“ம்ம்..தேங்க்ஸ்!” என்றாள் சன்ன சிரிப்புடன். அவள் வளையல் போட்டுவிட்டு நிமிர, அவளுக்கருகில் நெருக்கமாக நின்றிருந்தான் விஜய். அவனை அவ்வளவு நெருக்கத்தில் எதிர்பார்க்காதவள், சற்று தடுமாறி வைக்க,

“ஹேய் பார்த்து” என்று பிடித்து நிறுத்தியிருந்தான்.

‘ என்னைய பார்த்ததும்  தடுமாறி விழுறதே இவளுக்கு வேலையா போய்டுச்சு’ என்று எண்ணியவன்,

“சித்தி கிப்ட் குடுக்கனும்னு சொன்னாங்க. நான் எப்படி குடுக்க முடியும்? என் சார்பா நீ குடுத்துடு” என்று அவள் கையில் திணிக்க, திகைத்தாள் வேதா. இதைப் பார்த்த நீலாவிற்கு மயக்கம் வருவதைப் போல் இருக்க, அவர் வேகமாய் சந்தியாவைப் பார்த்தார்.

“ஷாக்கை குறைங்க சின்ன அத்தை. நான் இன்னும் பழைய ஷாக்ல இருந்தே வெளிய வரலை” என்ற ரீதியில் பார்த்து வைத்தாள்.

“நான் எப்படி? நீங்களே குடுங்க” என்றாள்.

“இது லேடீஸ் பங்க்ஷன். இந்த ஹெல்ப் கூட பண்ண மாட்டிங்களா மிசஸ்.நந்தா” என்றான் அழுத்தமாக.

வேதாவின் தலை தன்னால் சரி என்று ஆட, அவன் கையில் திணித்த பரிசைப் பார்த்தாள் ஏதோ நகை போல் இருந்தது.

“உன் சிஸ்டருக்கு போட்டு விடு” என்றான். அவள் தயக்கத்துடன் அதைத் திறக்க, அதில் அழகிய நெக்லஸ் இருந்தது.

‘இது காஸ்ட்லி கிப்ட்டா இருக்கே’ என்று எண்ணியவள், அதை சொன்னால் அதற்கும் ஏதாவது சொல்லுவான் என்று எண்ணி, தயக்கத்துடன் கனியின் கழுத்தில் அணிவித்தாள்.

“அழகா இருக்குங்க..! ரொம்ப தேங்க்ஸ். ஆனா, எதுக்கு இதெல்லாம் ?” என்றாள் கனி சற்று தடுமாற்றத்துடன்.

“சரணோட சிஸ்டருக்கு செய்ய வேண்டியது எங்க கடமை” என்றான் விஜய்.

விஜயும் வேதாவும் அருகருகே நிற்க, அவர்கள் ஜோடிப் பொருத்தத்தைப் பார்த்த கீர்த்தனாவிற்கு அப்படி ஒரு சந்தோசம்.

“என்னடி சந்தியா நடக்குது இங்க?” என்றார் நீலாவதி அமைதியாய்.

“அதையேன் கேட்குறிங்க சின்ன அத்தை? என்னென்னமோ நடக்குது. அப்பறம் உங்களுக்கு விலாவாரியா சொல்றேன்” என்றாள்.

வேதாம்மா, விஜய் தம்பியை கூட்டிட்டு போய் சாப்பிட வைம்மா. கிரி நீயும் கூட போப்பா..! என்று மைதிலி சொல்ல,தலையை ஆட்டினாள் வேதா.

“அட என்ன மைதிலி? அதெல்லாம் வேதாவுக்கு சொல்லியா தரனும்? சரண் கல்யாணத்துலயே நந்தகுமார் குடும்பத்தை அப்படி கவனிச்சுகிட்ட பொண்ணு. அவங்களை கூட்டிட்டு போய் எப்படி பொறுப்பா சாப்பிட வச்சு அனுப்புனா தெரியுமா? என் பொண்ணுக்கெல்லாம் சுட்டுப் போட்டாலும் அந்த பொறுப்பு வராது. என்ன பண்ணி என்ன செய்ய? எதுவும் தான் நினச்ச மாதிரி நடக்கலையே?” என்றார் நீலாவதி. பேச்சில் நக்கல் கலந்திருந்தது. அது தெரியாத அளவிற்கு வேதா ஒன்றும் முட்டாள் இல்லையே.

வேதாவின் கண்கள் சட்டென்று கலங்கி, கண்ணீர் இப்பவோ, அப்பவோ என்று துரத்திக் கொண்டிருக்க, இடமறிந்து கண்ணீரை உள்ளே இழுத்தாள்.

“வேதாவும் நம்ம பொண்ணு தான்” என்றார் மைதிலி பல்லைக் கடித்துக் கொண்டு. வேதா அங்கிருந்து சட்டென்று நகர்ந்து சென்று விட, நீலாவதியை நேரடியாக முறைத்தான் விஜய். அவன் பார்த்த பார்வையில் அவருக்கு உடல் குளிர் எடுத்தது.

“இவன் என்னடி இந்த முறை முறைக்கிறான்?” என்றார் சந்தியாவிடம்.

“நான் தான் அப்பறம் சொல்றேன்னு சொன்னேன்ல. அதுக்குள்ளே ஏன் பெர்பார்ம் பன்றிங்க? கொஞ்சம் அடக்கி வாசிங்க. கூட்டம் குறையட்டும்” என்றாள் சந்தியா.

“அவ மனசை கஷ்ட்டப்படுத்துறதுல அப்படி என்ன சந்தோசம் உங்களுக்கு? இப்ப உங்களுக்கு திருப்தியா இருக்குமே” என்றாள் கீர்த்தனா. அவளும் எவ்வளவு தூரம் தான் பொறுத்து போவாள்.

“தப்பா நினைச்சுக்காத கனி. முடிஞ்ச அளவுக்கு உன் அம்மா சகவாசத்தை குறைச்சுக்கோ. இல்லைன்னா அவங்களோட சேர்த்து உன்னையும் விஷச் செடியா மாத்திடுவாங்க” என்றாள்.

“என்ன கீர்த்தனா? மாமியார்னு மரியாதை இல்லாம வாய் நீளுது?” என்று நீலாவதி சண்டைக்கு தயாராக,

“அப்படித்தான் நீளும். இப்போ அதுக்கு என்னாங்குறிங்க? என் மாமியார் மைதிலி அத்தை தான். அவங்களுக்கு சுட்டுப் போட்டா கூட உங்க சாமர்த்தியம் பத்தாது” என்றாள் அவளும் குத்தலாக..

“சின்ன அத்தை கொஞ்ச நேரம் அமைதியா இருங்க” என்று சந்தியா அடக்கவும் வேறு வழியின்றி வாயை மூடினார் நீலாவதி.

வேதா மீண்டும் சென்று அதே இடத்தில் அமைதியாக அமர்ந்துகொண்டாள். யாரிடமும் பேசப் பிடிக்கவில்லை. பேசினால் உடைந்துவிடுவோம் என்று அஞ்சினாள்.

அங்கு வந்த விஜய், தானும் அவளுக்கு அருகில் வந்து அமர்ந்தான். வேதா எதுவும் பேசவில்லை. விஜயும் எதுவும் சொல்லவில்லை.

“அவள் தன் கை விரல் நகத்தை ஆராய்ச்சி செய்வதைப் போல் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளைப் பார்த்த விஜய்க்கு என்ன தோன்றியதோ?

“இப்ப எதுக்கு இப்படி வந்து உட்கார்ந்திருக்க? அவங்க பேசுனா பதில் பேசத் தெரியாதா?” என்றான் கோபமாய்.

“என்ன பேசணும்?” என்றாள் கேள்வியாய்.

“என்ன பேசணும்னு உனக்குத் தெரியாதா?” என்றான்.

“அவங்க நடந்ததைத் தான சொன்னாங்க. இதுல நான் பதில் சொல்ல என்ன இருக்கு?” என்றாள்.

“அப்போ ஏன் முகத்தை  இப்படி வச்சிருக்க?” என்றான்.

“அதெல்லாம் இல்ல. நான் நல்லா தான் இருக்கேன்” என்றாள்.

“இதை நான் நம்பனும்?” என்றான் கோபமாய்.

“நீங்க நம்புனா என்ன? நம்பலைன்னா என்ன? எனக்காக நீங்க ஏன் இவ்வளவு கவலைப் படுறிங்க? நீங்க யாருங்க எனக்கு?” என்றாள் பட்டென்று. கோபத்தை யார் மீது காட்டுவதென்று தெரியாமல் அவன் மீது காட்டிக் கொண்டிருந்தாள்.

அவளின் கேள்வியில் பல்லைக் கடித்து, ஆத்திரத்தை அடக்கியவன்,

“சாரி..! திரும்ப திரும்ப உன் விஷயத்துல தலையிட்டு செருப்படி வாங்குறதே  எனக்கு வேலைய போய்டுச்சு..!” என்றவன் கோபமாய் அங்கிருந்து நகன்றான். அதைப் பார்த்தவளுக்கு அதற்கும் அழுகை வந்தது. அவ்வளவு நேரம் அடக்கிக் கொண்டிருந்த கண்ணீர் முடியாமல் வந்துவிட, அதே நேரத்தில் சரியாக வந்தனர், நந்தகுமாரின் பெற்றோர்.

அவர்களை அங்கு கண்டு திகைத்த குடும்பத்தினர் என்ன செய்வதென்று புரியாமல் திகைக்க,

“அடடே..! வாங்க வாங்க..!” என்று முதல் ஆளாய் வரவேற்றார் நீலாவதி. மற்றவர்கள் வேதாவின் முன்னால் ஒன்றும் பேச முடியாமல் இருக்க, வந்தவர்களை முதலில் கவனித்து அனுப்ப வேண்டும் என்று அப்போதைக்கு யாரும் வாயைத் திறக்கவில்லை. விஜயோ அவள் மீது இருந்த கோபத்தில்  கோபத்தில் காரில் சென்று அமர்ந்திருந்தான்.

அவர்களை வேதா நிச்சயம் அங்கு எதிர்பார்க்கவில்லை. அவளை வேண்டாம் என்று சொன்னது மட்டும் தான் அவளுக்குத் தெரியும். மற்றபடி நந்தாவின் அம்மா பேசியது எதுவும் அவளுக்குத் தெரியாது. அவள் எப்போதும் போல் எதார்த்தமாக சென்று அவர்களிடம் பேசினாள்.

“எப்படியிருக்கிங்க அங்கிள், ஆன்ட்டி?” என்றாள்.

நந்தகுமார் அம்மாவிற்கு முகத்தை எங்கு கொண்டு வைப்பது என்றே தெரியவில்லை. அவள் கோபமாக பேசியிருந்தால் கூட அவருக்கு தோன்றியிருக்காது. ஆனால் வேதா எப்போதும் போல் பேச, அவர்களுக்கு குற்ற உணர்ச்சியாய் இருந்தது.

“ஏதோ இருக்கோம் வேதா. நீ எப்படிமா இருக்க? உடம்புக்கெல்லாம் இப்போ நல்லா இருக்கா?” என்றனர்.

“நான் நல்லா இருக்கேன்..!” என்று அவள் பேசிக் கொண்டிருக்க, கோபமாய் வந்தான் மனோ.