“இப்போ எதுக்கு விஜய் குட்டி போட்ட பூனை மாதிரி மாடிக்கும் வீட்டுக்கும் நடந்துகிட்டே இருக்க?” என்று வாய்விட்டு கேட்டும் விட்டார் சித்தி.

“ஒண்ணுமில்லை சித்தி! ஏதோ டென்ஷன்” என்று சமாளித்தான்.

“நீயும் அவங்களோட கிளம்பி ஊருக்கு போயிட்டு வந்திருக்கலாம். நம்ம வீட்ல இருந்து யாராவது போகலைன்னா தப்பா நினைப்பாங்க. சித்தப்பாவை விட்டுட்டு நான் எப்படி போக? என்ன இருந்தாலும் கீர்த்தனா உனக்கு சொந்த தங்கச்சி இல்லை தான? அதான் சம்பந்தி வீட்ல என்ன பேசுனா என்னன்னு இருக்க?” என்று அவர் ஆரம்பிக்க,

“அய்யோ..! சித்தி! நிறுத்துறிங்களா..! லேடிஸ் பங்கஷனுக்கு நான் எப்படி போக முடியும். நான் சித்தப்பாவை பார்த்துக்குறேன். நீங்க போயிட்டு வாங்க” என்றான்.

‘இவன் ஒருத்தன் நான் என்ன விசேஷத்துக்கா போக சொல்றேன்? வேதா உன் பாடு கொஞ்சம் கஷ்ட்டம் தான்மா’ என்று எண்ணிக் கொண்டவர்,

“விடு விஜய்..! யாரும் போக வேண்டாம்” என்றார் கோபமாக.

ஏனோ அன்று காரில் வேதாவிடம் அப்படி பேசிய பிறகு அங்கு செல்வதில் அவனுக்கு விருப்பமில்லை. அவளைப் பார்ப்பதையும் தவிர்க்க நினைத்தான் விஜய். இருந்தாலும் நந்தகுமார் வருவதற்கு முன்பு இருந்த மன அமைதி, இப்போது அவனை விட்டு சென்றிருந்தது.

“இப்படி கோபமா பேசுற மாதிரி பேசி என்னை அனுப்பனும். அது தான உங்க பிளான்” என்றான்.

“எனக்கு ஒரு பிளானும் இல்லை. நான் என்ன வேதா வீட்டுக்கா போக சொன்னேன். மாப்பிள்ளை வீட்டுக்குத் தான போக சொன்னேன்” என்றார்.

“ஆமா, ரெண்டு பேர் வீடும் அம்பது கிலோ மீட்டர் தூரத்துல இருக்கு..” என்றான் நக்கலாய்.

“இப்ப உன்னால போக முடியுமா? முடியாதா?” என்றார்.

“போறேன்..! மாட்டேன்னா விட்டுடவா போறீங்க? நீங்க ஒரு பிளானோட தான் இருக்கீங்க. அது மட்டும் எனக்குத் தெளிவா தெரியுது. ஒன்னு மட்டும் தெரிஞ்சுக்கோங்க சித்தி, நீங்க நினைக்கிறது எதுவும் நடக்காது “ என்றான்.

“கடவுள் நினைக்கிறது மட்டும் தான் விஜய் நடக்கும்” என்றார் அவரும் சூசகமாய். அவரை முறைத்தபடி சென்றான்.

“அக்கா, அவனுக்கு வேதாவைப் பார்க்காம இருக்க முடியலை. ஏதோ எனக்காக கிளம்புற மாதிரி கிளம்புறான் பாருங்க. இந்த வீம்பையும், பிடிவாதத்தையும் கொஞ்சம் குறைச்சுக்கிட்டா தான் என்ன?” என்று புலம்பினார்.

அங்கு வேதாவோ ராமச்சந்திரனின் பின்னாலேயே சுற்றிக் கொண்டிருந்தாள். அவளின் அப்பத்தா கோதை கூட சலித்துப் போனார்.“வேதா என் மகனை கொஞ்ச நேரம் விடேன்” என்று.

காதம்பரியும் இல்லாமல், வேதாவும் இல்லாமல் தனிமையில் இருந்த ராமச்சந்திரனுக்கு மகளின் வரவு புது தெம்பைக் கொடுத்திருந்தது. மனோகரனும் முன்பை போல் இல்லாமல் தங்கையுடன் பாசத்துடன் நடந்து கொள்ள, சந்தியாவிற்கு தான் அதைப் பார்க்க முடியவில்லை.

“நீ இல்லாம வீடு வீடா இல்லைடா..!” என்றார்.

“நானும் உங்களை ரொம்ப மிஸ் பண்றேன் ப்பா..!” என்றவள், அவர் விரும்பி சாப்பிடும் அனைத்தையும் பார்த்து பார்த்து சமைத்துக் கொடுத்தாள்.

“காதம்பரியோட கையால சாப்பிட்ட மாதிரியே இருக்கு ஆத்தா” என்று அப்பத்தா கூட ரசித்து சாப்பிட்டார்.

அவள் சமைத்துப் போட, மூக்கு முட்ட சாப்பிட்ட சந்தியாவோ,

“அப்படி ஒன்னும் பிரமாதம் இல்ல. பரவாயில்லை ரகம் தான்” என்றாள் வேண்டுமென்றே.

“அப்போ இனி நீயே சமைச்சு சாப்பிட்டுக்கோ” என்றான் மனோகரன் பட்டென்று. அவனை முறைத்தவள்,

“நான் சின்ன அத்தை வீட்டுக்கு போறேன்” என்று  கிளம்பி போக,

“நீலா சித்தி கூட சகவாசம் இருக்குற வரைக்கும் இவ திருந்த மாட்டா வேதாம்மா” என்றான் மனோகரன்.

“விடுங்கண்ணா..! அவங்க குணம் தெரிஞ்சது தான?” என்பதோடு முடித்துக் கொண்டாள்.

“எங்க சரண், அகரன் யாரையும் காணோம்?” என்றான் மனோ.

“எல்லாரும் கனி ஊரு வரைக்கும் போயிருக்காங்க அண்ணா..!” என்றாள்.

“நீ போகலையாடா?”

“நான் போகலைண்ணா..! நாளைக்கு போவோம் தான. அப்ப பார்த்துக்கலாம்” என்றாள்.

மனோவும் மதுரை வரைக்கும் வேலையிருப்பதாக சொல்லிச் சென்றான்.

உடல் கசகசப்பு தீர குளித்து விட்டு வந்தாள். அப்போது அலைபேசி ஒலி எழுப்ப, சரண் தான் அழைத்திருந்தான்.

“சொல்லுங்கண்ணா..!”

“எங்கடா இருக்க வேதாம்மா”

“வீட்ல தான் அண்ணா”

“விஜய் பஸ் ஸ்டாண்ட்ல இருக்கான். அவனை பிக்கப் பண்ண போகணும். மனோ அண்ணா இருந்தா போக சொல்றியா?” என்றான்.

“மனோ அண்ணா மதுரை கிளம்பிட்டான். ஏன் உங்க பிரண்ட் கார் என்னாச்சு?” என்றாள்.

“சென்னையில இருந்து வரும் போது அவன் காரைத் தான எடுத்துட்டு வந்தோம். மறந்துட்டியா?” என்றான்.

“ஆமால்ல..! சரி நான் யாராவது இருக்காங்களான்னு பார்க்குறேன். இல்லைன்னா ஒரு ஆட்டோ பிடிச்சு வர சொல்லுங்க” என்றாள்.

“வீட்ல இத்தனை பேர் இருக்கும் போது ஆட்டோல வர சொல்றது மரியாதையா இருக்காது. அவன் காரையும் நம்ம எடுத்துட்டு வந்துட்டு. நீ ராம் அப்பாவை அனுப்பி வைடா” என்றான்.

“சரிண்ணா” என்றவள்,

“அண்ணா, அப்பாவும் ஷிவாப்பாவும் எங்கையோ கிளம்பி போனாங்க” என்றாள் வேகமாய்.

“இப்ப என்ன பண்றது?” என்று சரண் புலம்ப,

“ஒன்னும் பண்ண முடியாது. ஆட்டோ தான் கதி. நானா போய் கூட்டிட்டு வர முடியும்?” என்றாள் நக்கலாய்.

“ஆமால்ல..! எனக்கு இது தோணவே இல்ல பாரேன். நீ போய் அவனை பிக்கப் பண்ணிட்டு வந்துடு.” என்றான்.

“அண்ணா..!” என்று பல்லைக் கடித்தவள்,

“புரிஞ்சு தான் பேசுறிங்களா? இதென்ன சென்னையா? யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க?” என்றாள்.

“இதுல நினைக்க ஒண்ணுமில்லை. நீ ஏன் அப்படி நினைக்குற? இஷ்ட்டம்னா போ வேதா. இல்லைன்னா நான் வேற அரேஞ்ச்மென்ட் பண்றேன். அவன் வர்றதை முன்னமே சொல்லலை. இல்லைன்னா, நான் வீட்ல இருந்திருப்பேன்” என்றான்.

“சரி நானே போறேன், அவர் நம்பரை அனுப்புங்க” என்று போனை வைத்தவள்,

“இவர் பெரிய மகாராஜா. ஆட்டோல எல்லாம் வர மாட்டார். ஒருத்தர் போய் மெனக்கெட்டு அழைச்சுட்டு வரணுமோ?” என்று பொரிந்து கொண்டே கிளம்பினாள்.

‘அம்மா வேதா, அவன் இந்த வீட்டு மாப்பிள்ளைமா. கொஞ்சமாவது மரியாதை குடுங்க’ என்று அவளின் மனசாட்சி எள்ளி நகையாடியது.

விஜயின் இரண்டு நம்பரையும்  சரண் அனுப்பி வைக்க, அதை போகிற போக்கில் பார்த்தவளின் கண்கள் அதிர்ந்தது. அந்த எண்ணை ஏற்கனவே நந்தா என்று சேமித்திருந்தாள்.

“நந்தகுமார் அமெரிக்கால இருக்கறதால பழைய நம்பர் எடுக்காதுடா. இது தான் அவர் வாட்ஸ்அப் நம்பர். உனக்கு பேசணும்னா இதுல பேசு” என்று சரண் கொடுத்தது விஜய்யின் நம்பரா? அப்போ அது நந்தகுமார் நம்பர் இல்லையா? என்றவளுக்கு ஏகத்திற்கும் அதிர்ச்சி.

எந்த வகையிலும் நந்தகுமார் உடன் வேதா பேசி விடக் கூடாது என்று சரண் தான் அப்படி செய்திருந்தான்.

‘அப்போ அன்னைக்கு ஹாய் மெசேஜ் அனுப்பினது விஜய் சாருக்கா? அதான் பதில் எதுவும் வரலையா?அவருக்கு அது நான் தான்னு தெரியுமா’ என்று யோசித்துக் கொண்டே சென்றாள்.

வேதாவின் எண்ணில் இருந்து அழைப்பு வரவும் கையில் இருந்த போனையே பார்த்துக் கொண்டிருந்தான் விஜய்.  அவள் விபரமாக வாட்சப் எண்ணை விடுத்து மற்றொரு எண்ணிற்கே அழைத்தாள். அழைப்பு கட்டாகி, மீண்டும் ஒலிக்க,

“இவ எதுக்கு கூப்பிடுறா?” என்ற யோசனையுடன்,

“ஹலோ” என்றான். முதன் முதலாக போனில் அவன் குரலைக் கேட்கிறாள். அந்த குரலின் ஆளுமையில் சில நொடிகள் தன்னை மறந்திருக்க,

“ஹலோ..!” என்றான் மீண்டும்.

“நா..நான் வேதா” என்றாள். இரண்டு நாட்களுக்குப் பிறகு அவள் குரல் கேட்கிறான்.மனம் சட்டென்று இதத்தை தத்தெடுத்துக் கொள்ள,

“சொல்லுமா..!” என்றான்.

“எங்க நிக்குறிங்க? நான் பஸ் ஸ்டான்ட் வந்துட்டேன்” என்றாள்.

‘இவ எதுக்கு வந்தா? சரண் தான வரேன்னு சொன்னான்?’ என்று யோசித்தவன், லேன்ட் மார்க்கை சொல்ல, அடுத்த இரண்டு நிமிடத்தில் அவன் முன் இருந்தாள்.

கிளிப்பச்சை நிறத்தில் டாப்பும், கருப்பு நிற பலாசோ பேண்டும் அணிந்து புல்லட்டில் ஸ்டைலாக வந்து நின்றவளை இமைக்க மறந்து பார்த்துக் கொண்டிருந்தான்.