Advertisement

அத்தியாயம் 21

பாலா காரை விட்டு இறங்க நினைக்க, இறங்காதீர்கள் என்று ரேணு காரை எடுக்க, ஒருவன் முன்னே வந்து கார் கண்ணாடியை உடைத்தான்.

நீயா? என்று அதிர்ச்சியில் ரேணு அவனை பார்க்கும் சமயத்தில் பாலா கீழே இறங்கினான்.

பாலாவை அவனுடைய ஆட்கள் தாக்க, பாலாவும் சண்டை போட்டான். ஆனால் ஒரு கட்டத்தில் முடியாமல் போகவே,

நீங்கள் யாரடா?

அய்யோ பாவம் ரேணு! இப்படி வந்து மாட்டிக்கொண்டாயே?

பாலாவை பிடித்து வைத்திருந்தனர். மீண்டும் யாருடா நீங்கள்? பாலா கேட்டான்.

இவன் தான் வளவன் என்று கூறி கொண்டே, அவரை விடுங்கள் என்று பாலாவை பிடித்து வைத்திருந்தவர்களை இவள் அடிக்க, வளவன் ரேணுவின் முடியை பிடித்து இழுக்க, அவள் கத்தினாள். பாலா அவளை விடு என்று கத்திக் கொண்டே அவர்களை அடிக்க ஆரம்பித்தான். அதில் ஒருவன் பாலாவின் பின் வந்து அவனது தலையில் அடிக்க, தலையில் கையை வைத்த படியே கீழே விழுந்தான்.

இருவரையும் அவர்கள் பழைய மாடி கட்டிடத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கே சென்றவுடன் பாலாவை இழுத்து கீழே போட்டு விட்டு, ரேணுவை இழுத்து செல்ல அவள் வளவனை தள்ளி விட்டு, பாலாவின் கன்னத்தை தட்டி, பாலா எழுந்திருங்கள் என்று கதறினாள்.அவன் எழவேயில்லை.

நன்றாக அழுடி. உன்னை யாராலும் என்னிடமிருந்து காப்பாற்ற முடியாது. யார் வந்தாலும் அவர்களை உயிரோடு விட மாட்டேன். அன்றைக்கு நீ தப்பி விட்டாய்? இன்று உன்னால் தப்பிக்கவே முடியாது. பாலா கண்ணை திறக்கவில்லை என்றாலும் அவன் அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தான்.

பாலா தயவு செய்து எழுந்திருங்கள். எனக்கு பயமாக உள்ளது. எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும். உங்களுக்கும் என்னை பிடிக்கும் என்று தெரியும். நாம் எப்பொழுதும் சேர்ந்தே இருக்க வேண்டும். இவன் சரியான  பைத்தியம். அன்று போல் இன்று ஏதாவது நடந்தால், நீங்கள் எழும் போது, நான் உயிரோட இருக்க மாட்டேன். நான் உங்களுக்கானவளாக மட்டும் இருக்க வேண்டும். நான் உங்களை காதலிக்கிறேன். தயவு செய்து எழுங்கள் என்று அவள் பேச பேச பாலாவின் கண்ணிலிருந்து நீர் வழிந்தது.

வளவன், அவளருகே வந்து, இவனை காதலிக்கிறாயா? அது எப்படி நடக்கும்? நீ என்னை தானே காதலித்தாய்? உன்னை நினைத்து அவனும் கவலைப்படுகிறான் போல, கண்ணிலிருந்து கண்ணீரெல்லாம் வருகிறது. அன்று பாதியிலே விட்டதை தொடருவோமா? என்று பாலாவிடமிருந்து அவன் ரேணுவை இழுக்க, பாலா அவளது கையை இறுக்கமாக பிடித்திருக்க, அவனது கையிலும் அடித்து, அவளை இழுக்க அவள் பதட்டமானாள். வியர்த்தது. உடல் நடுங்கிக் கொண்டே மயங்கி வளவன் மீதே விழுந்தாள்.

பாஸ், அந்த பெண் மயங்கி விட்டாளே! இப்பொழுது என்ன செய்வது?

அட, இது தான் நல்லது. எந்த தொந்தரவும் இல்லாமல் நம் வேலை எளிதாக முடியும். அவள் செய்ததற்கான தண்டனையை கொடுக்க போகிறேன். இனி நீ நிம்மதியாக வாழவே முடியாது. எல்லாரும் வெளியே செல்லுங்கள்.

பாஸ், மகிழ்ச்சியாக இருங்கள் என்று கூற, அவன் அவளை தூக்கிக் கொண்டு பாலாவின் முன் வந்து,

நீ காதலிக்கும் பெண்ணை இன்று ஒரு நாள் நான் வைத்துக் கொள்கிறேன். அவள் அனுபவிக்கும் வலியை நீயும் அனுபவித்தால் நன்றாக இருக்குமே? இவளை உன் முன் வைத்தே எல்லாவற்றையும் முடித்து விடுகிறேன். இந்த வலியில் அவள் தினம் தினம் சாவாள். பாலாவை ஓங்கி உதைத்து விட்டு, அவளது துப்பட்டாவை தூக்கி பாலா மீது எறிந்தான். அவன் உதைத்ததில் பாலா விழித்தான். அவன் மிகவும் கஷ்டப்பட்டு எழுந்தான். போனை தேடி எடுத்து வளவனுக்கு கேட்காதவாறு ராஜாவிற்கு போன் செய்தான். எந்த இடமென்று தெரியவில்லை. வேகமாக வா…மெதுவாக பேசினான். ராஜா கவிதாவை நினைத்துக் கொண்டிருந்த சமயம் தான் பாலா போன் செய்திருப்பான்.

பாலா போனை அப்படியே கீழே வைத்து விட்டு, அவளுடைய துப்பட்டாவை எடுத்தான். போன் அணைக்கவில்லை என்பதால் ராஜா இடத்தை கண்டுபிடித்து சுந்தரை அழைத்துக் கொண்டு வந்து கொண்டிருந்தான்.

அவளை தொடாதே! கத்தினான் பாலா.

ஏன்டா, என்னிடம் அடி வாங்கவே எழுந்தாயா? பார் எப்படி இரத்தம் கொட்டுகிறது? நீ வேண்டுமானால் மருத்துவமனை செல்…

அவளை என்னிடம் ஒப்படைத்து விடு.

அவன் முடியாது. உன்னால் முடிந்தால் அவளை காப்பாற்றிக் கொள் என்று அவளது உடையில் கையை அவன் வைக்க, பாலா பொறுமையிழந்து அவனது கையை பிடித்து திருகி, அவனை அடிக்க அவன் சரியாக பாலாவின் அடிபட்ட கையிலே அவன் அடிக்க, வலி பொறுக்க முடியாமல் பாலா கத்தினான். இருந்தும் வளவன் ரேணு அருகே செல்லாதவாறு பாலா அடி வாங்கிக் கொண்டிருந்தான். வளவன் அங்கிருந்த மது பாட்டில் ஒன்றை எடுத்து பாலாவை குத்த வர, பாலா விலகி அவனது கையை திருப்ப அது வளவன் மீது பட்டு அவன் அங்கே சரிந்தான். சத்தம் கேட்டு அவனுடைய ஆட்கள் அங்கு வர, பாலா அவர்களையும் அடித்து விட்டு, அவன் ரேணு அருகே சென்று துப்பட்டாவை அவள் மீது போர்த்தி விட்டு, அவனும் அவளருகிலே சரிந்தான்.

அந்த வளவன் மீதுள்ள பயமும், அவனுடைய தொடுதலும் அவளுக்கு பழைய நினைவு வந்ததால் அவள் வெகு நேரமாகியும் எழவில்லை. பாலாவிற்கு அதிக இரத்தம் வெளியேறி விட்டது. ராஜாவும், சுந்தரும் வந்தார்கள். அவனை அந்த நிலையில் பார்த்தவுடன் அவர்கள் பதறி கொண்டு, அவனையும், ரேணுவையும் காரில் போட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ரேணுவிற்கு குளுக்கோஸ் ஏறிக் கொண்டிருந்தது. பாலா அவசர சிகிச்சை பிரிவில் இருந்தான்.

பாலாவிற்கு சிகிச்சை முடிந்து கொஞ்ச நேரத்தில் விழித்து விட்டான். குடும்பத்தினர் அனைவரும், நண்பர்களும் அங்கே இருக்க, ரேணு எங்கே?

அவள் இன்னும் விழிக்கவில்லை என்ற போதே, செவிலியர் அங்கே வந்து, அந்த பொண்ணு விழித்து விட்டாள். ஆனால் கத்தி கொண்டு இருக்கிறாள். அவளது உறவினர்கள் சீக்கிரம் வாருங்கள்.

அத்தையும், மித்துவும் கிளம்ப, பாலா எழ முயற்சி செய்தான் முடியவில்லை. ரகுவும் அவர்களுடன் சென்றான்.

மித்து ரேணுவை தடுக்க, மித்து…அவன் என்னை ஏதோ செய்து விட்டான் கத்தி அழுதாள்.

மித்து ரேணுவை அணைத்துக் கொண்டு, உனக்கு ஒன்றும் இல்லை. அவன் உன்னை எதுவுமே செய்யவில்லைபாலா அண்ணா தான் உன்னுடன் இருந்தாரே!…உன்னை அவன் தொடவாது முடியுமா?

உன்னை காப்பாற்றி விட்டு, அவர் படுக்கையில் இருக்கிறார் என்று மித்து பேசி கொண்டிருக்க, ரகு உள்ளே வந்தான். அவனை பார்த்து பயந்து சிறு குழந்தை போல் மித்துவின் பின் ரேணு ஒளிந்தாள்.

ரேணு  வெளியே வா….ரகு வந்திருக்கிறேன். எதற்கு பயப்படுகிறாய்? அண்ணா தானே என்று பேசிக் கொண்டே, அவளருகே வந்தான். இங்கே பார். எதற்கும் பயப்படக் கூடாது. நீ தைரியமான பொண்ணு தானே? அவள் மேலும் பயந்து கண்ணை மூடிக் கொண்டிருக்க,

ரகு கவலையோடு வெளியே வந்து, ராஜம்மாவிடம் ரேணுவை பற்றி புலம்ப, இதை கேட்டு பார்வதியம்மா உள்ளே சென்று, உனக்காக தான் என் மகன் அடிபட்டு இருக்கிறான். வந்து அவனை பார் என்று ரேணுவை இழுத்து செல்ல, மித்துவும் பின்னாலேயே சென்றாள்.

ரேணு தயங்கி கொண்டே உள்ளே செல்ல ராஜா, சுந்தர் விலகி நின்றனர்.

அவள் அவனருகே செல்ல முடியாமல் பயந்து நிற்க, எதற்கும் அஞ்சாமல் தைரியமாக இருப்பது தான் பெண்மைக்கு அழகு…பார்வதியம்மா கூற,

பாலாவை பார்க்க பார்க்க, பிரச்சனையின் போது இருவரும் மாறி மாறி பேசியது. மயக்கம் இருந்தாலும் நடந்தது ரேணுவிற்கும் கேட்டிருக்கும். பாலா வலியால் கத்தியது அனைத்தும் நினைவு வரவே,அவளுடைய கால்கள் தானாகவே அவனை நோக்கி நடந்தது.

அவன் ரேணுவிடம், நீ பேசியது எனக்கு நன்றாகவே கேட்டது. இனி வாழ்க்கை முழுவதும் என்னுடன் இருப்பாயா? என்னுடைய மனைவியாக…. என்று காதலை கூற, அவள் அவனது கையை பிடித்துக் கொண்டு, இருப்பேன் என்று ஒத்துக் கொண்டாள்.

ஆனால் எனக்கு இரண்டு நாட்கள் தனியாக இருக்க வேண்டும் என்றும் கூறினாள். அவன் உடனே கையை எடுத்தான். அவள் வேகமாக அங்கிருந்து கிளம்பினாள்.

என்னடா நடக்கிறது? இரண்டு பேருக்கும் பிடித்திருக்கிறது. எதற்காக இரண்டு நாட்கள்? சுந்தர் பாலாவிடம் கேட்டான்.

அவள் மனதளவில் பாதிக்கப்பட்டு இருப்பதால், இரண்டு நாட்களில் அவளை சரி செய்து கொள்ள நேரம் கேட்கிறாள்?

அதற்காகவா நீ அவளது கையை எடுத்து விட்டாய்? பாலா சிறு புன்னகையுடன்,அவள் செல்ல வேண்டும் என்று கூறினாள்.

என்ன கூறினார்களா? எனக்கு எதுவும் கேட்கவில்லை. உனக்கு கேட்டதா ராஜா? அவன் மௌனமாக இருக்க, அவனே காதல் தோல்வியில் இருக்கிறான் பாலா கிண்டல் செய்ய,

இல்லை.நாங்கள் மீண்டும் சந்திப்போம். என்னுடைய காதலை கூறி அவளை சம்மதிக்க வைப்பேன் ராஜா கூறினான்.

கையில் கட்டு பிரிக்கப்பட்டு சூர்யா வந்து கத்தினான். ஏன்டா பிரச்சனை என்றால் கூற மாட்டீர்களா?

உனக்கே இப்பொழுது தான் சரியாகி இருக்கிறது. தொந்தரவு செய்ய வேண்டாம் என்று விட்டு விட்டோம்.

எதையாவது கூறி என்னை சமாளிக்க பார்க்கிறீர்களா?

எதற்குடா சமாளிக்க வேண்டும்? உண்மையை தான் கூறுகிறோம் ராஜா கூற,

ஏன்டா, நீ தான் அந்த பெண்ணை காதலிக்கிறாய்? அதனால் வருத்தமாக இருக்கிறாய். மஞ்சுவிற்கு என்ன ஆயிற்றுடா? அவளும் சரியாக பேசவே மாட்டிகிறாள்? சூர்யா ராஜாவிடம் கேட்க,

நீ தெரியாமல் கேட்கிறாயா? நடிக்கிறாயா? ராஜா கேட்டான்.

என்னடா நடிக்கிறேனா?

கவிதாவுடன் மஞ்சு சண்டை போட்டது உனக்காக தான்டா மாங்கா…

எனக்காகவா? எதற்கு? அன்று நடந்தது எதுவுமே புரியவில்லை.

அதை கூட உன்னால் புரிந்து கொள்ள முடியவில்லையா? உனக்கு பெண்களுடன் கடலை போட மட்டும் தெரிகிறது. ஆனால் இது கூட புரியவில்லை. இதற்காக தான் அன்றே கவிதா அவளை எச்சரித்தாள். நானும் அவள் மீது தேவையில்லாமல் கோபப்பட்டு விட்டேன்.

கவிதா என்ன கூறினாள்?

என்னை கோபப்படுத்தாதே! என்று ராஜா ஓரமாக உட்கார்ந்தான்.

இவன் என்ன பேசுகிறான்? சூர்யா கேட்க, பாலா அவனிடம் உனக்கு தெரிய வேண்டிய நேரம் வரும் வரை சிந்தித்துக் கொண்டிரு. அது தான் உனக்கான தண்டனை.

எனக்கு  என்ன செய்வதென்று தெரியவில்லை. என்னை ஒரு வாரம் முழுவதும் மருத்துவமனையிலே இருக்க கூறி இருக்கிறார்கள்.அவனது

மொத்த பிரச்சனையையும் கூறி, இரண்டு நாட்களில் அந்த ராமச்சந்திரன் வேறு இங்கே வருகிறான். அனைவரது உயிருக்கும் ஆபத்து உள்ளது. என்ன செய்வது?

அதான் நாங்கள் இருக்கிறோமே! சூர்யா கூற, ஆமாம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். ரகு உள்ளே வந்து நானும் இருக்கிறேன்.

இல்லை ரகு, நீங்கள் இதில் தலையிட்டால் நீங்கள் அதிகமாக காயப்பட வாய்ப்புள்ளது. இவர்களே பார்த்துக் கொள்ளட்டும்.

இதற்கு மேல் காயப்பட என்ன உள்ளது? நான் கவனமாக இருந்திருந்தால் இவ்வளவு பிரச்சனையும் வந்திருக்காது. மித்துவும் கஷ்டப்பட்டிருக்க மாட்டாள். என் அம்மா இவ்வளவு மோசமானவர்களாக இருப்பார்கள் என்று நினைக்கவே இல்லை ரகு அழ, மற்றவர்கள் அவனை சமாதானப்படுத்தினார்கள்.

பாலா அவருடைய உதவி நமக்கு கண்டிப்பாக தேவைப்படும் என்று ராஜா கூறினான். பாலாவும் ஒத்துக் கொள்ள, திட்டம் தீட்ட ஆரம்பித்தனர். ரகுவும் அவர்களுள் ஒருவன் ஆனான். மருத்துவர் அங்கே வந்து, என்ன செய்கிறீர்கள் என்று அனைவரையும் குறுகுறுவென்று பார்க்க,

ஒன்றுமில்லை, சும்மா தான் சுந்தர் கூற,

மூளைக்கு அதிகமாக அழுத்தத்தை கொடுக்காதீர்கள், மீறினால் மூளை சம்பந்தமான எந்த பிரச்சனையும் வரலாம். அதனால் நீங்கள் வெளியே செல்லுங்கள். அவர் நன்றாக ஓய்வெடுக்கட்டும் என்று கூற, நீ கவலைப்படாதே! நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று அனைவரும் வெளியே சென்றனர். நீங்கள் எந்த அளவிற்கு ஓய்வெடுக்கிறீர்களோ! அந்த அளவு வேகமாக குணமடைந்து விடும்.

டேய் நண்பா,கவலைப்படாதே! நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். ஒன்று மட்டும் கூறேன்.

அந்த பொண்ணு கவிதா என்ன சொன்னாள்? என்று உனக்கு தெரியுமா? சூர்யா கேட்க, பாலா அவனை முறைக்க, மருத்துவர் செக்யூரிட்டி….கூப்பிட, நான் ஏதும் பேசவில்லை என்று சென்றான் சூர்யா. மருத்துவரும் பாலாவும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்.

              “ரதியே!

                உன்

                மதிமுகம் என்னை

                ஏனோ

                திணற வைக்கிறதே!

                இன்று

                பூக்கும்

                மலரின் வாசம்

                உன்னை

                நினைக்க வைக்கிறதே!

                நீ

                என்னை

                ஏற்றுக் கொள்ளும்

                நொடியேனும்

                மனம் லேசாகிறதே!

                  உன்

                  கூந்தலை

                  வருடும் போது

                  என்னை

                  தீண்டுவது போல

                  இதமளிக்கிறதே!

                  உன்

                  சினத்தின்

                  காவலனாய்

                  இன்றும்

                  என்றும்

                  எப்பொழுதும்

                  உன்

                  மணவாளனாய் வாழ

                  காத்திருக்கிறேன்.”

மஞ்சு கல்லூரி முடிந்து வெளியே வரும் போது, சூர்யா அவளுக்காக காத்திருந்தான். அவள் அவனது கையை பற்றி விசாரித்து விட்டு செல்ல,

ஒரு நிமிடம், உன்னிடம் பேச வேண்டும் என்றான் சீரியசாக. அவள் நின்று கூறு என்றாள்.

அன்று என்ன பேசினீர்கள்? எனக்கு ஒன்றுமே புரியவில்லை.

எப்பொழுது?

மருத்துவமனையில் கவிதாவுடன் கூட கத்தினாயே! என்ன பிரச்சனை?

கவிதா பெயரை கேட்டவுடன் மஞ்சுவின் முகம் வாடியது.

அவள் என்னை பற்றி என்ன கூறினாள்?

அதை தெரிந்து என்ன செய்ய போகிறீர்கள்?

அட சொல்லுமா, என் மண்டையே வெடித்து விடும் போல் உள்ளது.

அவள், என்னை உங்களிடமிருந்து விலகி இருக்க சொன்னாள்.

நீ என்னிடம் விலகி இருக்க வேண்டுமா? எதற்காக?

நீங்கள் என்னை ஏமாற்றி விடுவீர்களாம்!

நான் ஏமாற்றுவேனா?

நான் உங்களை காதலிப்பது அவளுக்கு தெரிந்து, நீங்கள் எல்லாரிடமும் பழகுவது போல் தான் என்னிடமும் பழகுகிறீர்கள் என்று என்னை எச்சரிக்கை செய்திருக்கிறாள்.

என்ன! காதலா? நீ என்னை காதலிக்கிறாயா? அவன் சிரிக்க, அவள் வேகமாக நடந்தாள்.

அவன் பின்னாலே வந்து, இந்த காமெடி எத்தனை நாட்களாக நடக்கிறது? சூர்யா கேட்டு விட, அவளையும் மீறி கண்ணீர் வர, சரியாக ராஜா வந்தான். மஞ்சு அழுவதையும், சூர்யாவையும் பார்த்து புரிந்து கொண்டு,

வண்டியில் ஏறு அதட்டலுடன் ராஜா கூற, அவள் அழுது கொண்டே வண்டியில் ஏற, ராஜா சூர்யாவை முறைத்துக் கொண்டே சென்றான்.

டேய், நில்லுடா…..ராஜா என்று சூர்யா கத்திக் கொண்டிருக்க, அவன் சென்று விட்டான்.

அவள் விளையாட்டாக கூறுகிறாள் என்று சூர்யா நினைத்திருந்திருப்பான். இருவரும் நடந்து கொள்வதை பார்த்தவுடன், அவள் நிஜமாகவே காதலிப்பது புரிந்தது சூர்யாவிற்கு.

மறுநாள் பாலாவை பார்க்க வந்த இருவரும் சரியாக பேசவில்லை. சூர்யா ராஜாவின் அருகே சென்றாலும் ராஜா விலகினான். ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் இருவருக்கும் சண்டை ஆரம்பிக்க, ரகு தான் தடுத்து நிறுத்தி பேச வைத்தான்.

நீ நினைப்பதை தெளிவாக கூறி விடு மஞ்சுவிடம்.அவளது படிப்பு முடிந்தவுடன் வரன் பார்ப்பதாக வீட்டில் பேசிக் கொண்டு இருக்கிறார்கள். இனி பழைய மாதிரி உன்னிடம் பேசவும், நடந்து கொள்ளவும் அவளே நினைத்தாலும் முடியாது. பார்த்துக் கொள் என்று ராஜா பட்டும் படாமலும் பேசி விட்டு அவனது வேலையை கவனித்தான். இப்படியே இரண்டு நாட்கள் ஓடியது.

பாலாவின் தலை, கையில் பட்ட அடி  ஓரளவு சரியாகி விட்டது. ரேணு இரண்டு நாட்களாக பாலாவை பார்க்க வரவே இல்லை. அவன் அந்த வருத்தத்தில் இருக்க, பாலாவிற்கு சாந்தியிடமிருந்து போன் வந்தது. நாளை காலை ராமச்சந்திரனும், மரகதமும் வருவார்கள். ரகு எதையும் காட்டிக் கொள்ளாமல் பொறுமையாக இருக்க சொல்லுங்கள் என்றார்.

ரகுவிடமும் பாலா கூறினான்.முதலில் ரேணு, மது, மாமாவை ராஜா வீட்டிலும், அத்தை, பார்வதியம்மாவை சுந்தர் வீட்டிலும், ரகு, ரியா, ராஜம்மாவை அவர்களது வீட்டிலும் தங்க ஏற்பாடுகள் நடந்தது. பின் ரகுவின் வீட்டில் கண்ணில் தென்படாதவாறு கேமிராக்கள் அங்கங்கு வைக்கப்பட்டது. அவனது வீட்டிற்கு பக்கத்து வீட்டிலே ராஜா, சூர்யா, சுந்தரும் தங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

அன்றிரவு அவர்கள் கிளம்பி விட்டார்கள் என்று செய்தி வந்தது. ராஜாவின் போன் அழைத்துக் கொண்டிருக்க, அவன் குளித்து கொண்டிருப்பதை கவனித்து விட்டு, சூர்யா போனை எடுத்தான். மஞ்சு போனில், யார் பேசுவது என்று கூட கவனிக்காமல், அண்ணா ப்ளீஸ்டா, நீயாவது…சொல்லு அம்மாவிடம் வேண்டாம் என்று கூற,

சூர்யா சாதாரணமாக, ஹே வாலு, அம்மா என்ன கூறுகிறார்கள்? வேண்டாம் என்கிறாயே!

அவனுடைய குரலை கேட்டவுடன் போனை துண்டித்து விட்டாள் மஞ்சு.

அவன் ராஜா போனை கையில் வைத்திருப்பதை  பார்த்து என்ன செய்கிறாய்? என்று அவன் கையில் இருந்து போனை வாங்கி பார்த்தால், அவள் போன் செய்திருப்பது தெரியவே, எதற்காக என்னுடைய போனை எடுக்கிறாய்? என்று கத்தினான் ராஜா.

நான் என்னடா செய்தேன்? அவனும் கத்தினான். நீ அவளிடம் நினைப்பதை கூறி விடு என்றேனே! கூறினாயா?

அதனால் என்ன?

அதனால் என்னவா?

அவள் யாரிடமும் சரியாக பேசாமல், சாப்பிடாமல், தூங்காமல் இருந்ததால், அம்மா வருத்தப்பட்டு அப்பாவிடம் கூற அவர் அவளுக்கு மாப்பிள்ளை பார்த்து விட்டார். அந்த பையனுக்கும் அவளை பார்த்தவுடன் பிடித்து விட்டது.

அவள் நான் பழையபடி இருக்கிறேன் என்று எவ்வளவு கூறியும் கேட்காமல், நாளை மறுநாள் அவளை பார்த்து திருமணம் முடிவு செய்ய போகிறார்கள்.

என்ன! திருமணமா?

ஆமாம். நீயும் வந்து பார்த்து விட்டு போ ராஜா கூற, சூர்யாவின் முகம் மாறியது. அதுவும் அவர் பெங்களூர். திருமணம் முடிந்து பெங்களூர் செல்ல போகிறாள். என்னால் கூட அவளை அடிக்கடி பார்க்க முடியாது என்று ராஜா வருத்தத்தோடு கூற, சூர்யா அப்பொழுது தான் சிறு வயதிலிருந்த அவளுடன் இருந்த எல்லா நினைவுகளையும் நினைத்து பார்த்தான்.அவனால் அன்றிரவு தூங்க முடியவில்லை.

மறுநாள் விடிந்தது. அவர்கள் நினைத்தது போல், மரகதம் மட்டும் வீட்டிற்கு வந்தார்.

என்னம்மா, திடீரென்று வந்திருக்கிறீர்கள்? முதலிலே கூறினால் உங்களை அழைக்க நான் வந்திருப்பேன் சாதாரணமாக பேசினான் ரகு.

அம்மாவிற்கு சாப்பாடு எடுத்து வையுங்கள் என்று அதிகாரமாக ராஜம்மாவிடம் பேசுவது போல் நடித்துக் கொண்டே அவனது அம்மாவை கவனித்தான். அவர் கர்வத்தோடு ராஜம்மாவை பார்ப்பதை கவனித்தான்.

நீங்கள் ஓய்வெடுங்கள் என்று அவருக்கு அறையை காட்டினான். அவர் உள்ளே சென்றவுடன் அவர் பேசுவதை நண்பர்கள் அனைவரும் கேட்டுக் கொண்டிருக்க, ரகுவும் கேட்டுக் கொண்டிருந்தான். அவன் ஏதும் தெரியாதது போல் நடந்து கொள்கிறானே! என்றார் மரகதம் போனில். இதை கேட்டு அதிர்ச்சியடைந்தனர் அனைவரும்.

ஒருவரை ஒருவர் போனில் இணைந்து தான் இருந்தார்கள். அதனால் ரகுவிடம் அனைவரும் பேசினர்.

உங்களுக்கு அம்மாவை பற்றி தெரிந்த விசயம், அவர்களுக்கு எப்படி தெரிந்தது? ஏதோ தவறாக உள்ளது என்றான் ராஜா.

நீங்கள் யாரும் வெளியே செல்லாதீர்கள்! ஆட்கள் நம்மை கவனிப்பது போல் உள்ளது. இதை நான் கண்டறிந்து கூறுகிறேன்.

ரகு யாருக்கோ போன் செய்து, விசாரிக்க, கொஞ்ச நேரத்தில் போன் வந்தது. சாந்தியை கொன்று விட்டார்கள் என்று அந்த பக்கம் உள்ளவன் கூற,

அவர்கள் எங்களுடன் பேசுவதை யாரோ கவனித்திருக்கிறார்கள்.

அதனால் கொன்று விட்டார்கள். நேற்று இரவு தான் அவர் இறந்திருக்கிறார். அனைவரிடமும் கூறினான். மற்றவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

Advertisement