“இன்னைக்கு நான் வெளிய போனாலும் பரவாயில்லை. உன்கிட்ட ஒன்னு சொல்லியே ஆகணும்” என்றாள்.

“என்னடி?” என்று பல்லைக் கடித்தாள்.

“அது வந்து.. இத்தனை நாள் இந்த லயாவுக்கு பயந்து விஜய் சாரை சைட் அடிக்காம விட்டது எவ்வளவு பெரிய தப்புன்னு இன்னைக்கு பீல் பண்றேண்டி” என்றாள் மெதுவான குரலில்.

“அதுக்கு??” என்றாள் வேதா அதிர்ச்சியாக.

“நீ ஏன் இவ்வளவு அதிர்ச்சியாகுற? என்ன ஆனாலும் பரவாயில்லை. நான் இன்னையில இருந்த சாரை சைட் அடிக்க போறேன்” என்றாள் தீவிரமாய்.

“வாயை மூடுடி குரங்கே. சாரை எல்லாம் சைட் அடிக்கக் கூடாது” என்றாள் கடுப்புடன்.

 “உனக்குத் தான் அவரைப் பிடிக்காது. நீ வேணும்னா அப்படியே இரு. ஆனா நான் சைட் அடிப்பேன்.” என்றாள்.

“நான் எப்போடி பிடிக்காதுன்னு சொன்னேன்” என்றாள் பாவமாய்.

“உனக்குத் தான் அவரைக் கண்டாலே  ஆகாதே. இனி இந்த லயாவுக்கெல்லம் நான் பயப்படுற மாதிரி இல்லை” என்றாள் ரம்யா.

“விஜய் சார் உனக்கு அண்ணன் மாதிரிடி ரம்யா” என்றாள் வேதா, பல்லைக் கடித்துக் கொண்டு.

“இன்னொரு தடவை அப்படி சொல்லாத, வாயிலையே போடுவேன்” என்று ரம்யா சொல்லிக் கொண்டிருக்க, அவர்களை முறைத்துக் கொண்டிருந்தான் விஜய்.

அவனைப் பார்த்த வேதா முழித்து வைக்க,

“ரைட்டு, சைத்தான் சைக்கிள்ள போகுது”  என்று புலம்பிக் கொண்டிருந்தாள்.

“கிளாஸ்ல இருக்க விருப்பமில்லைன்னா, ரெண்டு பேரும் வெளிய போகலாம்” என்றான் பட்டென்று.

“சாரி சார்..!” என்றாள் வேதா பாவமாய்.

“ஒரு நாள் ரெண்டு நாள் இல்லை. உங்க ரெண்டு பேருக்கும் டெய்லி இதே வேலை தானா? கிளாஸ்க்கு படிக்க வர்றீங்களா? எதுக்கு வரீங்க? பிரின்ஸ்பால் கிட்ட அனுப்பனுமா?” என்றான்.

“சாரி சார்..” என்றாள் ரம்யா.

“என்ன சாரி சார்? இந்த சாரியை எத்தனை தடவை கேட்பிங்க?” என்றான்.

“சாருக்கு சாரி இப்படி சொன்னா பிடிக்காது” என்று முனுமுனுத்தாள் வேதா.

“என்ன சொன்னிங்க வேத வர்ஷினி” என்றான் அதட்டலாய்.

“இப்படி சாரி கேட்டா உங்களுக்கு பிடிக்காதுன்னு சொன்னேன் சார்” என்றவளுக்கு சிரிப்பை அடக்குவது பெரும்பாடாய் இருந்தது.

‘இவளை’ என்று மனதிற்குள் கடுப்புடன்ரசித்தவன்,

வெளியே அவளைப் பார்த்து  முறைக்க,

“இந்த விஜய் சார்க்கு எப்ப பார்த்தாலும் என் வேதா டார்லிங்க வெளிய அனுப்புறதே வேலையா போச்சுடா மச்சான்..” என்று அருகிலிருந்த ஆனந்திடம் ஒரு ஒருவன் புலம்ப,

“மூடிட்டு இருடா வென்று. இல்லைன்னா உன்னையும் சேர்த்து அனுப்புவாரு பரவாயில்லையா?” என்றான் ஆனந்த்.

“அங்க என்ன சத்தம்?” என்றான் ஆனந்தைப் பார்த்து.

“சார் நான் ஒன்னும் சொல்லலை சார்… இவன் தான் பீல் பண்ணான்” என்று ஆனந்த் அருகில் இருந்தவனை கைகாட்ட,

“என்னன்னு பீல் பண்றான்?” என்றான் விஜய்.

“என் வேதா டார்லிங்க விஜய் சார் எப்ப பார்த்தாலும் வெளிய அனுப்புறாரு. அப்படின்னு ரொம்ப பீல் பண்ணான் சார்” என்றான் ஆனந்த் பாவமாய்.

“அடேய் கிராதகா” என்று பல்லைக் கடித்தான் அவன். வேதாவோ பட்டென்று சிரித்து வைத்தாள்.

‘டார்லிங்கா’ என்று உள்ளுக்குள் அதிர்ந்த விஜய்,

“உன் பேரு வருண் ரைட்” என்றான் அவனைப் பார்த்து.

“எஸ் சார்..” என்றான்.

“ங்கான்..! மிஸ்டர்.வருண், உங்களுக்கு அவ்வளவு கவலையா இருந்தா நீங்களும் உங்க வேதா டார்லிங்கோட வெளிய போகலாம். லீவ் த கிளாஸ் ரூம்” என்றான்.

“இப்ப சந்தோஷமா? இன்னைக்கு உன்னால எவ்வளவு நல்லது பண்ண முடியுமோ பண்ணிட்ட” என்றாள் வேதா, ரம்யாவைப் பார்த்து.

“நீ பீல் பண்ணாத வேதா டார்லிங்” என்றான் தருண்.

“வாடா நல்லவனே. நீயேண்டா வான்ட்டேடா வந்து வண்டியில ஏறுன? நான் பீல் பண்றேன்னு சொன்னேனா உன்கிட்ட” என்றாள் சிரிப்புடன்.

ரம்யா வெளியே வந்தும் விஜயை பார்த்துக் கொண்டிருக்க,

“இவளுக்கு முத்திடுச்சு.” என்று  நினைத்தவள்,

“அண்ணனை அப்படி எல்லாம் பார்க்கக் கூடாதுடி தங்கம். கண்ணை நோண்டிவேன்”என்றாள் வேதா.

ரம்யாவிற்கு காதில் சரியாக விழாமல் போக,

“என்னடி சொன்ன?” என்றாள்.

“ம்ம்.. சொன்னாங்க சுரைக்காய்க்கு உப்பில்லைன்னு” என்றாள்.

செமஸ்டர் ரிசல்ட்டும் வந்துவிட, வகுப்பிலேயே முதல் மாணவியாய் வந்திருந்தாள் வேதா.

“மச்சான் நைன்ட்டி பைவ் பெர்செண்டேஜ்…வாட்ட அ மிராகிள். நீ லயாவை ஓவர் டேக் பண்ணிட்ட” என்ற ரம்யாவிற்கு சந்தோசம் தாங்க முடியவில்லை.

லயா கோபமாய் இருக்க,

“நான் தான் சொன்னேன்ல. அவளை ரொம்ப சாதரணமா எடை போடாத. ஷீ இஸ் வெரி பிரிலியண்ட்னு” என்றாள் ஹரிணி.

“கரெக்ட் தான். ரூரல்ல இருந்து வந்திருக்கா. என்னத்தை பெருசா பெர்பார்ம் பண்ணிடுவான்னு கொஞ்சம் அசால்ட்டா இருந்துட்டேன்” என்றாள் லயா.

“அங்க தான் நாம தப்பு பண்ணிட்டோம். மேடம் படிச்சதெல்லாம் இன்டர்நேஷனல் ஸ்கூல். எல்லாத்துலையும் ஆல் ரௌண்டர்” என்றாள் ஹரிணி.

“உனக்கெப்படி தெரியும்?” என்றாள் லயா.

“அவ பேஸ்புக் பயோல பார்த்தேன்” என்றாள் ஹரிணி. லயா யோசனையுடன் தெரிய,

“என்னாச்சு லயா?”

“ஒண்ணுமில்லை” என்பதோடு முடித்துக் கொண்டாள்.

“மச்சான், நீயும் எல்லாத்துலயும் நல்ல ஸ்கோர் தான். பயந்துட்டே இருந்தியே” என்று வேதா கலாய்க்க,

“எப்படியோ அரியர் வராம தப்பிச்சேன்.” என்றாள் ரம்யா.

“என்ன மச்சான் ஆனந்து, கிளாஸ்லயே தேர்ட் மார்க் வாங்கியிருக்க. அப்பறம் எப்ப ட்ரீட்டு?” என்றனர் அனைவரும்.

“ஏண்டா உங்களுக்கே ஞாயமா இருக்கா? பர்ஸ்ட் மார்க்கு வாங்குன வேதாவை விட்டுட்டு, தேர்ட் மார்க் வாங்குன என்கிட்டே ட்ரீட் கேட்குறிங்க?” என்றான் ஆனந்த் பாவமாய்.

அதுவும் சரிதான் என்றவர்கள்,

“அப்ப ரெண்டு பேரும் சேர்ந்து ட்ரீட் வைங்க” என்றனர்.

“வச்சுட்டா போச்சு” என்றாள் வேதாவும்.

அதே மகிழ்ச்சியுடன் வீடு வந்து சேர்ந்திருந்தாள் வேதா. அன்று ஸ்டாப் அனைவருக்கும் மீட்டிங் இருந்ததால் விஜயும், சரணும் வர லேட் ஆகும் என்று சொல்லியிருந்தனர்.

“அண்ணி என்ன இந்த டைம்ல வீட்ல இருக்கீங்க?” என்றாள் கீர்த்தனாவைப் பார்த்து.

“இனி டென் டேஸ் வொர்க் ப்ரம் ஹோம் தான் வேதா” என்றாள் கீர்த்தனா.

“சூப்பர் அண்ணி” என்றவள் ப்ரஷாகி வர,

“வேதா இந்தடா டீ” என்று விஜயின் சித்தி டீயை  நீட்ட,

“ஐ லவ் யு ஆன்ட்டி” என்று அவருக்கு பட்டென்று ஒரு முத்தத்தை வைத்தபடி டீயை வாங்கிக் குடிக்க, அவளை முறைத்தாள் கீர்த்தனா.

“ஏன் அண்ணி முறைக்கிறிங்க?” என்றாள்.

“உனக்கு இன்னைக்கு ரிசல்ட். ஆனா என்கிட்ட சொல்லவே இல்லை” என்றாள்.

“இப்போ தானே வீட்டுக்கு வந்தேன். உங்க கிட்ட சொல்லாமையா?” என்றாள் வேதா.

“அதெல்லாம் ஒன்னும் சொல்ல வேண்டாம். உன் பாசமலர் ஏற்கனவே எனக்கு மெச்செஜ் அனுப்பியாச்சு” என்ற கீர்த்தனா,

“ரொம்ப சந்தோஷமா இருக்கு வேதா. இருந்த சூழ்நிலையில நீ காலேஜ் போக முடியுமான்னு நாங்க எல்லாம் கவலைப் பட்டோம். அதெல்லாம் ஒன்னுமில்லைங்கிற மாதிரி எழுந்து வந்த. எவ்வளவு பிரச்சனை, எத்தனை ஹெல்த் இஷ்யூஸ்,எவ்வளவு மனப்போராட்டம் இதையெல்லாம் தாண்டி படிச்சு, நல்ல பர்சண்டேஜ் வாங்குறதெல்லாம் வேற லெவல். உன்ன நினச்சா எனக்கு பெருமையா இருக்கு.” என்றாள்.

“இதுல என்ன அண்ணி பெருமை இருக்கு. என்னைய விட கஷ்ட்டப்பட்டு படிக்கிற எத்தனையோ பேர் இருக்காங்க. பார்ட்டைமா வேலை பார்த்துட்டே படிக்கிற எத்தனை ஸ்டூடண்ட்ஸ் இருக்காங்க. அவங்களோட கம்பேர் பண்ணும் போது, நம்மெல்லாம் ஒண்ணுமே இல்லை” என்றாள்.

“அது உண்மை தான். இருந்தாலும் எங்க வேதாவோட வெற்றி எங்களுக்கு பெருசு தான” என்றாள்.

“யாரு இல்லைன்னு சொன்னா?” என்றவள்,

“நான் போய் அமுதா அத்தையை பார்த்துட்டு வர்றேன்” என்று அவரின் அறைக்குள் சென்று விட்டாள்.

“தங்கமான பிள்ளை” என்று சித்தி புகழாரம் பாட,

“அப்ப நானு?” என்றாள் கீர்த்தனா.

“என் பொண்ணும் தங்கமான பொண்ணு தான்” என்றார் சிரிப்புடன்.

சின்சியராய் ஹாலில் அமர்ந்து எழுதிக் கொண்டிருந்தாள் வேதா. விஜயும், சரணும் ஒன்றாகவே வந்தனர் அன்றைக்கு. விஜய் ஆசுவாசமாய் சோபாவில் அமர, அவனை கொஞ்சமும் கண்டு கொண்டாளில்லை.

அவன் பார்வையோ வேதாவைத் தவிர எங்கும் பார்க்கவில்லை.