“அண்ணியையும் வர சொல்லியிருக்கலாம் ஆன்ட்டி. அவங்களும் ஆபீஸ் முடிஞ்சு டயர்டா தான் வருவாங்க” என்று பேசிய படியே அடுப்பு திண்டில் ஏறி அமர்ந்திருந்தாள்.

“ஆமா இதென்ன ட்ரஸ்” என்றார் விஜயின் சித்தி.

“பட்டுப்பாவாடையும் டீ ஷேர்ட்டும்” என்றாள் பக்கோடாவை வாயில் வைத்தபடி.

“இதென்ன காம்பினேஷன்” என்றார் புரியாமல்.

“அது ஊர்ல இருக்கும் போது போட்டு அப்படியே பழகிடுச்சு ஆன்ட்டி.” என்றாள் சிரித்தபடி.

“பக்கோடா எப்படி இருக்கு” என்றார்.

“செம்ம ஆன்ட்டி. இன்னைக்கு செம்ம பசியோட வீட்டுக்கு வந்தேன். உங்களை எக்ஸ்பெக்ட் பண்ணவே இல்லை. பசியா இருந்த வயித்துக்கு பக்கோடாவை வார்த்திங்க” என்றாள்.

“வேற ஏதாவது டிபன் மாதிரி செஞ்சு தரவாடா?” என்றார்.

“இல்ல ஆன்ட்டி. இதுவே போதும்.” என்றவள்,

“நீங்க உட்காருங்க. நான் டீ போடுறேன்” என்றாள்.

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். இன்னைக்கு நானே உனக்கு போட்டுத் தரேன்” என்றவர் அதற்கான வேலைகளில் இறங்க,

“நீங்க ரொம்ப ஸ்வீட்” என்றாள் சிரிப்புடன்.

“ஏன் அவங்களையும் சாப்பிட போறியா?” என்ற குரலில் திரும்பிப் பார்க்க, அவளைப் பார்த்தபடி நின்றிருந்தான் விஜய்.  அவனைப் பார்த்ததும் சட்டென்று சமையல் திண்டில் இருந்து குதித்து  விட்டாள். அவள் குதித்த வேகத்தில் அவனுக்குத் தான் மூச்சடைத்தது.

“நான் ஹால்ல இருக்கேன் ஆன்ட்டி” என்றபடி சென்றவள், அவனைக் கடந்து செல்லும் போது இடித்துவிட்டு சென்றாள்.

‘தெரிஞ்சு இடிச்சாளா இல்ல தெரியாம இடிச்சாளா?’ என்று விஜய் தான் குழம்பிப் போனான்.

சோபாவில் அமர்ந்து பக்கோடா சாப்பிட்டுக் கொண்டிருந்தவளின் செல்போன் மணி அடிக்க, ஆனந்து தான் அழைத்திருந்தான்.

“சொல்லு மச்சான்” என்றாள்.

“மச்சான் அந்த அசைன்மென்ட எப்படி எழுதி முடிச்ச? ஒண்ணுமே தெரியலை. இதுல அடுத்த டாப்பிக் வேற இருக்கு” என்றான் பாவமாய்.

“வேதா இருக்க பயமேன் மச்சான். நான் எழுதுனதை அப்படியே போட்டோ எடுத்து வச்சிருக்கேன். அதை அப்படியே எழுதாம கொஞ்சம் பட்டி, டிங்கிரி பார்த்து, மானே,தேனே பொன்மானே எல்லாம் சேர்த்துக்கோ” என்றாள்.

“நீ இல்லைன்னா என்னோட நிலைமை என்ன ஆகியிருக்கும். அப்படியே அடுத்ததை எழுதிட்டா அதையும் போட்டு விடு மச்சான்” என்றான்.

“அடேய், அது இன்னும் நானே எழுதலை. எழுதிட்டு போட்டு விடுறேன். திரும்ப திரும்ப சொல்றேன். அப்படியே காப்பி பண்ணி வைக்காத. அப்பறம் அந்த வாத்து மூக்கன்கிட்ட அதுக்கும் பேச்சு வாங்கணும்” என்று போனை வைத்தவள், பக்கோடாவை எடுத்து வாயில் வைக்க போக, எதிரில் நின்ற விஜயை பார்த்தாள்.

“அய்யயோ..! ஆர்வக் கோளாறுல அவர் இருக்காருன்னு மறந்துட்டு பேசிட்டோமே” என்று நினைத்தவள், எதுவும் நடக்காததைப் போல் பார்த்து வைத்தாள்.

“பக்கோடா வேணும்னா ஆன்ட்டிகிட்ட கேளுங்க.” என்றாள் சிரிக்காமல்.

“எவ்வளவு தைரியம் இருந்தா என் முன்னாடியே காப்பி அடிக்கிறதைப் பத்தி பேசுவ?” என்றான்.

“சார் இது ஒன்னும் காலேஜ் இல்லை, வீடு. அப்பறம் நீங்க காலேஜ்ல தான் ப்ரொபசர். வீட்ல இல்லை. நான் என்ன எக்சாம்லயா காப்பி அடிக்க சொன்னேன். ஜஸ்ட் ஒரு அசைன்மென்ட்.இதுக்கு இப்படி ஒரு அக்கப் போறா?” என்றாள்.

“நாளைக்கு மட்டும் அவன் அப்படியே காப்பி பண்ணிட்டு வரட்டும். அப்பறம் இருக்கு உங்களுக்கு” என்றான். அவளோ அதையெல்லாம் கண்டுகொண்டாளில்லை.

“ஆமா இப்ப என்ன பண்ண போறீங்க?” என்றாள் சாவகாசமாய். தன்னிடம் சகஜமாய் பேசியவளை சந்தேகத்தோடு பார்த்தான் விஜய்.

‘இவ இப்படியெல்லாம் சகஜமா பேசுற ஆள் இல்லையே’ என்று நினைத்தவன்,

“ஏன்?” என்றான்.

“இல்ல, எனக்கு அந்த இன்னொரு டாப்பிக் புரியலை. அதுல கொஞ்சம் கிண்ட்ஸ் எடுத்துத் தாங்க. எழுதுறது நான் எழுதிக்கிறேன்” என்றாள்.

“உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என்கிட்டையே கேட்ப” என்றான் விஜய் அதற்கும் கோபமாக.

“இப்ப என்ன சார் உங்களுக்கு பிரச்சனை? உங்களுக்கு புரியுதா இல்லையா? இது வீடு. காலேஜ் இல்லை. அங்க தான் டார்ச்சர் பண்றிங்கன்னா,இங்கயுமா? ஹெல்ப் பண்ண இஷ்ட்டம்னா பண்ணுங்க. இல்லைண்ணா சரண் அண்ணா வந்ததும் கேட்டுக்கிறேன்” என்றாள் எரிச்சலுடன்.

“போய் புக்ஸ்ஸ எடுத்துட்டு வா” என்றான்.

“தோ..ஆல்ரெடி எடுத்துட்டு தான் வந்தேன்.” என்றாள்.

“அதுசரி, நீ பிளானோட தான் வந்திருக்க. காலேஜ்ல ரோசத்தோட எழுதுன மாதிரி இதையும் எழுத வேண்டியது தான?” என்றான்.

“நான் தான் சொல்றேனே இது எனக்குப்  புரியலைன்னு. அப்பறம் இந்த ஒரு பேப்பர் மட்டுமில்லை. மத்த பேப்பர் லெசன்ஸ் எல்லாம் படிக்கணும்.” என்றாள்.

“முடிஞ்ச வரைக்கும் நீயே ட்ரை பண்ணு. முடியலைன்னா ஹெல்ப் பண்றேன்” என்றான்.

“எனக்கு வெளிய ஒரு வேலை இருக்கு சித்தி. நான் போய்ட்டு வந்திடுறேன்” என்றவள், அவளிடமும் தலையாட்டிவிட்டு சென்று விட்டான்.

அவர் டீ கொண்டு வந்து கொடுக்க,

“லவ் யு ஆன்ட்டி” என்று டீயை வாங்கியவள், அதை ரசித்துக் குடிக்க ஆரம்பித்துவிட்டாள். இருவரும் பேசிக் கொண்டிருக்க, பேச்சு வாக்கில்,

“அப்பறம் அமுதா ஆன்ட்டிக்கு எப்ப இருந்து இப்படி முடியாம இருக்கு?” என்றாள் வேதா டீயைக் குடித்துக் கொண்டே.

“அது விஜய் கல்யாணம் நின்னப்ப இருந்து..” என்று பேச்சு வாக்கில் உளறியவர், அப்படியே வார்த்தையை முழுங்கினார்.

“என்ன ஆன்ட்டி சொன்னிங்க? விஜய் சார் கல்யாணம் நின்னு போயிடுச்சா?” என்றாள் ஏகத்திற்கும் அதிர்ந்த முகத்துடன்.

“அது வேதா..” என்று அவர் தயங்க,

“சொல்லுங்க ஆன்ட்டி” என்றாள் அதிர்ச்சி மாறாமல்.

“அது ஒரு பெரிய கதை வேதா. நீ தான் நிறைய படிக்க இருக்குன்னு சொன்னியே. இன்னொரு நாள் இதைப் பத்தி பேசுவோம். நீ இப்போ படிமா. நான் போய் டிபன் செஞ்சு வச்சுட்டு கிளம்பறேன்.” என்று அதோடு முடித்துக் கொண்டார்.

கேட்ட விஷயமே அவளுக்கு அதிர்ச்சி. இதில் எங்கிருந்து படிக்கும் மனநிலைக்கு செல்வாள்.

‘அப்படி என்ன நடந்திருக்கும்? இத்தனை நாள் நாம இப்படியெல்லாம் யோசிக்கலையே?’ என்ற கேள்வி தான் அவள் மூளையை குடைந்து கொண்டிருந்தது.

“அப்படியென்ன யோசனை?” என்று அகரன் கேட்டது கூட அவளுக்கு கேட்கவில்லை.

“வேதா..!” என்று அவன் அவளை உலுக்க,

“ங்கான்..!! என்ன அகரா? நீ எப்போ வந்த?” என்றாள்.

“நான் வந்தது கூட தெரியாம அப்படி என்ன யோசனை?” என்றான்.

“அது.. சும்மா.. ஏதோ ஒரு யோசனை. நீ என்ன இவ்வளவு லேட்” என்றாள்.

“நான் லேட்டா வர்றது இருக்கட்டும். நீ ஏன் இப்படி இருக்க?” என்றான்.

“இப்ப என்னடா பிரச்சனை உனக்கு. போய் படிக்கிற வேலையைப் பாரு” என்றாள்.

“அது சரி. அப்ப அப்ப உனக்கு பேயடிச்சுடும்” என்று புலம்பிக் கொண்டே சென்றான்.

ஒன்பது மணிக்கு மேல் வீட்டிற்கு வந்த விஜய் கண்டது என்னவோ, சோபாவில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்த அகரனையும், அவன் மடியில் தலை வைத்து உறங்கிக் கொண்டிருந்த வேதாவையும் தான்.

‘என்ன இவ இங்கயே தூங்கிட்டா?’ என்று நினைத்தவன், அங்கு பரப்பிக் கிடந்த அவளின் புத்தகங்களை எல்லாம் எடுத்து வைக்க, அசைன்மெட் பேப்பரில் ஒரு வரி கூட எழுதவில்லை.

‘கொஞ்சமாவது பயமிருக்கா? நாளைக்கு இருக்குடி உனக்கு’ என்று ஒரு மனம் கறுவ,

“அவ தான் ஹெல்ப் கேட்டா. நீயும் பண்றேன்னு சொல்லிட்டு, இப்படி லேட்டா வந்தா அவ என்ன பண்ணுவா?” என்று ஒரு மனம் அவள் பக்கம் பேசியது.

“ரெண்டு பேரும் சாப்பிட்டிங்களா அகரா?” என்றான்.

“சாப்பிட்டோம் அண்ணா. உங்ககிட்ட ஏதோ டவுட் கேட்டாளாமே. நீங்க வந்த உடனே அவளை எழுப்ப சொன்னா” என்ற அகரன் அவளை எழுப்ப முற்பட,

“இல்ல வேண்டாம் விடு அகரா. டேப்லட் போட்ருப்பா தான. அதுல ஸ்லீப்பிங் பில்ஸ் இருக்கும். டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்” என்றான் விஜய்.

“இல்லண்ணா..! ஏதோ அசைன்மென்ட் கம்ப்ளீட் பண்ணனுமாம். இல்லைன்னா அந்தாளு காட்டு கத்து கத்துவான் அப்படி இப்படின்னு புலம்பிட்டு இருந்தாண்ணா” என்றான்.

“இவளை” என்று பல்லைக் கடித்தான் விஜய்.