Advertisement

அதிகாலை ஐந்து மணிக்கே அனைவரும் கிளம்பி புது வீட்டிற்கு செல்ல தயாராய் இருக்க சில வேலைகள் இருப்பதாக கூறி விஷ்ணு வைதேகி இருவரும் முன்னால் சென்று விட்டனர், ஐயரை அழைத்து வர வேண்டி துவராகேஷ் சென்றுவிட மற்றவர்களை அழைத்து வரும் பொறுப்பு விஜயனிடம் ஒப்படைக்கப்பட்டது இரண்டு கார்களில் குடும்பத்தினரை அனுப்பி விட்டு இரு சக்கர வாகனத்தில் நான்கு சக்கர வாகனத்தை பின் தொடர்ந்தான் விஜயன்

அப்பார்ட்மெண்ட் வாசலில் இருசக்கர வாகனத்தை நிறுத்திய விஷ்ணு வைதேகியை இறங்க சொல்லி விட்டு வாகனத்தை பார்க் செய்ய சென்றுவிட இருள் விலகாதா அதிகாலை என்பதால் தெளிவாக எதுவும் தெரியவில்லை என்றாலும் எல்இடியின் வெளிச்சத்தில் ஓரிரு இடங்களை கவனத்தில் பதிய வைத்து கொண்டாள் வைதேகி, பைக்கை பார்க் செய்து விட்டு வந்தவன் “தேவிம்மா வா போலாம் நம்ம பிளாட் ஃபோர்த் ப்ளோர்ல இருக்கு” என்று மின் தூக்கியின் உதவியுடன் நான்காம் தளத்திற்கு அழைத்து சென்று அவள் கையில் சாவியை கொடுக்க

என்னவென்று புரியாமல் பார்த்தவளிடம் “இது உனக்கான கிஃப்ட் நீ தான் ஓபன் பண்ணனும் ஹாப்பி பர்த் டே தேவிம்மா” என்று இதழ்விரியா சிரிப்பை உதிர்க்க

ஆச்சர்யத்தின் அறிகுறியாய் அரை இன்ச் புருவங்கள் மேலே எழும்பியது அவளிடத்தில் எதுவும் பேசாமல் சாவியை திணித்து கதவை திறந்து உள்ளே சென்றவளின் பார்வை மீண்டும் அவனிடத்தில் படிய பார்வையின் அர்த்தம் உணர்ந்தவனாய் நிலை கதவில் சாய்ந்து கைகளை மார்பின் குறுக்கே கட்டி கொண்டவன் “நேத்து நைட்டு தான் எல்லாத்தையும் ரெடி பண்ணேன் எப்டி இருக்கு பிடிச்சிருக்கா?’என்று ஆசையாய் கேட்க

“ம் ரொம்ப நல்லா இருக்கு மாமா” என்றாள் அவன் செயலை உள்ளுக்குள் மெச்சி கொண்டபடி

ஒவ்வொரு அறையையும் அறையில் இருந்த பொருட்களையும் ரசனையுடன் பார்த்துவிட்டு பால்கனிக்கு சென்றாள் தூரத்து கடலோசை லேசாக செவிகளை எட்டி நாதம் நிரப்ப இளங்காற்று முகத்தில் பட்டு சாமரம் போல தழுவி கொண்டு சென்றது ரம்மியமான காலை பொழுதை வரவேற்றபடி கண்களை மூடி கண நொடி ரசித்து கொண்டிருந்தவள் இடையில் படர்ந்த கரத்தினை உணர்ந்து அவன்புறம் திரும்பாமலேயே முகம் பார்க்க “மாமாவோட கிஃப்ட் பிடிச்சிருக்கா” என்று அவளின் முகத்தோடு முகம் உரசி கொஞ்ச

அவன் மார்பில் சலுகையாய் சாய்ந்து கொண்டு “நிஜமாவே ரொம்ப அழகா இரக்கு மாமா அதே நேரம் ஆடம்பரம் இல்லாம நேர்த்தியா அலங்காரமெல்லாம் பண்ணிருக்கிங்க இது நம்ம வீடுன்னு நினைக்கும் போதே ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்று புன்னகை மிளிர கூறி கொண்டே வந்தவள் “ஆனா…?”என்று கவலை தேய்ந்த குரலில் இழுத்து நிறுத்த

‘என்ன ஆனா..?” என்று கேட்டு தன்புறம் திருப்பியவன் வாட்டம் கண்ட முகத்தை ஆராய்ந்தவாறே “என்னாச்சு ஏதாவது பிடிக்கலையா?”, ஒருவேளை ஏதாவது குறை இருக்கிறதோ என்ற எண்ணத்தில் கேட்க

“இல்ல அம்மாவும் அப்பாவும் இதை எப்டி எடுத்துப்பாங்களோன்னு நினைச்சா கொஞ்சம் சங்கடமா இருக்கு” என்றவள் விஷ்ணுவின் முகத்தை தயக்கத்துடன் பார்த்தாள்

“என்ன மாதிரி எடுத்துப்பாங்க எனக்கு புரியலை?”

“இல்ல இங்க இருக்குற பொருள் எல்லாமே நீங்களே வாங்கிட்டீங்க அதான் அப்பா அம்மா மனசு கஷ்டப்படுவாங்களோன்னு கொஞ்சம் கவலையா இருக்கு” என்று வருத்தத்துடன் கூற

“ப்ச் இவ்ளோ தானா நா கூட வேற என்னமோன்னு நினைச்சுட்டேன் அத நா பாத்துகிறேன் அத்தை மாமாவ பத்தி எனக்கு தெரியும் அவங்ககிட்ட எப்டி பேசி புரிய வைக்க முடியுமே நா பேசி புரிய வச்சுக்கிறேன் அத விடு” என்றவன் அவள் இதழை வருடியபடியே “கிஃப்ட் எப்டி இருக்குன்னு சொல்லிட்ட ஆனா… கிஃப்ட் கொடுத்த ஆள் எப்டி இருக்காருன்னு சொல்லவே இல்லையே?” என்று கண்களில் சிரிப்புடன் கேட்க

ஏற இறங்க ஒருமுறைக்கு இருமுறை அவன் தோற்றத்தை ஆராய்ந்தவள் “ம் ப்ச் ஏதோ சரியில்ல மாமா பட் ஓகே” என்று கண்களை சுருக்கி அதிருப்தியான பாவனை காட்ட

அவள் மனதில் உள்ளதை அறிந்து கொண்டவன் போல சன்ன சிரிப்புடன் “பிராடு பாக்க நல்லா இருக்கேன் ஆனா சொல்ல கூடாதுன்னு ஒரு எண்ணம்” என்றதும் உண்மை என்பது போல கிளுக்கி சிரித்தாள் வைதேகி

“உன்ன மாதிரி நா பொய் சொல்ல மாட்டேன் உண்மையவே சொல்றேன்  இன்னைக்கு நீ ரொம்ப அழகா இருக்க தேவிம்மா பாத்துட்டே இருக்கலாம் போல இருக்கு” என்று காதல் வசனம் பேசியவன் வருடிய இதழில் வாஸ்து பார்த்து முன்னேற செல்கையில்

“பாத்துகிட்டே இருடா” என்ற தீடீர் குரலில் இருவரும் திடுக்கிட்டு விலகி நிற்க

வாசலில் முறைப்பை காட்டிய வண்ணம் நின்றிருந்தான் துவாரகேஷ் “ஏண்டா? ஏன்? கொஞ்ச நேரம் தனியா இருக்க விடமாட்டியா?” என்று மனதில் பொருமியவன் வைதேகியை பார்க்க திருதிருவென விழித்து கொண்டிருந்தாள் அவள்

வேகமாக இருவரின் அருகில் வந்தவன் “இது தான் நீங்க வேலை பாக்கிற லட்சணமா இதுக்கு தான் எல்லாருக்கு முன்னாடியும் கிளம்பி வந்திங்களா?”என்று கோபமாக கேட்டவன் வைதேகி சங்கடத்துடன் நிற்பதை கண்டு

“நீ போய் வேற வேலை ஏதாவது இருந்தா பாரும்மா” என்றதும் விட்டால் போதுமென வேகமாக சென்றுவிட்டாள் வைதேகி மனையாளை பின் தொடர்ந்தவனின் பார்வையை சொடுகிட்டு தன் புறம் திருப்பியவன்

” அங்க என்ன லுக்கு இங்க என்ன பாரு! என்ன வேலை பண்ண சொன்னா என்ன வேலை பண்ணிட்டி இருக்க ஹான், நினைச்சேன்டா நைஸா எங்கள விட்டுட்டு நீங்க ரெண்டு பேரும் கிளம்பு போதே இங்க ஒருவேளையும் நடக்காதுன்னு நினைச்சேன் அதுமாதிரியே தான் பண்ணிட்டு இருக்க ஏண்டா கொஞ்சம் கூட பொறுப்பே இல்லயா எல்லாரும் வர்ற நேரம் நீங்க என்னடான்னா ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்கீங்க இதெல்லாம் அப்றமா வச்சுக்க கூடாதா” என்று ஏகத்துக்கும் கண்டிப்பு காட்டியவனை சற்றும் பொருட்படுத்தாது

“அதான் எதுவும் பண்ணலையே கொள்ளி கண்ணா பூஜை நேரத்து கரடி மாதிரி வந்து நின்னுட்டியே பின்ன என்ன? எனக்குன்னு பிரெண்ட்ஸ் வந்து வச்சுருக்கிங்க பாரு” என்று தலையில் அடித்து கொண்டவன் எட்டியது கிட்டவில்லையே என்ற கடுப்பில் சிடுசிடுப்பை காட்டிவிட்டு செல்ல

“வாழ்க்கையில முதல் தடவையா கோபமா பேசி பழகலாம்னு பாத்தா விட மாட்டிங்றானே கண்டிப்பான அண்ணனா நடந்துகிட்டது தப்பா…” என்று சோகமாக தனக்கு தானே பேசி கொள்ள

“ஒழுங்கா வேலைய பாரு இல்ல பால்கனியில இருந்து தள்ளி விட்டுருவேன்” என்ற விஷ்ணுவின் காட்டம் நிறைந்த குரலில் “நமக்கு எதுக்கு வம்பு இருக்குற இடம் தெரியாம இருந்துட்டு போவோம்”என்று புலம்பி கொண்டே மிஞ்சிய வேலைகளை கவனிக்க சென்றான் துவராகேஷ்

சற்று நேரத்தில் மாவிலை தோரணம் கட்டி நிலை வாசலில் மலர் அலங்காரம் செய்து சந்தனம் குங்குமம் இட்டு புதுவீட்டிற்கான விசேஷ வடிவத்தை கொடுத்து முடித்துவிட்டு ஒரு முறைக்கு இருமுறை விஷ்ணு துவராகா இருவரும் பார்வையிட்டு கொள்ள ஐயர் ஹோமம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார் “என்னடா நேரமாச்சு இன்னும் யாரையும் காணோம் இன்னேரம் வந்துருக்கணுமே?” என்று சந்தேகமாக துவாரகா வினவ

“பக்கத்துல வந்துட்டாங்க வந்துருவாங்க” என்றவன் “நீ போய் ஐயருக்கு ஏதாவது தேவையான கேட்டு எடுத்து கொடு” என்று கூற கீழே ஹாரன் சத்தம் கேட்டது

“அவங்க வந்துட்டாங்கன்னு நினைக்கிறேன் ஐயர நா பாத்துகிறேன் நீ போய் எல்லாரையும் கூட்டிட்டு வா” என்று அவசரமாக கூற

மேலும் கீழும் பார்வையை செலுத்தி ஒரு மாதிரியாக பார்த்தவன் “பாக்க மட்டும் தானே செய்வா இல்ல…” என்று குரலை தழைத்து குழைத்து இழுக்க அவன் கூற்றின் உள்ளார்த்தம் புரிந்தவன்

“ஓடிரு நாயே என்ன பாத்தா உனக்கு எப்டி தெரியிது” என்று அடிப்பது போல கையை ஓங்க ஒரே ஓட்டமாக சிரித்து கொண்டே ஓடி மறைந்துவிட்டான் துவாரகேஷ்

அவன் செயலில் புன்னகை மலர தலையை உலுக்கி கொண்டவன் வேகமாக தன் மனையாளிடம் சென்று “தேவிம்மா எல்லா ரெடி பண்ணிட்டியா? இல்லனாலும் அப்றம் வந்து பாத்துக்கலாம் இப்போ வா அப்பா அம்மா எல்லாரும் வந்துட்டாங்க” என்று அடுப்பிற்கு சந்தனம் குங்குமம் வைத்து கொண்டிருந்தவளை கை பிடித்து இழுத்து வந்தவன் தன்னுடன் வாசலில் நிற்க வைத்து கொண்டான் குடும்பத்தினரை வரவேற்க வேண்டி

பரமசிவம் அன்னம் இருவரையும் தவிர்த்து மற்ற அனைவரும் வந்துவிட வந்தவர்களை உள்ளே செல்லுமாறு புன்னகை முகமாய் கூறியவன் இருவரை மட்டும் காணவில்லையே என்று துவாரகாவிடம் “டேய் அப்பா அம்மா எங்கடா ரெண்டு பேரையும் காணோம்”

“அத ஏண்டா கேக்குற லிப்ட்ல ஏற பயமா இருக்குன்னு அம்மா ஸ்டெப்ஸ்ல ஏறி வறேன்னு சொல்லவும் அப்பாவும் அவங்க கூட படியேறி வந்துட்டு இருக்காங்க அஞ்சு நிமிஷம் அம்மாவை கன்வைன்ஸ் பண்றதுலயே போயிருச்சு” என்று அலுத்து கொண்டவன் உள்ளே சென்றுவிட

“எத்தனை படிகள் ஏறி வரமுடியுமா அதுவும் நான்காவது தளத்திற்கு வர வேண்டுமென்றால் கால்கள் வலி எடுக்கும் மூச்சு வாங்குமே ஏற முடியுமா?” என்று எண்ணியவன் வைதேகியிடம் கூறிவிட்டு வேகமாக படிகளில் இறங்கி செல்ல இரண்டாம் தளத்தில் இருந்து பரமசிவத்தின் கண்டிப்புமிகுந்த சினக்குரல் கேட்டு சட்டென நின்று விட்டான் விஷ்ணு, “ஏத்தா ஒனக்கு மட்டுந்தே உசுரு பெருசா அவிகெல்லாம் போறாக கூடவே அந்த மெசுனுக்குள்ள போவோம்னு சொன்னா கேக்குதியா பாரு இனி ராவைக்கு காலு வலியெடுக்கும்ப தைலம் கூட கொண்டாலையே தேச்சு விட” என்று கோபமாக கரிசனம் காட்டிய கணவரை உள்ளுக்குள் மெச்சி கொண்டவர்

“நீங்க அவுக கூட போ வேண்டிய தானே நா வந்துகிட மாட்டேன் உங்கள ஒன்னும் தொணைக்கு வாங்கன்னு கூப்டலையே” என்று மிடுக்கான தோரணையில் பேச

மனைவியின் கரத்தினை கைதாங்களாக பற்றி கொண்டவர் “அதெப்படி முடியும் கடைசி வரைக்கும் ஒன்ன தனியா விட மாட்டேன்னு கலியாணம் பண்ணிருக்கேன் நீ படியில ஏறும் போது தட்டுதடுமாறிடன்னா தாங்கி பிடிக்க தொணை வேணமா? அதுக்கு த்தா தான் வந்தேன் ஒனக்கு ஒன்னுன்னா மனசு தாங்காதுத்தா தூக்க முடிஞ்சா தூக்கிட்டிட்டு போயிருவேன் மனசுல தெம்பு இருக்கு உடம்புல தெம்பில்ல அதான் கைதாங்களா கையை பிடிச்சுக்கிடுதேன்” என்ற கணவரை ஆச்சர்யமும் அதிசயமுமாய் பார்த்தார் அன்னம், தொண்டையில் வற்றிய சுனை நீர் கண்களில் பெருக்கெடுத்து சுருங்கிய தோலில் வடிந்தது

வேகமாக கண்களை சேலை தலைப்பால் துடைத்து கொண்டவர் “பேரம் பேத்தி எடுக்க வேண்டிய வயசுல பேச்சை பாரு கிழவனுக்கு” என்று போலியாய் நொடித்து கொண்டவரின் கண்களில் புன்னகை மிளிர

“இதுல என்னத்தா இருக்கு ஏம்பொண்டாட்டிக்கிட்ட நா  ஆசையா பேசுதேன் பேரம் பேத்தி வந்தாலும் நா இப்டி தான் த்தா பேசுவேன் என்ன ஆரு கேக்குறது” என்றவர் சட்டென மனைவியை நிறுத்தி “வயசு இருந்த காலத்துல ஒனக்குன்னு நா ஒன்னும் பண்ணதில்லத்தா ஒன்னுக்கு லாயக்கில்லாத என்ன மனுசனா மாத்தி ஒத்தாசையா இருந்து ஓடா தேஞ்ச இப்போ இத்து போன நாறுகனக்கா இருக்க அப்ப ஒன்ன புரிஞ்சுக்க முடில அந்தளவுக்கு புத்தியும் இல்ல” என்று தன் பிற்போக்கு தனத்தை எண்ணி சுருதி ஏற இறங்க பேசியவர்

“ஒடம்பு சுகத்தை தவுர வேற என்னத்த ஒனக்கு பெருசா தந்துருக்கேன் சொல்லு ஆசையா நாலு வார்த்தை பேசிறுப்பேனா இல்ல பிடிச்சதை வாங்கியாந்து கொடுத்துருப்பேனா எதுமேயில்லையேத்தா, ஆசையா சமைச்சு வச்சு எனக்காக ஓக்காந்துட்டு இருப்பியே சிரிச்சு என்னைக்காவது பேசிறுப்பேனா சொல்லு! பொங்கி வச்ச சோறு நல்லா இருக்குன்னு ஒத்த வார்த்தை சொல்லிருப்பேனா சோறு நல்லா இருக்குன்னு  சொல்லமாட்டாறான்னு தட்டையும் மொகத்தையும் மாறி மாறி பாப்பையே அந்த ஏக்கத்தை வாய் கொண்டு சொல்ல முடியுமா?, பிள்ளைங்ககிட்ட காட்டுன கண்டிப்புல பாதியளவு கூட ஒம்மேல அக்கறை காட்டாலயேத்தா அப்ப ஒன்ன புரிஞ்சிக்கல இப்போ புரிஞ்சிக்க மொயச்சி (முயற்சி) பண்ணுதேன் பல்லு போன காலத்துல தானத்தா நானம் (ஞானம்) பொறக்குது” என்று மனதில் அடக்கி வைத்த வாழ்க்கையின் வாக்கியங்களை வார்த்தைகளாய் கொட்டினார் பரமசிவம்

அவர் பேச பேச ஏதோ ஒரு உணர்வு கண்கள் கலங்கி தாரை தாரையாய் கண்ணீர் பெருக்கெடுத்தது அன்னத்திற்கு மண்வெட்டியும் கலப்பையும் பிடித்து காய்த்து கன்னி போன விரல்களை கொண்டு மனைவியின் கண்ணீரை துடைத்து விட்டவர் “அழாத த்தா நீ அழுதா ஏம் மனசு தாங்காது” என்று கரகரப்பான குரலில் கூற

கண்களை அழுந்த துடைத்து கொண்டு “என்ன மனுசரு நீரு என்னய்யவே அழ வச்சுட்டிறே    கல்லுக்குள்ளயும் ஈர கெடக்கும்னு இன்னைக்கு தா பாக்கேன் ஒமக்கும் மனசு இருக்குன்னு காட்டிட்டய்யா இத்தன வருஷ வாழ்க்கையில இன்னைக்கு தான் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் கெடைச்சிருக்கு நா பட்டபாடு வீண் போகலை” என்று அவரின் மனமாறுதலை கண்டு பூரித்து போனவர் “ஏ ராசாவுக்கு அழ தெரியும்ன்றதே இன்னைக்கு தான் பாக்குதேன் என்ன அழ வேணாம்னு சொல்லிட்டு நீரு அழுதா எப்டி”, அதட்டலான வார்த்தைகளையும் மீறி சிரிப்பு தொத்தி கொண்டது அன்னத்தின் முகத்தில்

சேலை தலைப்பால் கணவரின் கண்ணீரை துடைத்துவிட்டு சிரித்தவர் “வெரசா போலாம் இல்லன்னா நம்மள காணோமேண்டு யாராவது தேடி வந்துற போறாக” என்று அவசரம் அவசரமாக படிகளில் ஏறினார் அன்னம்

கணவனின் மனம் நிறைந்த வார்த்தைகள் ஊக்கமருந்தை போல புது உத்வேகம் அளிக்க வேகமாக படிகளில் ஏறியவருக்கு கணவனின் கரிசனத்தில் கால் வலியும் மறந்து போனது, இளஞ்சிட்டாய் படிகளில் ஏறும் மனைவியை சந்தோஷம் பொங்க பார்த்தார் பரமசிவம்

Advertisement