“இப்ப உங்களுக்கெல்லாம் சந்தோஷமா?இதைத் தான எதிர்பார்த்திங்க? என்னையவே அடிச்சுட்டிங்கள்ல..! இதை நான் சும்மா விட மாட்டேன்..” என்ற சந்தியா அவர்கள் அறைக்குள் சென்று கதவை பட்டென்று அடைத்துவிட்டாள்.
“அவ பேசுனது தப்பாவே இருந்தாலும் நீங்க இப்படி அடிச்சிருக்க வேண்டாம்மா..!” என்றான் மனோ, காதம்பரியைப் பார்த்து.
“அவ எங்களைப் பேசினதோட நிறுத்தியிருந்தா பரவாயில்லை மனோ. ஆனா, சரண் பொண்டாட்டியை பேச அவளுக்கு என்ன உரிமை இருக்கு? அதுவும் அவ்வளவு கீழ்த்தரமா?” என்று காதம்பரி கோபமாய் கேட்க,
“அவ பேச்சே அப்படித்தான்னு தெரியும் தானேம்மா” என்றான்.
“இதென்ன பதில் மனோகர்? நமக்கு வாய் இருக்குன்னு யாரை எது வேணும்னாலும் பேசலாமா? சந்தியா பேச்சுக்கு நாங்க அடங்கிப் போகணும்னே நீ எதிர்பார்க்க கூடாது. இதுல கீர்த்தனா அடங்கிப் போகணும்னு என்ன அவசியம்? கீர்த்தனான்னு இல்லை,அந்த இடத்துல யாரைப் பேசியிருந்தாலும் நான் இப்படித்தான் பண்ணியிருப்பேன்” என்றார் காதம்பரி.
“ரொம்ப சந்தோசம்மா..! என்னோட கனவு என்னன்னு உங்களுக்கு நல்லா தெரியும். அதுக்கு சில பல கோடிகள் தேவைப்படுதுன்னும் தெரியும். தெரிஞ்சும் என்ன பண்ணிங்க?அவ்வளவு பணத்துக்கு நான் எங்க போவேன்? அதனால தான் இந்த சொத்துல கொஞ்சத்தை வித்துக் கேட்டேன்.எப்படியும் எனக்கு சேர வேண்டியது தான? அதைத் தான கேட்டேன். வேற யார்கிட்ட நான் போய் கேட்க முடியும். ஏதோ செய்யக் கூடாத ஒரு விஷயத்தை நான் செய்ற மாதிரி ஆளாளுக்கு என்னையே தப்பு சொல்றிங்க. உங்ககிட்ட கேட்டது தப்புத்தான்..” என்றான் பேசப் பிடிக்காதவனாய்.
“உன்னோட கனவை தப்பு சொல்லலை மனோகரா..! எடுத்த உடனே ஒரு தொழில கோடிகளைப் போட்டு ஆரம்பிக்க வேண்டாம்னு தான் சொல்றோம். முதல்ல சின்ன அமௌன்ட்டா போட்டு ஆரம்பிக்கலாமே..” என்று ராமச்சந்திரன் பொறுமையாய் எடுத்து சொல்ல,
“வேண்டாம்ப்பா..!நான் ஒன்னும் மளிகைக் கடை ஆரம்பிக்க பணம் கேட்கலை.நீங்க சொல்ற மாதிரி செய்ய. நான் எதையும் ஆரம்பிக்கவே வேண்டாம். உங்க சொத்தும் வேண்டாம். எனக்கு எதுவுமே வேண்டாம். சந்தியா பேசுனதுக்காக நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன்.” என்றான்.
“எதுவுமே வேண்டாம்னா?” என்றார் காதம்பரி புரியாமல்.
“எதுவும் வேண்டாம். நீங்க யாரும் வேண்டாம்னு அர்த்தம்..” என்று சந்தியா பின்னால் குரல் கொடுத்தாள். அவர்கள் அவளைப் பார்க்க, அவளோ இரண்டு சூட்கேஸ்களுடன் தயாராகி வந்திருந்தாள்.
“கிளம்பிட்டேன் இல்ல அத்தை. கிளம்புறோம். மனோவையும் கூட்டிட்டு தான் போவேன். இங்க ஆளாளுக்கு என் புருஷனை கேள்வி கேட்பிங்க. ஏதோ கொலை குத்தம் பண்ண மாதிரி பார்ப்பிங்க. இதையெல்லாம் பார்த்துட்டு நான் அமைதியா இருக்கனுமா? எங்களால இங்க இருக்க முடியாது. நாங்க கிளம்புறோம்..” என்றாள் சந்தியா.
“என்ன பேச்சுமா இது? நாளைக்கு மறுநாள் வேதாவோட கல்யாணம். அண்ணன்னு அவன் சபையில இருந்தாகணும். யாரோ கல்யாணத்துக்கு வந்த மாதிரி கிளம்பி போறோம்னு சொல்றிங்க?” என்று ராமச்சந்திரனும் பொறுமை இழந்தவராய் கேட்க,
“இதென்ன பழக்கம் சந்தியா? நான் எப்படி இப்ப ஊருக்கு வர முடியும். என் தங்கச்சி கல்யாணம் முடியாம என்னால எங்கயும் வர முடியாது.” என்றான் மனோகரனும்.
“அது தானே பார்த்தேன். உங்களுக்கு எவ்வளவு பட்டாலும் புத்தி வராது. இவ்வளவு நேரம் இவங்க பேசுன பேச்சுக்கு நீங்க தான் என்னைய கூட்டிட்டு கிளம்பியிருக்கணும். நீங்க வேணும்னா மானங்கெட்டுப் போய் இங்க இருங்க. என்னால இங்க இருக்க முடியாது. நான் கிளம்புறேன்.” என்றாள்.
“இந்த நேரத்துல வீட்டு மருமக கோவிச்சுட்டு போனா, ஊர் உலகம் என்ன பேச மாட்டாங்க.வேணும்னு செய்றியா சந்தியா?” என்றார் காதம்பரி.
‘வேணும்னு தான் செய்றேன். நான் நினைச்சதெல்லாம் வேணும்னு செய்றேன்’ என்று மனதிற்குள் எண்ணியவள், காதம்பரியை திமிராக ஒரு பார்வை பார்த்தாள். அவள் பார்வையிலேயே அவள் மனதின் எண்ணங்களை அவர் புரிந்து கொண்டார்.
“அந்த அளவுக்கு நான் வேண்டாதவ ஆகிப் போயிட்டேன் இல்லையா? உங்களுக்கு எப்பவும் உங்க தங்கச்சி தான முக்கியம்..நான் இவ்வளவு போறாடுறதே உங்களுக்காகத் தான்னு உங்களுக்குப் புரியலையா?”என்றாள்.
“எனக்காக நீ போராட வேண்டாம் சந்தியா. அதை நான் பார்த்துக்கறேன். எவ்வளவு கோபம் இருந்தாலும், இது நம்ம வீட்டு விசேஷம். நான் இருந்து தான் ஆகணும்.என்னோட பொறுப்புல இருந்து என்னால விலக முடியாது. இனி இதைப் பத்தி பேசாத” என்றான் முடிவாய்.
‘நான் போய்ட்டா இவங்கல்லாம் ஒன்னு கூடிடுவாங்களே. என்ன பண்றது? ’ என்று யோசித்தாள்.
“உங்களுக்கு நான் முக்கியமா? இல்ல இவங்க முக்கியமா? எனக்கு இப்பவே தெரிஞ்சாகனும்” என்றாள்.
“அப்படியெல்லாம் சொல்ல முடியாது. உனக்கு நான் முக்கியம்னு நினைச்சா இரு. இல்லையா போ..” என்றான் பட்டென்று.
‘எப்படி பேசுனாலும் வழிக்கு வர மட்டேன்றார். இப்போ கொஞ்சம் அடக்கி வாசிப்போம். இல்லைன்னா முதலுக்கே மோசம் ஆகிடும்’ என்று எண்ணியவள்,
“நான் என் அம்மா வீட்டுக்குப் போறேன்..” என்றாள். மனோ அவளை முறைக்க,
“என்ன முறைக்கிறிங்க மனோ? அம்மா வீட்டுக்குத் தான போறேன்னு சொன்னேன். பெங்களூர் போறேன்னா சொன்னேன். இந்தா இருக்கு மதுரை. நான் அம்மா-அப்பா கூட நேரா மண்டபத்துக்கு வந்திடுறேன். அது கூட உங்களுக்காகத் தான்” என்றாள் பிடிவாதமாய்.
“என்னமோ செய்” என்று மனோ சொல்ல, காதம்பரியும் ஒன்றும் சொல்லவில்லை. இங்கயே இருந்து அடுத்தடுத்து பிரச்சனையை கூட்டுவதற்கு இப்போதைக்கு அவள் அம்மா வீடு செல்வது எவ்வளவோ மேல் என்று அவருக்குத் தோன்றியது.
இங்கு என்ன நடக்கிறது என்று தெரியாமல் நீலாவதி அவர்கள் வீட்டில் இருந்து எட்டி எட்டி பார்த்துக் கொண்டிருக்க, அவரைப் பார்த்த சிவச்சந்திரனுக்கு ஒன்றும் புரியவில்லை.
“இப்ப எதுக்கு அண்ணன் வீட்டையே பார்த்துட்டு இருக்க?” என்றார்.
“என்ன வெடி? அதுவும் நீ அனுப்புன?புரியற மாதிரி சொல்லு” என்றார்.
நீலாவதி நடந்ததைச் சொல்ல, கேட்ட சிவச்சந்திரனுக்கு அளவில்லாமல் கோபம் வந்தது.
“அறிவிருக்காடி உனக்கு? அறிவு இருக்குறவ செய்ற வேலையா இது. எனக்கு என் அண்ணன் குடும்பத்தை ஆகாது தான். அதுக்காக இப்படியா கீழ்த்தரமா யோசிப்ப. கனி மாதிரி வேதாவும் நமக்கு பொண்ணு தான. இந்த சொத்து பிரச்னைக்கு முன்னாடி வரைக்கும் நம்ம ரெண்டு பேரையும் சுத்தி சுத்தி வரும் புள்ள. அந்த புள்ள கல்யாணத்துல குழப்பம் பண்ண பார்த்திருக்க. என்ன ஜென்மம்டி நீயெல்லாம்..?” என்று கத்த,
“நான் ஒன்னும் குழப்பமெல்லாம் பண்ண நினைக்கலை. மனோவும்-சந்தியாவும் கல்யாணத்துல இல்லைன்னா, எல்லாரும் கேள்வி கேட்பாங்க. அவங்க பதில் சொல்ல முடியாம தவிப்பாங்க. அதுக்காகத் தான் பண்ணேன். வேற எந்த எண்ணமும் இல்லை” என்றார் நீலாவதி.