அவன் அறைந்து சாற்றிய கதவையே பார்த்துக் கொண்டிருந்தவளின் கண்கள் கண்ணீரை தாரை தாரையாய் வெளியேற்றிக் கொண்டிருக்க, அப்படியே நின்றிருந்தவளின் மனதிற்குள் அத்தனை போராட்டம். தனக்கான உரிமையை அவனே பறைசாற்ற வேண்டும் என்று அவள் நினைக்க, தன்னிடத்தில் அவளின் உரிமையை அவளே விருப்பப்பட்டு நிலைநாட்ட வேண்டும் என்று அவன் நினைக்க, நடுவில் அடிபட்டது போனது என்னவோ இருவரின் உணர்வுகளும், உள்ளங்களும் தான்.
அவன் கதவைத் திறப்பான் வெளியே வருவான் என்று எவ்வளவு நேரம் நின்றாளோ வேதா..? அவன் சாற்றியது அறைக்கதவையா? இல்லை மனக்கதவையா? என்ற யோசனைகளும் வந்து அவளுக்குள் பேயாட்டம் போட்டுக் கொண்டிருந்தது.
“வேதாம்மா..!” என்று சரண் ஆறுதலாய் அணைத்துக் கொள்ள, அதுவரை மௌனமாய் வெளி வெளி வந்த கண்ணீர் இப்போது கேவலுடன் வெளிவந்தது.
“வேதாம்மா..! அழாதடா. அவன் தான் டென்ஷன்ல இருக்கான்னு தெரியுதுல்ல. நீயும் கூட கூட பேசியிருக்க வேண்டாம்.” என்றான் சரண்.
“ஆமா, என் மேல தான் தப்பு. இங்க நான் மட்டும் தான் தப்பு. நீங்க எல்லாம் சரி. எனக்கு யாரும் வேண்டாம். எவனும் வேண்டாம் போங்கடா” என்றவள், அழுது கொண்டே ஓடி விட்டாள்.
அழுது கொண்டு செல்லும் தங்கையைக் கண்டவன் கண் கலங்கி நின்றான்.
“சரண் நீங்க என்ன சின்ன பிள்ளை மாதிரி?” என்று கீர்த்தனா கண்டிக்க,
“இப்போத்தான் கொஞ்சம் நல்லா இருந்தாங்க. அதுக்குள்ளே அந்த ஜென்மத்துக்கு மூக்கு வேர்த்துடுச்சு. சும்மா இருந்தவனை வந்து சீண்டி விட்டுட்டு போய்ட்டா” என்றான் சரண் கோபமாக.
“நாம மதுரை போயிருந்தப்பவே வந்திருக்காங்க சரண். அம்மா அப்பவே விடலை போல. விஜய் அண்ணாகிட்ட சொல்லி இருக்காங்க. விஜய் அண்ணாவும் அவங்களை இங்க வர விடலை. அதான் இன்னைக்கு காலையிலேயே வந்து பஞ்சாயத்தை கூட்டிட்டாங்க. போனவ ஒரேடியா போக வேண்டியது தானே. கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம, மறுபடியும் விஜய் அண்ணா வேணும்னு வந்து நிக்கிறா?” என்று கீர்த்தனா அவள் பங்கிற்கு பொருமித் தள்ளினாள்.
“ரெண்டு பேரும் இப்படி ஆளுக்கு ஒரு பக்கம் நின்னா என்ன தான் பண்றது?. ரெண்டு பேருமே ஒருத்தருக்கு ஒருத்தர் சளைச்சவங்க இல்லை” என்றான் சரண் சலிப்பாய்.
“சரண்..! நீங்க போய் வேதாகிட்ட பேசுங்க. அவ சின்ன பொண்ணுன்னாலும் எதுலையும் பிடிவாதம் கிடையாது. அவ கோபம் அதிக பட்சம் ஒரு நாளைக்கு மேல இருந்தது இல்லை. எடுத்து சொன்னா ஈசியா புரிஞ்சிக்கிற கேரக்டர். விஜய் அண்ணா இப்ப இருக்குற மன நிலைமைக்கு அவ பேசினா தான் சரியா வரும். ஆனா, அதை அவ நிதானமா பண்ணனும். இனியும் இவங்களை இப்படியே விட்டா, போறவ வர்றவ எல்லாம் இவங்க வாழ்க்கைக்குள்ள வந்துடுவாளுங்க” என்றாள் கீர்த்தனா.
“என்னாச்சுண்ணா? ஏன் வேதா அழுதுகிட்டே வந்தா?” என்று அகரன் வர,
“இந்நேரம் வரைக்கும் என்ன பண்ண நீ?” என்றான் சரண் கோபமாக.
“ஏன்? எதுவும் பிரச்சனையா? இன்னைக்கு லீவ் தானன்னு தூங்கிட்டேன். எப்பவும் வேதா தான் எழுப்புவா. இன்னைக்கு அவளும் எழுப்பலை.” என்றான் அகரன்.
“ஒண்ணுமில்லை அகரா.நீ இரு. நான் போய் பேசுறேன் வேதாகிட்ட” என்ற சரண் அவளைத் தேடி சென்றான்.
கால்களை இறுகக் கட்டி முகத்தைப் புதைத்து அழுது கொண்டிருந்தவள் நிமிர்ந்தாள் இல்லை.
“இப்போ இப்படி விரக்தி ஆகுற அளவுக்கு என்ன நடந்தது?” என்றான்.
“ஏன் நீ பார்த்துட்டுதான இருந்த? இன்னும் என்ன நடக்கணும்?எப்ப பார்த்தாலும் என் மேல மட்டும் தான் கோபப்படுறார். அவருக்கு என்னைப் பிடிக்கவேயில்லை” என்று அதற்கும் அழுதாள்.
“அவருக்கு என்னைப் பிடிச்சிருந்தா அவங்க முன்னாடி அப்படி அமைதியா நின்னிருப்பாரா? அவர் சொந்தக்காரங்க கிட்ட அவரோட மனைவின்னு அவர் தானே அறிமுகப்படுத்தனும்” என்றாள் கண்ணீருடன்.
“அது சொந்தக்காரங்களா இருந்தா அவன் அறிமுகப்படுத்தலைன்னு நீ அழறதுல ஒரு ஞாயம் இருக்கு. வந்தவங்க துரோகிங்க.அழகா போய்ட்டு இருந்தவன் வாழ்க்கையை அப்படியே தலைகீழா மாத்துனவங்க.அவன் கோபத்துல இருக்கும் போது, அவங்க முன்னாடி அந்த இடத்துல அவனோட மனைவி உரிமையா வலம் வரணும்ன்னு அவன் நினைச்சிருக்கலாம்” என்றான் சரண்.
“அவங்க யாருன்னு எனக்கெப்படி தெரியும்? ஏன் அவ என்னை இளக்காரமா பார்த்தப்ப, என் பொண்டாட்டியை எப்படி நீ பார்க்கலாம்னு நாக்கைப் பிடுங்கிற மாதிரி கேட்ருக்கலாம் தான?” என்றாள்.
“உனக்கு புரியுதா இல்லையா வேதா. இது உன் புருஷன் வீடு. உன் வீடு. இங்க ஒருத்தி உள்ள வந்து உன்னை ஒருத்தி இளக்காரமா பார்க்குறா? உன் புருஷன் தான் வேணும்ங்கிறா. அந்த இடத்துல அவ செவுல்ல ஒன்னு விடாம வேடிக்கை பார்த்தா உன்னைக் கொஞ்சுவாங்களா?” என்றான் சரண்.
“அவர் தான் நான் யாருன்னு அவங்ககிட்ட சொல்லையே?” என்றாள் மீண்டும்.
“இந்த பழைய பஞ்சாங்கத்தை விடப் போறியா இல்லையா? ரெண்டு பேர்ல யார் சொன்னா என்ன? இதுல என்ன ஈகோ உங்களுக்கு? அவன்தான் கோபத்துல நிதானத்துல இல்லை. நீ நிதானமா தான இருந்த. அப்போ நீ சொல்றதுக்கு என்ன? நீ விஜய் கிட்ட கேட்ட அதே கேள்வியை நான் கேட்குறேன். அவன் சரியா இல்லை, அதான் சேகர் அப்படி நடந்துகிட்டான்னு சொன்ன தான? அப்போ நீயும் சரியா இல்லை, அதான் அந்த யாழினி இன்னைக்கு இப்படி பேசிட்டு போறா?” என்றான் சரண்.
“அண்ணா..!!” என்றவளுக்கு வார்த்தை வரவில்லை.
“அவன் தாலி கட்டினதை மறைச்சான், உண்மையை சொல்லலைன்னு இன்னும் எத்தனை நாளைக்கு அதையே சொல்லிட்டு இருக்க போற. அப்பவாவது அவன் மட்டும் தான் மறைச்சான். ஆனா இப்ப,உண்மை தெரிஞ்சும் நீ என்ன பண்ணிட்டு இருக்க? நீயும் அவன் கூட சேர்ந்து மறைச்சுட்டு இருக்க? உனக்குப் புரியுதா இல்லையா?
உண்மையை மறைச்சாலும் அவனாவது எல்லா இடத்துலயும் உனக்காக நின்னான். எங்கயும் விட்டுக் கொடுக்காம உனக்காக மட்டும் தான் நின்னான். உனக்காக அத்தனையும் பண்ணினான். ஆனா, அவனுக்காக நீ என்ன பண்ண? முன்னாடி உண்மை தெரியாது பரவாயில்லை. இப்போதான் தெரியுமே? இப்போ அவன் பக்கத்துல நீ நிக்க வேண்டிய சூழ்நிலையில கூட, அவன் தான் உன்னை பொண்டாட்டின்னு சொல்லனும்னு எதிர்பார்க்குற? ஏன் அவனை புருஷன்னு சொல்றதுல உனக்கு என்ன அப்படி கௌரவ குறைச்சல்.” என்றான் சரண்.