‘என்னடா இது எனக்கு வந்த சோதனை? சொன்ன பொய்யை மெயின்டைன் பண்ணவும் முடியலை. புதுசா ஒரு பொய்ய சொல்லவும் முடியலை. உண்மையையும் சொல்ல முடியலை. ஒரு பக்கம் இவ அடிக்கிறா, இன்னொரு பக்கம் அவன் அடிக்கிறான். இப்படி ரவுண்டு கட்டி அடிச்சா நான் என்ன பண்ணுவேன்’ என்று புலம்ப,
“அண்ணா..! மனசுக்குள்ள புலம்புறதா நினைச்சு சத்தமா பேசிட்டு இருக்கீங்க?” என்றாள் மெல்லிய சிரிப்புடன்.
“நிஜமாவா?” என்றான் பாவமாய்.
“ஆமா, இன்னொரு பக்கம் அடிக்கிற அந்த அவன் யாரு?” என்றாள்.
“சொல்ல மாட்டேன்” என்றான்.
“ஏன்?” என்றாள்.
“சொன்னா அவன் அடிப்பான்” என்றான்.
“சொல்லலைன்னா நான் அடிப்பேன்ண்ணா” என்றாள் பல்லைக் கடித்துக் கொண்டு.
“எனக்கு கொஞ்சம் கருணை காட்டும்மா..!” என்றான். அவனை நிர்மலமான முகத்துடன் பார்த்தவள்,
“ஒரு பொண்ணு, புருஷன் மேல சந்தேகப்படலாம். ஆனா, புருஷன் யாருனே சந்தேகப்படுறது எல்லாம் என்ன மாதிரியான ஒரு நிலைமைண்ணா?” என்றாள். அவ்வளவு நேரம் நார்மலாக பேசிக் கொண்டிருந்தவளின் குரலில் திடீரென்று அவ்வளவு இறுக்கம் தென்பட்டது.
“வேதாம்மா! என்னை ரொம்ப சங்கடப்படுத்தாதடா. உன்னை ரொம்ப யோசிக்கக் கூடாதுன்னு டாக்டர் சொல்லியிருக்கார். கொஞ்ச நாளைக்கு நீ ரொம்ப அதிர்ச்சியும் ஆகக் கூடாதுன்னு சொல்லியிருக்கார். நீ ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணாதடா” என்றான் அக்கறையாய்.
“நான் அதிர்ச்சி ஆகக் கூடாதுன்னு நீங்க மறைக்கிற ஒவ்வொரு விஷயமும் பின்னாடி எனக்கு எவ்வளவு பெரிய அதிர்ச்சியா இருக்கும்னு யோசிச்சுப் பார்த்திங்களா? மனசை எப்படி சட்டு சட்டுன்னு மாத்த முடியும்? இத்தனை நாள் நந்த குமாரை தான் புருஷன்னு நினைச்சுட்டு இருந்திருக்கேன். ஆனா அதுவே இப்ப ஆட்டம் காணும் போது, நான் செய்றது எவ்வளவு பெரிய அசிங்கம்? எனக்கு என்னை நினைச்சாலே அருவெறுப்பா இருக்கு. என்னோட நிலமையில இருந்து உங்களுக்கு யோசிக்கணும்னு தோணவே இல்லையா?” என்றாள் கண்ணீருடன்.
“வேதா அழாதடா..! இது பப்ளிக் பிளேஸ்..!” என்றான் சரண்.
அவள் இவ்வளவு வருந்தியும் அவன் வாயைத் திறக்காமல் இருக்கிறான் என்றால், இனியும் திறக்க மாட்டான் என்று அவளுக்கு உறுதியாக தெரிந்து போனது. வேகமாகக் கண்களைத் துடைத்தவள்,
“நீங்க எதுவுமே சொல்ல வேண்டாம். நீங்க ஏதோ மந்திரத்துக்கு கட்டுப்பட்டவர் மாதிரி வாயையே திறக்க மாட்டேங்குறிங்க. நீங்களே வாயைத் திறக்காதப்ப, நம்ம வீட்ல வேற யாரும் வாயைத் திறக்கப் போறதில்லை.” என்றாள் தீர்மானமாய்.
“எனக்கு கொஞ்சம் டைம் கொடுடா. நானே எல்லாத்தையும் சொல்றேன்” என்றான்.
“நோ..! நீங்க எதுவும் சொல்ல வேண்டாம்.” என்று நிறுத்தியவள்,
“உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா சரண் அண்ணா..!. மால்ல நந்த குமார் என் கையைப் பிடிச்சப்பவே எனக்கு தெரிஞ்சு போய்டுச்சு, எனக்குத் தாலி கட்டி, என் கையைப் பிடிச்சு எனக்கு ஆறுதல் கொடுத்த கைகளோட ஸ்பரிசம் அது இல்லைன்னு. அதுக்கு அடுத்து கொஞ்ச நேரத்துலையே அது யாருன்னும் எனக்கு தெரிய வந்துடுச்சு. யாரும் சொல்லாமலேயே எனக்கே புரிஞ்சிடுச்சு. உங்ககிட்ட தெளிவு படுத்தத் தான் கேட்க வந்தேன்.” என்றவளின் பதிலில் திகைத்துப் போனான் சரண்.
நந்தகுமார் ஏதாவது சொல்லியிருப்பான், அதன் மூலம் அவளுக்கு சந்தேகம் வந்திருக்கும் என்று அவன் நினைத்திருக்க,கரத்தின் தொடுகையிலே அவன் அல்ல என்று உணர்ந்தவளை நினைத்து சற்று பெருமையாகக் கூட நினைத்தான் சரண்.
‘இதை முதல்ல விஜய்கிட்ட சொல்லணும்’ என்று அவன் நினைத்த மறு நிமிடமே,
“நானா தெரிஞ்சுகிட்ட உண்மையை நானே உறுதி படுத்திக்கிறேன். அது வரைக்கும் யார்கிட்டயும்…” என்று நிறுத்தியவள்,
“உங்களுக்குப் புரியும்னு நினைக்கிறேன்…!எனக்கு உண்மை தெரியும்னு யார்கிட்டயும் நீங்க சொல்லக் கூடாது. இது என் மேல சத்தியம்..” என்றாள்.
“நான் யார்கிட்ட சொல்லப் போறேன்னு சொன்னிங்களே..! அதுலயே உறுதி ஆகிடுச்சு” என்றாள்.
“ஆத்தாடி..! தூங்கிட்டு இருந்தவனை எழுப்பிக் கூட்டிட்டு வந்து,போட்டு வாங்குறதுங்கறது இது தானா?” என்றான்.
“இன்னமுமா புரியல?” என்றாள்.
“ரைட்டு..!!” என்றவன்,
“அண்ணிகிட்ட மட்டும் சொல்லிக்கவா?” என்றான்.
“நோ..! முக்கியமா அவங்ககிட்ட தான் சொல்லக் கூடாது. இந்த விஷயத்துல அவங்களும் எனக்கு ஞாயம் செய்யலை.” என்றாள்.
“உனக்கு நந்தகுமார் மேல விருப்பம் இருக்காடா?” என்றான் யோசனையுடன்.
“ஏன் கேட்குறிங்க? சேர்த்து வைக்கப் போறிங்களா? நீங்க சேர்த்து வைக்கப் போறிங்களா? இல்லை எனக்குத் தாலி கட்டியவர் சேர்த்து வைக்கப் போறாரா?” என்றாள் வேதனையுடன்.
“நான் நினைச்சதை விட என் தங்கச்சி புத்திசாலி தான்” என்றான் சரண்.
“ஒரு விஷயம் நல்லா புரிஞ்சுக்கங்க அண்ணா..! என் அம்மாவையே நான் விட்டுக் குடுக்க மாட்டேன். இதுல என் அம்மா எனக்காக குடுத்ததையா விட்டுக் கொடுத்திடுவேன். நந்தகுமாரே என் அம்மா பார்த்த மாப்பிள்ளை தான? அவங்களே, அவர் வேண்டாம்னு சொல்லியிருக்கும் போது, நான் ஏன்னு யோசிக்காமையா இருப்பேன்.” என்றாள்.
“எங்க அந்த நந்தகுமார் மேல நேசத்தை வளர்த்துகிட்டையோன்னு நினைச்சேன்டா..” என்றான்.
“இல்லைன்னு பொய் சொல்ல மாட்டேன். பியான்சியா வரப் போறவர்னு ஒரு பிடித்தம் ஈர்ப்பு இருந்தது உண்மைதான். ஆனா இப்ப இல்லை. அதுல தெளிவா தான் இருக்கேன். இன்னொருத்தர் எனக்காக செஞ்சதை நந்தகுமார் தான் செஞ்சார்னு நினைச்சதால வந்த ஈர்ப்பா கூட இருக்கலாம். இஷ்ட்டத்துக்கு மாத்தி மாத்தி விளையாட இதென்ன விளையாட்டா? என்னோட வாழ்க்கை. எனக்கு யோசிக்கிறதுக்கும், நடைமுறையை ஏத்துக்கறதுக்கும் கொஞ்ச நாள் ஆகும். அந்த கொஞ்ச நாள் வரைக்கும் நீங்களும் அமைதியாவே இருங்க. சம்பந்தப்பட்டவங்க கிட்ட வாயைத் திறக்காம இருங்க. அதுவே போதும்.” என்றாள்.
“என் மேல கோபமாடா..” என்றான் ஆதுரமாய்.
“இல்லைன்னு பொய் சொல்ல மாட்டேன். ஆனா, அதை விட பாசம் அதிகமா இருக்கு. பாசம் கோபத்தை ஓவர்டேக் பண்ணிடுது” என்றாள்.
இருவரும் பேசிக் கொண்டே நடக்க, மீண்டும் அவனை ஓரக்கண்ணால் பார்த்தாள். சரணோ மனதில் இருந்த பாரம் கொஞ்சம் இறங்கியிருக்க, பேச்சின் மும்பாரத்தில் இருந்தான்.
“ஆமாட வேதா..! எல்லாருக்கும் மேரேஜ் ஆகிடுச்சு. இத்தனை நாள் இந்த விஜய் ஒருத்தன் தான் இழுத்துட்டு இருந்தான். இப்போ அவனும் ஜோதில ஐக்கியம் ஆகிட்டான்…” என்று பேச்சு வாக்கில் உளற, அதைக் கேட்காதவள் போல் கேட்டிருந்தவள் நமட்டுச் சிரிப்புடன் நடந்தாள். என்ன சொன்னோம் என்பதையே உணராமல் ஒருத்தன் நடந்து கொண்டிருந்தான்.