Advertisement

சலசலக்கும் விருட்சங்களின் கீதம் செவிகளை நிறைக்க பௌர்ணமி நிலவு குளிரை நிரப்பி தென்றல் சன்னமாய் சாமரம் வீசி அனைவரின் மனதையும் ரம்மியமாகியது மின்சார விளக்கை போன்ற நிலமதியின் பிரகாசம் அன்னையான பூ மகளை தழுவி அணைத்து பிணைத்து கொண்டது, இயற்கையின் படைப்பில் ஒவ்வொன்றும் வேறுவேறு வகையில் அழகு தான் ஆர்ப்பரிக்கும் அலையில் இருந்து வற்றாத நதி வரையறையில்ல வனம்  கார்மேகம் சூழ்ந்து காரிருளை நிரப்பி மாரியாய் பொழியும் வானம் வரை அதனின் ஒவ்வொரு சாராம்சமும் அழகோ அழகு தான் அன்றாட வாழ்வில் இயற்கையை ரசிக்க எது நேரம் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் மனம் நிலையில்லாமல் தவிக்கும் நேரத்தில் தனிமையின் இனிமை போல சில நேரங்களில் மனதை மயக்கி திசை திருப்பி வாழ்வில் ஒரு பிணைப்பை ஏற்படுத்தி விடுகிறது இயற்கை

அனைவரும் வட்டமாய் அமர்ந்து கொண்டனர் சாவித்ரி சப்பாத்தி வைக்க அமிர்தா பன்னிர் மசாலாவை பரிமாறினார் பந்திக்கு முந்து படைக்கு பிந்து என்பது போல முதல் ஆளாக அமர்ந்த சஞ்சளா ஒரு கவளம் உண்டு விட்டு “ம்… சூப்பர் ஆன்ட்டி! செம்ம டேஸ்ட்! இப்டி ஒருநாள் கூட அம்ரு சமைச்சதே இல்ல” என்றவள் தன் தாயிடம்”அம்ரு எப்டி சமைக்கணும்னு கேட்டு தெரிஞ்சுக்கோ!” என்று விட்டு உணவை ரசித்து ருசித்து விழுங்கி கொண்டிருந்த மகவை சன்ன சிரிப்புடன் உண்ணும் அழகை ரசனையுடன் பார்த்து கொண்டிருந்தார் அமிர்தா 

வைதேகி எதுவும் பேசாமல் உணவே கதி என்று தட்டை வெறித்தபடி கொறித்து கொண்டிருப்பதை பார்த்த விஷ்ணு அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் “சாரி தேவிம்மா கோபத்துல… பேசிட்டேன்!” என்று இழுக்க

வேண்டுமென்றே முறுக்கி கொண்டவள் நிமிர்ந்தும் பார்க்கவில்லை “சாரிடி” என்று செவிகளின் அருகே சென்று யாரும் பார்த்திடா வண்ணம் அழுத்தமாக கூறினான் 

அவனின் வெப்பமான மூச்சு காற்றில் உடல் சிலிர்த்து கூச செய்ய “பக்கத்துல வந்து பேச வேணாம் எனக்கு கேக்குற தூரத்துல இருந்தே பேசுங்க” என்று விறைப்பாய் கூறவும் புன்முறுவல் பூத்தவனை  ஆழ்ந்து நோக்கியவள் “நா உங்கள மன்னிக்கணும்னா எனக்கு ஊட்டிவிடனும் பண்ணுவிங்களா?” 

“ஏய் எல்லாரும் இருக்காங்க இப்போ எப்டி தேவிம்மா ப்ளீஸ் டா வேற ஏதாவது சொல்லு செய்றேன்!” 

“எல்லாரும் இருந்தா என்ன! இதுக்கு முன்ன நீங்க எனக்கு ஊட்டிவிட்டது இல்லையா? என்னமோ புதுசா செய்யிற மாதிரி ரொம்ப கூச்சபடுறீங்க இப்போ உங்கள மன்னிக்கணும்னா எனக்கு ஊட்டி விடுங்க!” என்றாள் பிடிவதமாக

“சரி ஊட்டி விடுறேன்” என்றவன் சப்பாத்தியை பிய்த்து குருமாவில் குளிப்பாட்டி அவளுக்கு ஊட்டி விட வைஷாலி விஜயனை ஏக்கமாக பார்த்தாள் அவள் பார்வையில் தெரிந்த நிராசையான ஏக்கம் அவனுக்குள் வருத்தத்தை விளைவித்தாலும் வெளி காட்டி கொள்ளாமல் “என்ன!” என்று கண்டிப்பான குரலில் கேட்க

“ஒன்னுமில்ல” என்று தலையாட்டியவள் சோகமாக முகத்தை வைத்து கொண்டு “எதுக்கும் ஒரு கொடுபனை வேணும் எனக்கு தான் அது இல்லையே நீ சாப்பிடு! நல்லா சாப்பிடு!” என்று விட்டு வேண்டா வெறுப்பாக உணவை கொறிக்க தொடங்கினாள்

வேலை முடிந்து ஜெகநாதனும் வந்து விட அனைவரும் மேலே இருப்பதை அறிந்து கொண்டவர் குளித்து முடித்து மாடிக்கு வர புதிதாக இருவர் அமர்ந்திருப்பதை கண்டு “அட  நீங்க எப்போ வந்திங்க ஒரு போன் கூட பண்ணல!” என்றவாறே சம்மணமிட்டு அமர 

“காலையில தான் மாமா வந்தோம் விஷ்ணு தான் நா சொல்லிக்கிறேன்னு சொன்னான் மறந்துட்டான் போல!” என்று வைஷாலி கூற

“எல்லாத்தையும் முன் கூட்டியே சொல்ற பழக்கம் தான் அவனுக்கு பிடிக்காதே!” என்று சாவித்ரி தன் அண்ணன் மகனை குறை கூறவும்

“சவி..!” என்றவர் தன் பதியின் கையை அழுத்த “சரி சரி நீங்க சாப்பிடுங்க கரண்ட் எப்ப வரும்னு சொல்ல முடியாது” என்றவாறே பரிமாறினார்

உணவே மருந்து அதையே விரும்பு என்பது போல வேறு எங்கும் பார்வையை திருப்பாது தட்டில் கவனத்தை செலுத்தி ஒவ்வொரு கவளத்தையும் ரசனையுடன் உள்ளே விழுங்கி கொண்டிருந்தவனை கண்டு சஞ்சளாவின் வயிற்றில் அமிலம் சுரந்தது “எதையாவது கண்டுகிறானா பாரு பக்கி சோறு தான் முக்கியம்னு கண்ணும் கருத்துமா சாப்பாட்டுல கவனம் வச்சுருக்கான் தொங்கா” என்று முகத்தை சுண்டி வைத்து மனதில் அர்ச்சித்து கொண்டிருந்தாள்

 திடீரென விக்கல் எடுத்ததும் “டேய் எரும உன்ன கூட யாரோ நினைக்கிறாங்க போல யாருடா அது?” என்ற வைஷாலியின் பிடரியில் அடித்த விஜயன் “ஒழுங்கா வாய மூடிட்டு சாப்பிடு!” என்று சிடுசிடுக்க

“வாய மூடிட்டு எப்டி சாப்பிட முடியும்?” என்று கேள்வி எழுப்பியவளை என்ன செய்வது என்ற ரீதியில் பார்த்தவன்

கடவுளே என தலையில் அடித்து கொண்டு “உன்ன பெத்தாங்களா இல்ல ரெடிமெடா செஞ்சாங்களா? ஒரு நிமிஷம் வாய் ஓயுதா! எப்ப பாரு லொடலொடன்னு” என்று எரிந்து விழுக 

” நா யார்கிட்ட பேசுனா உனக்கு என்ன விஜி போ எனக்கு சாப்பாடு வேணாம் எப்ப பாரு என்ன திட்டிக்கிட்டே இருக்க நா போறேன்” என்று எழ முற்பட்டவளின் கையை அழுந்த பற்றியவன் 

“ஒழுங்கா சாப்டு நீ பசி தாங்க மாட்ட அப்றம் நைட்டு திருட்டு பூனை மாதிரி ஏதாவது இருக்கான்னு இருட்டுல தேடிட்டு இருப்ப” என்று விஜயன் கூற 

பற்றிய கரத்தினையும் அவனையும் மாறி மாறி பார்த்தவள் அவனின் அக்கறை கூட சக்கரையாய் இனித்தது இதுவரை சிடுசிடுப்பை காட்டியவனின் கரிசனம் மிகுந்த வார்த்தைகள் அவளுக்குள் இதமான நிலையை அளிக்க அவன் கூறிய எதுவும் அவள் செவிகளுக்கு எட்டவில்லை அவனின் உரிமையான கை பற்றல் ஒன்றே அவளுக்குள் சொல்ல முடியாத உணர்வுகளை தட்டி எழுப்ப கண்கள் பனித்து  வானத்தில் பறப்பது போன்ற உணர்வு ஊடுருவும் பார்வையில் நோக்கியவளின் பார்வையின் வீரியம் அவனை தடுமாற செய்ய திக்திக் என்று மனம் அடித்து கொண்டது இதயத்தின் துடிப்பு கண நேரத்தில் தாறுமராய் எகிறி ரத்தத்தை சூடேற செய்ய இருவரும் ஒருவரை ஒருவர் இடம் பொருள் மறந்து வாய் மொழி விடுத்து விழி வழியே காதல் மொழி பேச

“என்ன விஷ்ணு ரெண்டுபேரும் சமாதானம் ஆகிட்டீங்க போல ஊட்டியலாம் விடுற ஒருநாளாவது எனக்கு இல்ல உன்னோட அத்தைக்கு இப்டி பண்ணிருப்பயா?” என்று ஜெகநாதன் போலியாய் வருத்தம் கொள்ள

“மாமா நீங்க வேற! நானே சாமாதனம் பண்ண முயற்சி பண்ணிட்டு இருக்கேன்” என்று கூறியதும் “அப்டின்னா நடக்கட்டும்” என்றவர் உரக்க சிரிக்க சிரிப்பு சத்ததில் இரு ஜீவன்களும் அவசர அவசரமாக பார்வையை விலக்கி கொண்டனர் 

துவாரகாவிற்கு விக்கல் நின்றபாடில்லை “டேய் தண்ணிய குடிடா!” என்று சாவித்ரி சொம்பை அவனிடம் நீட்ட

“குடிச்சுட்டேன் ஆன்ட்டி நிக்க மாட்டிங்கிது” என்று தலையை சொரிந்து கொண்டே பாவமாக கூறியவனின் கையை சுரண்டிய சஞ்சளா”வாய திறங்களேன்!” 

“எதுக்கு?” 

“ப்ச் வாய திறங்கன்னு சொன்னேன்! விக்கல் நிக்கணுமா? வேணாமா?” என்றதும் ஏன் எதற்கு என்று கேளாமல் மறு நொடியே ஆ வென்று அரக்கனை போன்று  வாய் பிளந்தவனை கண்டு “எவ்ளோ பெரிய வாயி!” என்று வியந்தவள் முழு சப்பாத்தியை ஆறாக மடித்து மசலாவில் பட்டும் படாமலும் தொட்டுவிட்டு யாரும் தன்னை பார்கிறார்களா? இல்லையா? என்பதை உறுதி செய்து கண்ணிமைக்கும் நேரத்தில் அவன் வாயில் திணித்துவிட அவள் செய்கையில் அதிர்ந்து போனவன் உறைபனியாய் உறைந்து போக, தன் மகளின் செயலை பார்த்தும் பார்க்காதது போலவே அமைதியாக அமர்ந்திருந்தார் அமிர்தா, எத்தனை நேரம் கண்விழித்தபடி தவ நிலையில் அமர்ந்திருந்தானோ உரக்க அழைக்கும் குரல் கேட்டு திடுகிட்டவன் மலங்க மலங்க விழிக்க

“டேய் என்னாச்சு உனக்கு? ஏ இப்டி பேயறைஞ்சவன் மாதிரி உக்காந்துருக்க அதுவும் வாயில சாப்பாத்திய வச்சுக்கிட்டு” என்று அதட்டிய விஷ்ணுவை கோமாவில் இருந்து மீண்டு வந்தவன் போல பார்த்தவன் 

“என்னடா சொன்னா சரியா கேக்கல?” 

“கிளிஞ்சது போ! சீக்கிரம் எந்திரி எல்லாரும் சாப்ட்டு முடிச்சாச்சு நீ தான் கடைசி” என்று கூறிய பின்னரே சுற்றிலும் பார்வையை செலுத்த அப்போது தான் உணர்ந்தான் தான் மட்டும் அமர்ந்திருப்பதை

அவசர அவசரமாக உணவை விழுங்கி விட்டு “ஏண்டா இத முன்னாடியே சொல்ல கூடாதா..!” என்று குறைப்பட்டு கொண்டு கைகழுவ எழுந்து சென்றான் 

வெகு நாட்கள் கழித்து அனைவரும் ஒன்றாக அமர்ந்து கலகலப்பாக பேசிக்கொண்டிருந்தனர் இளஞ் சிட்டுக்களின் மனதில் ஒவ்வொருவித உணர்வு! துவாரகா சஞ்சளாவின் தீடீர் செயலை எண்ணி குழப்பத்தில் உழன்று கொண்டிருக்க, விஷ்ணு உண்மையை உரைக்கவா? வேண்டாமா? என்று தயங்கி மருகி கொண்டிருந்தான், சஞ்சளாவோ துவாரகாவின் மீது ஓர கண் பார்வையை பதித்திருக்க வைதேகியோ பூரண நிலவை ரசனையோடு பார்த்து கொண்டிருந்தாள், ஐவர் மனதிலும் இதமான உணர்வு என்றால்! விஜியின் மனதிமோ அவர்களுக்கு நேர்மாறாக உக்கிரம் உடலை உருக்கம் அளவிற்கு கோபத்தில் தணலாய் கனன்று கொண்டிருந்தது அவள் கைபற்றியதை எண்ணி தன் மீதே கோபம் கொண்டவன் யாரிடமும் ஒட்டாமல் தனித்து நிற்க  

இவர்களின் மனநிலைக்கு நேர்மாறாக மற்றோருவனோ தன் வீட்டையே இரண்டாக்கி கொண்டிருந்தான் முதலில் பூஜாடியை எடுத்து உடைத்தவன் அடுத்தடுத்து கண்ணுக்கு அகப்பட்ட பொருள்களையெல்லாம் தூக்கி வீசி கோபத்தில் கண்மண் தெரியமால் உழன்று கொண்டிருக்க அவன் அருகில் செல்லவே அங்கிருந்த பணியாளர்கள் பயந்து நடுங்கினர், அவனின் ருத்ர தாண்டவத்தை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த பணியாளர்கள் சபரியை கண்டதும் புற்றுக்குள் மறைந்து கொண்ட நாகமாய் மறைந்து கொள்ள

உள்ளே நுழைந்த சபரி இல்லம் இருக்கும் நிலை கண்டு “டேய் என்னடா பண்ணி வச்சுருக்க! அறிவுகெட்டவனே இப்போ என்னாச்சுன்னு உன்னோட கோபத்தை எல்லாம் உயிரில்லாத பொருள் மேல காட்டிட்டுருக்க!” என்று கடுகடுக்க

“ஹான் உயிரோட இருக்குறவன எதுவும் பண்ண முடியல அதான்! மொத்த கோபத்தையும் இது மேல காட்டுறேன் உனக்கென்ன வந்துச்சு இது ஒன்னும் நீ சம்பாதிச்சது இல்லயே நானும் அப்பாவும் சம்பாதிச்சது தானே?” என்று இருமாப்புடன் பேசியவன் “உன்னோட வேலைய பாத்துட்டு போ பெரு..சா பேச வந்துட்டான்!” 

Advertisement