Advertisement

நிலவு தன் வேலையை பூரண திருப்தியுடன் செய்துவிட்டு கதிரவனின் வருகைக்காக காத்திருக்க நட்சத்திரங்கள் ஒவ்வொன்றாக மறைய தொடங்கிய இதமான காலைவேளை, கிரிச்கிரிச் என்று மக்கர் செய்த வண்ணம் மேற்கூரையில் சுழலும் காற்றாடியின் சத்தத்திலும் அயர்ந்து உறங்கிகொண்டிருந்தாள்  

ஐந்து மணி என்று அறையே அதிரும் அளவிற்கு அறைகூவல் விடுத்த அலாரம் சத்தத்தில் எரிச்சல் எழுந்தாலும் எழ வேண்டுமே என்ற எண்ணத்தை முன்னிறுத்தி கண்களை திறவாமலே கடிகாரத்தை துழாவி அணைத்துவிட்டு அன்றைய நாள் முழுவதும் சுபமாக அமைய வேண்டும் என தன் மனம் கவர்ந்த சீதையின் நாயகன் ஸ்ரீ ராமனை மனதில் பிரார்த்தித்து படுக்கையை விட்டு எழுந்தவள் கண்களை கசக்கி கொண்டே குளியல புகுந்த நேரம் பால் வண்டியின் சத்தம் கேட்க, அவசர அவசரமாக முகத்தை கழுவி துடைத்து கொண்டு வேகமாக வெளியே வந்தாள் வைதேகி இருபத்தியேழு வயது நிரம்பிய பாவை 

மாநிறம் என்றாலும் சற்று கலையான முகம் வசீகர புன்னகைக்கு சொந்தகாரி கன்னத்தில் விழும் சன்னமான குழி மேலும் அவள் சிரிப்பை மெருகேற்றி காட்டும், இன்பம் மட்டுமே வாழ்வாக அமைந்தால் மனிதர்களுக்கு வாழ்வில் ஒரு வித பிடிப்பு இல்லாமல் போய்விடும் என்று இன்பமும் துன்பமும் கலந்து பல அனுபவங்களையும் வேதனையான துன்பங்களையும் தந்த இறைவன் அவளுக்கு மட்டும் சற்று அதிகப்படியாகவே வேதனையையும் ஏமாற்றத்தையும்  கொடுத்துவிட்டார்

புன்னகைத்த படி பால் பாக்கெட்டை வாங்கியவள் “குட் மார்னிங் அண்ணா” என்று கூற 

 அவள் புன்னகை பால்காரனையும் தொற்றி கொண்டது “வெரி குட் மார்னிங் பாப்பா” என்றவர் பணத்தை பெற்று கொண்டு இருசக்கர வாகனத்தில் அடுத்தடுத்த வீட்டின் நுழைவாயில் கதவில் சொருகி வைத்திருந்த பைகளில் பாக்கெட்டுகளை போட்டுவிட்டு சிட்டாய் பறந்து சென்றார்

பால் வண்டி மறைவதை ஒருவித ஆர்வத்தோடு பார்த்துக்கொண்டிருந்தவள் சமையலறை புகுந்து அடுப்பை பற்ற வைத்து பாலை காய்ச்சி பில்டரில் காபி பவுடரை கலந்து வைத்து விட்டு வாசல் தெளித்து கோலமிட்டு வந்து கடிகாரத்தை பார்க்க மணி ஐந்து முப்பது என காட்டியது 

படுத்திருப்பவர்கள் எழட்டும் அதன்பிறகு வேலைகளை தொடங்கலாம் என்று எண்ணி கொண்டு தொலைக்காட்சியை உயிர்பித்து ஒவ்வொரு சேனலாக மாற்றி கொண்டே வர தர்பாரி கானடா ராகத்தில் அமைந்த பழைய பாடலை கேட்கவும் கைகள் தனாக செயலற்று போக மனம் பாடலிலே லாயித்து போய் மெய் மறந்து கண்களை மூடி ரசிக்க தொடங்கினாள் வசந்ததில் ஓர் நாள் என தொடங்கும் கண்ணதாசனின் கவிமிகுந்த வரிகளில் மனம் நிறைந்து வரிகளை உள்வாங்கியவள் தன் மனம் கவர்ந்த மணவாளனை எண்ணி ரசித்து கொண்டிருக்க அவள் மோனா நிலையை கலைத்தார் சாவித்ரி வைதேகியின் சித்தி 

 “வைத்தி வைத்திம்மா” என்று உளுக்கியவர் “என்னம்மா காலங்காத்தால நின்னுகிட்டே கனா கண்டுகிட்டு இருக்க” என்று புரியாத புதிராய் பார்த்தபடி கேட்க

இதழ் விரியாது புன்னகைத்தவள் ” “எந்திருச்சுட்டீங்களா சித்தி இருங்க உங்களுக்கு காபி  கொண்டு வறேன்” என்று அடுக்களை புகுந்து கொள்ள சாவித்ரி நேற்றைய நாளிதழை கவனத்தை சிதறினார்

ஆறுமாதங்கள் ஆயிற்று வைதேகி சென்னை வந்து வாழ்வில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களையும் அவனின் ஏமாற்றத்தையும் மறக்கவும் மன்னிக்கவும் வேண்டி தன்னை மெல்ல மெல்ல நடந்த எதிர்பாரா நிகழ்விலிருந்து மீட்டு கொண்டவள் சென்னையிலேயே தன் படிப்பிற்கேற்ற பணியையும் தேடி கொண்டாள்   

அன்றைய நாளிதழை படித்து கொண்டிருந்தவர் “ச்சே இப்படியும் சில பசங்க இருக்காங்க கல்யாணம் பண்ண பிடிகலன்னா பொண்ணு பாக்க வரும் போதே சொல்லிற வேண்டியது தானே” என்று கோபத்துடன் நாளிதழை டேபிள் மேல் கிடாச

காபி கப்போடு வெளியே வந்தவள் “என்ன சித்தி என்னாச்சு!” 

 “நீயே படிச்சு பாரு! நல்லாதா ஒரு செய்தி கூட படிக்க முடியலை” என்று நாளிதழை எடுத்து மகளிடம் கொடுத்துவிட்டு தனக்கு உரித்தான கப்பை எடுத்து கொண்டு “மாப்பிள்ளை கல்யாணத்துக்கு அரைமணி நேரம் முன்னாடி லெட்டர் எழுதி வச்சுட்டு ஓடி போய்ட்டானம் பாவம் அந்த பொண்ணு அவமானம் தாங்க முடியாம விஷம் குடிச்சு இறந்து போய்ட்டா கொஞ்சம் கூட இரக்கம் இல்லாதவனா இருப்பான் போல, கல்யாணம் நின்னு போனா அந்த பொண்ணோட கதி என்னாகும்னு கொஞ்சம் கூட நினைச்சு பாக்கல பாவி” என்று மனம் தாங்காமல் குமுறியவர் வைதேகியின் முகம் பார்க்க வேதனையின் சாயல் அப்பட்டமாக தெரிந்தது 

தேவையில்லாமல் சங்கடத்தில் ஆழ்த்தி விட்டோமோ என்று மருகியவர் “சரிம்மா நா போய் சமையல் வேலைய பாக்குறேன் நியும் இன்னைக்கு வேலைக்கு கிளம்புற நேரத்துக்கு வேலைய முடிக்கணும்” என்று காலி டம்ளர்களை எடுத்து கொண்டு சமையலறை புகுந்து கொண்டார்

நாளிதழை எடுத்து பார்த்தவளுக்கு மனம் கவர்ந்தவனின் முகம் நினைவில் வந்து நிழலாட கண்கள் கலங்கியது, போதும் அழுதது எத்தனை முறை நினைத்து பார்த்தாலும் எழுவது என்னமோ வேதனையும் வலியும் தான் என்றவளின் எண்ணமிட்டவள் கடிகாரம் எழுப்பிய சத்தில் நினைவு கலைந்து இருந்த இடத்திலேயே செய்தித்தாளை மடித்து வைத்து விட்டு கணத்த மனதுடன் தன் அறைக்கு சென்று விட்டாள்

உறக்கம் கலைந்து எழுந்து வந்த ஜெகநாதன் “சவி சவி”  என்று அறையில் இருந்து கொண்டே குரல் கொடுக்க “இதோ வந்துட்டேன்” என்றவர் தாலிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு “என்னங்க என்ன வேணும்”

“என்னோட கண்ணாடிய பாத்தியா ராத்திரி தூங்கிறதுக்கு முன்னாடி டேபிள் மேல தான் வச்சேன் இப்போ அந்த இடத்துல இல்ல” என்று பரபரப்பும் பதட்டமும் நிறைந்த முகத்துடன் கூற

“நல்லா தேடி பாருங்க அங்க தான் இருக்கும் நீங்க வச்சது எங்க போயிருக்க போகுது அதுகென்ன காலா இருக்கு நடந்து காணமா போக” 

“நான் தான் இல்லன்னு சொல்றேன்ல எங்க இருக்குன்னு நீயே தேடி எடுத்து கொடு நா நியூஸ் படிக்கணும் நேத்து கடைசி ரெண்டு பக்கத்தை படிக்க தவறிட்டேன்” என்று பொறுப்பை மனைவியிடம் ஒப்படைத்து விட்டு செய்தி தாளை நாடி சென்றார் ஜெகநாதன் அரசு நிறுவனம் ஒன்றில் நிதி பிரிவில் மேலாளராக பணிபுரிகின்றார்

“வேலை நேரத்துல உங்களோட ஒரே ரோதனையா போச்சு” என்று புலம்பி கொண்டே கண்ணாடியை எடுத்து வந்து கணவரின் முன் நீட்ட 

“எங்க இருந்துச்சு!” 

 “ம்ம் நீங்க வச்சது ஒரு இடத்துல தேடுறது இன்னோரு இடத்துலன்னா எப்டி கிடைக்கும் ட்ராயர் உள்ள வச்சுட்டு மேல வச்சேன்னு சொல்றிங்க காலையிலேயே என்ன டென்ஷன் பண்றிங்க நீங்க” என்று எரிச்சலோடு மொழிய

“சரி விடு எனக்கு ஞாபக மறதி இருக்குனு உனக்கு தெரியாதா? நைட்டு டேபிள் மேல வச்சதா ஞாபகம்! அதான் சொன்னேன் சரி எனக்கு ஒரு காஃபி கொண்டுவாம்மா” என்றுவிட்டு செய்திதாளில் மூழ்கிவிட

“என்ன ஞாபக மறதியோ!” என்று சலித்து கொண்டே சமையலறைக்கு சென்று காபி கலந்து கணவனிடம் கொடுத்து விட்டு பணியை கவனிக்க தொடங்கினார்

குளித்து முடித்தவள் உடலுக்கு சௌகரியமான அதே நேரம் பள்ளியின் விதிமுறைகளுக்குள் அடங்கிய கண்ணை உறுத்தாத காட்டன் புடவையில் தன்னை புகுத்தி கொண்டு ஈர கூந்தலை துவட்டி கொண்டே அறையில் இருந்து வெளிப்பட்டவள் நடுக்கூடத்தில் அமர்ந்திருந்த ஜெகநாதனை கண்டதும் 

“குட்மார்னிங் சித்தப்பா” என்று புன்னகை மலர விளித்தபடியே அவர் அருகில் அமர்ந்து கொள்ள

 “குட் மார்னிங் டாம்மா இன்னைக்கு சீக்கிரம் எழுந்துட்ட போல இப்போ தான் உன்னோட முகமே பிரகாசமா இருக்கு எப்பவும் இப்டியே இரு” என்று ஆத்மார்த்தமாய் கூறியவர் தலை ஈரமாய் இருப்பதை கண்டு ” என்னம்மா தலைய துவட்டாம வந்து உக்காந்துட்ட!, வெளிய நின்னு காய வச்சுட்டு வா இல்லன்னா சளி பிடிச்சுக்கும், இன்னிக்கு தானே வேலையில ஜாயின் பண்ண போற” 

 “ஆமா சித்தப்பா “

“அப்டின்னா நானே உன்ன ட்ராப் பண்ணிடுறேன் அந்த பக்கமா தானே நானும் போறேன்” 

Advertisement