அத்யாயம் 21:

“வேணாம் சேகர், வீணா பிரச்சனை ஆகிடும். சொன்னா கேளு” என்று அவள் பொறுமையாய் சொல்லிக் கொண்டிருக்க, அவனோ காதில் கூட வாங்கவில்லை.

அவளின் கைகளை இன்னும் இறுக்கமாக முறுக்க, கோபம் வந்த வேதா அவனை பின் வாக்கில் ஒரு எத்து எத்தினாள். அதில் அவன் சுருண்டு கீழே விழப் போக, வேகமாய் கதவைத் தட்டப் போனாள் வேதா. அதில் அவன் அவளைத் தடுக்க,  கையில் சிக்கிய தாவணியை இழுக்க, இழுத்த வேகத்தில் லேசாய் கிழிந்து, அது அவன் கையோடு வந்தது.

அதுவரை அவளை மிரட்டி காரியம் சாதிக்க பேசிக் கொண்டிருந்தவன், மேலாடையின்றி தெரிந்த அவள் முன்னழகில் மொத்தமாய் கிறங்கி போய் புத்தி கெட்டு நடக்க ஆரம்பித்தான். அந்த ஒரு நிமிட சபலம், அவனை தடுமாற செய்ய, அவளை பலவந்தப் படுத்த முயற்சி செய்தான்.

அவனிடம் சிக்கியிருந்தவள் முடிந்த மட்டும் போராட, தலையெல்லாம் வலிப்பதைப் போல் உணர்ந்தாள். மயக்கம் வருவதைப் போல் இருக்க, தன்னைக் கட்டுப்படுத்தி நிதானத்துடன் இருக்க முயற்சி செய்தாள்.

அவன் கையைக் கடித்து அவனிடமிருந்து விடுபட முயற்சிக்க, அவள் திமிர திமிர அவனின் ஆவேசம் அதிகமானது. அது தன் வீடு, தன் குடும்பம் சொந்தபந்தமெல்லாம் இருக்கிறார்கள் என்பதை அவனின் சபலமும், குடியும்  மறக்கடித்து இருந்தது.

“ஐயோ கடவுளே..!” என்ற வேதாவிற்கு கண்ணீர் அளவேயின்றி வந்து கொண்டிருந்தது. அதே சமயம்

அந்த அறையின் கதவு உடைத்துக் கொண்டு திறக்க, என்னமோ? ஏதோ? என்று  விஜய் உள்ளே நுழைய, அவனைத் தொடர்ந்து கீர்த்தனாவும் சென்றாள்.

அங்கே வேதாவின் நிலையைக் கண்டவனுக்கு, கண்ணில் ரௌத்திரம் குடியேறியது. விஜயைக் கண்டவுடன் எங்கிருந்து தான் அவளுக்கு அவ்வளவு தைரியம் வந்ததோ? சேகரின் பிடியில் இருந்து விலகியவள்,பெரும் கேவலுடன் ஓடிச் சென்று அவனுள் புதைந்து கொண்டாள். ஓடி வந்து தன்னை அணைத்துக் கொண்டவளை கண்டு திகைத்தான்.

“வேதா..! வேதாமா..!”என்றவனுக்கு அவள் நிலை கண்டு பேச்சே வரவில்லை. தன்னுள் ஆளப் புதைந்திருந்தவளை, காற்றுப் புகாத அளவிற்கு மேலும் இறுக்கிக் கொண்டான். அவனை விடவே மாட்டேன் என்பதைப் போல்  கட்டிக் கொண்டு நின்றவளின் கண்ணீர் விஜயின் சட்டையை நனைத்துக் கொண்டிருந்தது. சேகருக்கு அப்போது தான் சுய புத்தியே வந்தது. 

வேதா கேவி கேவி அழுது கொண்டிருக்க,

“அழாதமா..! ஒண்ணுமில்ல..!” என்று அவளைத் தேற்றிக் கொண்டிருந்தவன், சேகரைப் பார்த்த பார்வையில் அவன் உடல் நடுங்கியது.

பார்த்த விஷயத்தில் கீர்த்தனா அதிர்ந்து போய் நிற்க,

“கீர்த்தனா, அந்த கதவை சாத்துடா..!” என்றான் விஜய், அழுத்தமான குரலில்.

கீர்த்தனா சென்று உடைந்திருந்த கதவை முடிந்த அளவு சாற்றி வைத்தாள். அங்கே கிடந்த தாவணியை எடுத்து வந்த கீர்த்தனா, விஜயிடம் நீட்ட, அதை வாங்கி வேதாவிடம் கொடுத்தான். வேதாவை கீர்த்தனாவிடம் ஒப்படைத்துவிட்டு சேகரின் அருகில் சென்றவன், அவனை ஓங்கி ஒரு அறை அறைய, அவனின் ஒரே அடியில் சேகரின் உதடு கிழிந்தது. 

“யார் மேல கையை வைக்கிற?” என்றபடி,

ஆக்ரோஷம் அடங்காமல் அவனை புரட்டி எடுத்துவிட்டான் விஜய். 

வேதாவோ நடுக்கம் குறையாமல் நிற்க, கீர்த்தனா அவளை ஆதரவாக அணைத்துக் கொண்டாள்.

“பிளீஸ் என்னை விட்ருங்க. புத்தி கெட்டு போய், வேதாவை கட்டிக்கணும்ன்ற ஆசையில இப்படி பண்ணிட்டேன்..” என்று அவன் கெஞ்ச, விஜய் கொஞ்சம் கூட அசரவில்லை. 

இன்னும் ஒரு அடி அடித்தால் செத்துவிடுவான் என்ற நிலைமையிலும் கூட அவன் விடாமல் அடிக்க,  சத்தம் கேட்டு அங்கு வந்த சேகரின் அம்மாவோ,

“அய்யோ..! என் புள்ளை” என்று ஓடி வர,அவரின் சத்தத்தில் சேகரின் அண்ணனும் வந்தான்.

“என்ன பண்றிங்க? விடுங்க? எதுக்காக என் தம்பியைப் போட்டு இந்த அடி அடிக்கிறிங்க?” என்றான் சபரி.

“இவன் பண்ண வேலைக்கு இவனை உயிரோட விட்டு வைச்சுருக்கேன்னு சந்தோஷப்படுங்க.” என்றவன்,

“இவனை உயிரோட விடுறதே தப்பு” என்று மீண்டும் ஆக்ரோஷத்துடன் அடிக்கப் போக,

“அவன் என்ன பண்ணான்னு சொல்லாம நீங்க பாட்டுக்கு நாயை அடிக்கிற மாதிரி அடிச்சா நாங்க என்னன்னு நினைக்கிறது? கேட்க ஆளில்லைன்னு நினைச்சிங்களா?” என்று கனியின் கணவன் சபரி குரலை உயர்த்த,

“எங்க வீட்டு பொண்ணுகிட்ட தப்பா நடந்துகிட்டவனை கொஞ்ச சொல்றிங்களா?” என்றாள் கீர்த்தனா. அப்போது தான் அங்கு வேதாவையும் அவள் இருந்த நிலையையும் கண்டனர்.

சபரிக்கோ  அதிர்ச்சி.

“டேய் சேகர், என்னடா இதெல்லாம்? என்ன பண்ணி வச்சிருக்க?இந்த புத்தி எங்க இருந்து வந்துச்சு?” என்று அவனும் ஒரு போடு போட,

“நீயும் ஏண்டா சின்னவனைப் போட்டு அடிக்கிற. அதான் பெருசா ஒன்னும் நடக்கலைல. அந்த பொண்ணு நல்லாத்தான நிக்குது? அடிதாங்காம இவனுக்கு ஏதாவது ஆகிட்டா நான் சும்மா இருக்க மாட்டேன்” என்றார் அவனின் அம்மா.

“பெருசா வேற நடக்கணுமா உங்களுக்கு?” என்று விஜய் பல்லைக் கடிக்க,

“ஏண்டா இப்படி பண்ண?” என்றான் சபரி.

“அப்படியாவது வேதாவை எனக்கு கட்டி வைப்பிங்கன்னு தான்” என்றான் கிழிந்த உதட்டுடன்.

“அடி செருப்பால நாயே..! பொம்பள புள்ள கிட்ட தப்பா நடக்க பார்த்தது மட்டுமில்லாம, அதுக்கு காரணம் வேற சொல்லுவியா?” என்று மீண்டும் அடி போட்டான் சபரி.

“அண்ணா வலிக்குது” என்று அவன் முனங்க, அதற்குள் சத்தம் கேட்டு மொத்த குடும்பமும் வந்துவிட்டது.

வந்தவர்கள் நிலமையை நிமிடத்தில் புரிந்து கொள்ள, நடந்த விஷயத்தை ஏற்றுக் கொள்ளத்தான் முடியவில்லை.

சரண் கொலைவெறியுடன் அவனை நெருங்கி, அவன் பங்கிற்கு ஒரு அறை விட்டான்.

“ஏற்கனவே உன்னை எச்சரிக்கை பண்ணியிருக்கேன்,என் தங்கச்சி பக்கம் கண்ணு திரும்பக் கூடாதுன்னு. அப்படி இருந்தும் இத்தனை பேர் இருக்கும் போதே இப்படி நடந்துக்க உனக்கு எவ்வளவு தைரியம் இருக்கணும்” என்று மீண்டும் அடிக்க,

“அய்யோ..! என் புள்ளைய அடிச்சே கொல்லப் பார்க்குறாங்களே..!” என்று கனியின் மாமியார் அழுக ஆரம்பித்தார்.

மனோகரன், சரண், அகரன், கிரிதரன் என அண்ணன் தம்பி நால்வரும் ஆக்ரோஷத்துடன் நிற்க, அவர்கள் நின்ற தோரணையைப் பார்த்த கனியின் மாமியார் வீட்டினருக்கு உள்ளுக்குள் குளிரெடுத்தது.

“அவன் ஏதோ புத்தி கெட்டு போய் இப்படி பண்ணிட்டான். இனி அடியைத் தாங்குற அளவுக்கு அவன் உடம்புல தெம்பு இல்லை. இனி அவன் வேதா விஷயத்துல தலையிட மாட்டான். அதுக்கு நான் பொறுப்பு. பிளீஸ் இதை இதோட விட்ருங்க” என்றான் சபரி, கைகூப்பி.

“அதெப்படி விட முடியும்? உங்க வீட்டு பொண்ணு கிட்ட யாராவது இப்படி நடந்துகிட்டா அப்படியே விட்ருவிங்களா?” என்றான் மனோகரன்.

“சரண் நீ போலீஸ்க்கு கால் பண்ணு” என்றான் விஜய்.

“போலீஸ்க்கு கால் பண்ணுங்க..! அவங்க வந்தா உங்க வீட்டு ஆளும் தான் உள்ள போகணும்” என்றான் சேகர், வார்த்தைகள் குளறி.

“என்ன சொல்ற நீ?” என்றான் விஜய் ஒரு எட்டு முன்னால் வைத்து. அவன் முன்னால் வரவும் சேகர் பயந்து பின்னால் சென்றான்.

“சொல்லு..! ஏன் அப்படி சொன்ன?” என்றான் மீண்டும் கையை ஓங்கியபடி.

“அது நீலா அத்தை தான் இப்படி பண்ண சொன்னாங்க. அப்படி பண்ணா வேதாவை எனக்கு கட்டி வைப்பாங்கன்னு சொன்னாங்க” என்றான் வேகமாக.

அவன் சொல்லி முடித்தது தான் மாயம். “என்னடி பண்ணி வச்சிருக்க?” என்ற சிவச்சந்திரன் நீலாவதியை அடி வெளுத்துவிட்டார்.