Advertisement

“கிருஷ்ணா…” என கொந்தளித்தார்.

“அரங்கநாதன் ஸார் தான் லைன்ல. பேசுங்க…” என்றதும் பதறிவிட்டார்.

“என்னது?…” என திகைத்தவர்,

“நான் இல்லைன்னு சொல்லவேண்டியது தானே?…” என போனை வாங்க கை நீட்ட,

“அவர் இல்லைன்னு சொல்ல சொன்னார் ஸார்…” என்றான் வேண்டுமென்றே சத்தமாக.

“ஏன்ய்யா ஏன்?…” என்றபடி போனை பிடிங்கி காதில் வைத்தார்.

“சொல்லுங்க ஸார்…” என ஆளவந்தான் குரல் கேட்டதும் மறுபக்கம் பொரிய துவங்கினார் அரங்கநாதன்.

“அங்க உனக்கு என்னய்யா வேலை? உன்னை யார் அவன்கிட்ட போய் வாய் குடுக்க சொன்னா?…”

“ஐயோ இல்லை, நான் சும்மா தான் பார்த்துட்டு போக வந்தேன். வேற ஒண்ணுமில்லை…”

“கிழிச்ச, உன் புத்தி எனக்கு தெரியாது. வயசுக்கு தக்கன அறிவே கிடையாது. அவன்கிட்ட போய் கொம்பு சீவி விட்டுட்டு இருக்க. உன்னை இந்த கேஸ் முடியற வரைக்கும் அவன் பக்கம் திரும்ப கூடாதுன்னு சொல்லிருக்கேனா இல்லையா?…”

“ஸாரி ஸார்…” ஆளவந்தானின் குரல் உள்ளே சென்றுவிட்டது.

மன்னிப்பையும் கூட பாலாவின் காதில் விழாதவாறு மெதுவாய் கேட்க பாம்பு காது கொண்டவனுக்கு அந்த மெல்லிய சத்தமும் தப்பவில்லை.

அவரின் வீம்பு பார்வையிலும், போனில் பம்மிக்கொண்டு பேசிய விதத்திலும் பொத்துக்கொண்டு வந்த சிரிப்பை அடக்கியபடி பார்த்துக்கொண்டே சாப்பிட்டான் பாலா.

“முதல் அங்க இருந்து கிளம்பித்தொலை. உன்னை நம்பி ஒரு வேலையும் ஆகாது…”

“எஸ் ஸார்…”

“நேரா என்னை வந்து பாரு. என்னத்தை அவன்கிட்ட பேசி வச்சியோ. பெரிய தலைவலி…” என்று திட்டியவர்,

“போனை அவன்கிட்ட குடுத்துட்டு கிளம்பி வா…” என்று சொல்லவும் பாலாவின் முகத்தை பார்க்காமல் டேபிளில் போனை வைத்துவிட்டு ஒன்றும் பேசாமல் சென்றார் ஆளவந்தான்.

‘இந்த மனுஷன் மட்டும் உறவை வளர்த்துப்பாரு. இவனையும் பகைச்சுக்க மாட்டாரு. ஆனா அவனை ஜெயிக்கனும்னு இல்லாதப்பட்ட அட்வைஸ் எல்லாம் செய்வாரு’ என மனதிற்குள் புலம்பியபடி ஆளவந்தான் பாலாவின் அறையை விட்டு சென்றார்.

“சொல்லுங்க ஸார்…” பாலா போனை எடுத்து அரங்கநாதனிடம் பேச,

“முக்கியமான விஷயமா பேசத்தான் கூப்பிட்டேன். இப்ப அந்த மூடே போய்ருச்சு…”

“ஓஹ், ஓகே ஸார்…” பாலா என்ன ஏதென்று கேட்கவில்லை அவரிடம்.

அப்படி ஆரம்பித்தால் பேச்சு இன்னும் நீளும். முன்பு தன்னிடமும் என்ன ஏதென்று எல்லா விஷயங்களிலும் கேட்பார் தான்.

ஆனால் சமீபமாக அதனை யோசித்து கேட்கிறார். அதனால் மீண்டும் வளர்க்க வேண்டாம் என்று அவன் கேட்கவில்லை.

“நம்ம சசிகரன் மேரேஜ் விஷயமா தான்…” என்றதுமே பாலாவிற்கு அத்தனை சந்தோஷம்.

“ரொம்ப சந்தோஷம் ஸார். எப்போ கல்யாணம்?…” என்றான் ஒரு நொடி அவனை மறந்து.

“இன்னும் ஒன்மந்த்ல. பொண்ணு வீட்டுல இன்னைக்கு தான் தேதி சொல்லிருக்காங்க…”

இதை எல்லாம் எதற்கு தன்னிடம் சொல்கிறார் என்ற யோசனையுடன் பாலா அமைதியாக இருக்க,

“பொண்ணு யாருன்னு சொல்லலையே? ப்யூச்சர்ஸ் பில்டர்ஸோட ரெண்டாவது பொண்ணு…” என்றதும் பாலாவிற்கு ஷாக்.

இதற்கு தான் இத்தனை மெனக்கெடல்களா என தோன்றாமல் இல்லை. பணத்திற்கு என்பது போய் இப்போது அதனை கொண்டு உறவை வளர்ப்பது என்ன குணமோ என்று கசந்தது பாலாவிற்கு.

இதில் தான் யாருமில்லை. தனக்கு என்ன என்று மனதை சமாதானம் செய்துகொண்டான். அவரவர் வாழ்க்கை, அவரவர் முடிவு. தனக்கு எதற்கு? என அமைதியானான்.

“இன்விடேஷன் சில முக்கியமான ஆட்களுக்கு குடுக்க ஆரம்பிக்கனும் கிருஷ்ணா. இன்னும் ரெண்டு நாள்ல அந்த வேலைகளை ஆரம்பிக்கனும்…”

“ஓஹ் ஓகே ஸார்…” பாலா தன்னை சுதாரித்து பேசினான்.

“அனேகமா நெக்ஸ்ட் வீக் வானம் ட்ரஸ்ட்க்கு போகனும். ஷேஷாவுக்கும் அழைப்பு வைக்கனும்…”

“ஓகே ஸார்…” பாலா எதற்கும் அதிகப்படியாய் பேசவில்லை. அவர் தன்னை இதற்கு தான் அழைத்திருக்கிறார் என புரிந்து போனது.

ஏற்கனவே பெண் பார்க்கவிருக்கும் விஷயம் சசிகரனின் மூலம் அறிந்திருந்தான் பாலா.

ஆனால் இத்தனை வேகமாக திருமண நாளை குறிப்பார்கள் என நினைக்கவில்லை.

அதுவும் மணப்பெண் யார் என்று தெரிந்து இன்னுமே ஆச்சர்யம். இதில் ஷேஷாவை அழைக்க அதிலும் தன்னை கொண்டே அழைக்க நினைப்பவரின் சாமர்த்தியத்தை எண்ணி சிரித்துக்கொண்டான்.

“நான் ஷேஷாவை மீட் பன்ற அன்னிக்கு நீயும் என்னோட வரனும்…”

“சூர் ஸார்…” அதற்கும் பாலா உடனே சம்மதிக்க அரங்கநாதனுக்கு ஆச்சர்யமாக இருந்தது.

மறுப்பான், தான் எதற்கு என்று மழுப்புவான் என்று நினைத்திருக்க உடனடியாக சம்மதித்ததில் இன்னும் தலைவலி உண்டானது.

“ஓகே, போற அன்னைக்கு உனக்கு சொல்றேன்…”

“ஓகே ஸார்…” என்று சொல்லி வைத்துவிட்டான்.

ஒருபக்கம் சிரிப்பாகவும், ஒருபக்கம் ஆதங்கமாகவும் இருந்தது அரங்கநாதனை நினைத்து.

ஏன் இந்த அவசர திருமணம் என தோன்றாமல் இல்லை. சசிகரனை நினைக்க  சற்று கவலையாக இருந்தது.

தொழிலுக்கும், வாழ்க்கைக்கும் எவ்விதத்தில் ஒத்து போகும் என்று பாலாவுக்கு தோன்றியது.

பத்ரி வந்து வெகுநேரம் ஆகியும் பாலா இந்த நினைவிலேயே இருக்க அவனே அழைத்துவிட்டான்.

“ண்ணா…” என பத்ரி அவனின் தோளை தொட,

“ஹ்ம்ம்…” என்று அவனை நிமிர்ந்து பார்த்தான்.

“என்னாச்சு? நான் வந்தது கூட தெரியாம யோசிச்சுட்டு இருக்கீங்க?…”

“நீ வந்ததை பார்த்தேன் பத்ரி. ஆனா யோசிச்சதுல உன்கிட்ட பேசலை…”

“ஆளவந்தான் ஸார் வந்துட்டு போனார் போல?…”

“ஹ்ம்ம், வாய் ‘தா’ன்னு வந்தார்…” என சிரித்துக்கொண்டே சாப்பிட்டு முடித்த பாத்திரங்களை எடுத்து அடுக்கி வைத்தான் கூடையில்.

“அதுக்கா இவ்வளோ யோசனை?…” என்றான் பத்ரி.

“சசிக்கு மேரேஜ்…”

“ஓஹ் சூப்பர். நான் விஷ் பண்ணிடறேன் பார்க்கும் போது…”

“பொண்ணு பெரிய இடம்…”

“ண்ணா…”

“அனேகமா ஆளவந்தான் இந்த கேஸை ஜெயிச்சா அது சசிக்கு மாப்பிள்ளை சீரா போகுமா இருக்கும் பத்ரி…”

பாலா சாதாரணமாக சொல்லிவிட பத்ரிக்கு மனதினுள் பெரும் பிரளயம். இதனை சுத்தமாக எதிர்பார்க்கவில்லை.

“என்னண்ணா என்ன சொல்றீங்க? நம்ம ஸார் ஏன் இதுக்கு சம்மதிச்சார்?…”

“அவர் சம்மதிக்கலைன்னா தான் ஆச்சர்யம். கேஸ் நடத்துவார், அதுக்கான பணபரிவர்த்தனை பெருசா இருக்கும்ன்னு நினைச்சேன். இவ்வளவு யோசிக்கலை…”

“சசி உங்ககிட்ட சொல்லலையா பொண்ணு யாருன்னு…”

“இல்லை, அன்னைக்கு பெருசா பேச நேரமில்லை. சீக்கிரம் கிளம்பிட்டோம் தானே?…”

“இப்ப என்னன்னா பன்றது?…” பத்ரி அவனை பார்க்க,

“இதுக்கு முன்ன என்ன பண்ணலாம்ன்னு இருந்தோம்?…”

“வாய்தாவை உடைக்கனும்னு. இந்த கேஸ்ல ஜெயிக்கனும்னு…”

“இப்பவும் அதை தான் பண்ண போறோம். அதுல எந்த மாற்றமும் இல்லை…” என்றவன் தனது போனை எடுத்து ஷேஷாவிற்கு மெசேஜ் செய்தான்.

“வெல் பாலா…” என பதில் வந்தது ஷேஷாவிடம் இருந்து.

“சீக்கிரமே மீட் பண்ணலாம் பாஸ்…” பதிலுக்கு பாலா அனுப்ப,

“யாஹ் சூர்…” ஷேஷாவின் பதில் வரவும் ஒரு சிரிப்புடன் மொபைலை வைத்தான்.

பாலாவின் முகம் நிர்மலமாக இருந்தாலும் அடுத்து என்ன என்ன என்ற சிந்தனைகள் புத்தியின் மத்தியில் வந்து அமர்ந்துகொண்டது.

அன்று முழுவதும் அவன் இப்படியே இருக்க வழக்கம் போல இரவு உணவிற்கு பிறகு நடைபயிற்சி என்று பெயர்பண்ணிக்கொண்டு அவன் வெளியே வந்திருந்தான்.

பார்க்கவேண்டிய ஆளை பார்த்து, கவனித்துவிட்டு வீடு திரும்பும் நேரம் வளைவில் யாரோ ஓடிவரும் சப்தம் கேட்க நிபாலா தானிப்பதற்குள் தன் மேல் மோதிக்கொண்டு கீழே சரிந்த உருவத்தை பார்த்து தூக்கி நிறுத்தினான்.

“ஹேய் யார் நீ?…” என்றவனின் குரலில் மீண்டும் ஓட இருந்தவளை பிடித்து நிறுத்திவிட்டான்.

வெளிச்சத்தில் முகத்தை திருப்பி நிறுத்த கலைந்த தலையுடன் பயந்த முகத்துடன் ஜீவன்யா.

“ஜீவா…” அதிர்ச்சியுடன் பார்க்க,

“விடுங்க நான் வீட்டுக்கு போகனும்…” அவனிடமிருந்து தனது கையை விடுவிக்க திமிறிக்கொண்டு.

“இங்க இந்த நேரம் உனக்கென்ன வேலை?…” என்றான் கடுமையாக.

Advertisement