Advertisement

“ஆமான்னா என்ன செய்வீங்க?…” தென்றலுக்கு அவர் மீதான கோபம் ஆறவில்லை.

சசிகரனை மயூரன் கொலை செய்ய முயன்ற பொழுது ஆளவந்தான் தான் ஜீவாவை கை காண்பித்தது என்று அவளுக்கு தெரிந்திருந்தது பத்ரியின் மூலம்.

அதை அத்தனை சுலபத்தில் மறக்கவில்லை தென்றல். அதனை கொண்டே ஆளவந்தானை பார்க்கும் நேரத்தில் எல்லாம் வெறுப்பேற்றினாள்.

‘இவர் நல்லா இருக்கனும்னா யாரை வேணாலும் கீழே தள்ளுவாரா?’ என ஆளவந்தான் மேல் ஒரு கண்ணை வைத்திருந்தாள்.

இப்போது முதல் வழக்கே ஆளவந்தானுக்கு எதிராய். பாலாவிடம் கேட்டே வாங்கியிருந்தாள். ஜெயித்தும் விட ஆளவந்தானுக்கு ஜீரணிக்க முடியவில்லை.

அதிலும் சேர்த்து மூவரும் சேர்ந்து தன்னை பந்தாடுவதை பார்த்தவர் அவர்களை கடுமையாய் முறைத்துவிட்டு அங்கிருந்து செல்ல சிரிப்புடன் கிளம்பினார்கள் மூவருமே.

பத்ரி தென்றலை திருமணம் செய்ய கேட்ட பொழுதே பாலா சொல்லியது வீட்டினரின் முழு சம்மதத்துடன் வந்தால் சம்மதிக்கிறேன் என்பது தான்.

அதை போல அவனின் குடும்பத்தினரும் ஏற்றுக்கொள்ள திருமணம் சிறப்பாகவே நடந்தது.

காரில் கிளம்பும் பத்ரி வீட்டில் சொல்லி இரண்டு நாட்கள் செல்வதை பேசி சம்மதம் வாங்கிவிட சுற்றுலா திட்டம் உடனடியாக அரங்கேறியது.

அன்று இரவே கிளம்பிவிடலாம் என்று முடிவாகி தென்றலும் பத்ரியும் அவர்கள் வீடு செல்ல பாலா ஜீவாவை அழைக்க வந்துவிட்டான்.

இன்னும் அதே வேலையில் அதே இடத்தில் தான் ஜீவாவும், வானதியும். அதை அவளும் மாற்ற விரும்பவில்லை. அவனும் மறுக்கவில்லை.

பாலா நேராக மருத்துவமனைக்கு வர அங்கே ஜீவா மும்மரமாக வேலையில் இருந்தாள்.

“ஆடர் ஆடர் ஆடர்…” என்று வந்ததும் பாலா சொல்ல அவனை நிமிர்ந்து பார்த்தவள் முறைத்து,

“ஆரம்பிச்சாச்சா?…” என்று மீண்டும் குனிந்துகொண்டாள். வானதி வாய் பொத்தி சிரிக்க,

“வேலையா இருக்கியா? ஓகே. நான் வீட்டுக்கு கிளம்பறேன். நீ முடிச்சிட்டு வா…” என சொல்லி மீண்டும் திரும்பினான்.

“எதோ சொல்ல வந்துட்டு கிளம்பறேங்க? என்ன விஷயம்?…” என்று சொல்ல,

“அதெல்லாம் இல்லை. ஒரு வேலை. கிளம்பிட்டேன்…” என்று சொல்லி கார் சாவியை சுழற்றியபடி போனை எடுத்து பேசிக்கொண்டே சென்றான்.

“என்னவாம்?…” வானதி கேட்க,

“யாருக்கு தெரியும்? வீட்டுக்கு போனா தெரியும்…” என்றாள் ஜீவா.

ஒருமணி நேரத்தில் அவர்கள் வேலை நேரம் முடிய சசிகரன் வந்துவிட்டான் கிளம்புவோமா என்று.

“உங்களுக்கு முடிஞ்சதா? வர நேரமாகும் கார் புக் பண்ணி கிளம்புங்கன்னு சொன்னீங்க?…” வானதி கேட்க,

“இப்ப வேலை இல்லை. கூப்பிட்டா வாயேன். கேள்வி கேட்டு கேட்டு தான் வருவியா? இன்னைக்கு ஒரு நாளாச்சும் நான் சொல்றதை கேளு…” என கடிந்துகொண்டே சென்றான் சசிகரன்.

“ஹ்ம்ம் பூனை மாதிரி இருந்துட்டு கல்யாணம் செஞ்சுக்க கேட்டாரு. ஆனா இப்ப பேச்செல்லாம் தாறுமாறு…” என புலம்பிக்கொண்டே சென்றாள் வானதி.

சசிகரன், வானதி திருமணத்தின் பின் பாலாவின் வீட்டினருகே வீடு பார்த்து வந்துவிட சோலையம்மாவையும் அவர்களுடன் அழைத்துக்கொண்டான்.

ஜீவா, வானதியின் பிள்ளைகள் இருவரும் சோலையம்மாவின் பொறுப்பில் தான் இப்பொழுது.

பாலாவின் வீடு வந்ததும் அவளை இறக்கி விட்டுவிட்டு இரண்டு வீடு தள்ளி இருக்கும் தனது இல்லத்திற்கு சென்றான் சசிகரன்.

வீட்டிற்குள் ஜீவா நுழைந்ததுமே அம்மா என தாவி வந்து அவளின் காலை கட்டினாள் குழந்தை தனுஷா.

“செல்லக்குட்டி என்ன பன்றீங்க?…” என்று மகளை தூக்க போக அதற்குள் தான் தூக்கிக்கொண்டான் பாலா.

“உதை விழும். போய் ப்ரெஷ் ஆகிட்டு வா. ஹாஸ்பிட்டல்ல இருந்து வரும் போதே இதை செய்யாதன்னு எத்தனைதடவை சொல்லியிருக்கேன்…” என்று முறைக்க,

“அப்பறம் பேசிக்கறேன் உங்களை…” என அவனை முறைத்து சொல்லிவிட்டு அறைக்குள் சென்றாள் ஜீவா.

கட்டிலில் பெட்டிகள் எடுத்து வைக்கப்பட்டு இருக்க தலையில் கைவைத்து நின்றுவிட்டாள் அப்படியே.

“இதுக்கு தான் அவசர அவசரமா கிளம்பி வந்தாங்களா?…” என்று நிற்க சற்று நேரத்தில் பின்னிருந்து அணைத்துக்கொண்டான் பாலா.

“விடுங்க நீங்க? குளிக்காம தொட கூடாதுன்னு சொன்னீங்க?…” என்று அவனின் அணைப்பில் இருந்து விடுபட,

“அது குழந்தைக்கு சொன்னேன்டி…” என்று அசடு வழிந்தான்.

“எங்க பாப்பா?…”

“சசி வீட்டுல…” என்று அவளுடன் இழைந்தான்.

“அதுசரி, தொடாதீங்க. இது உங்களுக்கும் சேர்த்து தான். எப்ப பாரு இதே வேலை. ஒன்னும் வேண்டாம் விடுங்க…” என்றவள்,

“நான் லீவ் கூட சொல்லலை? திடீர்ன்னு ப்ரோக்ராம் போட்டா என்ன அர்த்தம்? அதுவும் ப்ளான் கண்டிப்பா மூணுபேரும் சேர்த்து தான் போட்டிருப்பீங்க?…” என்றவளை தன் பக்கமாய் திருப்பி அணைத்துக்கொண்டவன்,

“ஆமா, அதுக்கென்ன?…” என அவள் கன்னத்துடன் உராய,

“நான் மட்டும்னா பரவாயில்லை. ஆனா வானதியும் சேர்த்து. போச்சு…”

“எதுவும் போகலை. வா குளிக்க, உன்னோட நானும் ஹாஸ்பிட்டல் பீல் ஆகிட்டேன்…”

“அதுக்கு?…” என்றவளை தள்ளிக்கொண்டு சென்றுவிட்டான் அவளின் பேச்சுக்களை பொருட்படுத்தாமல்.

குளித்து கிளம்பி வந்தவள் பாலா எடுத்து வைத்திருந்த உடையை மாற்றிக்கொண்டு வெளியே வர மொத்த கும்பலும் ஹாலில் தான் இருந்தது.

ஜே ஜே என்ற கூச்சலில் தானாய் ஒரு புன்னகை பிறக்க அவர்களுடன் வந்து அமர்ந்தாள்.

“டின்னர் போற வழில. அதனால எதையும் எடுத்துக்க வேண்டாம். லக்கேஜ் எல்லாம் காருக்கு போயாச்சு. லீவ் சொல்லியாச்சு. இப்ப ஓகே வா?…” என்றான் பாலா சிரிப்புடன்.

“ஹ்ம்ம் உங்களை…” என்று தோளில் அடித்தவள் தன்னுடைய ஹேன்ட் பேக்கையும் எடுத்துக்கொண்டு வெளியே வந்தாள்.

இன்னோவா கார் தயாராக இருக்க மூவரும் மாற்றி மாற்றி ஓட்டிக்கொள்ளலாம் என்று சொல்லிவிட்டனர்.

சசிகரன் ட்ரைவர் சீட்டில் அமர அவனுடன், பத்ரி மடியில் பாலாவின் மகளுடன்  பக்கத்தில் அமர்ந்துகொண்டான்.

கடைசி சீட்டில் சோலையம்மாள், வானதியும் வானதியின் இரண்டு வயது குழந்தையுடன் அமர்ந்துகொள்ள, நடுவில் இருந்த சீட்டில் பாலா, ஜீவா, தென்றல் மூவரும் இருக்க கார் மசினங்குடியை நோக்கி கிளம்பியது.

கார் செல்லும் வேகத்தின் எதிர்காற்றில் பாலாவின் தோளில் சாய்ந்து ஜீவா இதமாய் உறங்கிவிட அவளை அணைவாய் தன் கைவளைவில் அணைத்துகொண்டான் பாலா.

ஜீவாவின் மடியில் இப்போதும் மகளாய் தென்றல் கண்ணுறங்க அவர்களின் வாழ்க்கை பயணம் முழுவதும் ஒரு குடும்பமாய் இதே அரவணைப்புடன்.

இப்போதும் பாலா, ஷேஷாவின் களையெடுப்புகள் தொடர்ந்துகொண்டு தான் இருக்கிறது. எப்போதும் ஷேஷா சொல்வது,

“எதையும் தேடி போய் நாம சரி பண்ண முடியாது. நம்ம கண் பார்வையில் பட்ட விஷயங்களை அப்படியே விட்டு போக முடியாது. செய்ய முடியும்ன்ற இடத்தில இருக்கிற நாமளும் எதுக்குன்னு விலகி போனா வாழற வாழ்க்கைக்கு என்ன அர்த்தம்?…” என்பான்.

“முடிந்தவரை நம்மை சுற்றி இருக்கிற இடங்களை துப்பரவு செய்வோம். இது நம்ம மானுடமைக்கான மரியாதை. மனிதனா நாம பிறப்பெடுத்ததற்கான கடமை. நமக்கடுத்து வாழ இருக்கிற நம்ம சந்ததிங்களுக்கு சில சந்தோஷங்களை விட்டு வைப்போமே…”

“நம்மளால ஒருத்தரின் கண்ணீரை துடைக்க முடியுதுன்னா தாராளமா நாம தயங்காம செய்யலாமே? அந்த வரம் எல்லாருக்கும் கிடைச்சிடாது. வாழ்ந்த அப்படி ஒரு மனுஷனா வாழனும்…”  என்பான்.

ஷேஷாவின் வார்த்தைகள் எப்போதுமே பாலாவினுள் ஏதாவதொன்றை நிகழ்த்திக்கொண்டே இருக்கும்.

இப்போது பத்ரி, சசிகரன் என இன்னும் வட்டங்கள் பெரிதாகி இருக்க ஒற்றை அலைவரிசை கொண்டவர்களை ஒருங்கிணைப்பதையும் கவனத்தில் வைத்திருந்தான் பாலா.

குடும்பத்திற்கான பாதுகாப்பிற்கும், சந்தோஷத்திற்கும் குறைவின்றி மகிழ்ச்சியுடனே வாழ்ந்தனர்.

நூலறுந்த பட்டமென அலைந்து திரிந்து ஓரிடத்தில் தஞ்சம் புகுந்தவர்களின் வாழ்வில் மின்னலென வந்தவன் வெளிச்சத்தில் வாழ்க்கையின் பரிமாணங்களை உலாவி அன்றில்களாய் ஒரு கூட்டில் இணைந்தவர்கள் வாழ்வியலின் அழகியல் அளவில்லா நிறைவாய் ஜீவனுடன்.

என் ஆசையெல்லாம் உன் நெருக்கத்திலே

என் ஆயுள் வரை உன் அணைப்பினிலே

வேறென்ன வேண்டும் உலகத்திலே

இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே

 

———————————

நிறைவுற்றது 

Advertisement