அத்யாயம் 3:

நான்கு மாதங்களுக்குப் பிறகு…

சென்னையின் புகழ் பெற்ற அந்த பொறியியல் கல்லூரியின் அலுவலக வாசலில் நின்றிருந்தாள் வேத வர்ஷினி. சரணும், மனோகரனும் உள்ளே சென்றிருக்க, வெளியே நின்றிருந்தவளின் பார்வை இலக்கின்றி ஏதோ ஒரு ஒரு புள்ளியை வெறித்துக் கொண்டிருந்தது. இந்த நான்கு மாதங்கள் அவள் வாழ்க்கையை புரட்டிப் போட்டிருக்க, புயலில் சிக்கிய பூங்கொடி போல் இருந்தவளின் மனம் மட்டும் ஆழ்கடலின் அமைதியுடன் இருந்தது. 

உணர்வுகளுக்கும்,உறவுகளுக்கும் இடையில் சிக்கித் தவித்து கொண்டிருந்த அவளின் மனம் தற்பொழுது தான் அமைதியைத் தத்தெடுத்திருந்தது. இன்பமும், மகிழ்ச்சியும் மட்டுமே நிறைந்திருக்க, வாழ்க்கை ஒன்றும் அவ்வளவு எளிதல்ல என்று கடந்து போன சம்பவங்கள், நிதர்சனத்தை முகத்திலடித்தார் போன்று உணர்த்தியிருந்தது. நடந்த சம்பவங்களின் எச்சங்கள் என்றும் அவளின் மனதில் இருந்து மறையப்போவதில்லை. எச்சங்களின் சொச்சங்கள் கூட ஏதோ ஒரு வகையில் அவளின்  உயிரை உருவிக் கொண்டு தான் இருக்கும்.

அலுவலக அறையில் இருந்து வெளியே வந்த இருவரின் பார்வையிலும், வேதாவின் இந்த உயிர்ப்பற்ற முகமே தெரிய, சரணுக்கும் தன் உணர்வுகளை அடக்குவது பெரும்பாடாக இருந்தது.மனோகரனின் நிலைமையோ சொல்ல முடியாதபடி இருந்தது. அவனுக்கும் வேதாவுக்கும் கொஞ்சம் வயது இடைவெளி அதிகம் என்பதால் தங்கையுடன் அவன் இயல்பாக பழகியதில்லை.படிப்பு,கல்லூரி, வேலை என்று ஊரை விட்டு வந்தவன், சொந்த தங்கையிடம் இருந்தும் தள்ளி வந்துவிட்டான். உணர்வுகளை வெளிக்காட்டி பழக்கம் இல்லாதவனுக்கு, சமீப காலமாக தங்கையை தனக்கருகிலேயே வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்றிக் கொண்டே இருந்தது. அதை செயல்படுத்தும் வழிமுறை தான் தெரியவில்லை.

“வேதா..” என்று சரண் அழைக்க, வேறொரு உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தவளின் காதுகளில் அவன் அழைப்பு விழவில்லை.

“வேதா..” என்று அவளின் கையைப் பிடிக்க,

“ங்கான்..!” என்று விழித்தவள்,

“சொல்லுங்கண்ணா!” என்றாள்.

“பிரின்சிபல் சாரை பார்த்துட்டு வந்துடலாம்..” என்றான்.

“ம்ம் சரி” அன்று அவள் தலையாட்ட,

“வேதா..! பிளீஸ்..! நீ என் கூட பெங்களூர் வந்துடேன். இல்ல, நான் சென்னைக்கு ட்ரான்ஸ்பர் வாங்கிட்டு வந்துடட்டுமா?” என்று ஒரு வழியாக கேட்டுவிட்டான் மனோகரன்.

“இல்லண்ணா.. அது சரியா வராது. எனக்கு சென்னை வரவே விருப்பம் இல்லை. அப்பா சொன்னாருன்ற ஒரு காரணத்துக்காகத்தான் இங்க வந்திருக்கேன்..” என்றாள் அமைதியாக.

“உன்னை இங்க தனியா விட்டுட்டு நான் எப்படி அங்க நிம்மதியா இருக்குறது?” என்றான் மனோ.

“இத்தனை நாள் அப்படித்தான இருந்தோம். கூடவே இருந்தாதான் பாசம் இருக்குன்னு அர்த்தமா என்ன? அப்பறம் நான் எங்க தனியா இருக்கப் போறேன். அகரன் இங்க தான் படிக்கிறான். சரண் அண்ணா இங்க தான் இருக்காங்க. அப்பறம் நான் ஏன் கவலைப்படனும்?” என்றாள் நிர்மலமான குரலில்.

“வேதாம்மா.. நான் அன்னைக்கு ஏதோ டென்ஷன்ல அப்படி பேசிட்டேன்டா. சந்தியா பேசுனதும் தப்புத்தான். நீ இன்னமும் அதை மனசுல வச்சுட்டுதான் இப்படி ஒரு முடிவு எடுத்திருக்கியா?” என்றான் குற்ற உணர்வுடன்.

“சத்தியமா இல்லண்ணா..! நான் அதையெல்லாம் அப்பவே மறந்துட்டேன். நீங்க தான் இன்னமும் அதையே நினைச்சுட்டு இருக்கிங்கன்னு நினைக்கிறேன். தேவையில்லாம நீங்க நிறைய யோசிக்கிறிங்க. எனக்கு யார்மேலயும் கோபமில்லை..” என்றாள்.

அண்ணா, நான் பார்த்துக்கறேன்” என்று சரண் கூற, வேறு வழியின்றி தலையசைத்தான் மனோ.

“வேதா..! அட்மிஷன் போட்டாச்சு. நீ இன்னைக்கே கிளாஸ் போறதுனாலும் போகலாம். ஏற்கனவே ஒன் மந்த் கிளாஸ் போயிருக்கும்” என்றான் சரண்.

“பிரச்சனை இல்லைண்ணா..! நான் இன்னைக்கே கிளாஸ் போறேன்..” என்றாள்.

“சரி வா..! பிரின்சிபல் சாரை பார்த்துட்டு அப்படியே உன்னைக் கிளாஸ்ல விட்டுட்டு போறேன். நான் இன்னைக்கு லீவ் தான். உன்னை கிளாஸ்ல விட்டுட்டு மனோ அண்ணாவை ஏர்போர்ட்ல டிராப் பண்ணிட்டு நானே வந்து உன்னை பிக்கப் பண்ணிக்கிறேன். அதுக்கு முன்னாடி நீ ராம் அப்பாவுக்கு கால் பண்ணி பேசிடு” என்றான் சரண்.

“நான் என்ன குழந்தையா, நீங்க என்னை கிளாஸ்ல விட்டுட்டு போக. நானே போய்க்கிறேன். டிப்பார்ட்மென்ட் எந்த ப்ளாக்னு மட்டும் சொல்லிட்டு போங்க. அண்ணாவை டிராப் பண்ணிட்டு வீட்டுக்குப் போங்க. நான் அகரன் கூட வந்துடுறேன்.” என்றாள்.

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். ” என்று உறுதியாக மறுத்துவிட்டான்.

மதுரையில் அவள் படித்த கல்லூரியும் பெரிய கல்லூரி என்பதால், இங்கு மூன்றாவது வருடம் நேரடியாக சேருவதில் எந்த சிரமமும் இருக்கவில்லை. அதற்கு அவள் வைத்திருந்த பெர்சண்டேஜும் மிக முக்கிய காரணம்.

“வேதா இந்த பணத்தை செலவுக்கு வச்சுக்கோ” என்று மனோகரன் பணத்தைக் கொடுக்க,

“வேண்டாண்ணா..! அப்பா கொடுத்ததே இருக்கு” என்று அவள் வாங்க மறுக்க, அவன் முகம் சட்டென்று மாறியது.

“அண்ணன் கொடுக்குற பணம் மட்டும் வேண்டாமா? இல்ல அண்ணனே வேண்டாமா?” என்றான் மனோ. அவன் குரல் கொஞ்சம் கலங்கியதைப் போல் இருந்தது.

எதுவும் பேசாது அவன் முகம் நோக்கியவள், அவன் கையிலிருந்த பணத்தைப் பிடுங்கிக் கொண்டு முறைத்தாள். அவளின் செய்கையில் கண்கள் கலங்க, அவளைத் தோளோடு அணைத்து கொண்டான்.

“சாரிடா” என்றான் ஆத்மார்த்தமாக.

பாசமலர் படம் ஒட்டுனது போதும் என்று சரண் கடுப்பாய் சொல்ல, அவனை மறுபக்கம் தோளோடு அணைத்துக் கொண்டாள் வேதா.

“சரி சரி போகலாமா?” என்றவன், கல்லூரி முதல்வரை சந்தித்துவிட்டு அவள் சொல்ல சொல்ல கேட்காமல், அவள் டிபார்ட்மென்ட் அழைத்து சென்றவன், தேர்ட் இயர் கிளாஸ் ரூமை காட்டிவிட்டு தான் சென்றான்.

“எக்ஸ்கியூஸ்மி மேம்” என்றவளின் குரலில், அங்கிருந்த ஆசிரியை திரும்பினாரோ இல்லையோ மொத்த கிளாஸ்ரூம் பசங்களும் திரும்பிப் பார்க்க,

“எஸ்,கம் இன்..”

“ஐம் வேத வர்ஷினி. நியூ அட்மிஷன் மேம்” என்றாள்.

“வெல்கம் டு அவர் காலேஜ்” என்றவர்,

“இதுக்கு முன்ன எந்த காலேஜ்ல படிச்சிங்க?” என்றார்.

மதுரையில் தான் படித்த கல்லூரியின் பெயரைக் கூறினாள் வேதா.

“ஓகே குட்” என்றவர், 

“ஆல்ரெடி நிறைய கிளாசஸ் போய்டுச்சு. நீங்க பக்கத்துல கேட்டு நோட்ஸ் காப்பி பண்ணிக்கோங்க. சப்ஜெட்க்ல ஏதாவது டவுட்னா ஸ்டாப் ரூம் வந்து கேட்டுக்கோங்க..” என்றார்.

“ஓகே மேம்..!”

“யு மே நவ் சிட் டவுன்..” என்றவர் திரும்பி போர்டில் தான் எழுதிக்கொண்டிருந்ததைத் தொடர்ந்தார்.

எங்கு சென்று அமர்வது என்று  யோசித்தவள், கண்ணாடி அணிந்து கருமமே கண்ணாக எழுதிக் கொண்டிருந்தவனின் அருகில் சென்று அமர்ந்தாள். அவனின் அருகில் தான் இடமும் இருந்தது.

“ஹேய் லயா..! அங்க பாரேன். நம்ம கிளாஸ் பாய்ஸ் லுக்கு புல்லா அந்த நியூ கேர்ள் மேலதான். ஒருத்தனும் கிளாஸ் கவனிக்கலை. இவனுங்க விடுற ஜொள்ளுல கிளாஸ் ரூமே மிதக்குது” என்றாள் ஹரிணி. லயாவும் கவனித்துக் கொண்டு தான் இருந்தாள்.

 “விடு ஹரிணி..! புதுசுனால கொஞ்சம் ஆர்வமா இருப்பானுங்க. நம்ம நினைக்கிற அளவுக்கு இந்த பட்டிக்காடு வொர்த்தா இருக்காது..” என்றாள் லயா. தான் தான் அழகு என்ற எண்ணம் லயாவுக்கு. அது உண்மை என்பதைப் போல் பல ஆண்கள் அவள் பின்னால் சுற்ற, அதுவே நாளடைவில் கர்வமாக மாறியது.

“பட்டிக்காடா இருந்தாலும் படு பிகரா தான்  இருக்கா” என்று மனதில் நினைத்த ஹரிணி வெளியே சொல்லவில்லை. அப்படி மட்டும் சொல்லிவிட்டால், லயாவின் ரியாக்சன் எப்படி இருக்குமென்று அவளுக்குத் தான் தெரியுமே.

வேத வர்ஷினிக்கு சுற்றுப் புறம் உரைத்தாலும், கண்கள் என்னவோ போர்டை தான் பார்த்துக் கொண்டிருந்தது. அந்த செமஸ்டரில் என்ன பேப்பர் இருக்கும் என்று அவளுக்கு முன்னமே தெரிந்ததால், அப்பொழுது கவனிப்பதில் பிரச்சனை இல்லை.

“ஓகே ஸ்டூடெண்ட்ஸ்..!கிளாஸ் இஸ் ஓவர்.சீ யூ இன் த நெக்ஸ்ட் கிளாஸ்” என்று அவர் வெளியேறிய அடுத்த நிமிடம், அனைவரும் வேதாவை சூழ்ந்து கொண்டனர்.

“ஹாய், ஐ ஆம் ஆனந்த்” என்றான் அருகில் இருந்த சோடா புட்டி.

“ஹாய் ஆனந்த்” என்றாள் வரவழைக்கப்பட்ட சிரிப்புடன்.

ஒவ்வொருவரும் அவர்களின் பெயரை சொல்லி அறிமுகமாக, அவர்களின் இயல்பைப் பார்த்து கொஞ்சம் வியப்பு தான் அவளுக்கு.  

“வேதா யு லுக் பியூட்டிபுல்” என்று ஒரு குரல் கேட்க,

“வேதா ஆர் யு சிங்கிள்..” என்று ஒரு குரல் வர,

“எங்களுக்கு சான்ஸ் இருக்கா?” என்று ஒரு குரல் வர, 

“உங்க மூலமாவாவது எங்களுக்கு விமோட்சனம் பிறக்குமா தோழி” என்று ஒரு குரல் வர 

அவர்கள் கேட்ட விதத்தில் கேள்வி கூட விகல்பமாய் தெரியவில்லை. அவள் அனைத்திற்கும் புன்னகையையே பதிலாய் தர,

“சரி விடு..!அழகான பொண்ணு பிரண்ட்ஷிப் கிடைக்கிறதே பெரிய விஷயம். வி ஆர் பிரண்ட்ஸ்…”  என்று அவர்கள் கத்த..

“வி ஆர் பிரண்ட்ஸ்” என்றாள் அவளும்.

“அம்மா தாயே இப்பவாவது வாயைத் திறந்து பேசுனியே.!” என்றவர்கள், ஏதாவது நோட்ஸ் தேவைன்னா, இதோ இந்த சோடா புட்டி ஆனந்தனை கேளு. பாய்ஸ்ல இவன்தான் படிப்பாளி. இல்லைன்னா லயா,ரம்யா இவங்ககிட்ட கேளு. கேர்ள்ஸ்ல அவங்க தான் படிப்பாளி..ரம்யா இன்னைக்கு லீவ்” என்றனர்.

வேத வர்ஷினிக்கு இருந்த கொஞ்ச நஞ்ச கலக்கமும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போயிருந்தது. என்னதான் வெளியே நிதானமாகக் காட்டிக் கொண்டாலும், புது கல்லூரியும், புது சூழ்நிலையும் ஒரு பதட்டத்தைக் கொடுத்திருந்தது உண்மை. அதெல்லாம் ஒன்றுமில்லாமல் செய்துவிட்டார்கள் அங்கிருந்த மாணவர்கள். அதற்கு பிறகு இயல்பாகவே இருந்தாள். அருகில் இருந்த ஆனந்திடம் அந்த கல்லூரியின் நடைமுறைகளைப் பற்றி கேட்டுத் தெரிந்து கொண்டாள். அன்றைய நாள் அவளுக்கான நாளாகவே முடிந்துவிட அவளை அழைக்க வந்தான் அகரன்.

“என்ன வேதா? எல்லாம் ஓகே வா? அங்க இருந்து வந்தது உனக்கு கஷ்ட்டமா இருக்கா?” என்றான் அக்கறையாய்.

“கஷ்ட்டமா? எனக்கா?” என்று வெற்றுப் புன்னகை பூத்தவள்,

“எல்லாம் ஓகே தான் அகரா..! ஒன்னும் பிரச்சனையில்லை. ” என்றாள்.அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே, சரணும் வந்துவிட அவர்களுடன் கிளம்பினாள்.