டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிர்விட்டிருக்க, காதம்பரி ரத்த வெள்ளத்தில் இருக்க, வேதாவோ சாலையின் ஓரத்தில் கிடந்தாள். அவள் காலில் அடிபட்டிருக்க, கண்களில் ஏதோ கூர்மையான பகுதி குத்தியதில் குருதி வழிந்து கொண்டிருந்தது. சாலையில் உருண்டதில் உடல் முழுதும் சிராய்ப்புகளும், இரத்தமுமாய் இருந்தாள் வேதா. இளஞ்சிவப்பு வண்ண புடவை ஆங்காங்கே ரத்த சிவப்பில் மாறிக் கொண்டிருந்தது. சிறிய காயங்களுடன் ஓரளவிற்கு நிதானத்தில் இருந்தது மனோகரன் தான். ஆனால் விபத்தின் அதிர்ச்சியோ, அதன் தாக்கமோ என்னவோ அவனால் எழக் கூட முடியவில்லை.
அவர்களுக்கு முன்னால் சென்ற காரில் இருந்த இரண்டு பேர், அதிவேகத்தில் வந்து மோதிய காரில் இருந்த நான்கு பேர் என அனைவரும் ரத்த வெள்ளத்தில் கிடக்க, சற்று நேரத்திற்கெல்லாம் அந்த இடம் பரபரப்பாகி விட்டது.
வேதாவின் காருக்கு பின்னால் கிளம்பி வந்த விஜய்யோ ஏதோ விபத்து என்று இறங்கி வந்தான்.
“என்னண்ணா..? ஒரே ட்ராபிக்கா இருக்கு?” என்றாள் கீர்த்தனா.
“தெரியலைமா..! ஏதோ ஆக்சிடென்ட்னு நினைக்கிறேன். இரு நான் பார்த்துட்டு வரேன்” என்று முன்னின்ற வண்டிகளை எல்லாம் தாண்டி சென்றவனின் கண்களில் முதலில் பட்டது ரத்த வெள்ளத்தில் இருந்த காதம்பரி தான்.
பார்த்தவனின் விழிகள் நிலைகுத்திப் போக, திடீரென்று ஏற்பட்ட அதிர்ச்சியில் அப்படியே நின்று விட்டான். அவன் சுய உணர்வுக்கு வருவதற்கு சில நிமிடங்கள் எடுத்துக் கொண்டது.
“சார் கொஞ்சம் நகருங்க” என்ற காவலரின் குரலில் தான் சுயத்திற்கு வந்தான். உடல் வெடவெடத்துப் போனது. வேகமாய் சுற்றி பார்வையை விட, சாலையின் ஓரத்தில் கிடந்தாள் வேதா.
“வேதா..” என்று அதிர்ந்தவனின் இதயம் ஒரு நிமிடம் நின்றுவிட்டே துடித்தது. அடுத்த நிமிடம் யோசிக்காமல் அவள் அருகில் சென்றவன், அவளைத் தூக்கி மடியில் கிடத்தியிருந்தான்.
“வேதா..! வேதா..!” என்று அவள் முகத்தை தட்ட, அவளுக்கோ சுய நினைவே இல்லை. அவளுக்கு இதயத் துடிப்பு இருக்கிறதா என்று பார்ப்பதற்குள் அவனுக்கு இதயத் துடிப்பு நின்றுவிடும் போல் இருந்தது.
விஜய்யை காணாமல் பின்னால் வந்த கீர்த்தனாவும் இதைப் பார்த்துவிட,
“அண்ணா..!!!” என்று அதிர்ச்சியில் கத்தி விட்டாள்.
அதற்குள் ஆம்புலன்ஸ் வந்துவிட..
“கீர்த்தனா இங்க பாரு..! காதம்பரி ஆன்ட்டிக்கு பல்ஸ் இருக்கா பாரு..! க்யிக்..! அழறதுக்கு நேரமில்லை..” என்று அவன் துரிதப்படுத்த, அவளுக்கு கைகால்கள் எல்லாம் நடுக்கம் கொடுத்தது.
அதற்குள் காதம்பரியை ஆம்புலன்சில் ஏற்றி இருந்தனர்.
இவர்களைப் பார்த்த மனோகரனுக்கு கொஞ்சம் தெம்பு வந்ததைப் போல் இருக்க, மெதுவாக எழுந்தான். தட்டுத் தடுமாறி அவர்களின் அருகில் வருவதற்கும், இவர்கள் அவனைப் பார்ப்பதற்கும் சரியாக இருந்தது. காவல் துறையும், அருகில் இருந்தவர்களும் விரைந்து செயல்பட, அடுத்த கட்ட வேலைகள் அனைத்தும் அதிவேகத்தில் நடந்தது.
முதலில் வந்த ஆம்புலன்சில், அபாயகட்டத்தில் இருந்த காதம்பரியையும், இன்னொரு பெண்ணையும் விஜய் கூறிய மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வேதாவையும்,மனோகரனையும் விஜய் தன் காரில் ஏற்றிக் கொண்டு சீறிப் பாய்ந்து கொண்டிருந்தான்.
“அண்ணா..! எனக்கு ரொம்ப பயமா இருக்குண்ணா..! வேதாவுக்கு பல்ஸ் இருக்கு. ஆனா, கண்ணை முழிக்க மாட்டேன்றா.. ஐஸ் புல்லா ஒரே ரத்தம்..” என்று கீர்த்தனா அழ, காரணமில்லாமல் விஜய்யின் கண்களில் இருந்தும் கண்ணீர் வந்து கொண்டிருந்தது. கை சட்டையில் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே காரை ஒட்டிக் கொண்டிருந்தான்.
“ஒன்னும் ஆகாதுடா..! சீக்கிரம் ஹாஸ்பிட்டல் போய்டலாம்…! மனோவுக்கு கொஞ்சம் அந்த வாட்டரை எடுத்துக் குடு..” என்றான். அவனோ சித்த பிரம்மை பிடித்தார் போல், நெற்றியில், கைகால்களில் வழிந்த ரத்தத்தோடு வேதாவை பார்த்து அமர்ந்திருந்தான். அவன் தோள்பட்டையிலும் காயம் இருக்க, மேல்சட்டையின் ஒரு பகுதி முழுவதும் ரத்தத்தில் தோய்ந்திருந்தது.
கீர்த்தனா, சரணுக்கு அழைத்து விஷயத்தை சொல்லியிருக்க, அவர்களும் கிளம்பி வந்து கொண்டிருந்தனர். ஹாஸ்பிட்டல் முன்பு காரை நிறுத்தியவன், வேதாவை வேகமாய் தூக்கிக் கொண்டு ஓடினான்.
“எமர்ஜென்சி..ஆக்சிடென்ட். போலீஸ் வரணும் அப்படி இப்படின்னு சொல்லாதிங்க. அவங்ககிட்ட இன்பார்ம் பண்ணியாச்சு. எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன். ட்ரீட்மென்ட் ஸ்டார்ட் பண்ணுங்க..” என்று அவர்கள் பேசும் முன்பே இவன் சொல்லி முடித்திருந்தான். வேதாவை அட்மிட் செய்தவன், வேகமாய் சென்று மனோகரனையும் வீல்சேரில் வைத்து அழைத்து வந்தான். அவனுக்கும் எமர்ஜென்சியில் அட்மிஷன் போட, அப்போது தான் சற்று மூச்சு விட்டான்.
“அண்ணா..! ஆன்ட்டியை எந்த ஹாஸ்பிட்டல் கொண்டு போயிருக்காங்க..” என்றாள் கீர்த்தனா அழுகையுடன்.
“நியர் பை ஹாஸ்பிட்டல் இது தான். அவங்களுக்கு பல்ஸ் இருந்தது. இங்க தான் கொண்டு வர சொன்னேன்..” என்றவன், ரிஷப்ஷனில் சென்று விசாரிக்க,
“அட்மிஷன் போட்டு பத்து நிமிஷம் ஆச்சு சார். கொஞ்சம் க்ரிடிகள் தான்..” என்றனர்.
அங்கிருந்த காவலரின் அருகில் சென்றவன், விபத்து பற்றி விசாரிக்க, விபத்து எதனால் ஏற்பட்டது? எத்தனை பேர் இறப்பு என்பது போன்ற அனைத்து தகவல்களையும் அவர் வாயிலிருந்து வாங்கிவிட்டான்.
“ரொம்ப தேங்க்ஸ் சார்..! நீங்க மட்டும் அங்க ஹெல்ப் பண்ணலைன்னா, எங்களால இவ்வளவு சீக்கிரம் இங்க வந்திருக்க முடியாது. இவங்க எல்லாம் எங்க பேமிலி தான். நாங்க இங்கயே ட்ரீட்மென்ட் பார்த்துக்கறோம். உங்க எல்லா பார்மாலிட்டிஸ்க்கும் நாங்க கோஆபரேட் பண்றோம்” என்றவன்,
“டிரைவர் இப்போ எப்படி இருக்கார்?” என்றான்.
“அவர் ஸ்பாட் அவுட் சார். பாடி இப்போ ஜிஹெச் போயிருக்கும்.” என்றார் அந்த காவலர். முகம் தெரியாத அந்த டிரைவருக்காக மனம் வருந்தினான் விஜய்.
“இவங்களுக்கு முன்னாடி போன, கார்ல மோதி அப்பறம் இவங்க கார்ல மோதியிருக்காங்க சார். அதனால இவங்க காயத்தோட தப்பிச்சிருக்காங்க. இவங்களுக்கு முன்னாடி கார்ல இருந்த ரெண்டு பேருமே இறந்துட்டாங்க. ஆக்சிடென்ட் பண்ண கார்ல இருந்த நாலு பேர்ல மூணு பேர் ஸ்பாட் டெத் சார். காலேஜ் பசங்க, டிரங்க் அண்ட் டிரைவ் சார். இந்த காலத்து பசங்களுக்கு எல்லாத்துலையும் வேகம். வீணா அவங்க உயிர் போனது மட்டுமில்லாம, சிவனேன்னு ரோட்டுக்கு அடுத்த பக்கம் வந்துட்டு இருந்தவங்க மேல மோதி, அதுலயும் மூணு உயிர் போயிருக்கு. இருக்குறவங்க நிலைமை என்னன்னு தெரியலை.” என்று புலம்பியபடி சென்றார் அந்த காவலர்.
அதற்குள் சரண்,அகரன், ராமச்சந்திரன் என மொத்த குடும்பமும் வந்திருந்தது.
“விஜய் என்னடா ஆச்சு? எப்படி ஆச்சு?” என்ற சரணுக்கு நிற்க கூட முடியவில்லை. ராமச்சந்திரனோ தளர்ந்து அங்கிருந்த இருக்கையில் அமர்ந்துவிட்டார்.
நடந்ததை விவரித்தான் விஜய். அவனாலும் தெளிவாக சொல்ல முடியாமல், ஒரு வழியாக சொல்லி முடிக்க, ராமச்சந்திரன் குலுங்கி குலுங்கி அழுது கொண்டிருந்தார். மணப்பெண்ணாய் கிளம்பி வந்த மகளையும், உடன் வந்த மனைவி, மகனையும் இப்படி காண்பார் என்று கனவிலும் நினைக்கவில்லை அவர்.
“அங்கிள் பிளீஸ்! அழாதிங்க..! அவங்களுக்கு ஒன்னும் ஆகாது..!”என்று விஜய் அவருக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தான். அதற்கு மேல் அவனால் என்ன சொல்லி அவரை சமாதானப் படுத்த முடியும். காதம்பரியின் நிலைமை சொல்லும் படியாக இல்லை என்றா அவரிடம் சொல்ல முடியும்.
“மனோ… அவன்.. அவன் எங்க இருக்கான் தம்பி…” என்றார்.
“மனோவுக்கு கொஞ்சம் காயம் மட்டும் தான் அங்கிள். பார்த்துட்டு இருக்காங்க..” என்றான்.
“எப்படி நடந்தது?” என்றவனின் முகம் கசங்கியிருந்தது. விடிந்தால் திருமணம் என்ற நிலையில் இப்படி ஆகும் என்று அவனும் கனவா கண்டிருப்பான். அவர்களிடமும் நடந்ததை சொல்லி முடித்தான் விஜய்.
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே,
“இங்க வேத வர்ஷினி ரிலேஷன்..” என்று அந்த நர்ஸ் அழைக்க,
“சொல்லுங்க சிஸ்டர்..” என்றான் விஜய். அத்தனை பேரில் அவன் மட்டுமே கொஞ்சம் தெளிவாக இருந்தான்.
“டாக்டர் வந்து சொல்லுவாங்க..” என்று நர்ஸ் கூற, வெளியே வந்தார் டாக்டர்.
“இப்போ வேதாவுக்கு எப்படி இருக்கு டாக்டர். உயிருக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே?” என்றான் படபடப்பாய்.
“உயிருக்குப் பிரச்சனை இல்லை. ஆனா..!” என்று அவர் தயங்க,
“சொல்லுங்க டாக்டர்” என்றான்.
“அவங்க இடதுகண்ல ஷார்ப்பா ஏதோ குத்தியிருக்கணும். அவங்களுக்கு ரெட்டினல் டேமேஜ் ஆகியிருக்கலாம். கார்னியாக்கும், கருவிழிக்கும் இடையில ரத்தம் உறைஞ்சிருக்கு. இமீடியட்டா ஆப்ரேஷன் பண்ணியாகணும். இதுல அவங்களுக்கு திரும்ப பார்வை வந்தாலும் வரலாம். வராமலும் போகலாம். கால்ல ஒரு ஆபரேஷன் பண்ண வேண்டியிருக்கு..அதிர்ச்சியில மூளைக்கு போற நரம்பு வேற பாதிக்கப்பட்டிருக்கு. ஆப்ரேஷன் சக்சஸ் ஆகலைன்னா, கோமாவுக்கு போகவும் வாய்ப்பிருக்கு.” என்றார்.