“லுக்..! உன்னை யாரும் இங்க கடிச்சு முழுங்கிட மாட்டாங்க. ஏதோ சிங்கம் புலியைப் பார்க்குற மாதிரி ஓவர் ஆக்சன் குடுக்குற? இஷ்ட்டம்னா வா. இல்லையா போ. என்னைப் பார்த்தா என்ன வேலை வெட்டி இல்லாதவன் மாதிரி இருக்கா? இல்ல, உங்க குடும்பத்துக்கே சேவை செய்ய பிறந்தவன் மாதிரி இருக்கா?” என்று வார்த்தைகளை கடித்துத் துப்பினான்.
அவன் பேச்சில் வேதாவிற்கு கோபம் வர, வேகமாக இறங்கப் போனாள்.
“ஏய்..!!!” என்ற அவனின் குரலில் திடுக்கிட்டு விதிர்விதிர்த்துப் போனாள். அவள் முகத்தில் பயத்தைப் பார்த்தவன், கோபத்தை கட்டுப் படுத்தி சற்று இயல்புக்கு வந்தான்.
“சாரி..!” என்றவன்,”சீட் பெல்டை போடு” என்றபடி அமைதியாய் காரை எடுக்க, சில நிமிடங்களில் அவனின் பல முகங்களைப் பார்த்த வேதாவிற்கு தான் ‘அய்யோ’ என்றிருந்தது. அடுத்து வந்த நிமிடங்கள் அமைதியில் கழிய, அந்த அமைதியை அவன் விரும்பவில்லை போலும்.
‘என்கிட்டயா கேட்டிங்க?’ என்பதைப் போல் அவள் பார்த்து வைக்க,
“கார்ல நம்ம ரெண்டு பேர் மட்டும் தான் இருக்குறதா எனக்கு ஞாபகம்” என்றான்.
“நெக்ஸ்ட் போர் டேய்ஸ் காலேஜ் லீவ். சோ அப்பாவைப் பார்க்க போகணும். கனிக்கு வளைகாப்பு. மனோ அண்ணன் ஊர்ல இருந்து வர்றான்,அதான்” என்று அவன் கேட்கும் முன் எல்லா பதிலையும் ஒரே முறையில் சொல்லிவிட்டாள்.
“அப்படியா? அப்ப சரி. ஆனா,அதை சொல்ல நீங்க யாரு?” என்றாள் பட்டென்று.
“நல்லதை சொல்றதுக்கு யாராவும் இருக்கணும்னு அவசியம் இல்ல” என்றான்.
“அது நல்லது சொல்றதுக்கு. நீங்க சொல்ற அந்த நல்லது எனக்குத் தேவையில்லை. என்னோட சொந்த விஷயத்துல தலையிடுறதுக்கு உங்களுக்கு எந்த ரைட்சும் இல்லை. அட் த சேம் டைம் எங்க எப்படி பிகேவ் பண்ணனும்னு எனக்குத் தெரியும். நீங்க என் அண்ணாவோட பிரண்ட். அந்த எல்லையோட நில்லுங்க” என்றாள் கடினமான குரலில்.
அவளின் பதிலில் அவளை ஆழ்ந்து பார்த்தவன்,
“ஐ ஆம் சாரி மிசஸ். நந்தா. இனி நீங்க சம்பந்தப்பட்ட எந்த விஷயத்துலையும் நான் தலையிட மாட்டேன். காட் இட். ஒரு விஷயத்தை ஒரு தடவை செய்யக் கூடாதுன்னு முடிவு பண்ணிட்டா அதை எப்பவும் பண்ண மாட்டான் இந்த விஜய். உங்க விஷயத்துல இப்போ தான் தெளிவாகியிருக்கேன்.என்னோட தலையீடு எப்பவும் இருக்காது” என்று மரத்துப் போன குரலில் சொன்னவன்,
“வீடு வந்திருச்சு..!” என்றான்.
அவனின் பேச்சில் பிரமை பிடித்தார் போன்று உணர்ந்தவள்,
‘தேங்க்யு சார்’ என்றபடி இறங்கி செல்ல, விஜய்யோ வீட்டிற்கு வராமல் மீண்டும் காரை எடுத்துக் கொண்டு சென்று விட்டான்.
‘கொஞ்சம் அதிகமா பேசிட்டோமோ?’ என்று நினைக்க,
“அப்போ, அவர் அப்படி பேசினது மட்டும் தப்பில்லையா? அவர் பேசுனது சரின்னா, நான் பதில் சொன்னதும் சரி தான். எப்படி பேசுனாலும் அசராம பதில் மட்டும் தான் சொல்றார். உண்மை வர மாடேங்குதே” என்று புலம்பி, தனக்குத் தானே பதிலும் சொல்லிக் கொண்டாள்.
கார் சத்தம் கேட்டு வெளியே வந்த விஜயின் சித்தி,
“வேதாம்மா..! விஜய் கூட வாடா வந்த?” என்றார்.
“ஆமா ஆன்ட்டி”
“எங்க விஜய்யை காணோம்”
“தெரியலை ஆன்ட்டி. மறுபடியும் கிளம்பி போயிட்டாங்க” என்றாள்.
“வாடா..! சூடா ஒரு காபி குடிச்சுட்டு போவ”
“இல்ல, இருக்கட்டும் ஆன்ட்டி. ஊருக்கு கிளம்பனும். நான் போய் எடுத்து வைக்கிறேன்”
“கனி வளைகாப்புக்கு சொல்லியிருக்காங்கடா. நாங்களும் வரணும். ஆனா,கீர்த்தனா அப்பாவுக்கு கொஞ்சம் உடம்புக்கு முடியலை. இங்க அக்காவைப் பார்த்துக்கணும். விஜய்யை தான் அனுப்பி வைக்கணும். என்ன சொல்ல போறானோ?” என்று தன் போக்கில் புலம்பினார்.
“அமுதா ஆன்ட்டி என்ன பண்றாங்க?”
“அக்கா அவங்க ரூம்ல தான் இருக்காங்க வேதாம்மா” என்றார்.
“இல்ல, விஜய் சார் ஏதாவது சொல்லுவாரோன்னு” என்று அவள் இழுக்க,
“அவன் என்ன சொல்ல போறான். இப்ப அவன் தான் இல்லையே” என்றார்.
“நீ அக்காவைப் பாரு..! நான் உனக்கு காபி போட்டு எடுத்துட்டு வர்றேன்” என்று அவர் சமையலறைக்குள் நுழைய, அமுதாவின் அறைக்கு சென்றாள் வேதா.
அவளை அந்த நேரத்தில் எதிர்பார்க்காதவர், எழுந்து அமர முயற்சி செய்ய, வேகமாய் அவர் அருகில் சென்றவள், தலையணையில் சற்று சாய்ந்த வாக்கில் அமர வைத்தாள். அவர் அவளின் முகத்தை ஆதுரமாய் பார்க்க,
“எப்படி இருக்கீங்க அத்தை” என்றாள். அவளின் அத்தை என்ற அழைப்பில் அவருக்கு முகம் பிரகாசமாக, அதைக் கண்ட வேதாவிற்கு அப்படி ஒரு நிம்மதி.
“என்ன அத்தை அப்படி பார்க்குறிங்க? எனக்கு நடந்த விஷயம் தெரியும். உங்களுக்கும் தெரியும்னு நினைக்கிறேன்..” என்றாள்.
“ஆமா..!” என்பதைப் போல் அவரின் தலை ஆட,
“உங்க முகத்துல நான் பார்க்குற நேரமெல்லாம் கவலை தான் தெரியுது. அதான் பேசலாம்னு வந்தேன்” என்றாள். அவர் அவளையே பார்த்திருக்க,
“அப்பறம் ஏன் கவலைப் படுறிங்க? உங்க கவலை தேவையில்லாதது அத்தை. உங்க பையனோட வாழ்க்கையை நினைச்சு ரொம்ப கவலைப் படுறிங்கன்னு சரண் அண்ணா சொன்னான். இனி அதுக்கு அவசியம் இருக்காது. எல்லாம் சரியாக கொஞ்ச நாள் ஆகும். ஆனா, கண்டிப்பா சரி ஆகிடும். உங்க மருமக நான்தான். அது எப்பவும் மாறாது. நீங்க இதையெல்லாம் வொர்ரி பண்ணி, உங்க ஹெல்த்தை இன்னும் கெடுத்துக்காதிங்க. உங்க பையனுக்கு நீங்க ரொம்ப முக்கியம். நமக்குப் பிடிச்சவங்க இல்லாமப் போனா எப்படி வலிக்கும்னு எனக்குத் தெரியும். அதுலயும் அம்மா இல்லைன்னா..” என்று நிறுத்தியவள், தன்னை சமன் படுத்திக் கொண்டு,
“என்னை நம்புங்க..! இனி உங்க முகத்துல கவலையே தெரியக் கூடாது” என்றவள்,
“நான் பேசுனதையும் உங்க பையன்கிட்ட காட்டிக்க கூடாது” என்று செல்லக் கட்டளையும் விடுத்தாள். அவரின் முகம் மகிழ்ச்சியில் நிரம்பியிருக்க, அவளையே பார்த்திருந்தார்.
“அக்காவைப் பார்த்தாச்சா வேதா? இந்தடா காபி” என்று அவனின் சித்தி உள்ளே வர,
“பார்த்தாச்சு, பேச வேண்டியதை எல்லாம் பேசியாச்சு ஆன்ட்டி” என்றாள்.
“அதென்ன? எனக்குத் தெரியாம ரகசியம்” என்றார்.
“நார்மலா தான் ஆன்ட்டி பேசிட்டு இருந்தேன்” என்றபடி காபியை குடித்து முடித்தவள்,
“ஊருக்கு போயிட்டு வந்துட்டு உங்களை பார்க்க வர்றேன் ஆன்ட்டி” என்று அமுதாவிடம் கூறியவள் சிட்டாய் பறந்துவிட்டாள்.
“அக்கா..! உன் மருமக நம்ம வீட்டு மகாலெட்சுமியே தான்” என்று சொல்ல, அமுதாவும் ஆமோதிப்பதைப் போல் தலையை ஆட்டினார்.
ஆயிற்று வேதா ஊருக்கு சென்று இரண்டு நாட்கள் ஆகியிருந்தது. சரண் கீர்த்தனா என்று அனைவரும் சென்றிருக்க, இங்கு விஜய்க்கு தான் எதையோ இழந்ததைப் போல் இருந்தது.
இரண்டு நாட்களில் இருநூறு முறையாவது மாடியை பார்த்திருப்பான். அவனுடைய செயல்களையும், அவஸ்தையையும் கண்டும் காணாமல் பார்த்துக் கொண்டிருந்த அமுதாவும், அவனின் சித்தியும் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டனர்.