Advertisement

மின்னல் – 4

            பாலாவின் கேள்விகள் எதற்கும் பதில் சொல்லும் நிலைமையில் இல்லை ஜீவா. அவ்விடம் விட்டு சென்றால் போதும் என்னும் படபடப்பில் அவனிடமிருந்து கைகளை உருவினாள்.

“கேட்டா பதில் சொல்லமாட்டியா? ஜீவா நில்லு…” என சொல்லும் பொழுதே யாரோ நடந்து வரும் சத்தமும் உடனே திரும்பி போகும் காலடி சத்தமும் பாலாவை உசுப்பியது.

ஜீவாவை இன்னொரு கையால் பிடித்துக்கொண்டே அவன் அந்த வளைவை போய் பார்த்தான்.

யாரோ இரண்டுபேர் அங்கிருந்து ஓடுவது தெரிந்தது. ஜீவா இல்லையென்றால் கூட தேடி சென்று நிச்சயம் பிடித்திருப்பான்.

ஆனால் அவளையும் வைத்துக்கொண்டு இந்த ராத்திரி நேரத்தில் செல்வது உசிதமில்லை என விட்டுவிட்டு ஜீவாவை பார்த்தான்.

“எங்க வந்த நீ? உன்னோட அவுட்டோஸ் விட்டு நீ இவ்வளோ தூரம் எதுக்கு வந்த? அதுவும் இந்த நேரத்தில் தனியா?…” என படபடவென்று இவன் பொரிய ஜீவாவின் பார்வை தன்னை துரத்தியவர்கள் சென்றுவிட்டனரா என்பதில் தான் இருந்தது.

“இங்க இங்க என்னை பாரு…” என அவள் முன் சொடுக்கிட்டு அழைக்க,

“கையை விடுங்க முதல்ல…” என்றாள்.

“அவனுங்க யாரு? உன்னை ஏன் துரத்தறாங்க?…”

“எனக்கு தெரியாது…”

“நான் முதல்ல கேட்ட கேள்விக்கு பதில் வரலையே…”

“மெடிக்கலுக்கு வந்தேன். அவசர வேலை…”

“கேம்பஸ்க்குள்ள அடுத்த பில்டிங்கல நம்ம ஹாஸ்பிட்டல் இருக்கும் போது நீ மெடிக்கல் ஷாப்க்கு வரவேண்டிய அவசியம் என்ன?…”

“எல்லாத்துக்கும் கேள்வி கேட்பீங்களா? எனக்கு வெளில வரனும்னு தோணுச்சு. வானதி கூட வந்தேன்…”

“வானதியும் உன்னோட தானே அவுட்டோஸ்ல இருக்காங்க. சரி அவங்க இப்ப  எங்க?…” என்றதும் திடுக்கிட்டாள் ஜீவா.

“நீங்க லாயர்னா கேள்வி கேட்டுட்டே இருப்பீங்களா? விடுங்கன்னு சொல்றேன்ல…”

“ம்ஹூம், என்னவோ தப்பா இருக்கு…”

பாலா இன்னும் விடாமல் பேச சட்டென கையை உதறியவள் தனது ஹேண்ட்பேக்கில் இருந்து ஒரு பேப்பர் சுற்றிய பார்சலை பிடித்து காண்பித்து,

“இதுக்குத்தான் வந்தேன். போதுமா? உள்ள இருக்கிற மெடிக்கல்ல இது இல்லை. அவசரம். அதான் வாங்க வந்தேன்…” என்று காண்பித்து சொல்லவும் முகம் மாறியவன் தலையை கோதிக்கொண்டான்.

“பக்கத்துல இருந்த மெடிக்கல் ஷாப் பூட்டிருந்துச்சு. அடுத்தடுத்து தேடி இவ்வளோ தூரம் வந்துட்டேன்…” என முறைத்து சொல்ல,

“ஹ்ம்ம்…” என்றான்.

ஆனாலும் இன்னும் என்னவோ நெருடியது. அவளின் அந்த முகம், அதில் தெரிந்த கலவரம் சந்தேகத்துடன் ஜீவாவை பார்க்க,

“வர வழியில இவனுங்க வேற பார்த்துட்டு வம்பிழுக்க பார்த்தாங்க. நான் திட்டவும் துரத்த ஆரம்பிச்சுட்டாங்க. அதான் ஓடி வந்தேன்…” என வேகமாய் சொல்லிவிட்டு மூச்சிரைத்தாள்.

“ஓகே, ஓகே. மெதுவா பேசு…” என இரு கைகளாலும் அவளை அமைதிப்படுத்துமாறு சொல்ல பின்னால் இரண்டடி தள்ளி நின்றாள்.

“நீ ஓட ட்ரை பண்ணினன்னு தான் நான் உன்னை பிடிச்சு நிறுத்தினேன். அதுக்காக சும்மா சும்மா எல்லாம் டச் பண்ணி பேசமாட்டேன்….” பாலாவும் பொறுமையாக அவளிடத்தில் சொல்ல,

“நான் கிளம்பறேன்…” என்று நகர்ந்தாள்.

“வழி இந்த பக்கம் இருக்கு…” பாலா கை நீட்டி எதிர்பக்கம் காண்பிக்க ஜீவாவும் தலையில் அடித்துக்கொண்டு அவன் காண்பித்த திசையில் நடந்தாள் வேகமாய்.

நொடிநேரம் தான் பாலா அவளை பார்த்து நின்றதெல்லாம். பின்பு யோசிக்காமல் வேகமாய் நெருங்கி அவளுடன் இணைந்து நடக்க அப்படியே நின்றுவிட்டாள் அவள்.

“எனக்கு போக தெரியும். உங்க ஹெல்ப் தேவை இல்லை…” அத்தனை காட்டம் அவளின் பதிலில்.

“உன்னை நான் கேட்கவே இல்லையே? எனக்கு இந்த நேரத்துல வாக்கிங் போற பழக்கம் இருக்கு. நான் எந்த பக்கம் வேணும்னாலும் போவேன். இதுல உனக்கென்ன கஷ்டம்?…” என்றான்.

“இல்லை நீங்க என்னோட தான் வரீங்க…”

“அதனால இப்ப என்ன? எனக்கு ஹாஸ்பிட்டல் போகனும். நம்பர் டூ ட்வெண்டி ஃபோர் பேஷன்ட் எப்படி இருக்காங்கனு எனக்கு தெரிஞ்சுக்கனும்…” என்று சொல்ல நம்பமுடியாமல் பார்த்தாள்.

ஆனாலும் அவளுக்கும் தெரியுமே அந்த பேஷன்ட் எத்தனை முக்கியம் என்று. எதுவோ ஒரு காரணம் அவருக்கு அத்தனை பாதுகாப்பு கொடுக்கப்பட்டு இருந்தது.

என்னவென்று தான் இதுவரைக்கும் தெரியவில்லை. தெரிந்துகொள்ளும் அளவிற்கு தோன்றவில்லை என்றாலும் பாலா வரும் நேரங்களில் அப்படி என்னதான் விஷயம் என்ற எரிச்சல் அப்பட்டமாய் முகத்தில் வந்துவிடும் ஜீவன்யாவிற்கு.

“நட. என்ன யோசிக்கிற?…” என்றவனின் குரலில் கலைந்தவள்,

“எனக்கு போக தெரியும். நீங்க போங்க. நான் மெதுவா வரேன்…” என்றாள் வீம்புபிடித்து.

“ஓகே…” பாலாவும் முன்னால் நடந்துவிட்டான்.

அவன் சென்ற தூரத்தில் மீண்டும் தன்னை யாரோ நோட்டமிடுவதை போல உணர்ந்த ஜீவாவை பயம் பிடித்தது.

ஓட்டமும் நடையுமாக அவனை அடைந்தவள் அவனில் இருந்து இரண்டடி பின்னால் பின்தங்கியே நடந்தாள்.

“இங்க சென்னை வந்து ஒரு வருஷம் இருக்குமா உனக்கு?…” அவனே பேச்சை ஆரம்பிக்க பதில் சொல்லாமல் வந்தவளை திரும்பி பார்த்தவன்,

“வா, எப்படியும் ஒரு கிலோமீட்டர் போகனும். நான் முன்னாடி பேசிட்டு இருக்கும் போது சத்தமில்லாம பின்னாடி யாராவது வந்துட்டா?…” என்று சொல்லவும் பயத்துடன் தனக்கு பின்னால் திரும்பி பார்த்தவள் பாலாவோடு இணையாய் வந்து நின்றாள்.

“குட், இப்ப சொல்லு…”

“என்ன சொல்லனும்?…”

“நான் கேட்டதுக்கு பதில் சொல்லு. இப்படியேவா போக முடியும்?…”

“ஹ்ம்ம், இருக்கும்…” என்றாள்.

“இந்த நேரம் இத்தனை தைரியமா தனியா வந்திருக்க, உனக்கு இந்த ஏரியா பழக்கமா?…”

“என்ன?…”

“இல்லை பகல்ல இங்க வந்து பழக்கமான்னு கேட்டேன்…”

“ஹ்ம்ம், என் தங்கச்சியோட வந்திருக்கேன்…”

“தென்றல் தானே உன் தங்கச்சி பேர்…”

“ஹ்ம்ம், ஆமா…”

“ப்ளஸ் டூ படிக்கிற பொண்ணு. இல்லையா?…”

“இதை எல்லாம் நீங்க ஏன் தெரிஞ்சு வச்சிருக்கீங்க?…”

“சும்மா தான். வேணும்னு இல்லை. அப்படியே காதுல விழுந்துச்சு…” என சொல்ல அமைதியாகிவிட்டாள்.

அவன் பேச்சு தன் வாயை கிளறுவதை போல இருக்க நடையில் வேகம் கூடியது ஜீவாவிற்கு.

இன்னும் நடையை எட்டி போட்டு நடக்க பாலாவும் சேர்ந்துகொண்டான் அவளின் வேகத்தில்.

“உன்னோட சொந்த ஊர் எது?…” என்றதுமே ஜீவாவின் முகம் வெளிற இருளில் அவனிடமிருந்து மறைத்துக்கொண்டாள் அதனை.

ஆனால் முகத்தில் தெரியாத தடுமாற்றம் நடையிலும் சுடிதார் துப்பட்டாவை பிடித்திருந்த விதத்திலும் பாலா கண்டுகொண்டான்.

“நீங்க ஏன் இன்வெஸ்டிகேஷன் பன்ற மாதிரி கேள்வி கேட்டுட்டே இருக்கீங்க?…” என்றாள் படபடப்புடன்.

“நான் சாதாரணமா தானே கேட்கறேன்? உனக்கு ஏன் அப்படி தெரியுது? அதுவும் இன்வெஸ்டிகேஷன் அளவுக்கு யோசிக்கிற நீ?…” பேச்சினூடே மெல்லிய சிரிப்பொலி ஜீவாவை சஞ்சலமூட்டியது.

“இல்லை, கேள்வியா கேட்டீங்க. அதான்…”

“இவ்வளவு தூரம் நடக்கிறோமே? அதான் பேசிட்டே போனா தூரம் தெரியாதுன்னு கேட்டேன்…”

“அதுக்கு இப்படித்தான் கேட்பாங்களா?…”

“சரி நீயே பேசேன். இல்லை நீ கேளு….”

“தேவையில்லை…”

“எது?…”

“உங்களை பத்தி கேட்டு தெரிஞ்சிக்க தேவை இல்லைன்னு சொன்னேன்…”

“நான் என்னை பத்தி கேளுன்னு ஒன்னும் சொல்லலையே?…” இன்னுமே அவனின் சிரிப்பு அதிகமாகியது.

இன்னும் அவளை தூண்டும்படி பேசலாம் தான். ஆனால் முடியவில்லை. பேசினால் எப்படி நடந்துகொள்வாள் என்று அனுமானிக்க முடியவில்லை.

எதையுமே காட்டிக்கொள்ளாமல் பாலா இலகுவாய் வர ஜீவாவுக்கு தான் அப்படி இருக்க முடியவில்லை.

“அவுட்டோஸ் எல்லாம் ஓகே தானே? உங்க ஊர் மாதிரி இந்த ஊர் இருக்காது இல்லையா?…” என்றதும் திடுக்கிட்டாள்.

“உங்க ஊர் மாதிரினா? நாங்க எந்த ஊர்ன்னு உங்களுக்கு தெரியுமா?…”

“இல்லையே…”

“இல்லை உண்மையை சொல்லுங்க, உங்க ஊர் மாதிரின்னு ஏன் சொன்னீங்க?…”

“நீ வெளியூர், சென்னை புதுசுன்னு பேசிக்கிட்டாங்க. அப்போ இந்த ஊர் உங்க ஊர் மாதிரி இருக்காதுன்னு நினைச்சேன். ஏன்?…”

“ஹ்ம்ம், நத்திங்…” என்று முகத்தை திருப்பிக்கொண்டாள்.

சாதாரணமாக வேறு யாரும் இதனை கேட்டிருந்தாலே நிச்சயம் பேச யோசித்திருப்பாள். இவனோ வக்கீல். அதுவே கலக்கமூட்டியது ஜீவாவை.

“ஏன் ஒரு மாதிரியா நடக்கற? கால்ல எதுவும் அடி பட்டிருக்கா?…” என்று அவளின் நடையின் வித்தியாசத்தை அப்போது தான் கவனித்தவனாக கேட்க,

“இல்லை அதெல்லாம் ஒண்ணுமில்லை. நான் நல்லா தான் இருக்கேன்…” என்ற படபடப்புடன் பின்னால் நகர்ந்தவள் கால் இடறி கீழே மல்லாந்து விழுந்தாள்.

“ஹேய் பார்த்து பார்த்து ஜீவா…” என்றவன் அவளை எழுப்பும் முன் கையில் அங்கிருந்த ஜல்லி கல் குதி அவள் உள்ளங்கை கிழிந்திருந்தது.

“ஓஹ், காட். என்ன இது?…” என்று அவளின் கையை பிடித்து எழுப்ப பார்க்க சுத்தமாய் அவளால் முடியவில்லை.

வலியில் கண்ணீர் பொலபொலவென்று கொட்ட ஆரம்பிக்க தடுமாறி  எழுந்தவள் முகம் வலியில் சுருங்கியது.

அவ்வளவும் பாதை ஓரம் கட்டுவதற்கு போடப்பட்டிருந்த ஜல்லி கற்கள். உதட்டை கடித்துக்கொண்டு வலியை அடக்கியவளின் இடுப்பு எல்லாம் விண்ணென்று தெறித்தது.

“காலை உதறு. உதறு சொல்றேன்ல…” என்று அவளை தன் கை வளைவில் நிறுத்த இன்னுமே விலகினாள்.

“ஜீவா…” என்றவனை கை நீட்டி தடுத்தவள்,

“நிக்க முடியலை…” என்று ஓரமாய் அங்கே சாற்றப்பட்டிருந்த கடை வாசலில் காலை நீட்டி சாய்ந்து அமர்ந்துவிட்டாள்.

“என்ன செய்யுது?…” பாலாவின் முகத்தில் குற்றவுணர்ச்சி. தன்னால் தானே கீழே விழுந்தாள் என்று.

“ப்ளீஸ்…” என்றவள் போன் அடிக்க எடுத்து பார்த்தவள் பாலாவையும் பார்த்துவிட்டு,

“சொல்லு தென்றல்…” என்றாள்.

“அக்கா, இன்னும் ஏன் வரலை?…” எனக்கு தனியா இருக்க பயமா இருக்கு…” என்ற பெண்ணின் பயந்த குரல் அந்த அர்த்த ராத்தியின் நிசப்தத்தில் பாலாவின் காதுகளையும் எட்டியது.

“இதோ பக்கத்துல தான் வந்துட்டு இருக்கேன். பத்து நிமிஷம். வந்திருவேன் குட்டிம்மா…” என்று சமாதானம் செய்தவளையே பார்த்துக்கொண்டு நின்றான்.

“நிஜமா, வருவ இல்லையா? எனக்கு பயமா இருக்கு…”

Advertisement