Advertisement

இருவரின் உரையாடலை கேட்டு கொண்டிருந்தவனுக்கு கண்கள் கலங்கியது “எத்தனைக்கு எத்தனை எதிர்மறையான குணமுள்ளவர் என்று எண்ணினேனோ அவையெல்லாம் பொய் என நிரூபித்து உன்னதமானவர் என காட்டிவிட்டாரே இதற்கு ஈடான சந்தோஷம் வேறு உண்டா என்ன? இன்றைய நாளின் இனிய துவக்கம் இது தான் போலும்” என்று எண்ணியவன் இதழில் புன்னகை உறைய  “இருவரும் வரட்டும் தான் எதற்கு நந்தி போல இடையில் இடைஞ்சலாய்” என்று திரும்பி சென்றுவிட்டான் விஷ்ணு

உள்ளே நுழைந்தவனின் முகமாற்றத்தை கண்டு அருகில் வந்த வைதேகி “என்னாச்சு மாமா அவங்க ரெண்டு பேரு எங்க நீங்க மட்டும் வந்துருகிங்க கூட்டிட்டு வறேன்னு தானே போனீங்க உங்க முகம் ஏன் ஒரு மாதிரி இருக்கு” என்று அடுக்கடுக்காய் பல கேள்விகளை பதற்றத்துடன் வைத்தவள் அவன் பதிலை எதிர்பார்த்து முகத்தை பார்க்க

“ஒன்னுமில்ல தேவிம்மா அம்மா அப்பா வந்துட்டு இருக்காங்க என்ன போக சொல்லிட்டாங்க அதான் வந்துட்டேன், இன்னைக்கு ரொம்ப… சந்தோஷமா இருக்கேன்” என்றவன் அவளை அணைத்து கொள்ள அவன் செயலில் “மாமா..” என்று அலறினாள் வைதேகி

சந்தோஷம் என்றாலும் அழுகை வருத்தம் கவலை என்றாலும் அவளை அணைத்து ஆறுதல் அடைவது அவன் வழமை இடம் மறந்து கட்டிப்பிடி வைத்தியத்தை செய்ய போக மாமா என்று அலறி வேகமாக இரண்டடி பின்னால் நகர்ந்து கொண்டு பார்வையை சுற்றி இருந்தவர்களின் மீது அலைபாய விட்டு அவன் மீது பார்வையை பதிய வைத்தாள் பாவை

அவளின் சத்தத்தில் ஐயர் முதற்கொண்டு ஆவென்று அனைவரும் திகைப்புடன் அவனை பார்க்க “குறுக்க இருந்த கம்பிய மறந்துட்டயேடா விஷ்ணு” என்று கண்களை இறுக மூடி நொந்து கொண்டவன் தன் செயலை எண்ணி தலையை சொரிந்த வண்ணம் புருவம் உயர்த்தி வெட்கம் படர்ந்த முகத்தை மறைக்க தலையை தாழ்த்தி கொண்டான்

துவராகேஷ் முறைப்பை காட்டி நிற்க சஞ்சளா விஜயன் நமட்டு சிரிப்பை உதிர்த்தனர் சாவித்ரி சொல்லவே தேவையில்லை என்பது போல சங்கடமான பார்வையை அங்கிருந்த அனைவரிடமும் செலுத்தியவர் “கடவுளே ஏன் தான் இப்டி இருக்கானோ” என்று தலையில் கைவைத்து கணவரிடம்  முணுமுணுக்க

தொண்டையை செருமி கொண்டு உரை நிகழ்த்த போகிறவன் போல கையுயர்த்தி “சாரி யாரும் தப்பா நினைக்காதீங்க ஜஸ்ட் இதுவும் டிரிட்மென்ட் தான் ப்பா கட்டிப்பிடி வைத்தியம் கொஞ்சம் ஓவரா எமோஷ்னல் ஆகிட்டேன்” என்று கீழ் கண்ணால் அனைவரையும் பார்த்தபடி கூற

“ஷ்..ஷப்பா.. முடியலை இவனோட” என்று அலுத்து கொண்ட துவாரகேஷ் வாய் பார்த்து கொண்டிருந்த ஐயரிடம் “ஐய்யரே நீங்க என்ன வேடிக்கை பாத்துட்டு இருக்கீங்க அது எப்பவும் நடக்கிறது தான் நீங்க வேலைய பாருங்க” என்ற உரத்த குரலில் கூறவும் தலையை ஆட்டியபடி விஷ்ணுவை ஒரு மாதிரியாக பார்த்தவர் ஹோமத்திற்க்கான வேலையை தொடங்கினார்

அனைவரின் முன்னால் நிற்க முடியாமல் கூச்சத்தில் நெளிந்தபடி விஷ்ணுவிடம் முறைப்பை காட்டியவளிடம் “சாரிடா..” என்று கண்களை சுருக்கி மன்னிப்பு வேண்ட சற்று மலையிறங்கியவள் கவலை நிறைந்த பார்வையை தன் பெற்றோரின் மீது செலுத்தி அவனை பார்த்தவள் “சொன்னேன்ல” என்று வருத்தமாக கூற

“நா பாத்துகிறேன் நீ போ” என்றவன் பார்வையை தளர்த்தி கொண்டு எதுவும் நடவாதது போல பெருமாள் சாமி இந்திராணி இருவரின் அருகில் வந்து “மாமா உங்ககிட்ட தனியா கொஞ்சம் பேசணும் அத்தை நீங்களும் வாங்க” என்று கூறிவிட்டு அறைக்குள் சென்றுவிட

கணவன் மனைவி இருவரும் பார்வையை பகிர்ந்து கொண்டு அவன் பின்னொடு சென்றனர்,

உள்ளே நுழைந்த இருவரும் அமைதியாய் நிற்க அவர்கள் பேசட்டும் என்று பொறுமை காத்தான் விஷ்ணு சற்று நேரம் மௌனத்தில் கழிய இருவரும் இப்போதைக்கு பேச போவதில்லை என்று அறிந்தவனாய் தொண்டையை செருமி கொண்டு “என்னாச்சு மாமா உங்களுக்கு! உடம்புக்கு எதுவும் முடியலையா?” என்று அனைத்தும் அறிந்தும் அறியதவன் போல கேட்க

“அதெல்லாம் இல்ல மாப்பிள்ளை” என்றார் குரலில் சுரத்தே இல்லாமல்

“பின்ன எதுக்கு உங்க முகம் வாடி இருக்கு ஏதாவது பிரச்சனையா எதுனாலும் என்கிட்ட சொல்லுங்க நா தப்பா எடுத்துக்க மாட்டேன் உங்க மனசுல என்ன இருக்குன்னு எனக்கு தெரிய வேணாமா? தெரிஞ்சா தானே அதுக்கு என்ன காரணம்னு என்னால சொல்ல முடியும்” என்றவனின் பார்வை இருவரின் மீதும் மாறி மாறி பாய்ந்தது

மனைவியை பார்த்தவர் பின் தயங்கி தயங்கி “இல்ல மாப்பிள்ளை அது… வந்து நீங்க தப்பா எடுத்துக்காதீங்க பொண்ண பெத்தவங்க பொண்ணுக்கு கல்யாணம் ஆனா சீர் செய்யிறது வழக்கம், அன்னைக்கு அப்பாகிட்ட கேட்டேன் எதும் வேணாம்ண்டு சொல்லிட்டாரு முறையா செய்ய வேண்டிய கடமைகன்னு எங்களுக்கு இருக்கு இல்லையா? நீங்க என்ன நினைக்கிறீகன்னு எங்களுக்கு தெரியலை உக்கப்பாரு மாதிரி தான் நீங்களும் நடந்துருக்கிக வைதேகி நீங்க வீடு வாங்கி இருக்கிகன்னு சொன்னதும் வீட்டுக்கு தேவையான பண்டம் பாத்திரமெல்லாம் நாங்களே வாங்கி கொடுக்கலாம்னு இருந்தோம் வைதேகிகிட்டயும் சொல்லியிருந்தோம் ஆனா.. எல்லா பொருளையும் நீங்களே வாங்கிட்டிக ஒத்த வார்த்தை எங்ககிட்ட

சொல்லிருக்கலாமே மாப்பிள்ளை” என்று வருத்தத்துடன் சொல்ல

“ஆமா விஷ்ணு ரொம்ப கஷ்டமா இருக்குடா நீ பண்ணது” என்று கணவனின் பேச்சை ஆமோதித்தார் இந்திராணி

சன்ன சிரிப்புடன்” இவ்ளோ தானா மாமா நா கூட வேற என்னமோன்னு நினைச்சுட்டேன்” என்று அசட்டையாக கூறியவன் “என்னடா இவன் இப்டி பேசுறானேன்னு  நீங்க தப்பா எடுத்துக்காதிங்க மாமா இப்போ உங்க பொண்ணுக்காக நா செய்யலை இதை என்னோட பொண்டாட்டிக்கு செஞ்சிருக்கேன், உங்க பொண்ணுக்குன்னு நீங்க செய்யிறத செய்யிங்க நா வேணான்னு சொல்லல ஆனா இது நானும் அவளும் சேர்ந்து வாழ போற வீடு நாங்க வாழ போற வீட்டுக்கு எது தேவையோ அதை நாங்க தானே மாமா வாங்கணும் அத தான் நா பண்ணிருக்கேன் நேத்து நைட்டு தான் எல்லாத்தையும் செட் பண்ணேன் காலையில தான் அவளுக்கே தெரியும், நீங்க அவகிட்ட பேசிக்கிட்டது எனக்கு தெரியாது மாமா தெரிஞ்சிருந்தா முன்னாடியே உங்ககிட்ட சொல்லிருப்பேன் மனசுல எதையும் வச்சுக்காதீங்க  எதையும் உங்ககிட்ட நா எதிர்பாக்கலை மாமா”என்றவன்

இந்திராணியிடம் பார்வையை திருப்பி “என்ன அத்தை மாமாவுக்கு தான் நா சொல்றது புரியல உங்களுக்குமா புரியல கொஞ்சம் எடுத்து சொல்லுங்க நீங்க ரெண்டு பேரும் பங்சன்ல சந்தோஷமா கலந்துகிட்டு

எங்கள ஆசீர்வாதம் பண்ணா தானே எங்களுக்கு சந்தோஷமா இருக்கும் நீங்க ரெண்டு பேரும் வருத்தப்படுறத பாத்து வைதேகியும் வருத்தபடுறா மன சங்கடம் வேணாம்னு சொல்லுங்க அத்தை ஒரு மருமகனை இவ்ளோ தூரம் கெஞ்ச வைக்கிறீங்களே இது உங்களுக்கே நியாயமா படுதா” என்று பாவமாக கூறியவனின் முக பாவனை கண்டு சட்டென சிரித்துவிட்டார் இந்திராணி

“நீ போய் ஆக வேண்டிய வேலைய பாரு நா உன்னோட மாமாவ சமாதானம் பண்ணி கூட்டிட்டு வரேன்” என்றுறைக்க “கியூட் அத்தை” என்று இந்திராணியின் கன்னத்தை பிடித்து ஆட்டிவிட்டு கொஞ்சியவன் புன்னகையுடன் அறையில் இருந்து வெளியேறினான்

அதுவரை ஆவலோடு அறையை பார்த்து கொண்டிருந்தவள் சிரித்து கொண்டே வெளியே வந்தவனின் அருகில் வந்து “என்ன மாமா அப்பா என்ன சொன்னாங்க புரியிற மாதிரி பேசிட்டிங்க தானே அவருக்கு வருத்தம் ஏதும் இல்லையே?” என்று தவிப்போடு கண்களை உருட்டி விஷயத்தை அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் கேட்க

“கூல் தேவிம்மா எதுக்கு இவ்ளோ டென்ஷனா பேசுற பாரு முகமெல்லாம் வேர்க்க ஆரும்பிச்சுருச்சு ரிலாக்ஸா இருடா” என்றவன் தன்னவளின் இடையை பற்றி நெஞ்சோடு அணைத்து கொண்டு “மாமாவ பத்தி என்ன நினைச்சுட்டு இருக்க எல்லாம் சுமுகமா பேசியாச்சு” என்று கூறியவனின் கைகளின் குறுகுறுப்பில் நெளிந்தவள்

“விடுங்க மாமா உங்களுக்கு கொஞ்சம் கூட வெக்கமே இல்லயா எல்லாரும் இருக்காங்க” என்று பார்வையை சுற்றிலும் அலைபாய விட்டபடி சங்கோஜத்துடன் நெளிந்தவள் அவனிடமிருந்து விடுபட திமிற

முன்னை விட கைகளை பின்னி பிணைத்து இறுக அணைத்து கொண்டவன் “யாரும் பாக்க மாட்டாங்க வேணுன்னா உனக்காக எல்லாரையும் கண்ண மூட சொல்லவா” என்று கண்சிமிட்டி குறும்புடன் சிரித்தவனை மேலும் முறைத்து பார்த்தாள் வைதேகி, அவனின் பார்வை கூட அவஸ்தையாய் இருந்தது அவளுக்கு நாணமும் கூச்சமும் இழையோட அவன் முகத்தை ஏறிட முடியாமல் தலை குனிந்து கொள்ள

“உங்க ரொமான்ஸ் எல்லாத்தையும் நாங்க போன பிறகு வச்சுக்கோங்க இப்போ ரெண்டு பேரும் வந்து மனையில உக்காருறீங்களா?” என்ற குரலில் திடுக்கிட்டு அவசரமாக விஷ்ணுவிடம் இருந்து விலகியவள் சாவித்ரியை பார்க்க முடியாமல் சங்கடத்துடன் தலை குனிந்தபடியே சென்று விட

விஷ்ணுவின் அருகில் வந்த சாவித்ரி அவன் காதை பிடித்து திருகி “ஏண்டா உனக்கு கொஞ்சம் கூட கூச்சமே இல்லையா நாங்க எல்லாரும் இருக்கோமே ஒரு மரியாதை இருக்காடா அத்தை மாமா அப்பா அம்மா முன்னாடி இப்படியா பண்ணுவா?”

“என்னோட பொண்டாட்டிய நா கொஞ்சுறேன் அதுல உங்களுக்கு என்ன அத்தை பொறாமை மாமா உங்ககிட்ட ரொமான்ஸ் பண்ணலயேன்ற கடுப்பு தானே” என்று தலையாட்டியபடி கேட்டவன் வலிப்பது போல போலியாய் முகத்தை சுருக்க

“உனக்கு வாய் கொழுப்பு அதிகாமயிருச்சு கல்யாணம் ஆகவும் என்னயே கிண்டல் பண்றியா அத்தைன்ற மரியாதையே இல்ல”

“மரியாதை தானே கொடுத்துட்டா போச்சு எத்தனை கிலோ வேணும் அத்தையாரே” என்று கேலி பேசியவன் “ஒரு மருமகனை இப்டியா நடத்துறது விடுங்க அத்தையாரே வலிக்கிது” என்றதும் செவியில் இருந்த கைகை விலக்கி கொண்டார் அவர்

காதை தேய்த்து விட்டு சலுகையாய் சாவித்ரியின் தோளில் கை போட்டவன்

“சும்மா சொன்னேன் அத்தையாரே உங்கள போய் கிண்டல் பண்ணுவேணா கொஞ்சுற நேரத்துல தான் கொஞ்ச முடியும் அதுக்கே அவ என்னமா அலுத்துகிறா உங்களுக்கு நெக்ஸ்ட் மன்த் கல்யாண நாள் வருத்துல மாமாகிட்ட சொல்றேன் சைக்கிள் கேப்புல ரொமென்ஸ் பண்றது எப்டின்னு” என்று தீவிரமான முக பாவனையுடன் கிண்டல் மொழி பேச

“படவா ராஸ்கல்” என்று சாவித்ரி அடிக்க கை ஓங்கவும் “சும்மா சொன்னேன் அத்தையாரே” என்று நிற்காமல் சிரித்து கொண்டே சென்றுவிட சாவித்ரியின் முகத்தில் ரசனையான புன்னகை படர்ந்தது, அவனின் சிறுவயது நினைவுகள் எண்ணத்தில் உலா வர அவன் செய்த குரும்புகளை எண்ணி சிரித்தபடி அங்கிருந்து நகர்ந்து சென்றார்

கணவன் மனைவி இருவரும் ஹோமத்திற்கு முன்பு அமருமாறு ஐயர் சொல்லவும் அமர்ந்து கொண்டவர்கள் அவர் கூறும் மந்திரங்களை ஒவ்வொன்றாய் சொல்ல தொடங்க, மற்றவர்கள் ஹோமத்தை சுற்றி அமர்ந்தனர் புகை ஆகாது என சஞ்சளா சற்று தள்ளி அமர்ந்து கொண்டாள் விஜயன் வைஷாலியின் அருகில் அமர்ந்திருந்தான் ஏனோ அவன் மனம் அந்த நொடி அவள் அருகாமையை நாடியது ஒரு நாள் பூத்து சிரித்து சிலிர்ப்பை உண்டாக்கும் மலரை ரசிப்பது போல அவளின் செயல்கள் யாவையும் ரசித்துக் கொண்டிருந்தான் அவன், விஷ்ணுவின் பின்னால் அமர்ந்திருந்தான் துவாரகேஷ் பயபக்தியுடன் அனைவரும் யாகத்தை கவனித்து கொண்டிருக்க விஷ்ணுவின் கைபேசி சன்னமாய் ஒலி எழுப்பி சிணுங்கியது பின்னால் இருந்தவனை எடுத்து பேசுமாறு கண்ணால் ஜாடை செய்துவிட்டு யாகத்தில் கவனத்தை செலுத்தினான் விஷ்ணு

எழுந்து சென்று திரையில் மின்னிய கமிஷ்னர் என்ற பெயரை கண்டு தன்னிச்சையாய் உடல் மொழி விறைப்பை காட்டிட அழைப்பை ஏற்று காதில் வைத்து “சொல்லலுங்க சார்” என்றவன் மறுமுனையில் அவர் கேட்ட கேள்விகளுக்கு பதில் கூறிவிட்டு சற்று நிமிடத்தில் கிளம்பி அலுவலகம் வருவதாக கூறி அழைப்பை துண்டித்துவிட்டு விஷ்ணுவிடம் வந்து விஷயத்தை கூறினான்

“சரிடா முடிஞ்சதும் கிளம்பலாம் ஜோதிக்கு கால் பண்ணி பைல்ஸ் அப்றம் ரிப்போர்ட் எல்லாத்தையும் ரெடியா எடுத்து வைக்க சொல்லு அத வாங்கிட்டு போலாம்” என்று கம்மிய குரலில் கூற அப்போதே அருள்ஜோதிக்கு அழைப்பு விடுத்து விஷயத்தை கூறிவிட்டு முன்னமர்ந்த இடத்தில் வந்து அமர்ந்து கொண்டான் துவாரகேஷ்

கிரஹபிரவேஷம் நிறைவாய் முடிய சாவித்ரி அன்னம் இந்திராணி மூவரும் அடுப்படியில் பாலை காய்ச்சி கொண்டிருந்தனர், கிழக்கு முகம் பார்த்து பால் பொங்க ஒன்று சேர்ந்த குரலில் குழவையிட்டு பாலை இறக்கி டம்ளரில் ஊற்றி கடவுளுக்கு படைத்துவிட்டு அனைவருக்கும் கொடுக்குமாறு வைதேகிடம் கொடுத்தனுப்பினர் அன்னம்

தனக்கொரு டம்ளரை எடுத்து கொண்டு விஜயனின் அருகில் சற்று இடைவெளி விட்டு அமர்ந்த வைஷாலியிடம் “நல்லாவே உக்காரலாமே எதுக்கு இந்த டிஸ்டன்ஸ்” என்றான் அரை அடி இடைவெளியை காட்டி புரியாத பார்வையில் புருவத்தை உயர்த்தியபடி

“இரவு நடந்து கொண்ட செயலின் அதிர்ச்சியில் இருந்தே இன்னும் மீளவில்லை இதுவேறா!” என்று எண்ணியவளின் நினைவை கலைத்தவன் “என்ன யோசனை பண்ற தப்பா எதுவும் சொல்லையே எப்பவும் போல சாதாரணாமா உக்காருன்னு தானே சொன்னேன்”

“இல்ல எனக்கு இது தான் சௌகரியமா இருக்கு விஜயன்” என்று அலட்சியமாய் உரைத்துவிட்டு டம்ளரில் இருப்பதை ருசிக்க தொடங்கினாள் வைஷாலி

Advertisement