Advertisement

மின்னல் – 5

        வானதி அவ்வப்போது ஜீவாவை நிமிர்ந்து பார்க்க அவள் இன்னும் அமர்ந்தவாக்கிலேயே தான் இருந்தாள்.

அவளின் முகமே சொல்லியது எதையோ நினைத்து கலங்கி போய் இருக்கிறாள் என்று.

மெல்ல திரும்பி சோலையம்மாவை பார்க்க அவர் எப்போதோ ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்றுவிட்டிருந்தார்.

மீண்டும் பத்து நிமிடம் பொருத்து பார்க்க அப்போதும் உறக்கமற்ற விழிகளுடன் அவள் அமர்ந்திருக்க இன்னுமே ஆச்சர்யம் வானதிக்கு.

வினோதினி ஜீவன்யாவிற்கு கொடுத்து சென்றது வலிக்கும், உறக்கத்திற்குமான மாத்திரை.

அப்படி இருக்க இந்த நேரம் நிச்சயம் தன்னை மறந்த தூக்கத்திற்கு சென்றிருக்க வேண்டும் அவள்.

“ஜீவா…” என மெல்லிய குரலில் வானதி அழைக்க அவள் பக்கம் திரும்பினாள்.

“தூங்கலையா நீ?…” என எழுந்து அவள் பக்கம் வந்து நின்றாள்.

“நீ தூங்கலையா? போய் படு. காலையில ட்யூட்டிக்கு போகனும்…” ஜீவா வானதியை உறங்க சொல்ல,

“அதை நான் பார்த்துக்கறேன். யாருக்கும் சொல்லாம எங்க போன நீ?…” என வானதி கேட்க அமைதியாக இருந்தாள்.

சற்று முன் பாலாவிடம் பொய்யுரைத்தது போல வானதியிடம் சொல்லிவிட முடியாதே.

“கேட்கிறேன்ல ஜீவா. ஏன் இப்படி இருக்க? எனக்கு திக்குன்னு இருக்கு. அதுவும் உன்னை அந்த கோலத்துல ஸாரோட பார்த்துட்டு…”

“அதெல்லாம் ஒன்னும் இல்லை. தூக்கம் வரலைன்னு சும்மா ஒரு வாக் போனேன்…”

“யார் நீயா? அதுவும் தென்றலை தனியா விட்டுட்டு வாக்கிங். இதை நான் நம்பனுமா?…”

“வானதி ப்ளீஸ்…”

“நீ சொல்றத நான் நம்பமாட்டேன்னு உனக்கு நல்லாவே தெரியும். இங்க நம்ம கேம்பஸ்க்குள்ள நடக்க இடமா இல்லை? நீ வெளில போக? அதுவும் மெடிக்கலுக்கு போனேன்னு ஸார்க்கிட்ட சொல்லிருக்க…”

“ஆமா, ஒரு வேலை இருந்தது. அதான் போய்ட்டு மெடிக்கல் ஷாப் போய்ட்டு வரேன்…” இன்னும் ஜீவா அதையே சொல்ல,

“என்ன நினைக்கிற ஜீவா? எனக்கு உன் முகம் பயமா இருக்கு. ஸ்லீப்பிங் டேப்லெட், பெயின்கில்லர் ரெண்டும் போட்டும் நீ இப்படி இருக்க…”

“தூக்கம் வரலை வானதி. நான் சொல்றேன்ல. நீ தூங்கு. அம்மா முழிச்சிடாம…”

“முழிச்சா அவங்க இன்னும் அதிகமா கேள்வி கேட்பாங்க. சரி அதை விடு. நாளைக்கு நீ எங்க போனன்னு மேனேஜ்மென்ட்ல கேட்பாங்க. என்ன சொல்லுவ?…” என்றதும் அந்த ஞாபகம் இருந்தாலும் ஒன்றும் பதிலில்லை ஜீவாவிடம்.

“தூக்கம் வரலன்னு சொன்ன தானே? நாளைக்கு அவங்ககிட்ட என்ன பொய் சொல்லனும்னு யோசிச்சு வச்சுக்கோ. என்னையே உன்னால கன்வின்ஸ் பண்ண முடியலை. அவங்கக்கிட்ட என்ன பேச போறியோ?…”  

“நான் பார்த்துக்கறேன் வானதி…” ஜீவா திடமாக சொல்ல,

“மண்ணாங்கட்டி. இங்க விசுவாசமா இருக்கற வரைக்கும் தான் நமக்கு மரியாதையும், இந்த சலுகைகளும், பாதுகாப்பும். உனக்கு ஏன் புரியலை?…”

“இங்க வானம் குழுமத்துக்கு என்னால எந்த பாதிப்பும் இல்லையே? நான் எதுவும் செய்யலை. என்னோட பர்சனல் ரீசனுக்காக தான் நான் வெளில போனேன். இதுல என்ன தப்பு?…”

“எந்த தப்பும் இல்லை. ஆனா வெளில போன நேரமும், விதமும், யார்க்கிட்டயும் சொல்லாம போனதும் தான் தப்பு…”

வானதிக்கு மறுநாள் என்ன நடக்குமோ என்று அச்சமாக இருந்தது. அதை போல எந்த பயமும் இல்லை ஜீவாவிடம்.

இங்கிருந்து செல்லவேண்டிய சூழ்நிலை வந்தால் எங்கே செல்வதென்ற யோசனைக்கு தாவிவிட்டாள் அவள்.

அதையும் தாண்டி இங்கிருந்தால் நிச்சயம் ஏதேனும் ஒரு சூழ்நிலை இருப்பிடம் கொடுத்தவர்களின் நம்பிக்கைக்கு துரோகமிழைப்பதை போன்றொரு நிலைக்கு தன்னை தள்ளிவிடும் என்ற எண்ணம் மனதை அரித்துக்கொண்டே இருந்தது.

வானதி இன்னும் நின்றுகொண்டே இருக்க ஜீவா அவளை போகுமாறு தலையசைத்தாள்.

“என்னன்னு சொல்லு ஜீவா, கிருஷ்ணா ஸார் கூட சொல்லிட்டு போனார்…”

“என்னன்னு?…”

“நீங்க ப்ரெண்ட்ஸ் தானே? பக்கத்துல இருந்துட்டு என்னனு கேட்கமாட்டீங்களான்னு…” என சொல்லவும் முகம் கடுத்தது.

“அவர் சொன்னா உடனே நீ பேசுவியா? வானதி ப்ளீஸ். என்னை கொஞ்சம் யோசிக்கவிடு. இப்ப போய் நீ தூங்கு…” என கெஞ்ச,

“என்னவோ செய். ஆனா என்கிட்டே சொல்லு. உனக்கு நானும் அம்மாவும் இருக்கோம். அதை மறந்திடாத…” என்றவள்,

“என்னவோ இருக்கு, அதை வெளில சொல்லமாட்டேன்ற. இப்படி மனசுக்குள்ளயே வச்சிட்டு இருக்காத ஜீவா. ப்ளீஸ். எதுவா இருந்தாலும் நம்பி ஷேர் பண்ணு…” என்று சொல்லிவிட்டு படுத்துவிட்டாள்.

“வானதி…” என ஜீவா அழைக்க,

“சொல்லு, என்ன?…” என்று எழுந்தமர்ந்தாள்.

“குடிக்க தண்ணி வேணும். தென்றல் கையை பிடிச்சிருக்கா. எழுந்துக்க முடியலை…”

“இல்லைன்னாலும் நீ எழுந்துக்க முடியாதுன்றது தான் உண்மை. இடுப்புல நல்லா அடிச்சிருக்கு. குறைஞ்சது ஒரு வாரம் ரெஸ்ட்ல இருக்கனும் நீ…” என்றபடி தண்ணீரை கொண்டு வந்து கொடுத்தவள் இன்னொரு பாட்டிலை நிரப்பி அவளருகே வைத்துவிட்டாள்.

“நாளைக்கு தென்றல் ஸ்கூலுக்கு போறாளா?…”  

“ஹ்ம்ம் அனுப்பனும்…”

“அதுவும் நல்லது தான். இல்லைன்னா உன்னை பார்த்துட்டு அழுதுட்டே தான் இருப்பா…” என்று சொல்லி மீண்டும் படுத்துவிட்டாள்.

காலை ஐந்துமணி போல அலாரம் சத்தத்தில் வானதி எழுந்துவிட அமர்ந்தவாக்கிலேயே தான் உறங்கியிருந்தாள் ஜீவா.

‘இவளை திருத்தவே முடியாது’ என்று நினைத்தபடி எழுந்துகொண்டவள் தனது படுக்கையை மடித்து எடுத்து வைக்க சோலையம்மாவும் எழுந்துவிட்டார்.

“என்னடி இப்பயே தூங்குது இந்த பொண்ணு?…” என மகளிடம் கேட்க,

“ம்மா, அவ இப்பத்தான் அசந்துருக்கா. நீ போய் வேலையை பாரு. இங்கைக்கும் சேர்த்தே சமையலை செஞ்சிடு…”

“நா வேணா லீவு போட்டு பாத்துக்கவா?…”

“அதெல்லாம் வேண்டாம். நீ இருந்தா தொணதொணன்னு போட்டு நச்சரிப்ப. அவ சும்மாவே வாயை திறக்கமாட்டா. உன்னோட இம்சையா போச்சுன்னு எங்கியாச்சும் கிளம்பிருவா…”

வானதி சோலையம்மாவை கிளப்பி விட்டுவிட்டு ஜீவாவை லேசாய் தோளசைத்து எழுப்பினாள்.

“ம்மா…” என பதறியவள் திடுக்கிட்டு விழித்ததில் உண்மைக்கும் பதறியது வானதி தான்.

“ஜீவா நான் தான், நான் தான் ரிலாக்ஸ்…” என்று சொல்லவும் தான் நிம்மதியானது ஜீவாவுக்கு.

லேசாய் கண்ணில் நீர் படர்ந்து உடல் நடுக்கத்துடன் நிமிர்ந்து பார்க்க உருகிவிட்டது வானதிக்கு.

“வீட்டுக்குள்ள தானே இருக்க? அதுவும் நம்ம கேம்பஸ்க்குள்ள யாராலையும் வந்திட முடியாது. நீ இவ்வளவு பயப்பட அவசியமே இல்லை ஜீவா…” என்று தலையை தடவினாள்.

“நான் போய் கிளம்பறேன். அப்போ தான் ஏழு மணிக்கு ரிசப்ஷன்ல இருக்க முடியும்…”

“டைம் ஆகிடுச்சா?…” என ஜன்னலின் திரையை விளக்க,

“வழக்கம் போல தான். அஞ்சு மணி ஆகிடுச்சு. அம்மாவுக்கு ஹெல்ப் பண்ணிட்டு குளிச்சு கிளம்பனும்ல…”

“ஹ்ம்ம் ஓகே வானதி…”

“தென்றல் தூங்கட்டும். நானே ஆறு மணிக்கு வந்து எழுப்பறேன். நீ முதல்ல நல்லா படுத்து தூங்கு. அம்மாவே சமையலை செஞ்சிருவாங்க. நீ வொர்ரி பண்ணிக்க வேண்டாம்…”

“ஹ்ம்ம், ஓகே…” என்று மெதுவாய் இன்னும் சரிந்து படுக்க,

“வினோதினி உன்னை வந்து பார்த்திட்டு தான் போவாங்க. ஒழுங்கா சாப்பிட்டு மாத்திரையை போடு. நீ நல்லா இருந்தா தான் தென்றலை பார்த்துக்க முடியும். புரியுது தானே?…” என்றதும் ஆமோதிப்பாய் தலையசைத்தாள்.

“வேற யாரும் உன்னை பார்க்க வந்தா எனக்கு கால் பண்ணு…”

“அங்க ஹாஸ்பிட்டல்ல கேட்டாங்கன்னா?…”

“கேட்டா நான் சொல்லிடறேன். ஆனா இந்த நேரம் விஷயம் போயிருக்கும். பார்ப்போம்…” என்று அவளுக்கு சொல்லிவிட்டு கிளம்பிவிட்டாள் வானதி.

மீண்டும் வந்து தென்றலை எழுப்பி பள்ளிக்கு கிளம்ப வைக்க தென்றல் மனமே இல்லாமல் கிளம்பி சென்றாள்.

ஜீவாவுக்கான உணவுகள் எல்லாம் சோலையம்மாள் கொண்டுவந்து வைத்துவிட்டு கிளம்ப வினோதினி வந்துவிட்டாள்.

“நைட் தூங்கவே இல்லையோ? கண்ணெல்லாம் இவ்வளவு சிவந்து இருக்கு?…” என பார்த்துவிட்டு மாத்திரைகளை எடுத்து தந்தவள்,

“குளிக்க வேண்டாம். நிறைய இடத்துல சிராய்ப்பு இருக்கு. வேணும்னா டவல்பாத் எடுத்துக்கோ. நானே ஈவ்னிங் வந்து ஹெல்ப் பன்றேன் ஜீவா…” என சொல்ல,

“நான் பார்த்துக்கறேன் சிஸ்டர்…” என்றாள் ஜீவன்யா.

“ஹ்ம்ம், ஓகே டேக்கேர். எதுவானாலும் எனக்கு கூப்பிடு…” என்று அவரும் கிளம்பிவிட கதவை சாற்றிவிட்டு வானதியும் சென்றிருந்தாள்.

மணி ஒன்பது தான் ஆகியிருந்தது. ஒருமணி நேரம் போல நன்றாக தூங்கி எழுந்தவள் சோலையம்மாள் வைத்து சென்றிருந்த உணவை எடுத்து கொஞ்சம் சாப்பிட்டு மீண்டும் படுக்க வாசலில் கதவை தட்டும் சத்தம்.

“யாரு?…” என்றாள் அமர்ந்தவாக்கில்.

திரையை விலக்கி ஜன்னல் வழியே எட்டி பார்க்க ஒருவரும் நிற்பதை போல தெரியவில்லை.

“நான் தான்…” என கதவை திறந்துகொண்டு வந்தான் பாலா.

Advertisement