ற பின், அந்த வீடே புயலடித்து ஓய்ந்ததைப் போல் இருந்தது.
அழுதழுது முகம் வீங்கியிருந்தவளை சோபாவில் அமர்த்தினான்.
“இந்த தண்ணியை குடி” என்று பாட்டிலை நீட்ட, வாங்கி அருந்தியவள் அவனை நிமிர்ந்தும் பார்த்தால் இல்லை.
“வேதா ரிலாக்ஸ்” என்ற கீர்த்தனா,
“அண்ணா எனக்கு டயர்டா இருக்கு. நான் வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுக்குறேன்” என்றாள்.
“இங்கயே ரெஸ்ட் எடுக்க வேண்டியது தான கீர்த்தனா” என்றான்.
“இல்லண்ணா..! அவங்க இருக்காங்கன்னு தான் இருந்தேன்” என்றவள் கிளம்ப,
“இரு நான் வந்து விட்டுட்டு வர்றேன்” என்றான்.
“அண்ணா, இதெல்லாம் ஓவரா தெரியலை. இந்தா இருக்கு பக்கத்து வீடு” என்று அவனை முறைத்தவள் கிளம்பிவிட்டாள்.
வேதாவின் அருகில் அமர்ந்தவன்,
“நீ ஏன் காலேஜ்ல இருந்து கிளம்பி வந்த?” என்றான் கண்டிக்கும் குரலில்.
“நீங்க ஏன் வந்திங்க? அதான் நானும் வந்தேன்” என்றாள் தலையை நிமிராமல்.
“நான் வந்தா நீ வந்துடுவியா?” என்றான்.
“உங்க முகமே சரியில்லை. அதான் எதுவும் பிரச்சனையோன்னு நினைச்சு வந்தேன்” என்றாள் வெளி வராத குரலில்.
“நான் இன்னும் கொஞ்சம் லேட்டா வந்திருந்தாலும், உன் ஒப்பாரியை ஸ்டார்ட் பண்ணியிருப்ப தான?” என்றான் கிண்டலாய்.
அவள் முறைக்க,
“என்னடி முறைப்பு? அவ பேசுறான்னா உனக்கு பதில் பேச தெரியாதா? அப்படியே நிக்கிற?” என்றான்.
“நான் பேசத்தான் செஞ்சேன்” என்றாள் முனுமுனுப்பாய்.
“கேட்கலை”
“நான் பேசத்தான் செஞ்சேன்” என்றாள் சத்தமாய்.
“யாரு நீ?” என்றவன் அவளைத் தூக்கி தன் மடியில் அமர வைத்து இடையோடு அணைத்துக் கொண்டான். அவள் காதில் முத்தமிட்டவன்,
“வேதா”
“ம்ம்”
“எனக்கு அமைதி வேணும்?”
“அதுக்கு?”
“அதுக்கு நீ வேணும்” என்றான் கரகரப்பான குரலில்.
அவள் படபடப்புடன் அவனைப் பார்க்க,
“ரிலாக்ஸ்” என்றவன்,
“நிம்மதியா தூங்கியே நிறைய நாள் ஆன மாதிரி இருக்கு. கொஞ்ச நேரம் தூங்குவோமா?” என்றான்.
“ம்ம்” என்று அவள் சொன்னது தான் மாயம், அவளையும் தூக்கிக் கொண்டு சென்றவன், அவளை அணைத்தபடியே அடுத்த நிமிடம் உறங்கிப் போனான். முதன் முறையாக ஆணவனின் அருகாமையில் அவளுக்குத்தான் தூக்கம் தூரப் போயிருந்தது. அவன் அணைப்பும் அருகாமையும், கைகளின் இறுக்கமும் அவளை தூங்கவிடமால் அவஸ்தைக்கு உள்ளாக்க, அவனையே பார்த்திருந்தாள்.
அவனின் மூச்சுக் காற்றை சுவாசித்து, அவன் கழுத்து வளைவில் முகம் புதைத்திருந்தவள், தன்னையும் அறியாமல் ஒரு கட்டத்தில் உறங்கிப் போயிருந்தாள்.
விஜய்க்கு முழிப்பு வரும் போது நேரம் மாலை ஆறுமணியை நெருங்கியிருந்தது. தன் அணைப்பில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளை பார்த்தவனுக்குள் நேசம் பொங்கியது. அழுததில் சிவந்திருந்த முகம் கூட கூடுதல் அழகாய் தெரிந்தது அவனுக்கு.
‘என்னமோ பன்றடி நீ என்னை’ என்றவன், அவள் முகம் முழுவதும் முத்தமிட்டு தீர்க்க, மொத்தமும் வேண்டும் என்று தோன்றிய உணர்வை அடக்க வழி தெரியாது, அவளை தலையணைக்கு இடம் மாற்றியவன், எழுந்து விட்டான்.
“ப்பு..!” என்று மூச்சுக் காற்றை ஊதியவன்,
“ராட்சசி என்னை கொல்லாம விட மாட்டா போல” என்று எண்ணி சிரித்துக் கொண்டான்.
குளித்து பிரஷாகி வந்தவன் அவளை எழுப்பினான். தூக்கக் கலக்கத்தில் எழுந்து மலங்க மலங்க விழித்தவளை அள்ளி அணைக்கத் தோன்றியது அவனுக்கு.
“என்னாச்சு? ஏன் எழுப்புனிங்க?” என்றாள்.
“டைம் ஈவ்னிங் சிக்ஸ் ஆகிடுச்சு” என்றான் விஜய்.
“ஆகிட்டு போகுது. எனக்குத் தூக்கம் வருது” என்றவள் மீண்டும் தூங்கப் போக,
“அடியேய், இவ்ளோ நேரம் தூங்குனது பத்தாதா?” என்றான்.
“நான் கொஞ்ச நேரம் தான் தூங்கியிருப்பேன். நீங்கதான் நல்லா தூங்குனிங்க” என்றாள்.
“ஏன் நீ தூங்காம என்ன பண்ண?” என்றான்.
“தூக்கம் எங்க வந்துச்சு? உங்களைத்தான் பார்த்துட்டு படுத்திருந்தேன்” என்று தூக்கக் கலக்கத்தில் உளறி வைக்க,வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டான்.
“என்னைய பார்க்குறதுக்கும் தூங்குறதுக்கும் என்ன சம்மந்தம்?” என்றான்.
“யோவ், லூசாயா நீ? அப்பறம் அப்படி கட்டிபிடிச்சுட்டு படுத்தா எப்படி தூக்கம் வரும். நான் என்ன உங்களை மாதிரி சாமியாரா” என்றாள் கொட்டாவி விட்டபடி.
“ஏதே சாமியாரா?” என்றான் அதிர்ச்சியுடன்.
“இல்லையா பின்ன? சரி யோசிச்சு வைங்க. நான் தூங்குறேன்” என்றாள்.
“சரி தூங்கு. இன்னைக்கு ஒரு பைக் ரைட் போகலாம்னு நினைச்சேன்” என்று ஓரக்கண்ணால் அவளைப் பார்த்துக் கொண்டு சொல்ல, சட்டென்று எழுந்தாள் வேதா.
“நிஜமாவா?” என்றவளுக்கு தான் என்னவொரு சந்தோசம்.
அவளின் நெற்றியோடு முட்டியவன்,
“ஆமாடி என் ஆசை பொண்டாட்டி” என்றான்.
“சூப்பர் சூப்பர்” என்றவள்,
“பத்தே நிமிஷம், எப்படி கிளம்பி வர்றேன்னு பாருங்க” என்று துள்ளிக் கொண்டு ஓட,
“இவளை எதுல சேர்க்கறதுன்னு தெரியலையே” என்று சிரித்துக் கொண்டான்.
அவன் காபி போட்டுக் கொண்டிருக்க,
குளித்து முடித்து ஜீன்ஸ் டாப் விகிதம்,புத்தம் புது பூவாய் வந்து “நான் ரெடி” என்று நின்றவளின் மீதிருந்து கண்ணை எடுக்க முடியவில்லை விஜயால். அவள் இடையில் கை கொண்டு இழுத்தவன்,
“ஒண்ணுமில்ல. நீ காபியை குடி. நான் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வரேன்” என்று அறைக்குள் புகுந்து கொண்டவனுக்கு அப்போது தான் மூச்சு வந்தது. அவளருகே இருக்கும் போது அவனுக்குள் இருக்கும் அத்தனை இறுக்கமும் தளர்ந்து போவதை உணர்ந்திருந்தான்.
ஜீன்ஸ் டீசேர்ட் அணிந்து ஸ்டைலிஷ் லுக்கில் வந்து நின்றவனைப் பார்த்து வாயைப் பிளந்தாள் வேதா.
“என்ன?” என்பதைப் போல் புருவத்தை உயர்த்த,
“ஒண்ணுமில்லை” என்பதைப் போல் அவள் தலை ஆடியது.
“போகலாமா”
“ம்ம்” என்றவள், மந்திரித்து விட்டவளைப் போல் அவன் பின்னால் செல்ல, உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான் விஜய்.
ஹெல்மெட்டை போட போனவன், பிறகு என்ன நினைத்தானோ? சாவியை அவளிடம் நீட்டினான்.