அத்யாயம் 24:

“என்னடி பிரேக் டைம்ல வந்து பார்க்க சொன்னாரு? இங்க வந்து பார்த்தா சாரை காணலை”என்றாள்  ரம்யா.

“சார் பிரேக் எடுக்க போயிருப்பாரா இருக்கும்” என்றாள் வேதா நக்கலாக.

“மெதுவா பேசுடி. சுத்தி ஸ்டாப் இருக்காங்க. யாரு காதுலயாவது விழுந்து வைக்கப் போகுது” என்று ரம்யா சுற்றும் பார்க்க, சரண் தான் இவர்களை முறைத்துக் கொண்டிருந்தான்.

“வேதா சரண் சார் முறைக்குறார்” என்று ரம்யா சொல்ல,

“சரண் சார், ஹெச்ஓடி சார் வர சொன்னார்.அதான் வந்திருக்கோம்” என்றாள் சிரித்தபடி.

“அவர் இப்ப உன்கிட்ட கேட்டாரா? ஏண்டி வான்ட்டேடா போய் வண்டியில ஏறுற?” என்று ரம்யா முனங்க,

“சரண் சார் கிட்ட சொல்லாம விஜய் சார் எங்கயும் போக மாட்டார்டி” என்றாள் வேதா.

“உனக்கு ரொம்பத் தெரியுமோ”

“தெரிஞ்சதால தான் சொல்றேன்” என்ற வேதா,

“ஆமா ஆனந்து நேத்து தலைவர் படத்துக்கு போனேன்னு சொன்னியே படம் எப்படி இருந்தது” என்றாள்.

“அதை ஏன் வேதா கேட்குற. படம் சும்மா தாறுமாறு தக்காளி சோறு” என்றான் ஆனந்த்.

“வெளக்கமாறு” என்று துப்பிய ரம்யா,

“ஏண்டா? நாம என்ன பிக்னிக்கா வந்திருக்கோம். தாறுமாறாம் தக்காளி சோறாம். விஜய் சார் இப்போ நம்பலை பொங்க சோறு ஆக்கப் போறாருடி” என்று புலம்பிக் கொண்டிருக்க,

“அதெல்லாம் ரைட் ஹேண்ட்ல ஹேண்டில் பண்ணுவா இந்த வேதா” என்று சொல்லிக் கொண்டு திரும்ப, அவர்களை முறைத்தபடி நின்றிருந்தான் விஜய்.

அவனைப் பார்த்த ரம்யா,

“போச்சு..! இவளுக்கு இதே வேலையா போச்சு. எப்ப பார்த்தாலும் வாயை விட வேண்டியது. வாங்கிக் காட்ட வேண்டியது. அசைன்மென்ட்டோட சேர்த்து இன்னும் எத்தனை பனிஷ்மென்ட்டும் சேரப் போகுதோ?” என்று உள்ளுக்குள் கதறியவள், வெளியே முகத்தை பாவமாய் வைத்துக் கொண்டாள்.

அவனது இருக்கையில் அமர்ந்தவன், நிதானமாய் மூவரையும் பார்த்தான்.

“அப்பறம் ஆனந்த்..! தலைவர் படம் வேற லெவல் போல” என்றான் விஜய்.

“ஆமா சார்..! சும்மா வேற லெவல்.பைட் சீன் எல்லாம் ஹாலிவுட் தரம் சார். சினிமோட்டோகிராபி அடிச்சிக்க முடியாது” என்று தலைவரின் படத்திலேயே ஆழ்ந்துவிட்டான். விஜய் அவனை முறைத்துக் கொண்டிருக்க,

“மாடு மாடு..! அவரே போட்டு வாங்கிட்டு இருக்கார். இந்த லூசு உளறிகிட்டு இருக்கு.”என்று பல்லைக் கடித்தவள்,

“டேய் சோடா புட்டி, அடக்கி வாசி” என்றாள் வேதா மெதுவாக.

“நீங்க ரெண்டு பேரும்..” என்று வேதாவையும், ரம்யாவையும் பார்க்க,

“சார் நேத்து நான் ஹாப்டே லீவ். உடம்பு சரியில்லை” என்று உண்மையை சொன்னாள் ரம்யா.

“சரி நீங்க” என்றான் வேதாவிடம்.

“நான் நாளைக்கு கண்டிப்பா சப்மிட் பண்ணிடுறேன் சார்” என்றாள் வேகமாய்.

“நான் இன்னைக்கு ஏன் பண்ணலைன்னு கேட்டேன். நீங்க நாளைக்குன்னு காரணம் சொல்லிட்டு இருக்கீங்க?” என்றான்.

“நீங்க அசைன்மென்ட் குடுத்ததே எனக்குத் தெரியாது சார். நான் கிளாஸ்ல இல்லாத டைம்ல ரெப் சொல்லியிருப்பாங்க போல” என்றாள்.

“அவங்க சொல்லும் போது நீங்க கிளாஸ்ல இல்லைன்னு சொல்லுங்க. இர்ரெஸ்பான்ஸ்பில் ஆன்சர்” என்று முகத்தை கடுமையாக வைத்துக் கொண்டு பேசினான் விஜய்.

“சாரி சார்..!” என்றாள் அமைதியாக.

“உங்க சாரியை தூக்கி குப்பையில போடுங்க. படிக்க வர்றீங்களா? எதுக்கு வர்றீங்க? ஒன்னும் உருப்படி கிடையாது. கிளாஸ் டைம்ல புல்லா அரட்டை அடிக்க வேண்டியது. இல்லைன்னா ஒண்ணுமே தெரியாத மாதிரி நடிக்க வேண்டியது” என்று கத்தியவன்,

“சார்க்கு தலைவர் படம் பார்க்க நேரமிருக்கு. அசைன்ட்மென்ட் எழுத நேரமில்லை.” என்று ஆனந்தைப் பார்த்து திட்டியவன்,,

“என்ன பன்னுவிங்களோ தெரியாது. ரெண்டு டாப்பிக்ல அசைன்மென்ட் குடுத்திருக்கேன். இன்னைக்கு ஈவ்னிங்குள்ள ஒரு டாப்பிக்கையாவது  எனக்கு சப்மிட் பண்ணியிருக்கணும்.” என்றான்.

“இன்னைக்கேவா?” என்று ரம்யாவும், ஆனந்தும் அதிர,

“ஓகே சார்..!” என்றாள் வேதா பட்டென்று. அவள் அப்படி சொல்லவும் அவளை முறைத்தவன்,

“இந்த ஆட்டிட்யூட் எல்லாம் காட்டாதிங்க வேத வர்ஷினி. கொஞ்சம் ரெஸ்பெக்ட்டா நடந்துக்கோங்க” என்றான் வேண்டுமென்றே.

“சரிங்க சார்..!” என்றாள் கடுப்பை மறைத்து. ஆனால் உள்ளே கனன்று கொண்டிருந்தது அவளுக்கு.

அவர்கள் சென்றபின் அங்கிருந்த ஆசிரியைகள் பிடித்துக் கொண்டனர்.

“விஜய் சார் என்னாச்சு? ஏன் இவ்வளவு ஹார்ஷா பிகேவ் பண்றிங்க? நீங்க எப்பவும் இப்படி பேச மாட்டிங்களே?” என்றனர்.

“ஆமா விஜய் சார்..! அவங்க மூணு பேருமே படிக்கிற ஸ்டூடண்ட்ஸ் தான். அதுலயும் வேத வர்ஷினி சச் அ பிரிலியன்ட் அன்ட் வெரி ஒபீடியன்ட்லி ஸ்டுடென்ட். நீங்க என்னடான்னா இப்படி சொல்றிங்க?” என்றனர் புரியாமல்.

“குடுத்த வொர்க்க சரியா செய்யலைன்னா கோபம் வராத மேம்.” என்றவன் அதோடு முடித்துக் கொண்டான்.

அவனருகே சென்ற சரண்,

“என்னாச்சு மச்சான்” என்றான் அமைதியாக.

“என்னாச்சு? ஒன்னும் ஆகலையே?” என்றான்.

“இல்ல, இப்போ போன் வர்ற வரை நல்லா தான் இருந்த. பேசிட்டு வந்ததுக்கு அப்பறம் தான் டென்ஷனா தெரியற. அவங்களையும் அதிகப்படியா கத்திட்ட. சாதாரண அசைன்மென்ட்க்கு இப்படி ரியாக்ட் பண்ணியிருக்க வேண்டாம். அவங்க என்ன ஸ்கூல் ஸ்டூடன்ட்டா?” என்றான் சரண்.

“கொஞ்சம் டென்ஷன் தான்” என்றவன் தலையைப் பிடித்துக் கொண்டான்.

“ஹேய் வேதா இன்னைக்குள்ள எப்படி டி எழுத முடியும்? ரெஸ்ட் ஹவர் கூட இல்லை” என்றாள் ரம்யா.

“என்னைக் கேட்டா, சார் தான் சொல்லிட்டார் இல்ல. எழுதித்தான் ஆகணும்.” என்றாள் எரிச்சலுடன்.

“நீதாண்டி டக்குன்னு சரின்னு சொன்ன. நம்ம மேல தப்புன்னா நாம தான் ரெக்வெஸ்ட் பண்ணி கேட்கணும். பெரிய இவ மாதிரி சரின்னு சொல்லிட்ட” என்று ரம்யா புலம்ப,

“நாம போய் நாளைக்கு வரைக்கும் டைம் கேட்போம். கண்டிப்பா டைம் கொடுப்பார் சார்” என்றான் ஆனந்த்.

“உங்களுக்கு வேணும்ன்னா, நீங்க போய் கேளுங்க. நான் லைப்ரரி போறேன்” என்றவள் கிளம்பிவிட்டாள்.

“இவ என்ன லூசா?” என்பதைப் போல் பார்த்திருந்தனர் இருவரும்.

ரம்யாவும், ஆனந்தும் மீண்டும் சென்று விஜயிடம் மறுநாள் வரை அனுமதி கேட்க, வேதா செல்லவேயில்லை.

“நீங்க ரெண்டு பேர் மட்டும் தான் வந்திருக்கிங்க?” என்றான்.

“பெர்மிஷன் எங்களுக்கு மட்டும் தான் சார்” என்றாள் ரம்யா.

“ஹோ..! ஓகே.! பட் நாளைக்கும் இப்படியே வந்திங்கன்னா நோ எக்ஸ்க்யூசஸ்” என்றான்.

“ஓகே சார்..! தேங்க் யு சார்” என்றபடி வெளியே வந்தவர்கள்,

“பாரு நாம வந்து கேட்ட உடனே சார் ஓகே சொல்லிட்டார். வேதாவுக்கு இதுல என்ன ஈகோ” என்று புலம்பிக் கொண்டனர்.

அங்கு வேதாவோ, மதிய உணவைக் கூட தவிர்த்துவிட்டு தீயாய் வேலை செய்து கொண்டிருந்தாள். கடைசி பாடவேளை பொறுப்பாசிரியரிடம் அனுமதி வாங்கி, எப்படியோ அதை தயார் செய்து, எழுதி முடித்துவிட்டாள். அவசரமாக செய்திருந்தாலும் நேர்த்தியுடன் செய்திருந்தாள்.

“வேதா முடிச்சிட்டியா?” என்ற ரம்யாவுக்கு ஆச்சர்யம்.

“ம்ம்! ஒரு டாப்பிக் முடிச்சுட்டேன். இன்னொன்னை வீட்ல போய் தான் பண்ணனும்” என்றாள்.

“எங்க காட்டு” என்று பார்த்த ரம்யா,

“சூப்பர்டி” என்றாள் வியந்து.

“சூப்பர் மச்சான்” என்ற ஆனந்த்,

“இவ்வளவு சீக்கிரம் முடிக்க என்ன வேணும்? ரெபரன்ஸ் எதுல எடுத்த?” என்றான்.

“மண்டைல கொஞ்சம் அறிவு வேணும். அதெங்க இங்க இருக்கு. என்னைக்கு பர்ஸ்ட் இயர் பொண்ணு பின்னாடி சுத்த ஆரம்பிச்சியோ அப்பவே மேல் தட்டுல இருந்த கொஞ்ச நஞ்ச அறிவும் காலியாய்டுச்சு.” என்றாள் ரம்யா கேலியுடன்.

“ஓகே நான் போய் சப்மிட் பண்ணிட்டு வரேன். நீங்க போங்க” என்றவள் ஸ்டாப் ரூம் நோக்கி சென்றாள்.

“எக்ஸ்கியூமி சார்” என்று வந்து நின்றவளைப் பார்த்தவன் யோசனையுடன் தலையசைக்க,

“சார் என்னோட அசைன்மென்ட்” என்று நீட்டினாள். அதை வாங்கி புரட்டியவனின் கண்களில் மெச்சுதல் வந்து போனது. மறந்தும் அது வார்த்தைகளில் வரவில்லை.

“ஓகே. நீங்க போகலாம். இன்னொரு டாப்பிக்கை நாளைக்கு சப்மிட் பண்ணுங்க” என்றான்.

“தேங்க்யு சார்” என்று அழுத்தி சொன்னவள் சரணைப் பார்த்தாள். அவன் கிளம்பி தயாராய் இருந்தான்.