Advertisement

அத்தியாயம் 5

வேகமாக ஸ்வேதாவை மருத்துவமனைக்கு உள்ளே அழைத்துச்   சென்றனர். “ஐ சி யூ”வில் அவளை அழைத்துச் சென்றனர். மனகுழப்பத்துடனும், தலைபாரத்துடனும் ரகு கவலையுடன்   உட்கார்ந்திருந்தான். ராஜம்மாவிடம் நடந்ததை சொன்னான் ரகு.

தம்பி, நான் இப்பொழுதே கிளம்புகிறேன் ராஜம்மா கூற

வேண்டாம்மா, ரியாவிற்கு ஆபத்து வந்து விடுமோன்னு பயமாக   உள்ளது.

சரி தம்பி, நான் வரவில்லை. நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்.

அம்மா, அவளுடைய வீட்டிற்கு சேதியை சொல்லணுமே? என்ன   செய்வது?

என்னிடம் அவளது நம்பர் உள்ளது தம்பி. நான் கூறி விடுகிறேன்.

எப்பம்மா நம்பர் வாங்கினீர்கள்?

அந்த பொண்ணு என்னிடம் நன்றாகவே பேசினாள். எப்படி நம்முடைய   ரியாவிடம் நட்பாக இருந்தாளோ, அவள் என்னுடைய பொண்ணாகவே   மாறி விட்டிருந்தாள் என அழ ஆரம்பித்தார் ராஜம்மா.

நீங்கள் நினைப்பது போல் அவள் இல்லை. ரொம்ப தங்கமான பொண்ணு   தம்பி என மீண்டும் அழுதார்.

அம்மா, நான் வீட்டிற்கு வந்த பிறகு நீங்கள் வந்து அவளை பாருங்கள்  என்றான் ரகு.

சரி தம்பி, அந்த பொண்ணை பார்த்துக் கொள்ளுங்கள் என போனை   துண்டித்தார் ராஜம்மா.

நான் தான் தேவையில்லாமல் அவளிடம் கோபப்பட்டு விட்டேன். அவள்  எனக்காக தன் உயிரையே இழக்கும் அளவுக்கு நான் என்ன செய்தேன்? அவளை ரொம்ப கஷ்டப்படுத்தி விட்டேன். அவளிடம் நடந்து கொண்டதை   நினைத்து, அவன் மனம் விக்கித்துப் போனது. நொந்தே போனான். இவள்  எதற்காக எனக்காக…என அவன் மனமே அவனை கேள்விகளால் உலுக்கி  எடுத்தது. அழவே ஆரம்பித்தான் ரகு.

என்னை சுற்றி என்ன நடக்கிறது?

  “முதலில்  என்  மனைவி

   இப்போது  இந்த  பெண்”

 மனதினுள்  நினைத்தான்.

    “என்

     உணர்வை

     வெளிக்கொணர வைத்தவளே

      யார் நீ?

      எனக்காக

      உன் உயிரை

      மாய்க்க

      துணிந்தாயே

      யார் நீ?

      உன் கரம்

     என்னை

     தீண்டிய போது

     ஏனோ

     என் மனம்

     துடித்ததே

     யார் நீ பெண்ணே

      யார் நீ?”

மனதில் நினைத்தபடி வழிந்த கண்ணீருடன் உட்கார்ந்திருந்தான் ரகு.

ஸ்வேதாம்மா..ஸ்வேதாம்மா..என அலறியபடி வந்தார் பார்வதியம்மா. பாலாவும் வந்திருந்தான்.

பாலா ரகுவை நோக்கி அடிப்பது போல் வந்து, அவன் காதருகே வந்து  என் அம்மா போகட்டும். அப்புறம் உன்னை பார்த்துக் கொள்கிறேன் என  ரகு தோளில் கை போட்டு நிற்க, ரகு அவனை அணைத்துக் கொண்டு அழ, பாலா அதிர்ச்சியோடு நின்றான்.

என்ன நடந்தது ரகு? நீ என்ன செய்கிறாய்? கோபமாக கேட்டான்.

ரகு நடந்ததை கூறியவுடன் பாலாவிற்கு கோபம் வீறிட்டு எழ, உன்னால்  தானே எல்லாமே மேலும் கோபப்பட, ரகு தலை குனிந்து நின்றான்.

மருத்துவர் வெளியே வந்தார்.

டாக்டர் என்னாச்சு? பாலா கேட்க,

இரத்தம் நிறைய வெளியேறி உள்ளது. “ஏ” பாசிட்டிவ் இரத்தம்  தேவைப்படுகிறது. நான் இரத்தம் கொடுக்கிறேன். எனக்கும் “ஏ” பாசிட்டிவ் தான் ரகு கூறினான்.

சீக்கிரம் வாருங்கள் என்று டாக்டர், ரகுவை அழைத்துச் சென்றார்.  ரகுவின் இரத்தம் ஸ்வேதாவின் உடலில் செலுத்தப்பட்டது.

ஸ்வேதாவிற்கு ஆப்ரேசன் நடந்து கொண்டிருக்க, ரகு வெளியே வந்தான். அவனை பார்த்து கொண்டே பார்வதியம்மா மயங்கி விழுந்தார்.

அம்மா அம்மா…உசுப்பினான் பாலா. அவர் எழவே இல்லை.

ரகு மருத்துவனையிலிருந்த தண்ணீரை எடுத்து பார்வதியம்மா முகத்தில்  தெளித்தான். கண் இமைகள் அசைய கண்ணை  பிரித்தவர்

ஸ்வேதா..ஸ்வேதா..என அழுது புலம்ப, இதை கண்ட பாலா நெஞ்சமோ  வலித்தது.

அம்மா, ப்ளீஸ் அமைதியாய் இருங்கள் இல்லையென்றால் உங்களுக்கு  மனஅழுத்தம் அதிகமாகிவிடும். ஸ்வேதாவிற்கு தெரிந்தால் வருத்தப்படுவாள் நினைத்துப் பாருங்கள் என பாலா கலங்கிய குரலுடன்  பேச,

அம்மா அவளுக்கு ஒன்றுமே ஆகாது. கண்டிப்பாக மீண்டு வருவாள். மறுபடியும் வீடு கலகலப்பாக மாறி விடும்.

உங்களுடைய பொண்ணு உங்களிடம் பத்திரமாக வந்து சேர்வாள் ரகு   கூற, பாலா ரகுவை தன் பார்வையாலே சுட்டெறித்தான்.

செய்வதையும் செய்து விட்டு எப்படி பேசுகிறான்? என மனதினுள் திட்டிக்  கொண்டிருந்தான்.

தம்பி, நீங்கள் கிளம்புங்கள். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். என்னுடைய  பெண்ணிற்கு உதவி செய்ததற்கு நன்றி.

அப்படியெல்லாம் சொல்லாதீர்கள் அம்மா, எனக்கு பதிலாக தான் அவள் இங்கே இருக்கிறாள்.

என்ன? பார்வதியம்மா கேட்க,

வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு நடந்ததை ரகு கூறினான்.

இவனுக்காக இவள் உயிரை விடும் அளவிற்கு போயிருக்காலா?  யோசித்துக் கொண்டே நிற்க, மீண்டும் ரகுவே பேசினான். நீங்கள்  அனுமதித்தால் நானும், என் குழந்தையும் ஸ்வேதாவை பார்க்க வரலாமா?

வாருங்கள் என கூறினார்.

நான் கிளம்புகிறேன் என இருவரிடமும் கூறி விட்டு சென்றான் ரகு.

கொஞ்ச நேரத்தில் ஒரு பெண் பதட்டமாக இவர்கள் இருக்கும் திசையை  நோக்கி ஓடி வந்தாள். அவளை பார்த்த பாலா அப்படியே உறைந்து நின்றான். ரோஜா இதழ்கள் போல உதடு, ஆப்பிள் போல கன்னம், எடுப்பான பலாச்சுளை போல மூக்கு அழகாக இருந்தாள்.

அவளுடைய அழகான கண்ணில் கண்ணீருடன், பாலாவின் அருகே   வந்தவள் ஒரு நிலைக்கு வந்தவளாய்,

ஸ்வே…ஸ்வேதா எங்கே? மூச்சிறைக்க பாலாவிடம் கேட்க,

அவன் கை காட்டினான் அவளை பார்த்தவாறே,

அவள் கதவின் கண்ணாடி வழியே ஸ்வேதாவை பார்த்து விட்டு, தேம்பி  தேம்பி அழ ஆரம்பித்தாள்.

பார்வதியம்மா அவளை பார்த்து, நீ யார்? நீ எதற்காக ஸ்வேதாவை  பார்க்க வந்திருக்கிறாய்?

நான் ஸ்வேதாவுடைய தோழி ரேணுகா. அவள் என்னை ரேணு என்று   கூப்பிடுவாள் என கூறிக் கொண்டே அழுதாள் அவள்.

எனக்கு யாருமே இல்லை என்று கூறினாளே?

அது வந்து..இழுத்தாள்.

ரகு அண்ணா வந்தாரா? இங்கே தான் இருக்கிறாரா? என சுற்றி சுற்றி  பார்த்து தயங்கிக் கொண்டே நிற்க,

உனக்கு எப்படி ரகுவை தெரியும்? அவன் உன் அண்ணணா? பாலா கேட்க,

அண்ணன் என்று கூறி தான் பழக்கம். அவர் போய் விட்டாரா?

அப்பொழுதே கிளம்பி விட்டான். அவனால் தான் ஸ்வேதாவிற்கு   இவ்வளவு பெரிய பிரச்சனை. அவனோட வீட்டிற்கு போகாதே என்று  ஏற்கனவே கூறினேன். ஆனால் அவள் கேட்கவே  இல்லை.

ரகு அண்ணாவினால் ஸ்வேதாவிற்கா? என்ன சொல்றீங்க?

ஆமாம், உண்மையை தான் கூறுகிறேன் என்று எல்லாவற்றையும்  கூறினான்.

ஹேலோ சார், ரகு அண்ணா பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? அவரு  எப்படிபட்டவர்ன்னு தெரியுமா? கண்டிப்பாக இப்பொழுது நடந்ததற்கும், ரகு   அண்ணாவிற்கும் எந்த சம்பந்தமும் இருக்காது என்றாள் உறுதியாக.

எப்படி அவ்வளவு நிச்சயமாக சொல்ற ?

அவரு கூடவே இருந்த எங்களுக்கு தெரியாதா என்ன?

என்ன? கூடவே  இருந்தாயா?

ஆம், அவர் யாருக்கும் எந்த துரோகமோ, பிரச்சனையோ கொடுத்ததேயில்லை. அவர் ரொம்ப பணக்காரனாக இருந்தாலும் எல்லாருக்கும் நல்லதையே செய்பவர். அவர் என்னோட அண்ணன் மாதிரி. எனக்கும், எங்கள் விடுதியில் இருப்பவர்களுக்கும் நிறைய உதவி   செய்திருக்கிறார்.

நீ அவரை ஹீரோன்னு சொல்றீயா? கோபத்தோடு பேச

டேய், நீ எதற்காக இவ்வளவு கோபப்படுகிறாய்? பார்வதியம்மா அவனது  கையை பிடிக்க ,

பாலா இவ்வாறு நடந்து கொள்வது ரேணுவிற்கு பிடிக்கவில்லை.

நீங்கள் யார்? ரேணு கேட்க,

நான், அவள் அம்மா, இவன் அண்ணன் என பார்வதியம்மா கூற,  ரேணுவிற்கு மட்டற்ற மகிழ்ச்சி. அவள் கண்ணில் நீர் கோர்க்க, பார்வதியம்மாவை அணைத்துக் கொண்டாள். பாலாவும், அவனுடைய  அம்மாவும், ஆர்வமுடன் அவளை பார்க்க,

அவள் நிமிர்ந்து, நிஜமாக தானே கூறுகிறீர்கள்?

ஆமாம்மா.

ரொம்ப நன்றிம்மா. அவளுக்கு சிறுவயதிலிருந்தே யாருமே கிடையாது. இப்பொழுது அம்மா..என ரேணு மறுபடியும் கட்டி அணைக்க,

விடும்மா எங்க அம்மாவை..என அவளை பாலா தள்ள, அவளும் நகர்ந்து  நின்றாள்.

ஆமா. அவன் அப்படி என்ன செய்தான்? என பொறாமையுடன் பாலா  கேட்க, அவள் அடுக்க ஆரம்பித்தாள்.

அட, போதும்மா. தெரியாமல் கேட்டு விட்டேன்.

அவர் ஹீரோ தான். அவர் நினைத்திருந்தால் இன்னொரு பெண்ணை கூட  கல்யாணம் செய்திருக்கலாம். ஆனால் அவர் தன் மனைவியை பற்றியே  இன்னும் நினைத்துக் கொண்டிருக்கிறார் என பெருமையாக கூற, பாலாவிற்கு கடுப்பாக இருந்தது.

ஆமா, ஸ்வேதாவிற்கும், ரகுவிற்கும் என்ன? பாலா கேட்க,

யோசனையற்றவளாய், என்னப்பா! ராமன் இருக்கும் இடம் தானே  சீதைக்கு அயோத்தி சாதாரணமாக கூறி விட்டு பின் தான் நினைவே   வருகிறது. அப்படியே ஓடி விடலாம் என அவள் நினைக்கும் போதே,  இருவரும் அதிர்ச்சியில் இருந்து மீண்டு, நகர சென்றவளை

ஏய் நில்லு, பாலா கூப்பிட,

எனக்கு ஒரு வேலை இருந்தது. மறந்து விட்டேன். அப்புறம் வருகிறேன்.

உன்னோட தோழியை விட முக்கியமானதா? என்றவுடன் ஸ்வேதாவை  நினைத்து வருத்தப்பட்டு அங்கே நிற்க,

பார்வதியம்மாவும், பாலாவும் அவளருகே வந்து, என்ன கூறினாய்? என  பார்வதியம்மா கோபமாக ரேணுவை பார்க்க,

அது தெரியாமல், ஏதோ கூறி விட்டேன் என மழுப்ப,

எங்களுக்கு நீ கூறியது நன்றாகவே கேட்டது பாலா சொல்ல, செய்வதறியாது ரேணு நிற்கவே, அவன் அவளருகே நெருங்கி வர, பயந்து  நான் கூறுகிறேன் என்றாள் கண்ணை மூடிக் கொண்டு,

ஸ்வேதாவுடைய உண்மையான பெயர் மித்ரா. ரகு அண்ணாவின் மனைவி, ரியாவின் அம்மா, என்னுடைய உயிர்த்தோழி.

என்ன உளறுகிறாய்? ரகுவிற்கு அவன் மனைவியை பார்த்தால்  அடையாளம் தெரியாதா?

அவளை யாருக்கும் அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக  பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டாள் என கூறிக் கொண்டே அழுதாள்  ரேணு.

அவளை எதற்காக யாருக்கும் அடையாளம் தெரியக்கூடாது? பாலா  கேட்க,

அவள் கிட்டதட்ட செத்து பிழைத்து உயிரோடு வந்திருக்கிறாள். ரகு  அண்ணா, ரியா ரெண்டு பேர் உயிருக்கும் ஆபத்து. அவர்களை காப்பாற்ற  தான் எல்லாமே செய்கிறாள்.

அட நிறுத்தும்மா, ஏன் இப்படி குழப்புறீங்க?

இவள் ஸ்வேதா அல்ல மித்ரா தான். அவள் செய்துள்ள அறுவை  சிகிச்சை சாதாரணமானது அல்ல. மித்து மாநிறமாக தான் இருப்பாள்.  அவள் தோலில் உள்ள மெலானின் நிறமி அளவை மாறுபடுத்தி அவளது  தோலை வெண்மையாக மாற்றி, உடல் அளவையும் மாறுபடுத்தி சிகிச்சை நடத்தி, அவளோட முகஅமைப்பு, நிறமாற்றம், தோலின் தன்மை, உடலமைப்பு எல்லாவற்றையும் மாற்றி, அவளையே மாற்றிக்  கொண்டாள்.

நானும், என்னுடைய மாமாவும் எவ்வளவு சொல்லியும் கேட்கவே  மாட்டேன் என உறுதியாக இருந்து நினைத்ததை செய்தாள்.

அதில் என்ன உள்ளது? பாலா கேட்க,

என்ன கேட்கிறீர்கள்? உங்களுக்கு புரியவில்லையா?

மித்துவுடைய போட்டோ, இதை பாருங்கள் என அவளது போனை காண்பித்து, இது உங்களுடைய ஸ்வேதா என்றாள்.

ஸ்வேதாவா இது? என பார்வதியம்மா ஆச்சர்யமாக கேட்க,

பாலா திகைப்புடன், எதற்காக இப்படி செய்தாள்?

அப்படியென்றால், கீது முகம் பிளாஸ்டிக் சர்ஜரியால் தானா? நானும்  யோசித்து கொண்டு தான் இருந்தேன், கீது முகம் எப்படி இவளுக்கு?    என்று. ஒருவர் போல் நிறைய ஆட்கள் இருப்பார்கள் என தான்  ஸ்வேதாவை நினைத்தேன்.

அப்படியென்றால் கீது, இறந்து விட்டாளா? அம்மா கேட்க, இருவர்   கண்ணிலும் நீர் கோர்க்க அப்படியே உட்கார்ந்து அழ ஆரம்பித்தார் பார்வதி.

பாலாவும், அம்மாவை கட்டி அணைத்து அழ நடப்பது புரியாமல் ரேணு, அம்மா என்ன ஆயிற்று?

பாலா கண்ணை துடைத்துக் கொண்டு எழுந்து, இங்கே வா என இழுத்துச்  சென்று அவளிடம் ஸ்வேதாவிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர் யார்?  எனக்கு தெரிய வேண்டும்.

உங்களுக்கு எதற்கு?

கீது யார்?

நான் கேட்டதற்கு பதில்? என அவன் புருவத்தை ஏற்ற,

என்னுடைய மாமா தான்.

ஸ்வேதாவுடைய முகத்தை எப்படி மாற்றினீர்கள்? ஏதாவது  பெண்ணுடைய முகமா? இல்லை கம்ப்யூட்டர்  உபயோகித்தீர்களா?

ஒரு பெண் இறந்து விட்டாள் என்றும் அவளது முகத்தை தான்  ஸ்வேதாவிற்கு வைத்தார்கள் எனவும் அவள் அனைவரிடமும் மோசமாக  நடந்து கொள்கிறாள் எனவும் பேசினார்கள். எனக்கே ரகசியமாக தான்  தெரிந்தது.

தன் கீது தான் இறந்து இருக்கிறாள் என மனம் நொந்து உட்கார, ரேணுவிற்கு ஒரளவு புரிய தான் செய்தது.

நீங்கள் பேசிய கீது, இறந்த பெண்ணா? என கேட்க, ரேணு மேல் கோபமாக ஒரு பார்வையை உதிர்க்க, அவள் மெதுவாக அவ்விடம் விட்டு நகர,

எங்கே செல்கிறாய்? என ரேணுவை பாலா முறைக்க

உங்களுக்கு என்ன தான் பிரச்சனை?

கீது என்னுடைய தங்கை. அவள் ஏன் இறந்தாள்? உன் மாமாவிற்கு  தெரியும் தானே? கூறு..கூறு..என அவளை உலுக்கினான்.

எனக்கு எதுவும் தெரியாது என கத்தினாள். அவன் கை அவள் மேலே  படவும் பதட்டமானாள். அவன் கையை தட்டி விட்டு, என் மாமா இப்பொழுது இங்கே தான் இருக்கிறார். எது வேண்டுமானாலும் அவரிடம்  கேட்டுக் கொள்ளுங்கள் என போனை எடுத்து பேசி விட்டு, சீக்கிரம்  வாருங்கள் என கூறி விட்டு போனை துண்டித்தாள்.

நான் உன்னை என்ன செய்து விட்டேன்? கையை தானே பிடித்தேன்.

அவள் எதுவும் கூறாமல் ஒரு ஒரமாக அமர்ந்தாள்.

ரேணு மாமா வரவும், நீ கிளம்பு என அவளது மாமா, அவளை பார்த்துக்  கூற, அவள் செல்லக்கூடாது என அவனது காவல் நிலைய அடையாள  அட்டையை காண்பித்தான்.

ரேணுவும், மாமாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

உங்களுக்கு என்ன தெரிய வேண்டும்?

அந்த பொண்ணு கீதாஞ்சலி பற்றி தானே?

அந்த பொண்ணை ஒருவன் ஏமாற்றி ஓடி விட்டான். அவள் கர்ப்பமாக   இருந்தால், அப்படியிருந்தும் அந்த பெண் அனைவரிடமும் திமிராகவே  நடந்து கொண்டாள். யாருக்கும் அவளை பிடிக்கவேயில்லை.

எனக்கும் ஒரு பெண் இருக்கிறால் என ரேணுவை பார்த்து, நானும், என் நண்பனும் அந்த பெண்ணை நினைத்து கவலைப்பட்டோம். மருத்துவமனையிலே அவளை சேர்த்தோம். அவளும், குழந்தையும்  நன்றாக தான் இருந்தனர். திடீரென்று ஒரு நாள் அவள் மயங்கி  கிடந்தாள். அருகில் சென்று பார்த்தால் விஷம் அருந்தி இருப்பால் போல வாய் முழுவதும் இரத்தம் இறந்து கிடந்தாள்.

இறந்ததை கூற யாருமில்லை என்ற பொழுது தான், அங்கே ஒருவன்  இரத்த வெள்ளத்தில் வந்தான். அந்த நிலையிலும் அவன் அவளது  பெயரை உச்சரித்தான். யாரென்று விசாரித்ததில் அவன் ரெளடி என்றும், அவளை பாதுகாக்கவே விட்டு சென்றான் என தெரிய வந்தது. நீங்கள்  நம்பவில்லை என்றால் என் நண்பனிடம் கூறி பெண்ணுடையதையும்,  குழந்தைக்கான பரிசோதனை சான்றிதழ்களை அனுப்ப சொல்லி   உங்களிடம் காண்பிக்கிறேன்.

என் மகள் தற்கொலை செய்திருக்க மாட்டாள் பார்வதியம்மா கூறிக்  கொண்டே உள்ளே வர, அம்மா..என பாலா கண்கலங்க அழைத்தான்.

நீங்கள் இதனை ஏற்று தான் ஆகணும். இது தான் உண்மை ரேணுவின்  மாமா கூற,

பாலா, ரேணு கூறியதை யோசித்து விட்டு, அம்மா உங்களை பற்றி  சுற்றியுள்ள அனைவரும் தவறாக பேசினால், என்ன செய்வீர்கள்?

எதற்காக இப்படி கேட்கிறாய்?

அம்மா, உங்களுடைய பெண்ணை பற்றி தவறான பேசினார்கள் என ரேணு அவளுக்கு தெரிந்ததை சொல்லி விட,

அம்மா கோபப்பட, பாலா தான் இடையே வந்து, அவளை பற்றி தெரியும்  தானே அம்மா? கோப்படாதீர்கள்..என அவர் அருகே வந்து, அவள் தான்  என்றோ சென்று விட்டாளே? கட்டி அணைத்து பாலா அழ, அம்மா  அமைதியானார்.

அய்யோ ஸ்வேதா! என ரேணு ஓட, மற்றவர்களும் பின்னே சென்றனர்.

ரகு தம்பியை நீ பார்த்தாயா ரேணு? மாமா கேட்க,

இல்லை மாமா. நான் வருவதற்குள் அவர் சென்று விட்டார்.      நீங்கள் இருவரும் ரகுவிடம் உண்மையை கூறுவது தான் சரியாக  இருக்கும் என மாமா கூற,

மாமா, உங்களுக்கே தெரியும் ரகு அண்ணா மித்துவை எவ்வளவு  காதலிக்கிறார் என்று. அவளை கொல்ல அவருடைய உறவினரே

முயற்சி செய்தார்கள் என்றால் அண்ணாவிற்கு எப்படி இருக்கும்? தயவு  செய்து எதையும் அவரிடம் கூறி விடாதீர்கள்.

என்னவென்று கூறுங்கள்? என பாலா அருகே வர, மாமா கிளம்பிவிட்டார்.   ரேணு அவனை கண்டு கொள்ளாமல் ஸ்வேதா அருகே செல்ல,

இங்கே பார் என அவளை திருப்பினான். அவள் பட்டென பின்னே நகர்ந்தாள்.

என்ன ஆயிற்று?

ஒன்றுமில்லை என்றாள்.

என் கீதுவை தான் இழந்து விட்டோம். ஸ்வேதாவை என்னால் இழக்க முடியாது. தயவுசெய்து நடந்தததை கூறு?

நீங்கள் தான் போலீஸ் ஆயிற்றே? உங்கள் வேலையை பற்றி தான்…. நான் எப்படி கூறுவது? யோசித்துக் கொண்டே,

அவள் தன் கணவன், குழந்தை உயிரை காப்பாற்ற தன் உயிரையும்  பணயம் வைத்து பிழைத்து வந்து சிகிச்சை அனைத்தையும் செய்து  முழுவதும் வேறொரு பெண்ணாக ஸ்வேதா என்ற பெயரோடு   வந்திருக்கிறாள்.

அந்த ரகு உண்மையிலே ஸ்வேதாவுடைய கணவனா? பார்வதியம்மா  கேட்க, தலையசைத்தாள் ரேணு.

அவளுக்கு கஷ்டத்தை தவிர, இப்பொழுது வரை எதுவும்  கிடைக்கவில்லைம்மா. அவளை பற்றிய நிறைய கேள்விகள் உங்களுக்கு   இருக்கும் என நன்றாகவே புரிகிறது. அதற்கு நான் கண்டிப்பாக பதில் கூறுகிறேன். உங்கள் மகன் அவளது பிரச்சனையை காவலராக இல்லாமல், அண்ணணாக மட்டும் இருந்து எங்களுக்கு உதவ தயாராக இருந்தால்  மட்டுமே. ரகு, ரியாவிற்கு இவள் மித்து என்று தெரியக்கூடாது.

சரி. சொல்லு. பிரச்சனையை சரி செய்ய காவலர் உதவி தேவைப்பட்டால்  நான் காவலராக வருவேன்.

ஓ.கே என்றாள்.

மருத்துவர் வெளியே வந்தார். சிகிச்சை நல்ல படியாக முடிந்தது. அவளால்  உடனே எழவோ, நடக்கவோ முடியாது. ஒரு மாதம் இங்கேயே தான்  சிகிச்சை அளிக்க வேண்டும். மேற்பார்வை செய்ய வேண்டும். அவள்  கூடவே இருந்து யாராவது பார்த்துக் கொள்ள வேண்டும்.

மருந்து சீட்டை மருத்துவர் பாலாவின் கையில் கொடுக்க, ரேணு  அவனிடம் ரகு அண்ணாவிடம் என்னை பற்றி எதுவும் பேசாதீர்கள் என கூறினாள்.

அவன் எதுவும் கூறாமல் அவளை பார்த்து விட்டு, அம்மா மருந்து வாங்கி  விட்டு வருகிறேன் என பாலா கூற, நீ வாங்கி வா. ஸ்வேதாவின் மயக்கம்  தெளிய இன்னும் நேரமாகும். நீ வந்தவுடன் அவளை பார்ப்போம். அனைவரும் ஸ்வேதாவிற்காக காத்திருந்தனர்.

பாலா பல மணி நேரத்திற்கு பின் வர, ஸ்வேதா விழித்திருந்தாள். அம்மா  அவளிடம் பேசிக் கொண்டிருந்தார்கள். பாலாவும் கதவை திறந்து உள்ளே  நுழைய, பின்னாலே ரேணுவும் வந்தாள்.

ரேணு நீ..நீயா? மெதுவாக கேட்டுக் கொண்டே கண்கலங்கினாள்.

என்ன மித்து, இப்படி செய்து விட்டாய்?

அவள் முழித்தாள்.

உனக்கும் ரகு அண்ணாவிற்கும் உள்ள உறவை பற்றி இவர்களிடம் கூறி  விட்டேன். என்னை மன்னித்து விடு.

மித்து ரேணுவை அருகே அழைத்து அவளது கையை பிடித்து, ரகு  உன்னை பார்த்தாரா?

பயப்படாதே மித்து. அவருக்கு நம்மை பற்றி எதுவும் தெரியாது.

“தேங்க்ஸ் ரேணு” என கண்ணை மூடி திறந்தாள் ஸ்வேதா.

அம்மா, அண்ணா, நீங்கள் அவர் மேல் கோபப்படாதீர்கள்.

உன் மேல் தான் கோபம் எங்களுக்கு..பாலா கூறினான்.

ஏன் அண்ணா?

நீ வந்த உடனே கூறி இருக்கலாமே?

அண்ணா, எந்த அம்மாவும் தன் பிள்ளை கணவருடன் சேர்ந்து தான் வாழ  வேண்டும் என நினைப்பார்கள்.ஏற்கனவே அம்மாவின் உடல்நிலை  சரியில்லாமல் இருந்தது. நான் எப்படி கூறுவது? என மெதுவாக  பேசினாள்.

என்னை மன்னித்து விடுங்கள் அம்மா, அண்ணா என்றாள்.

ரேணு நீ எப்படி இங்கே?

மாமாவை இந்த மருத்துவமனைக்கு தான் மாற்றினார்கள். அவர் கூறி தான் நடந்தது தெரிந்து உன்னை பார்க்க வந்து விட்டேன்.

நீ ஓய்வு எடுத்துக் கொள். நாங்கள் வெளியே செல்கிறோம்.

அம்மா, நான் ஸ்வேதாவிற்கு சாப்பாடு கொடுத்து விட்டு வருகிறேன்  என்றாள் ரேணு பார்வதியிடம். மாமாவும் வந்து ஸ்வேதாவை பார்த்து விட்டு சென்றார்.

ஏன் இவள் தன்னிடம் பேச மாட்டாளோ? என ரேணுவை பார்த்து பாலாவின் மனம் ஏங்கியது.

சாப்பாட்டை கொடுத்து விட்டு வெளியே வந்த ரேணு, அம்மா நடந்த  அனைத்துமே உங்கள் இருவருக்கும் தெரிய வேண்டும்.

சொல்லும்மா?

இங்கே எதுவும் பேச வேண்டாம் என பாலா ஸ்வேதாவின்  பாதுகாப்பிற்காக ஒரு காவலரை அவள் அறைக்கு வெளியே நிற்க  வைத்து விட்டு, இருவரையும் ஒர் அறைக்கு அழைத்துச் செல்ல, நான்காவதாக  ஒருவனும் அவர்களை பின் தொடர்ந்தான்.

Advertisement