Advertisement

“வருவேன்டா, உன்னை விட்டு எங்க போக போறேன். தென்றல் பயப்படாம இருக்கனும். நான் சொன்னா கேட்கனும். ஹ்ம்ம்…”

“சரி…”

“ஓகே, நீ டிவி பார்த்திட்டு இரு. வந்திடறேன்…” என சொல்லி போனை வைத்துவிட்டாள்.

“ஆட்டோவுக்கு சொல்லவா ஜீவா?…” பால கேட்க,

“வேண்டாம், பக்கம் தானே போய்டலாம்…” என்று கையை ஊன்றி எழுந்துகொள்ள பார்க்க காயம் பட்ட உள்ளங்கை எரிந்தது மண்துகள்கள் ஒட்டியதும்.

“ஸ்ஸ்ஸ் ம்மா…” என்று கையை உதறினாள்.

“என்ன பிடிவாதம் உனக்கு? என் கையை பிடிச்சுக்கோ…” என்று அவன் கை நீட்ட,

“ப்ளீஸ் ஸார். எனக்கு உங்களை சுத்தமா பிடிக்கலை. உங்க கூட பேச பிடிக்கலை…” என்றால் முகம் சுளித்து.

“எதே, பிடிக்கலையா? இப்ப நான் ஒபீனியன் கேட்டேனா?…” பாலாவின் வழக்கமான துடுக்குத்தனம் தலைதூக்கியது.

“நீங்க எனக்கு இந்த சமயத்துல பெரிய ஹெல்ப் பண்ணிருக்கீங்க. அதுவரைக்கும் போதும். இதெல்லாம் வேண்டாம். நானே போய்ப்பேன்…” என்றவள் மனதை பலப்படுத்தி அந்த பலத்தை திரட்டி உடலுக்கு வலு சேர்த்தவள் முயன்று எழுந்துவிட்டாள்.

நிற்கமுடியவில்லை. வலி உயிரை வதைத்தது. ஆனாலும் முகத்தை கடினமாக்கி மெல்ல எட்டெடுத்து வைக்க ஆரம்பித்தாள்.

“உன்னால முடியலை ஜீவா…”

பாலா இத்தனை இறங்கி யாரிடமும் பேசியதில்லை. ஆனால் அந்த நேரத்தில் அவளை அந்த கோலத்தில் பார்க்க முடியவில்லை.

பெரும் ஆபத்தில் இருந்து சற்று முன் காப்பாற்றிவிட்டு இப்படியே அவளை தனியே விட்டு செல்லவும் முடியவில்லை.

“என்னால முடியும். நீங்க போறதுனா போங்க. இதோ வந்தாச்சு. நான் போய்ப்பேன்…” என்றாள் திடமாய்.

அவன் செல்லமாட்டான் என்னும் தைரியமா அல்லது வானம் குடியிருப்பு பகுதியை நெருங்கிவிட்ட நிம்மதியா என்று பிரித்தறியமுடியாத ஒரு பாவனை.

கேட் தெரிந்தது. தூரத்தில் கேட்டை ஒட்டி ஒளிர்ந்த விளக்குகள் மங்கலாக தெரிய கண்ணை கசக்கி தலையை உதறிக்கொண்டு பார்த்தவளின் கருவிழிகள் மேலே சொருகியது.

அதற்கு மேல் நிற்க இயலாது தொய்ந்து பின்னால் சரிந்தவளை சுதாரித்து தாங்கிக்கொண்டவனுக்கு கோபம் மூண்டது.

இப்படி என்ன பிடிவாதம் என்று கைகளில் தூக்கிக்கொண்டவன் இரண்டே நிமிடத்தில் வளாகத்தினுள் நுழைந்துவிட்டான்.

இன்னும் அங்கிருந்து மருத்துவமனை செல்ல நேரமாகும் என்பதால் நேராக அவளின் குடியிருப்பிற்கே சென்று தன் மேல் அவளை சாய்த்தபடி நிறுத்தி கதவை தட்டினான்.

“ஜீவாக்கா…” என்று உள்ளிருந்து தென்றல் குரல் கேட்க,

“தென்றல் கதவை திறம்மா, உன்னோட அக்கா மயங்கிட்டாங்க…” பாலாவின் குரலில் உள்ளிருந்தவள் மூச்சு காட்டவில்லை.

“தென்றல்…” மீண்டும் பாலா கதவை தட்ட,

“இல்லை, நீங்க யாரோ. அக்கா எங்க?…” தென்றல் கதவை திறக்கவே இல்லை.

தோளில் ஜீவாவை வைத்துக்கொண்டு அவனால் நகரவும் முடியவில்லை. உடன் வந்த செக்யூரிட்டி ஒருவரை விட்டு பேச சொல்ல,

“பாப்பா நம்ம வக்கீல் அய்யா தான். அக்கா மயங்கி விழுந்திருக்கு. அதான் தூக்கிட்டு வந்திருக்காரு…” என சொல்ல,

“பொய் சொல்லாதீங்க. யார் நீங்க? அக்கா எங்க?…” என்றாள் அழுதுகொண்டே.

“அண்ணே இங்க வானதி வீடு எது?…” பாலா செக்யூரிட்டியிடம் கேட்க,

“இதோ இந்த வீடு தான். ஒட்டுனாக்குல தான் இருக்கு…” எனவும்,

“அவங்களை கூப்பிடுங்க. ரொம்ப நேரம் இப்படியே நிக்க முடியாது. அப்படியே பக்கத்துல நர்ஸ் யாராவது இருந்தா கூப்பிடுங்க. பர்ஸ்ட் எய்ட் பண்ணனும்…” என்றான்.

அவரும் வானதியின் வீட்டு கதவை தட்ட அவர்கள் வீட்டில் விளக்கெரிவது தெரியவும் அங்கிருக்கும் நர்ஸ் ஒருவரின் வீட்டை தட்ட சென்றார்.

“யாரு…” என வானதியும் சொலையம்மாவும் எட்டி பார்க்க பாலா ஜீவாவுடன் நிற்பது தெரிந்தது.

“ஸார் நீங்க என்ன? ஜீவாவுக்கு என்னாச்சு?…” வானதி பதறிக்கொண்டு வர,

“முதல்ல இந்த பொண்ணை கதவை திறக்க சொல்லுங்க வானதி…” என்றான் கோபமாய்.

“தென்றல், கதவை திற. ஜீவாவை உள்ள கூட்டிட்டு வரனும்…” என்ற வானதியின் குரலில் கதவு தாழ் நீங்கும் சத்தம் கேட்டது.

“ஜீவாக்கா…” என்று வந்தவளை சட்டை செய்யாமல் மீண்டும் ஜீவாவை தூக்கிக்கொண்டு உள்ளே நுழைந்தவன் அங்கிருந்த ஒற்றை கட்டிலில் கிடத்தினான்.

“என்ன பொண்ணு நீ?…” என கோபமாய் தென்றலை கத்தியவனை கண்டுகொள்ளாமல் தென்றல் ஜீவாவை பார்த்து அழ பாவமாகிவிட்டது அவனுக்கு.

பயத்தில் வியர்த்து போயிருக்க தன்னிடம் ஒன்றும் கேட்காமல் ஜீவாவை எழுப்புவதில் இருந்தாள் தென்றல்.

“என்ன ஸார், என்னாச்சு? எப்படி அடிபட்டிருக்கு?…” வானதி கேட்கும் பொழுதே நர்ஸ் ஒருவரை அழைத்துகொண்டு வந்துவிட்டார் செக்யூரிட்டி.

வந்ததோ நர்ஸ் வினோதினி. முதலுதவி பெட்டியுடன் வேகமாய் வந்தவர் ஜீவாவை பார்த்துவிட்டு,

“வெந்நீர் கொண்டுவா வானதி…” என சொல்லவும் சோலையம்மாள் அடுப்பை  பற்றவைத்து வெந்நீருக்கு வைத்தார்.

“எங்க போய் விழுந்தா? இத்தனை சிராய்ச்சிருக்கு?…” என ஜீவாவை பார்த்துக்கொண்டே வினோதினி கேட்டாள்.

“இந்த நேரம் தனியா கிளம்பிருக்காங்க. உங்கட்ட சொல்லிட்டு போகலையா?…” பாலாவின் குரலில் ஜீவாவை ஆராய்ந்துகொண்டிருந்த வினோதினி அவனை பார்த்ததும் எழுந்துவிட்டாள்.

“ஸார் நீங்க?…”

“நீங்க ஜீவாவை பாருங்க முதல்ல. உள்ளங்கைல எல்லாம் அடி பட்டிருக்கு…” என்றதும் ஆச்சர்யமாக அவனை பார்த்த வினோ,

“கொஞ்சம் வெளில இருங்க ஸார்…” என்றாள்.

தலையசைத்து பாலா வெளியே வர பின்னால் வானதியும் வந்துவிட்டாள் அவனிடம் கேட்பதற்கு.

“இந்த நேரம் அவ வெளில போனது நிஜமா எனக்கு தெரியாது ஸார்…” என்றவளுக்கு எப்படி இத்தனைபேரை மீறி சென்றிருப்பாள் என்று யோசனையானது.

நிச்சயம் செக்யூரிட்டிக்கு இருப்பவர்கள் அவளை தனியே செல்ல அனுமதித்திருக்க முடியாது. எப்படி சென்றாள் இவள் என குழப்பத்துடன் பாலாவை பார்த்தாள்.

“எமர்ஜன்சின்னு வந்திருக்காங்க. வர வழில கீழே விழுந்துட்டாங்க. நான் எதேர்ச்சையா பார்த்து கூட்டிட்டு வந்தேன்…” என்றான் முழுவதும் சொல்லாமல்.

“தேங்க் யூ ஸார்…” வானதி சொல்ல,

“கொஞ்சம் கவனிங்க. பக்கத்துல தானே இருக்கீங்க. இத்தனை வருஷம் பழகறீங்க. இதை எல்லாம் ஷேர் பண்ணிக்க முடியாதா?…” பாலா பொதுவாக கேட்க,

“இல்லை ஸார். இப்படி ஆகும்னு எனக்கு தெரியாது. அதுவும் இதுவரைக்கும் அவ இந்த கேம்பஸ் விட்டு வெளில தனியா போனதே இல்லை. அதைவிட அதிகம் அவ எங்கயும் போனதுமில்லை. இத்தனை வருஷத்துல மூணு நாலு  தடவை எங்களோட வெளிய வந்திருப்பா அவ்வளோ தான்…”

வானதி சொல்ல சொல்ல பாலா அதனை கேட்டுக்கொண்டு அமைதியாகவே நின்றான்.

“ஸார் ஜீவா கண்ணு முழிச்சுட்டா…” வினோதினி வந்து சொல்லவும் வேகமாய் உள்ளே சென்று அவளை பார்த்தான் பாலா.

அவனின் இந்த வேகத்தில் இருவரின் புருவங்களும் உயர்ந்தது. ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு உள்ளே வந்தனர்.

“இப்போ பரவாயில்லையா?…” பாலா கேட்டுக்கொண்டு நின்றான்.

ஜீவா தலையை மட்டுமே அசைக்க தென்றல் அவனையும் ஜீவாவையும் மாறி மாறி பார்த்தாள்.

அழுது விழிகள் இரண்டு சிவந்து போய் இருந்தது. உடலில் நடுக்கம் தெரிய இன்னுமே தேம்பிக்கொண்டு இருந்தாள் தென்றல்.

“ப்ச், தென்றல் அழுகையை நிப்பாட்டு. அதான் உன்னோட அக்கா எழுந்து உட்கார்ந்துட்டாளே. இன்னும் எதுக்கு உனக்கு இந்த பயம்?…” தென்றலை பார்த்து கேட்டான்.

“தேங்க்ஸ் சொல்லு தென்றல். ஸார் தானே ஜீவாவுக்கு ஹெல்ப் பண்ணினாரு…” என வானதி தென்றலிடம் சொல்ல,

“தேங்க்ஸ்…” என்றாள் சின்ன குரலில்.

“இட்ஸ் ஓகே…” என கை அமர்த்தி அதனை ஏற்றவன் ஜீவாவை பார்த்தான்.

பின்னங்கழுத்தில் காயம் இருந்திருக்கும் போலும். அங்கேயும் பேண்டேஜ் போடப்பட்டிருக்க கை, கால்விரல்கள் என்று காயத்திற்கு மருந்து கட்டப்பட்டு இருந்தது.

“பெயின் கில்லர் குடுத்தீங்களா?…” என்றான் அவன் வினோதினியிடம்.

“குடுத்துட்டேன் ஸார்…” வினோதினி பணிவுடன் சொல்ல வானதியும், சோலையம்மாவும் ஓரமாய் நின்றார்கள்.

“டேப்லெட் போட்டியா?…” தன் வீட்டினுள் சட்டமாய் நின்று கேட்டவனை முறைத்து பார்த்த ஜீவா,

“உங்க ஹெல்ப்க்கு தேங்க்ஸ். நீங்க உங்க டைமை வேஸ்ட் பண்ணாதீங்க ஸார். கிளம்புங்க…” என்றாள் நேரடியாக அத்தனைபேரையும் வைத்துக்கொண்டு.

“ஜீவா…” வானதி அதட்ட,

“நான் பேசிக்கறேன்…” என்றவன் ஜீவாவின் அருகே சென்றான்.

“நான் என்ன உன்னை பொண்ணா பார்க்க வந்திருக்கேன். இந்த துரத்து துரத்துற?…” என மெல்லிய குரலில் அவளுக்கு மட்டும் கேட்கும் விதமாய் அவன் பேச ஜீவாவின் முகம் கோபத்தில் சிவந்தது.

“பேசு, இப்போ பேசு…” என்றான் நமுட்டு சிரிப்புடன் அவளிடத்தில்.

“வானதி, ஸாருக்கும், ஜீவாவுக்கும் நடுவுல ஏதோ சம்திங் இருக்குமோ?…” வினோதினி குரலில் கேலியுணர்வு.

“அக்கா சும்மா இருங்க நீங்க வேற…” வானதி அவளை அடக்கி வைத்து அவர்களை பீதியுடன் பார்த்தாள்.

“என்ன பன்றீங்க? தென்றல் பார்க்கிறா…” ஜீவாவும் அவளறியாமல் பாலாவை போல பேச அவனுக்கு அப்படி ஒரு சிரிப்பு.

“மத்தவங்க பார்த்தா ஒன்னுமில்லையா?…” என்று இன்னுமே அவளை சீண்டினான்.

அன்று ஏன்தான் அவனை பார்த்தோமோ என்று ஜீவா அவஸ்தையுடன் அவனையும் தென்றலையும் பார்க்க தென்றலின் முகமே அவளின் அதிர்ச்சியை கட்டியது.

“கிளம்புங்க ப்ளீஸ்…” பல்லை கடித்துக்கொண்டு ஜீவா சொல்லவும்,

“ஹ்ம்ம்…” என பின்னே நகர்ந்தான்.

“டேக் கேர். இனிமே வெளில இந்த நேரம் போக கூடாது. புரியுதா?…” என்று அதட்டலாக மிரட்டி சொல்ல அவனை பார்வையால் பஸ்பமாக்கிக்கொண்டு இருந்தாள் ஜீவா.

“பார்த்துக்கோங்கம்மா, பக்கத்துலையே இருக்கீங்க. கவனம்…” சோலையம்மாவிடம் சொல்ல அவர் கனவிலிருந்து விழிப்பதை போல தலையை உலுக்கினார்.

“என்னங்க தம்பி?…” என மீண்டுமாய் கேட்டார்.

“பக்கத்துல இருக்கீங்க, கவனிச்சுக்கோங்கன்னு சொன்னேன்…” அழுத்தமாய் மீண்டும் சொல்ல,

“சரிங்க தம்பி…” என்றார் ஒதுங்கி நின்று.

“வேற ஏதாவது உதவி தேவைன்னா கேளுங்க…” என பொதுவாய் சொல்லியவன்,

“ஜீவா நாளைக்கு மார்னிங் மறக்காம போய் ஒரு டிடி இன்ஜெக்ஷன் போட்டுக்கோ…” என வேறு அக்கறையுடன் சொல்ல ஜீவாவின் தொண்டைக்குள் முள் சிக்கிய உணர்வு.

‘இவன் ஏன் இன்னைக்கு இந்த பாடு படுத்தறான்?’ என அவனை பார்த்தாள் இயலாமையுடன்.

“பை, டேக் கேர்…” என்றுவிட்டு கிளம்பிவிட்டான். அவன் சென்றுவிட்டதை உறுதிசெய்துகொண்ட சோலையம்மாள்,

“வானு என்னடி அதிசயமா இருக்கு?…” என்று தாடையில் கை வைத்து ஆச்சர்யபாவத்துடன் கேட்க ஜீவாவிற்கு நிமிர முடியவில்லை.

“ம்மா, நீ கொஞ்சம் சும்மா இரேன்…” என்று தாயை அதட்டிய வானதி,

“போய் பாய் தலைகாணியை கொண்டா. இங்க தூங்குவோம்…” என தாயை அனுப்பிவைத்தாள்.

“சரி நானும் போறேன். பை ஜீவா காலையில பார்க்கறேன்…” என வினோதினியும் சிரித்துக்கொண்டே விடைபெற்று செல்ல வானதிக்கு எங்காவது முட்டிக்கொள்ளலாம் போல இருந்தது.

மறுநாள் நிச்சயம் இந்த விஷயம் அத்தனைபேரின் காதையும் எட்டும். தான் எதுவும் வெளியில் சொல்லாதே என்றால் தான் இன்னும் என்னவோ என்று நினைப்பார்கள் என வானதி அமைதியாக இருந்துகொண்டாள்.

போதாததிற்கு ஜீவா இந்த நேரத்தில் வெளியே சென்று வந்ததற்கு மேனேஜமேன்டில் நிச்சயம் விளக்கம் தரவேண்டி இருக்கும். அதுவேறு கவலையை அளித்தது.

“தென்றல் நீ படுத்துக்கோ…” என சொல்ல அவளும் அங்கேயே சரிந்து படுத்துக்கொண்டாள்.

வானதி ஜீவாவிடம் எதுவும் கேட்கவில்லை. பேசவும் இல்லை. சோலையம்மாள் வரவும் அங்கேயே பாயை விரிக்க,

“படு ஜீவா. மாத்தர தின்னுட்ட தான?…” சோலையம்மா கேட்க,

“ம்மா நீ கதவை பூட்டினியா?…” என்றாள் வானதி.

அதெல்லாம் பூட்டிட்டு தான் வந்தேன். இந்தா உன் போனு…” என இடுப்பில் சொருகி இருந்த வானதியின் போனை எடுத்து கொடுத்துவிட்டு படுத்துவிட்டார்.

“ஜீவா இப்ப எதையும் யோசிக்காத. தூங்கு. காலையில பேசலாம்…” என வானதி சொல்லவும் ஜீவாவிடம் பதிலில்லை.

மனதிற்குள்  பாலாவை வைத்து திட்டி தீர்த்துகொண்டு இருந்தாள். அந்த இக்கெட்டான நேரத்தில் அவன் வரவில்லை என்றால் தன்னிலை என்னவாகியிருக்கும் என நினைக்காமல் இருக்கமுடியவில்லை.

தென்றலை பார்த்தாள். தனது ஒரு கையை இறுக்கமாக பிடித்துக்கொண்டு உறங்கும் அச்சிறுபெண்ணின் முகத்தில் உறக்கத்திலும் அச்சம்.

மெல்ல கையை விட்டுவிட்டு அவளின் தலையை கோதியவள் கண்களை மூடிக்கொண்டாள்.

இந்த இடத்தை விட வேறு பாதுகாப்பில்லை. ஆனால் இங்கே இருக்க முடியாதோ என்னும் எண்ணம் அவளை வருத்தியது.  

Advertisement