“அதெல்லாம் ஒன்னும் ஆகாது. டச்சப் பண்ணிக்கலாம்.இருங்கண்ணி நான் போய் உங்களுக்கு டீ எடுத்துட்டு வர்றேன்..” என்றபடி நகர்ந்தாள்.
“ஹேய் கீர்த்தனா! சான்சே இல்லடி, உன் நாத்தனார் எவ்வளவு அழகா இருக்கா பாரேன்.அந்த லாங் ஹேர்..வாவ்,எப்படி மெயின்டெயின் பண்றான்னு தெரியலையே?ஸ்டன்னிங் பியுட்டி! ஆனா கொஞ்சம் கூட அலட்டலே இல்லை. உன் வுட்பி தங்கையா?” என்று அருகில் இருந்த அவளின் தோழி கேட்க,
“சரணோட பெரியப்பா பொண்ணு. ஆனா, அவங்க அண்ணாவை விட சரண் மேல தான் பாசம் அதிகமாம். சரண் சொல்லியிருக்கார்..” என்றாள் கீர்த்தனா.
அவர்கள் கூறியதைப் போல வேத வர்ஷினி பத்தொன்பது வயதின் இறுதியில் இருக்கும் அழகுப் பதுமையவள். காண்போரை கட்டியிழுக்கும் வசீகர கண்களுக்கு சொந்தக்காரி. காந்த கண்கள் அவை என்று சொன்னால் மிகையிருக்காது. பால் வண்ண மேனியும், அளவான உடல்வாகும், இடைவரை நீண்ட கூந்தலும் என்று பழமையும்,புதுமையும் கலந்த கலவை அவள். துணிவும், துணிச்சலும் உடையவள். வயதுக்கு மீறிய முதிர்ச்சியுடன் அவள் இருப்பதற்கு காரணம் அவளின் அம்மா காதம்பரி மட்டுமே. மகளை அனைத்து வகையிலும் தனித்திறமையுடன் வளர்த்திருந்தார். சிறு வயது முதலே வீட்டுப் பொறுப்புகளை அவளிடம் கொடுத்து, வாழ்வின் நிதர்சனங்களை கற்றுக் கொடுத்திருந்தார். ராமச்சந்திரனின் செல்ல மகளும் கூட. அவள் சொல்வதே அவருக்கு வேத வாக்கு. அவருக்கும் அவரின் மனைவிக்கும் மகனின் மீதும் மகளின் மீது அளப்பரிய பாசம்.
தன் சொந்த அண்ணன் மனோகரன் திருமணத்தின் போது கூட வேத வர்ஷினி இவ்வளவு மகிழ்ச்சியாக இல்லை. மனோகரன் அவ்வளவு சீக்கிரம் யாருடனும் நெருங்கிப் பழக மாட்டான்.பாசத்தை மனதிற்குள் மட்டுமே வைத்திருப்பவன். வேதாவும் அவனிடம் அதிகம் எதையும் எதிர்பார்க்க மாட்டாள். ஆனால் சரண் என்று வந்துவிட்டால், அவளுக்கு உரிமை உணர்வு தலை தூக்க ஆரம்பித்து விடும். அகரன் கூட அடிக்கடி சலித்துக் கொள்வான், ‘அவன் எனக்கு அண்ணனா? இல்லை உனக்கா?” என்று.
“நம்ம ரெண்டு பேருக்கும் தாண்டா சின்னப் பையா!” என்று வம்பிழுப்பாள்.
“வேதாக்கா..! அண்ணா உன்னை கூப்பிடுறான்..” என்றபடி வந்து நின்றான் அகரன்.
“நான் வரலை அகரா..! நான் வந்தா தேவையில்லாத பிரச்சனை தான் வரும்..” என்று முதல் சித்தி நீலாவதியை மனதில் வைத்துக் கொண்டு சொன்னாள்.
“அதெல்லாம் ஒன்னும் வராது. நீலாம்மாவும் கனியும் இப்போ இல்லை. அதான் அண்ணா உன்னை கூட்டிட்டு வர சொன்னான்” என்றான் அகரன்.
முகத்தை கோபமாக வைத்துக் கொண்டே சென்றாள் வேத வர்ஷினி.அங்கே மாப்பிள்ளையின் அறையில் அதி கவனமாக தயாராகிக் கொண்டிருந்தான் சரண். படிய வாரிய தலையுடன், புது மாப்பிள்ளை கலை மினுமினுக்க அம்சமாய் இருந்தான். அவனைச் சுற்றி அவனின் நண்பர்கள் சிலர் அமர்ந்திருக்க, கொஞ்சம் தயங்கியவள், தயக்கத்துடனேயே உள்ளே சென்றாள்.
“என்னண்ணா? எதுக்கு வர சொன்னிங்க?” என்று அவனின் முகத்தைப் பாராமல் கேட்க,
“என் முகம் என்ன அந்த சுவத்துலையா இருக்கு?” என்றான் கேலியுடன்.
“யாரும் என்கிட்டே பேசத் தேவையில்லை. உங்களுக்குத்தான் என்னைய விட முக்கியமா நிறைய பேர் இருக்காங்களே?” என்றான் மனத்தாங்கலுடன்.
அவளின் கோப முகத்தைப் பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்தவன்,
“ஹேய் வேதா? என்னடா இப்படியெல்லாம் பேசிட்டு இருக்க? நாம என்ன அப்படியா பழகியிருக்கோம். நான் உன்னோட உடன் பிறப்பு இல்லையா?” என்றான் பாவமாய்.
“இல்லை” என்றாள் பட்டென்று. அவள் சொல்லிய வேகத்தில் சுற்றி இருந்த அவன் நண்பர்கள் கொஞ்சம் சிரித்து வைக்க, அவர்களை முறைத்தவன்,
“இப்படி பட்டுன்னு சொன்னா, அண்ணனோட குட்டி ஹார்ட்டு தாங்குமா?இன்னைக்கு உன்னோட அண்ணாவுக்கு கல்யாணம். என் செல்ல தங்கச்சி நீயே இப்படி இருக்கலாமா?” என்றான் சின்ன சிரிப்புடன்.
“அதான் ஓவரா சீன் போட்டுக்கிட்டு உன் செல்ல தங்கச்சி கனிமொழி வந்தாளே..! என்னமோ உலகத்துல இல்லாத பாசத்தைத் தூக்கிக்கிட்டு..” என்று சிலுப்பினாள்.
“அவளும் எனக்கு தங்கச்சிதான வேதா. உனக்கு அக்கா. உங்க ரெண்டு பேர் சண்டையும் ஓயவே ஓயாதா?” என்றான் கண்டிக்கும் குரலில். அவன் குரல் மாறியவுடன் வேதாவிற்கு கண்கள் கலங்கியது.
“நான் ஒன்னும் சண்டை போடணும்னு நினைக்கலை. அவங்கதான் அப்படி நடந்துக்கிறாங்க. அவங்க அம்மா என்னமோ என்னைய தீவிரவாதியைப் பார்க்குற மாதிரி பார்க்குறாங்க. பெரியவங்களுக்குள்ள சண்டைன்னா அது பெரியவங்களோட. ஏன் அதை எங்க வரைக்கும் எடுத்துட்டு வர்றாங்க..? நான் சாதரணமா பேச முயற்சி பண்ணாலும் கனி அக்கா முகத்தைத் திருப்பிகிட்டு தான் போறாங்க. அப்பறம் நான் எப்படி சகஜமா பேச முடியும்?” என்றாள் கோபமாக.
“நிஜமா தாண்டா சொல்றேன். நெக்ஸ்ட் மந்த் அவளுக்கு கல்யாணம். ரெண்டு குடும்பமும் பேசி முடிச்சாச்சு. மாப்பிள்ளை கூட இந்த கல்யாணத்து வந்திருப்பார்..” என்றான்.
“அழகான பொண்ணுங்க எல்லாம் இப்படி சீக்கிரமே கல்யாணம் பண்ணிட்டு போயிட்டா, எங்களை மாதிரி சிங்கிள்ஸ் ஓட நிலைமை என்ன ஆகுறது. நமக்கு குடுத்து வச்சது அவ்வளவு தான்..” என்றான் பெருமூச்சாய்.
“எங்கடா இந்த ரகுவை இன்னமும் காணோம்..?” என்றான் சரண்.
“மச்சான்..! என்னதான் அவன் உனக்கு ப்ரெண்டுனாலும் இப்போ அவன் பொண்ணு வீட்டு சைட். அவன் சித்தி பொண்ணைத்தான் நீ கல்யாணம் பண்ற. ஒரு பொறுப்பான அண்ணனா அவனுக்கு எவ்வளவு வேலை இருக்கும்?” என்றான் ஒருவன் அக்கறையாக.
முதல் நாளிலிருந்து பெண் வீட்டு சார்பாக அனைத்து வேலைகளையும் செய்து முடித்திருந்த அந்த பொறுப்பானவனோ அங்கே மண்டபத்தில் அவனுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறையில் கால்மேல் கால் போட்டபடி அமர்ந்து எதையோ தீவிரமாக வாசித்துக் கொண்டிருந்தான்.
இதை சரண் அறிந்திருந்தானோ என்னவோ…
“யாரு அவனா? இந்நேரம் அவன் ரூம்ல உட்கார்ந்து எதையாவது படிச்சுட்டு இருப்பான்…” என்று கூறி சிரித்தவன், தன் மொபைலை எடுத்து அவனுக்கு அழைப்பு விடுக்க,
“யா சரண்” என்றான் எதிர்புறம் இருந்தவன், அலட்டல் இல்லாத ஆளுமையான குரலில்..
“எங்கடா இருக்க?” என்றான் சரண்.
“இங்க ரூம்ல தான். ஜஸ்ட் ரீடிங்..” என்றானே பார்க்கலாம், சரணிற்கும் சுற்றி இருந்த நண்பர்களுக்கும் சிரிப்பை அடக்க முடியவில்லை. சிரித்து முடித்தவன்,
“சார் கொஞ்சம் வெளிய வரீங்களா..? இன்னைக்கு எனக்கு கல்யாணம். முகூர்த்த நேரத்துக்கு இன்னும் அரைமணி நேரம் தான் இருக்கு. அது மட்டுமில்லாம, இது உன்னோட தங்கச்சி கல்யாணம். அது உனக்கு ஞாபகம் இருக்கும்னு நினைக்கிறேன்..” என்றான்.