“வேதாம்மா..! உன்னை குற்றவாளி ஆக்கனும்னோ, இல்லை குற்ற உணர்ச்சில தள்ளனும்னோ நான் இதை சொல்லலை. புருஷன் பொண்டாட்டினா, ஒருத்தரோட கஷ்ட்டமான நேரங்கள்ல இன்னொருத்தர் ஆறுதலா துணையா இருக்கணும். அப்பவும் நீயா, நானான்னு போட்டி போட்டுட்டு இருக்கக் கூடாது. உன்னோட எல்லா கஷ்ட்டமான சூழ்நிலையிலும் அவன் கூட இருந்திருக்கான். உனக்காக அழுதிருக்கான், தவிச்சிருக்கான். ஏன்? பைத்தியம் பிடிக்காத குறையா சுத்தியிருக்கான். காதும்மா இறந்த சமயத்துல அவன் மட்டும் இல்லைண்ணா, எங்களால ஒண்ணுமே பண்ணியிருக்க முடியாது. ஏன் உன்னைய காப்பாத்தியிருக்க முடியுமான்றதே சந்தேகம் தான். நாங்க எல்லாரும் நிலைகுலைஞ்சு போய் இருந்தப்ப அவன் ஒரு ஆளா எல்லாமே பண்ணான். நாங்க அத்தனை பேர் இருந்தும் அவனைத் தான் எதிர்பார்த்தோம்.

ஆனா, அவனுக்குன்னு ஒரு பிரச்சனை வரும் போது அந்த இடத்துலையும் அவனையே குற்றம் சொல்லி தள்ளி நிறுத்துறதுல என்ன ஞாயம் வேதா?

“அண்ணா..!!”

“அவனுக்கு உன்னைப் பிடிக்கலைன்னு நீயே சொல்லிக்கிற? எங்க நல்லா யோசிச்சு சொல்லு, உன்னைப் பிடிக்கலைன்னு என்னைக்காவது சொல்லியிருக்கானா?” என்றான் சரண்.

“இல்லை” என்பதைப் போல் அவள் தலை ஆட,

“சரி பிடிச்சிருக்குன்ற மாதிரி சொல்லியிருக்கானா?” என்றான்.

“ஆமாம்” என்று தலையை ஆட்டினாள்.

“நீ என்னைக்காவது அவனைப் பிடிச்சிருக்குன்னு சொல்லியிருக்கியா?” என்றான் பட்டென்று. வேதா அதிர்ந்து சரணைப் பார்க்க,

“சொல்லு வேதா சொல்லியிருக்கியா? இல்லை அவனைப் பிடிச்சிருக்குன்ற மாதிரியாவது காட்டியிருக்கியா?” என்றான்.

“இல்லை” என்றாள் கண்ணீருடன்.

“பிரச்சனையோட நூல் எங்க இருக்குன்னு புரியுதா?” என்றவன்,

“உனக்கு முதல்ல அவனை பிடிச்சிருக்கா?” என்றான் சந்தேகமாய் சரண். வேதா அதிர்ந்த கண்களுடன் அவனைப் பார்க்க,

“நல்லா யோசிடா.” என்றவன், அவளின் கைகளை பிடித்துக் கொண்டான்.

“உனக்கு இப்போ வரைக்கும் பிடிக்கலைன்னாலும் இனிமேல் பிடிக்கிற மாதிரி பார்த்துக்கோடா. ஏன்னா இன்னொரு இழப்பையெல்லாம் அவன் தாங்க மாட்டான். உங்க எல்லாருக்கும் இப்ப இருக்குற விஜயை தான தெரியும். ஆனா, நிஜமா அவன் அப்படி கிடையாது. கோபத்துலையும் எக்ஸ்ட்ரீம் லெவல் போவான். பாசத்துலையும் எக்ஸ்ட்ரீம் லெவல் போவான். எங்க கேங்க்லையே விஜய் தான் அவ்வளவு கலகலப்பா இருப்பான். ஆனா, இப்பல்லாம் சிரிக்கிறதுக்கே காசு கேட்குறான். ஸ்டடீஸ்,ஸ்போர்ட்ஸ், டான்ஸ்ன்னு எல்லாத்துலையும் ஆல்ரௌண்டர் அவன். ஆனா அவன் கல்யாணம் நின்னு,அமுதா ஆன்ட்டி இப்படி ஆன பிறகு அவனுக்குள்ளயே அவனைத் தொலைச்சிட்டான்.

அதுக்காக அவன் பண்ணது எல்லாம் சரி. நீ பண்றது தப்புன்னு நான் சொல்லலை வேதாம்மா. நீ குழப்புத்துல இருந்தப்போ அவன் தெளிவா இருந்தான். இப்போ அவன் குழப்பத்துல இருக்கான். நீ தெளிவா இருன்னு சொல்றேன். நான் சொல்றது புரியுது தானடா” என்றான் அவளின் தலையை கோதி.

கண்களைத் துடைத்துக் கொண்டவள் சோபையாய் புன்னகைத்தாள்.

“அண்ணா, நான் அன்னைக்கு சொன்னது தான் இன்னைக்கும். நாங்க புருஷன் பொண்டாட்டிங்கறது எப்பவும் மாறாது. நீங்க சொன்ன மாதிரி என் மேலயும் சில தவறுகள் இருக்கு. நான் பார்த்துக்கறேன்” என்றாள் தெளிவாய்.

“அண்ணா மேல ஏதாவது கோபமாடா?” என்றான் சரண், அவளை ஆதரவாய் அணைத்துக் கொண்டு.

“அப்படியெல்லாம் இல்லண்ணா..! நீங்கல்லாம் இல்லைன்னா நான் என்னாகியிருப்பேன்” என்றவள் அழ,

“நாங்க இருக்குற தைரியத்துல தான காதும்மா உன்னை விட்டுட்டு போயிருக்காங்க. அப்போ நாங்க உன்னை சரியா பார்த்துக்கணும்ல” என்றான் அவனும் கலங்கிய கண்களுடன்.

“வாழ்க்கையில நமக்கு கிடைக்கிற உறவுகள் தானண்ணா பெரிய விஷயம். அப்படி கிடைக்கிற உறவுகளும் நல்ல முறையில் அமையனும்.அந்த வகையில நான் அதிர்ஷ்ட்டசாலி இல்லையாண்ணா?” என்றாள் சிரிப்புடன்.

“வேதாம்மா..!” என்றவனுக்கு அதற்கு மேல் வார்த்தைகள் வரவில்லை.

“எவ்வளவு நேரம் இன்னும் பாசப் பயிரை கண்ணீர்லயே வளர்ப்பிங்க. கொஞ்சம் சோறு போட்டும் வளர்க்கலாம்.” என்றான் அகரன்.

“ஆமாம்ல..எனக்கும் கூட பசிக்குது. இன்னும் யாரும் சாப்பிடலை. லஞ்ச் டைமே வரப் போகுது. நான் போய் கீர்த்தனாவை ஏதாவது சமைக்க சொல்றேன். இல்லைன்னா ஆர்டர் போடுறேன்” என்றான் சரண்.

“வேண்டாம்ண்ணா..! நானே சமைக்கிறேன். விஜய் சார்க்கு அவுட் சைட் புட் பிடிக்காது” என்றாள்.

“அக்கா பிளீஸ் சீக்கிரம் ஏதாவது பண்ணேன். ரொம்ப பசிக்குது” என்றான் அகரன்.

“இருடா போய் சமைக்கிறேன்” என்றவள் வெளியே செல்ல எத்தனிக்க,

“என்னக்கா சமைக்கிறேன்னு சொல்லிட்டு கீழ போற?” என்றான் அகரன்.

“இனி சமையல் எல்லாம் கீழ தான். அங்க தான் சமைக்க போறேன்” என்றாள் வேதா தெளிவாக. சரணின் முகத்தில் அவனறியாமலே புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது.

“என்னண்ணா சிரிப்பு?” என்றான் அகரனும் சிரிப்புடன்.

“வேதா தெளிவாகிட்டா. இனி எல்லாமே தெளிவாகிடும்” என்றான் சரண்.

“அக்கா தெளிவாக்கிடுவா. வேதான்னா சும்மாவா?” என்றான் அகரன்.

கீழே வந்த வேதாவை ஆச்சர்யமாய் பார்த்தாள் கீர்த்தனா.

“அண்ணி..! அமுதா அத்தைக்கு ஏதாவது சாப்பிட குடுத்திங்களா?” என்றாள்.

“மார்னிங் அம்மா சாப்பிட வச்சுட்டாங்க வேதா. நடந்த பிரச்சனையில அவங்களும் எப்படியோ வருதுன்னு போய் படுத்துட்டாங்க. லஞ்ச் நாம ஆர்டர் போட்டுக்கலாம்” என்றாள்.

“இல்லண்ணி நான் சமைச்சுடுறேன்” என்றவள், சமையல் வேலையில் இறங்க, அவளை ஆச்சர்யமாக பார்த்தாள் கீர்த்தனா. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அப்படி அழுதுட்டு போன பொண்ணா, இப்ப இப்படி வந்து பம்பரமா சமைக்குது என்ற எண்ணம் தான்.

“நான் ஏதாவது ஹெல்ப் பண்ணவா வேதா?” என்றாள் கீர்த்தனா.

“இதை மட்டும் கட் பண்ணி குடுங்க”

“என்ன சமைக்க போற வேதா?” என்றாள்.

“பிரிஜ்ல வேற காய் எதுவும் இல்ல அண்ணி. அதனால சாம்பார், ரசம், சேனை வறுவல் பண்ணிடலாம். வேணும்னா கொஞ்சம் வத்தக்குழம்பு வச்சுக்கலாம்.” என்றாள்.

“சூப்பர் மெனு” என்றவள் அவளுக்கு உதவி செய்ய அடுத்த ஒரு மணி நேரத்தில் கடகடவென்று சமைத்து முடித்தாள்.

“அண்ணி நான் போய் குளிச்சுட்டு வரேன்.நீங்க எல்லாம் சாப்பிடுங்க” என்றாள்.

“நீ குளிச்சுட்டு வா வேதா. சேர்ந்தே சாப்பிடலாம்” என்றாள் கீர்த்தனா.

“இல்லண்ணி அகரன் பசிக்குதுன்னு சொன்னான். நீங்க முதல்ல சாப்பிடுங்க. நான் அவனை வர சொல்றேன்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே வந்துவிட்டான் அகரன்.

“வாசனையே என்னை இழுத்துட்டு வந்திடுச்சு” என்றவன் டைனிங் டேபிளில் அமர,

“சரண், விஜய் அண்ணாவை சாப்பிட கூப்பிடுங்க” என்றாள் கீர்த்தனா.

“ஏன்? நான் நல்லா இருக்குறது உனக்குப் பிடிக்கலையா? அவன் வரும் போது வருவான். நீ எங்களுக்கு சாப்பாட்டைப் போடு” என்றான் ஓரக்கண்ணால் வேதாவை பார்த்தபடி.

விஜயின் அறையையே யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்த வேதா, பின் என்ன நினைத்தாளோ மேலே சென்று விட்டாள்.

“நான் போய் அண்ணாவை கூப்பிடுறேன்” என்றாள் கீர்த்தனா.

“லூசாடி நீ. கொஞ்ச நேரம் அமைதியா இரு” என்று சரண் சொல்ல,

“இப்ப நான் என்ன தப்பா சொல்லிட்டேன்” என்ற கீர்த்தனாவிற்கு சரணின் முறைப்பில் லேட்டாக பலப் எறிந்தது.

“சரி சரி முறைக்காதிங்க” என்றாள்.

“அண்ணா வேதா இன்னைக்கு அநியாயத்துக்கு டேஸ்ட்டா சமைச்சிருக்கா” என்றான் அகரன்.

“டேய் இது நமக்கு சமைச்சது இல்லை. அவ புருஷனுக்கு சமைச்சது. ஏதோ நெல்லுக்கு பாயிற நீர் புல்லுக்கும் பாயிற மாதிரி நாமளும் சாப்பிட்டுக்க வேண்டியது தான்” என்றான் சரண்.

“என்ன சொல்றிங்க? பேசிட்டிங்களா வேதாகிட்ட?” என்றாள் கீர்த்தனா ஆர்வமாய்.

“அவ தெளிவா வந்ததுலையே தெரியலையா?” என்றான் சரண்.