“இப்ப தாண்டா ஒரு அரைமணி நேரம் இருக்கும். நாங்க வர்றது சரணுக்குத் தெரியுமே” என்றனர்.

“இந்த அண்ணா எங்ககிட்ட சொல்லவே இல்லப்பா” என்றாள்.

“அவங்களை நிக்க வெச்சே பேசிட்டு இருப்பியா வேதா?” என்றான் விஜய்.

“ஆமால்ல..! நீங்க உட்காருங்கப்பா. எல்லாருக்கும் குடிக்க ஏதாவது எடுத்துட்டு வர்றேன்” என்றாள்.

“அதெல்லாம் டீ போட்டாச்சு, எல்லாரும் குடிச்சாச்சு” என்றார் மைதிலி.

“நான் வந்து பண்ணியிருப்பேன்ல மைதிலிம்மா” என்றாள்.

“இதென்ன அடுத்தவங்க வீடா? எங்க பொண்ணு வீடு. இங்க யாரை கேட்கணும். அதான் நானே போட்டுட்டேன்” என்றார்.

வேதா அவரை அணைத்துக் கொள்ள,

“மைதிலிம்மா இவளைத் தள்ளிப் போகச் சொல்லுங்க. இப்பல்லாம் இவ என்னை கண்டுக்கறதே கிடையாது. எப்ப பார்த்தாலும் விஜய் அண்ணா பின்னாடியே சுத்திட்டு இருக்கா” என்றான் அகரன்.

“போடா டேய் போடா” என்றவள், அப்போது தான் அங்கிருந்த நீலாவதியை கவனித்தாள்.

“வாங்க நீலாம்மா” என்றாள்.

“இப்பவாவது கண்ணு தெரிஞ்சதே” என்றார் இடக்காய்.

“கனி அக்கா, குட்டி பாப்பா எல்லாம் எப்படி இருக்காங்க” என்றாள்.

“நல்லா இருக்காங்க.நல்லா இருக்காங்க” என்றார். அதற்குள் சரண் கீர்த்தனா வர அவர்களுடன் கிரியும் வந்தான். ஒட்டு மொத்த குடும்பமும் அந்த வீட்டில் இருக்க, வீடே ஆட்களால் நிரம்பியிருந்தது.

வீடு நிறைய ஆட்களைப் பார்த்த அமுதாவிற்கு அப்படி ஒரு சந்தோசம். என்றுமில்லாமல் அன்று அப்படி ஒரு மகிழ்ச்சி அவர் முகத்தில். அதிலும் ராமச்சந்திரன் வந்தவுடன் அவரிடம் கூறியிருந்த வார்த்தைகளை கேட்டு மனம் நிரம்பியிருந்தது அமுதாவிற்கு.”தங்கமான புள்ளையைப் பெத்து அருமையா வளர்த்திருக்கிங்கம்மா” என்ற வார்த்தைகள் தான் அது. ஒரு தாய்க்கு இதைவிட சந்தோசம் தரக் கூடிய வார்த்தைகள் இருந்துவிடப் போகிறதா என்ன?

“உறவு முறையில ஒரு முக்கியமான கல்யாணம் தம்பி. அதான் குடும்பத்தோட வந்தோம். மனோவும் இன்னைக்கு ஊர்ல இருந்து வந்தான். அப்படியே அவனையும் அழைச்சுட்டு போன மாதிரி இருக்கும். அப்பறம் ஒரு முக்கியமான விஷயம்” என்று ராமச்சந்திரன் நிறுத்த,

“சொல்லுங்க அங்கிள்” என்றான் புரியாமல்.

“மனோ அதை எடுத்துட்டு வாப்பா” என்று சொல்ல,

“என்ன அங்கிள்?”

“நாங்க வேதாவுக்கு செய்ய வேண்டிய சீர் வரிசை எதையும் இன்னும் செய்யலை. இத்தனை நாள் நிலைமை சரியில்லை. அதான் நாங்களா எதுவும் பேச்சை எடுக்கலை. எங்க பொண்ணுக்கு செய்ய வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கு” என்று அவர் நிறுத்த,

“தப்பா எடுத்துக்காதிங்க அங்கிள். இதெல்லாம் எடுத்துட்டு போய்டுங்க.” என்றான் விஜய் பட்டென்று.

“மச்சான் அப்படியெல்லாம் நீ சொல்ல முடியாது. கீர்த்தனாவுக்கு நீ செஞ்சப்பா நாங்க அமைதியா வாங்கிகிட்டோம் தான. அதே மாதிரி நீ இப்போ அமைதியா இருக்குற” என்றான் சரண்.

சந்தியாவிற்கு மனமே இல்லாமல் நீலாவின் பக்கத்தில் நின்றிருந்தாள்.

“வேதா வந்து மாப்பிள்ளையோட நின்னு வாங்கிக்கடா” என்றனர். அவள் அமைதியாய் விஜய்யைப் பார்க்க, அவனோ எதுவும் பேசாமல் நின்றான்.

“அமுதாம்மா அண்ணாவை சரின்னு சொல்ல சொல்லுங்க. அப்ப தான் வேதா வாங்குவா” என்றாள் கீர்த்தனா.

“இதெல்லாம் பொண்ணைப் பெத்தவங்க சந்தோஷம் தம்பி. இதை நீங்க மறுக்கக் கூடாது.” என்று மைதிலியும் சொல்ல,

“உங்க விருப்பம். வேதாவுக்கு ஓகேன்னா எனக்கு பிரச்சனையில்லை” என்றான் வேண்டா வெறுப்பாய்.

“இவனுக்கென்ன பைத்தியமாடி. இருநூறு பவுன் நகையை வேண்டாம்னு சொல்றான். பிழைக்கத் தெரியாதவன்” என்றார் நீலாவதி.

“சின்ன அத்தை பேசாம இருங்க. எல்லார் கண்ணும் நம்ம மேல தான் இருக்கு” என்றாள் சந்தியா.

விஜயின் அருகில் சென்றவள் அவன் கையை சுரண்ட,

“என்னடி?” என்றான் மெதுவாய்.

“அப்பா சங்கடப்படுவார்” என்றாள் பாவமாய்.

“உன் இஷ்ட்டம்” என்றான்.

“நீங்க சரின்னு சொன்னாதான் வாங்குவேன்” என்றாள்.

“சரி வாங்கிக்க” என்றான்.

“நிஜமாவா?”

“அப்பா பொண்ணுக்கு இடையில நான் எதுக்கு வரணும்? அவர் சந்தோஷத்தை நான் எதுக்கு கெடுக்கணும். ஆனா ஒன்னு இதையெல்லாம் வாங்கித்தான் பிழைக்கணும்னு எனக்கு அவசியமில்லை” என்றான் பட்டென்று.

‘இவர் சரிப்பட்டு வர மாட்டார்’ என்று எண்ணியவள்,

“ஹீரோ சார், நீங்க ஹீரோவாவே இருங்க. ஆனா, நான் சராசரி பொண்ணு. இதெல்லாம் என் அம்மா எனக்காக பார்த்து பார்த்து வாங்கினது. அப்படியெல்லாம் வேண்டாம்னு சொல்ல முடியாது” என்றாள்.

“அப்பறம் எதுக்குடி என்கிட்டே பெர்மிஷன் கேட்குற மாதிரி ஆக்சன் குடுக்குற?” என்றான் பல்லைக் கடித்துக் கொண்டு.

“எனக்காக சரின்னு சொல்லுவிங்கன்னு தான்” என்றவள் பாவமாய் அவன் முகம் பார்க்க, அதற்கு மேல் மறுக்கத் தோன்றவில்லை அவனுக்கு.

“சரி” என்றான்.

“நாங்க இங்க தான் இருக்கோம்” என்றான் சரண் கிண்டலாய்.

“தெரியுது தெரியுது” என்றாள் வேதா.

வேதா நகைகளை வாங்கிக் கொள்ள,

“அப்பறம் சீர் வரிசை பொருள் எல்லாம்” என்று அவர்கள் ஆரம்பிக்க,

“அங்கிள் பிளீஸ்..! இங்க எல்லாமே இருக்கு. உங்களுக்கு கண்டிப்பா செஞ்சே ஆகணும்னா, வேதா பேர்ல டெப்பாசிட் பண்ணிடுங்க” என்றான் விஜய் முடிவாய்.

“அப்படியே பண்ணிடலாம் தம்பி” என்றார் ராமச்சந்திரன்.

“சரி சரி எல்லாரும் இருக்கும் போதே நாங்களும் ஒரு நல்ல விஷயம் சொல்லிடுறோம்” என்ற சரண் நிறுத்த,

அனைவரும் என்ன என்பதைப் போல் ஆவலாய் பார்த்திருக்க,

“எல்லாரும் மறுபடியும் தாத்தா பாட்டி ஆகப்போறிங்க.நாங்க அப்பா அம்மா ஆக போறோம்” என்றான் சரண்.

“வாவ் அண்ணா..! கங்கிராட்ஸ். சூப்பர் அண்ணி கங்கிராட்ஸ்” என்ற வேதா கீர்த்தனாவைக் கட்டிக் கொண்டு முத்தமிட்டு கொண்டாடித் தீர்த்துவிட்டாள்.

“பாருங்க சின்னத்தை இவளை? சொந்த அண்ணி என்னைய கண்டுக்க கூட இல்லை.ஆனா, அந்த கீர்த்தனான்னு சொன்னாலே போதும் இவ வாயெல்லாம் பல்லு” என்றாள் சந்தியா.

“பார்த்துட்டு தான இருக்கேன் நடக்குற கூத்தை” என்றார் நீலாவதி.

“நீங்க ரெண்டு பேரும் கடைசி வரைக்கும் திருந்துற ஐடியா இல்லையா?” என்றான் கிரி.

“போடா பேசாம. சும்மா கடுப்பேத்திகிட்டு” என்றார் நீலாவதி.

“கீர்த்தனா சந்தோஷமா இருக்குடா” என்ற விஜய் அவளை அணைத்துக் கொள்ள, அவனின் சித்திக்கோ சந்தோஷத்தில் கைகால் ஓடவில்லை.

“அக்கா நாம பாட்டியாகிட்டோம்” என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்த, அமுதாவின் கண்கள் ஏக்கமாய் விஜயை பார்த்தது. விஜய்க்கு புரியவில்லை என்றாலும் வேதாவிற்கு புரிந்தது.சிரித்தபடியே அவருக்கு அருகில் சென்றவள்,

“உங்களையும் சீக்கிரம் பாட்டியாக்கிடுறேன் அத்தை” என்றாள் காதுக்கருகில். அமுதாவிற்கு வேற என்ன வேண்டும். வாஞ்சையுடன் அவள் கைகளை பிடித்துக் கொண்டார்.