“எஸ்..! எங்களால முடிஞ்ச அளவுக்கு ட்ரை பண்ணிட்டோம்.பட், நோ யூஸ். அவங்க பல்ஸ் ஸ்டேபிளா இல்லை. அவங்க தன்னோட கடைசி கட்டத்துல இருக்காங்க. எப்ப என்ன வேணும்னாலும் நடக்கலாம். நீங்க பார்த்து பேசுறதுன்னா பேசிக்கோங்க.” என்று டாக்டர் கைவிரிக்க,
காதம்பரியின் நிலை அறிந்த ராமச்சந்திரன் உடைந்து போய்விட்டார். நூற்றில் ஒரு நல்வாய்ப்பாக அவர் பிழைத்துவிடுவார் என்று நம்பிக் கொண்டிருந்த அவர் நம்பிக்கை ஆட்டம் கண்டது.
“என்ன விஜய்..! டாக்டர் இப்படி சொல்லிட்டு போறார்? வேதா எந்திருச்சு வந்து காதும்மாவை கேட்டா, நான் என்னன்னு சொல்லுவேன். இதை அவ எப்படி தாங்குவா? எங்களாலேயே தாங்க முடியலையே. காதும்மா இல்லாம அவளால இருக்க முடியாது விஜய்” என்று சரண் கதற,
“சரண்..! கண்ட்ரோல் யுவர் செல்ப். இப்படி நீயே உடைஞ்சு போயிட்டா எல்லாருக்கும் யாரு ஆறுதல் சொல்றது. முதல்ல அங்கிளை கூட்டிட்டு போய், அவங்களை பார்க்க விடு” என்றான் விஜய்.
“என்னால முடியாது..! அவங்களை அந்த நிலமையில கண்டிப்பா என்னால பார்க்க முடியாது..” என்று சரண் மறுக்க,
“இப்ப விட்டா அப்பறம் எப்பவுமே அவங்க கூட பேச உனக்கு வாய்ப்பு கிடைக்காது சரண். சொன்னா புரிஞ்சுக்க” என்றான்.
“மாமா வாங்க போய் அத்தையை பார்க்கலாம்” என்று கீர்த்தனா அவரை அழைக்க, தட்டுத் தடுமாறி எழுந்து வந்தார் ராமச்சந்திரன். மனைவியின் நிலை அவரை ஒரே நாளில் பத்து வயது முதிர்ந்தவர் போல் ஆக்கிவிட்டது.
உள்ளே அவர்கள் பார்த்தது உடல் முழுவதும் கட்டுடன் இருந்த காதம்பரியைத் தான். கணவரைக் கண்ட காதம்பரியில் கண்களில் இருந்து கண்ணீர் வழிய,
“அத்தை அழாதிங்க பிளீஸ்” என்ற கீர்த்தனா, அவரின் கண்ணீரைத் துடைத்தாள்.
ஆக்சிஜன் மாஸ்க்கை அவர் கழற்றும் படி சொல்ல,
“நீங்க ஸ்ட்ரெயின் பண்ணாதிங்க அத்தை” என்றாள்.
அவர் ஏதோ சொல்ல வர, வேறு வழியின்றி கழட்டினாள் மாஸ்க்கை.
“வே..வேதா..ம..மனோ” என்றார் திணறியபடி.
“அவங்க ரெண்டு பேரும் நல்லா இருக்காங்க . உயிருக்கு எந்த பிரச்சனையும் இல்லை காதும்மா” என்றான் சரண். பெற்ற இரு மக்களுக்கும் ஒன்றுமாகவில்லை என்றவுடன் அவரின் முகத்தில் நிம்மதியின் சாயல்.
“உனக்கும் ஒன்னும் இல்லம்மா..! சீக்கிரம் சரியாகிடும்” என்றார் ராமச்சந்திரன், அவரின் கைகளைப் பற்றிக் கொண்டு.
ஜீவனில்லாத ஒரு புன்னகையை சிந்த விட்டார் காதம்பரி. அந்த புன்னகையே சொல்லியது உள்ள நிலவரம் அவருக்குத் தெரியும் என்று. அந்த புன்னகையை கண்டு உடைந்து அழ ஆரம்பித்துவிட்டார் ராமச்சந்திரன்.
“நீ இல்லாம என்னால முடியாது காதம்பரி. தயவு செஞ்சு திரும்ப வந்துடு. இல்லைன்னா என்னையும் கூடவே கூட்டிட்டு போய்டு.. நீ இல்லாம நாங்க எப்படி இருப்போம். வேதா வந்து கேட்டா நாங்க என்னன்னு சொல்லுவோம்..” என்று வயது மறந்து சிறு குழந்தை போல் அழ, கதம்பரியின் கண்களிலும் கண்ணீர் வழிந்தது. கணவரின் அன்பை முழுமையாய் பெற்று, குடும்பத்தின் தூணாய் இருந்த பெண்மணியாயிற்றே..!
சுற்றி இருந்த அனைவரையும் அவர் கண்கள் பார்க்க, சந்தியாவை அருகில் அழைத்தார்.
“அத்தை..” என்றவளுக்கு கூட கண்கள் கலங்கியிருந்தது.
“மனோவைப் பார்த்துக்கமா..!” என்றார். ‘சரி’ என்பதைப் போல் அவள் தலையாடியது.
பாலச்சந்திரன்,மைதிலி என அனைவரையும் பார்க்க, அவர்கள் அழுது கொண்டிருந்தனர்.
“யாரும் அழாதிங்க..!” என்றார் திணறியபடி. பிறகு என்ன நினைத்தாரோ..
“அக்கா..! என்னக்கா இப்படி பேசுறிங்க? அவ என் பொண்ணுக்கா?” என்று மைதிலி ஒரு பக்கம் கதற,
“காதும்மா..! நீங்க சொன்னாலும் சொல்லாட்டியும் எப்பவும் அவ என் தங்கச்சி தான். அவளை எப்படி பார்த்துக்கணும்னு எனக்குத் தெரியும். எங்களுக்கு நீங்களும் தான் வேணும். ஒழுங்கா சரியாகி வாங்க” என்றான் சரண் கலங்கிய குரலுடன்.
“சரண்..! இப்படி ஆளாளுக்கு எமோஷ்னல் ஆகி, அவங்களையும் அப்படி ஆக்காதிங்க.” என்ற விஜய்,
“இந்த விபத்து நடக்காம இருந்திருந்தா, என் பொண்ணோட கல்யாணம் இந்நேரத்துக்கு முடிஞ்சிருக்கும்ல” என்றார்.
“ஆமாம்..!” என்பதைப் போல் தலையை ஆட்டினான் விஜய்.
“ஏங்க! எனக்கு என் பொண்ணு கல்யாணத்தைப் பார்க்கணும்” என்றார் காதம்பரி கண்களில் ஆசையைத் தேக்கிக் கொண்டு.
வேதாவின் நிலையையும், நந்தகுமார் குடும்பம் பேசியதையும் எப்படி சொல்வார் ராமச்சந்திரன். வேதாவின் நிலை தான் காதம்பரிக்குத் தெரியாதே. அவர் என்ன சொல்வதென்று தெரியாமல் யோசிக்க,
“அது எப்படிக்கா பண்ண முடியும்? அதான் அந்தம்மா கல்யாணம் நடக்காதுன்னு சொல்லிட்டு போய்டுச்சே? நம்ம பிள்ளைய வேணாம்னு சொன்னதுக்கு அவங்க தான் வருத்தப்படனும். அவ சரியாகி வரட்டும். இதை விட ஒரு நல்ல மாப்பிள்ளையா பார்த்து அவளுக்கு ஜாம் ஜாம்னு கல்யாணம் பண்ணி வைக்கலாம்..” என்றார் மைதிலி பட்டென்று.
காதம்பரி அதிர்ந்த பார்வை பார்க்க,
“அம்மா..! பிளீஸ்..! அமைதியா இருங்க” என்றான் சரண்.
“சரண், அம்மா சொன்னது எல்லாம் உண்மையா?” என்றார் திக்கித் திணறி. அவருக்கு மூச்சு வாங்க, வேகமாக அவருக்கு ஆக்சிஜன் மாஸ்க்கை மாட்டி விட்டான் சரண்.
கண்களை மூடியவருக்கு, விபத்து நடந்து நினைவு தப்பும் இறுதி நொடிகளில் விஜய், வேதாவைக் கண்டு பதறி மடியில் தூக்கி வைத்து கதறியது நினைவிடுக்கில் தெளிவில்லாமல் வர, கண்களைத் திறந்தார். சட்டை முழுவதும் ரத்தக் கரையுடன் இருந்த விஜய்யைப் பார்த்தவுடன் அவருக்குத் தெரிந்து போனது, அவர்களை காப்பாற்றியது அவன் தான் என்று. விஜய்யை தனக்கு அருகில் அழைத்தார். அவனும் அமைதியாய் சென்று ஆறுதலாய் அவரின் கைகளைப் பற்றிக் கொண்டான்.
“ரிலாக்ஸ் ஆன்ட்டி..! ஒன்னும் ஆகாது..” என்றான்.
“எ..என்..வே..வேதாவை கல்யாணம் பண்ணிக்கிறிங்களா?” என்றார்.
“ஆன்ட்டி..!!!!” என்ற விஜய் முற்றிலும் அதிர்ந்து போய்விட்டான். ஒரு சதவிகிதம் கூட அவன் இதை எதிர்பார்க்கவில்லை. அதுவும் அவனிடம் அவர் இப்படி கேட்பார் என்று.
“சொல்லுங்க தம்பி..!” என்றார்.
“அண்ணா..! சரின்னு சொல்லுண்ணா..!” என்றாள் கீர்த்தனாவும் இணைந்து கொண்டு.
“என்ன பேசுற கீர்த்தனா? அவங்களுக்குத் தான் எதுவும் தெரியாது. உனக்குக் கூடவா தெரியாது? நான் எப்படி?” என்று திணறியவன்,
“இப்படி நடக்குறதுக்கு வாய்ப்பு இல்லை ஆன்ட்டி. உங்க பொண்ணுக்கு இப்படி அவசர கல்யாணம் பண்ண வேண்டிய அவசியமும் இல்ல. ஜாதகம், அது இதுன்னு பார்க்குறது எல்லாம் முட்டாள் தனமான மூடநம்பிக்கை ஆன்ட்டி” என்றான்.
“கண்ணுத் தெரியாதவளை எப்படி கல்யாணம் பண்றதுன்னு யோசிக்கிறியா விஜய்.” என்ற சரணின் கேள்வியில் விஜய் அதிர்ந்தானோ இல்லையோ, காதம்பரி அதிர்ந்தார்.
“அடிச்சு பல்லைப் பேத்துடுவேன் சரண். நான் ஏன் இப்படி சொல்றேன்னு உனக்கு நல்லாவே தெரியும். அதுவும் இல்லாம வேதா ரொம்ப சின்ன பொண்ணு. நான் எப்படி?” என்று விஜய் பேசிக் கொண்டிருக்கும் போதே,
“வேதாவுக்கு என்னாச்சு? கண்ணு தெரியாதா?” என்ற காதம்பரியின் பல்ஸ் மீண்டும் குறைய ஆரம்பிக்க, சரண் தான் உளறியதை நினைத்து வருந்தினான்.
“நீங்க எல்லாம் கொஞ்சம் வெளிய இருங்க” என்று நர்ஸ் சொல்ல, அனைவரும் வெளியே வந்து விட்டிருந்தனர்.
அந்த நேரத்தில் சிவச்சந்திரனும் வந்துவிட்டிருந்தார். வந்தவர் சற்று தயங்கி, அண்ணனின் அருகில் சென்றவர்,
“அண்ணா..!” என்று அவரின் தோளைத் தொட, தயக்கமின்றி “சிவா”! என்று கட்டிக் கொண்டு அவர் கதற, பிரிந்த அண்ணன்,தம்பி இருவரும் இணைந்திருந்தனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் சிவச்சந்திரனால் ஈகோவுடன் இருக்க முடியவில்லை.
விஜய்யின் அருகில் இருந்த சரண்,
“நான் உன்கிட்ட இருந்து இதை எதிர்பார்க்கலை விஜய். ஒரு உயிர் போற நேரத்துல அவங்க உன்கிட்ட கேட்ட ஒரு விஷயத்தை நீ மறுப்பேன்னு நான் நினைக்கலை” என்றான்.