அத்யாயம் 15:

விஜய் கோபத்துடன் வீட்டிற்குள் நுழைய, அங்கே அவனின் சித்தியும், சித்தப்பாவும் வந்திருந்தனர். உடன் கீர்த்தனாவும் இருக்க,

“வாங்க சித்தி, வாங்க சித்தப்பா!” என்றான்.

“அண்ணா, இவரையும் வேதாவையும் பார்த்திங்க? காலையில இருந்து ரெண்டு பேரையும் ஆளையே காணோம்” என்றாள் கீர்த்தனா.

“அங்க பாரு” என்றான் வெளிப்பக்கம் பார்வையை காட்டி.

“ஹோ..! ரெண்டு பேரும் வாக்கிங் போனாங்களா?” என்றவள்,

“ம்மா..! நீங்க தான் வந்ததுல இருந்து வேதா எங்க வேதா எங்கன்னு கேட்டுட்டு இருந்திங்க. வந்துட்டா பாருங்க” என்றாள் கீர்த்தனா. இவர்கள் வருகையை கவனிக்காத வேதா மேலே சென்று விட்டாள்.

“ஏன் கீர்த்தனா..! உன்னை விட சின்ன பொண்ணு, பொறுப்பா காலையிலையே குளிச்சுட்டு வாக்கிங் போயிட்டு வர்றா. நீ என்னடான்னா? இன்னும் முகம் கூட கழுவாம இப்படி உட்கார்ந்திருக்க? உனக்கு எப்பத்தான் பொறுப்பு வரப் போகுதோ?” என்று கடிந்து கொள்ள,

“இந்தா ஆரம்பிச்சுட்டிங்கல்ல! இப்போ டைம் என்ன ஆகுதுன்னு தெரியுமா? நானெல்லாம் சண்டே பத்து மணிக்கு தான் எழுந்திருப்பேன். இவ்வளவு சீக்கிரம் வந்து என்னைய எழுப்புனதே தப்பு. இதுல கிளாஸ் எடுத்துட்டு இருக்கீங்க?” என்று அவள் கடுப்பாக,

“சரி..சரி..! வேதாவுக்கு உடம்பு சரியில்லாம ஹாஸ்பிட்டல் போய்ட்டு வந்திங்கன்னு சொன்னதுல இருந்து மனசே சரியில்லை. அதான் காலையிலையே அப்பாவைக் கூட்டிட்டு வந்துட்டேன்.” என்றார் அவர்.

“என்னைய நைட் எல்லாம் உங்கம்மா தூங்கவே விடலம்மா” என்றார் அவரும் பாவமாய்.

“ம்மா..! வர வர உங்களுக்கு வேதா பைத்தியம் முத்திடுச்சு. இப்பல்லாம் என்னைய விட அவளைத் தான் உங்களுக்குப் பிடிக்குது.” என்றாள் குறையாய். ஆனால் அதில் மருந்துக்கும் வருத்தமில்லை. சந்தோஷமே மிகுந்திருந்தது.

“இருக்காதா பின்னே, என் செல்ல பையன் பொண்டாட்டி. என் மருமக. அவமேல அக்கறை பாசம் எல்லாம் அதிகமாவே இருக்கத்தான் செய்யும்” என்றார் விஜயை பார்த்துக் கொண்டே.

“சித்தி..!!” என்று பல்லைக் கடித்தான் விஜய்.

“இப்போ எதுக்கு விஜய் இவ்வளவு கோபப்படுற? நான் என்ன இல்லாததையா சொல்லிட்டேன்.” என்றார் அவர்.

“கொஞ்சம் மெதுவா பேசுங்க. நான் சொன்ன கன்டிஷன் அவங்க வீட்டு ஆளுங்களுக்கு மட்டுமில்லை. உங்களுக்கும் பொருந்தும். இப்படி அவ முன்னாடி பேசி வைக்காதிங்க” என்றான் ஜாக்கிரதையாய்.

“இங்க பாரு விஜய்… நீ பேசுறது,செய்றது எதுவும் சரியில்லை. நடந்ததையே நினைச்சுட்டு இருக்குற வாழ்க்கையை கெடுத்துக்கற நீ. அக்காவைப் பத்தி கொஞ்சமாவது யோசிச்சு பார்த்தியா? கல்யாணம் பண்ணியும் நீ இப்படி இருக்குறது அவங்களுக்கு எவ்வளவு வருத்தமா இருக்கும்? அவங்களால பேச முடியலைன்ற காரணத்துக்காகத் தான் பேசாம இருக்காங்க. இல்லைன்னா, நான் பேசுறதை எல்லாம் அவங்க தான் பேசியிருப்பாங்க” என்றார்.

“அம்மா.. எதுக்கு அண்ணாவை காலையிலேயே டென்ஷன் படுத்துறிங்க?” என்றாள் கீர்த்தனா.

“நானா படுத்துறேன். நீயும் இவனும் தாண்டி எங்களைப் படுத்துறிங்க? எவனாவது தாலி கட்டிட்டு அதை அவகிட்ட சொல்லக் கூடாதுன்னு சொல்லுவானா? கட்டுன பொண்டாட்டி இன்னொருத்தனை புருஷனா நினச்சுட்டு இருக்குறது இவனுக்கு வேணும்னா பெருமையா இருக்கலாம். ஆனா, எங்க மருமக அப்படி இருக்குறதுல எங்களுக்கு எவ்வளவு வருத்தம் இருக்கும். மருமகன்னு உரிமையா பேசக் கூட முடியாதபடி வச்சிருக்கான் இவன். உலகத்துலையே புருஷன் வீட்ல வாடகைக்கு இருக்குற ஒரே பொண்டாட்டி என் மருமகளாத்தான் இருப்பா..” என்று அவர் மனக் குறையை கொட்டிக் கொண்டிருக்க,

“நான் ஒன்னும் வாடகைக்கு விடலை சித்தி. சும்மா எதையாவது பேசி என்னை டென்ஷன் பண்ணாதிங்க. இன்னொருத்தன் கட்டிக்க இருந்த பொண்ணைத்தான் நான் கட்டியிருக்கேன். அதுவே எனக்கு குற்ற உணர்ச்சியா இருக்கு. இதுல நீங்க வேற?” என்றான் கோபமாய்.

“அதெல்லாம் முடிஞ்சு போன விஷயம். நீ ஒன்னும் வலுக்கட்டாயமா தாலி கட்டலையே? பொண்ணைப் பெத்த மகராசி கேட்டு தான், நீ அதைப் பண்ண. அதுவும் எப்படி, உங்க பொண்ணை நல்லா பார்த்துப்பேன்னு வசனம் எல்லாம் பேசி. இதான் நீ பார்த்துக்குற லட்சணமா?” என்றார்.

‘ஒரு முடிவோட தான் வந்திருப்பாங்க போல..!’ என்று மனதிற்குள் நொந்தவன்,

“என்ன சித்தி திடீர்னு? இத்தனை நாள் அமைதியா தான இருந்திங்க?” என்றான் சந்தேகமாய். அவன் பார்வை கீர்த்தனாவைப் பார்க்க,

“ஐயோ அண்ணா..! நானெல்லாம் ஒன்னும் சொல்லலை” என்றாள் வேகமாய்.

“இத்தனை நாள் அவசியம் ஏற்படலை. ஆனா, இப்ப அவசியம் ஏற்பட்டிருக்கு. அதான் யோசிக்காம வந்துட்டோம்” என்றார் அவரும் விடாமல்.

அவர்களின் பேச்சில் விஜய் புரியாமல் பார்க்க,

“இத்தனை நாள் அந்த பழைய மாப்பிள்ளை பையன் ஏதோ அமெரிக்கா போயிருக்கான்னு சொன்னாங்க. சரி வேதாவும் நம்ம கூட தான இருக்கான்னு நாங்களும் பேசாம இருந்தோம். இப்ப அந்த பையன் வந்துட்டானாமே? நேத்து ஷாப்பிங் போன இடத்துல அந்த பையனைப் பார்த்து தான் அவளுக்கு முடியாம போய் மயக்கம் போட்டதா கீர்த்தனா சொன்னா..! இதையெல்லாம் கேட்டதுக்கு அப்பறம் எப்படி நிம்மதியா இருக்க முடியும்?” என்றார்.

அவரின் திடீர் வருகைக்கும், கோபத்திற்கும் காரணம் புரிந்தது விஜய்க்கு. அவர் சொன்ன அந்த ‘பழைய மாப்பிளை’ என்ற வார்த்தையில் சிரிப்பு கூட வந்தது.

“இதுல உங்க நிம்மதி போறதுக்கு என்ன இருக்கு சித்தி? கைவிட்டு போன வாழ்க்கை திரும்ப கிடைக்குறது வேதாவுக்கு சந்தோஷமாத்தான் இருக்கும்” என்றான்.

“அது தாலி கட்டினது நீ தான்னு தெரியாத வரைக்கும் இருக்கும். இத்தனை நாள் வரைக்கும் அந்த பையனை நினைச்சுட்டு, திடீர்னு தாலி நீதான் கட்டுனன்னு தெரிஞ்சா அந்த பொண்ணு மனசு என்ன பாடுபடும்? உங்களுக்கெல்லாம் அவ மனசைப் பத்தி கவலையே இல்லையா? எப்ப இருந்து விஜய் நீ இப்படி ஒரு சுயநலவாதியா மாறின?” என்றார்.

“நான் சுயநலவாதியா?” என்று விரக்தி சிரிப்பு சிரித்தான் அவன்.

‘நான் சரியாத்தான யோசிக்கிறேன்?’ என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டவனுக்கு, எவ்வளவு மறுத்தாலும் ஞாபகத்தில் வந்தது என்னவோ, கீர்த்தனா கல்யாணத்தில் வைத்து, நந்தகுமாரை காதலுடன் பார்த்த வேதாவின் பார்வை தான்.

“அம்மா போதும்..! நீங்க பேசுறது நினைக்குறது எல்லாம் சரின்னு அர்த்தம் கிடையாது. அண்ணா இப்பவும் வேதாவுக்காகத் தான் யோசிக்கிறான்” என்றாள் கீர்த்தனா.

“நீ இதுல தலையிடாத கீர்த்தனா..! அதான் உன் புருஷனும், நாத்தனாரும் வந்துட்டாங்கல்ல. கிளம்பி மேல போ நீ முதல்ல. நான் பேசிக்கிறேன் விஜய்கிட்ட” என்றார்.

“அம்மாவுக்கு டிபன் செய்யணும் சித்தி” என்று அவன் செல்ல முயற்சிக்க,

“நான் பண்ணிட்டேன் விஜய்” என்றார் அவரும் விடாமல்.

“சித்தி..! பிளீஸ்..! என்னை ரொம்ப கில்ட்டியா பீல் பண்ண வைக்காதிங்க. ஏற்கனவே நடந்த எதையும் என்னால மறக்க முடியலை. இப்போ வேதா விஷயத்துலையும் என்னைய குற்றவாளி ஆக்காதிங்க. நானும் மனுஷன் தான்” என்றான். கலங்கிய குரலை மறைத்தானோ?

“உன்னை குற்றவாளி ஆக்கணும்னு பேசலை விஜய். உன் வாழ்க்கை நல்லா இருக்கணும்னு தான் பேசறேன். உனக்கொரு விஷயம் தெரியுமா? அந்த பையன் திரும்ப வந்துட்டான்னு சொன்னதுல இருந்து, என் மனசுக்கு எதுவுமே சரியா படலை. ஏதோ தேவையில்லாதது நடக்க போற மாதிரியே தோணுது. இது கடவுள் போட்ட முடிச்சு விஜய். அதை நீ ஏன் அவிழ்க்க பார்க்குற?” என்றார்.

“சித்தி”

“ஆமா விஜய்..! இனியும் அந்த பொண்ணை கஷ்ட்டப் படுத்துறதை என்னால ஏத்துக்க முடியாது. அவளுக்கு இப்போ உடம்புக்கு பரவாயில்லை தானே..! நான் எப்படி சொல்லி புரிய வைக்கனுமோ, அப்படி சொல்லி புரிய வைக்கிறேன்” என்றார்.