Advertisement

சலிப்பாய் பதில் சொல்ல கம்மென்று வாயை மூடிக்கொண்டவள் கோபத்துடன் தென்றலுடன் இருந்த அறைக்குள் நுழைந்துகொண்டாள்.

பாலாவிற்கு ஒரு போன் வர அதில் ஆழ்ந்துவிட்டவன், பத்ரிக்கும் அழைத்து அந்த வழக்கை பற்றி விவாதித்துவிட்டு வைத்தான்.

ஒருமணி நேரம் சென்ற பின்னர் தான் ஜீவா தன்னை தேடி வரவில்லை என்றே உணர்ந்தான் பாலா.

டேபிள் விளக்கை அணைத்துவிட்டு சட்டப்புத்தகத்தின் நடுவே ஒரு பேனாவை சொருகிவிட்டு மூடி வைத்தவன் எழுந்து அவளை காண சென்றான்.

கட்டிலில் காலை கட்டியபடி கண்ணை மூடி சாய்ந்து அமர்ந்திருந்தாள் ஜீவா. சில நொடிகள் பார்த்துவிட்டு வீட்டின் கதவுகளை எல்லாம் பூட்டி மற்ற விளக்குகளை அணைத்துவிட்டு  அவளிடம் வந்தான்.

“வா தூங்கலாம்…” என ஜீவாவின் அருகே வந்து நிற்க,

“எனக்கு தூக்கம் வரலை. நீங்க தூங்குங்க…” என்றாள் அவனை பார்க்காமல்.

“ஜீவா இனி நீ என்னோட தான் தூங்கனும். வான்னு சொல்றேன்ல…” என்று சொல்லவும் குரல் பேதத்தை உணர்ந்தவள் இன்னுமே முகத்தை இறுக்கமாய் காலில் புதைத்துக்கொண்டாள்.

ஒரு சிரிப்புடன் அவளை பார்த்துக்கொண்டு நின்றவன் சட்டென இரு கைகளாலும் அள்ளிக்கொள்ள,

“ம்ஹூம், மாட்டேன். மாட்டேன். போங்க போங்க…” என்று முகத்தை மூடியபடி அவனின் கைளில் துள்ளினாள்.

“அடங்குடி. நாலு மாசம் ஆச்சு உன் பக்கத்துல நான் வந்து. சரியாகட்டும்ன்னு இருந்தேன். இப்ப யாரும் இல்லை. இனி தள்ளியிருக்க நான் ஆளும் இல்லை. நீ என்னன்னா? சேட்டையா உனக்கு?…” என்று சொல்ல,

“நீங்க மட்டும் என்ன? எதுவுமே பண்ணலையா?…” என்றாள் மூக்கு விடைக்க.

“சத்தியமா இல்லையே? என்ன பண்ணேன். எங்க சொல்லு…” என நமுட்டு சிரிப்புடன் கேட்டான்.

“இது போங்கு. நான் வேற சொல்றேன்…” என்றவளை கீழே விட்டு கதவை பூட்டி திரும்பினான்.

“அந்த ரூம் போறேன். விடுங்க. இங்க இருந்தா என்னவோ எனக்கு கோர்ட்டுக்குள்ள இருக்கற மாதிரியே பீல் ஆகுது…” என்றவளை விடாமல் தன் அணைப்பிற்குள் கொண்டுவந்தான்.

“அப்படி சொல்லிட்டு போனா எப்படி? கொஞ்சம் நேரம் கழிச்சு சொல்லு எப்படி பீல் பன்றன்னு…” என்றவனின் மீசை முடிகள் அவளை குறுகுறுக்க செய்ய நெடுநாளைக்கு பின்னான அவனின் நெருக்கமும், ஸ்பரிசமும் ஜீவாவை உயிர்வரை தீண்டியது.

“பாலா…” என்று அவனின் பின்னந்தலையை பிடித்து இழுத்து தன்னிலிருந்து பிரித்தாள்.

“ப்ச் ஜீவா, அப்ஜெக்ஷன் ஓவர் ரூல்…” என்றதும் அதுவரை நெகிழந்திருந்தவள் இப்போது வேகமாய் அவனின் தலையை பிடித்து இழுக்க அவளின் முகம் பார்த்தான்.

“என்னடி?…” என்று பாவமாய் கேட்க,

“இப்பவும் கோர்ட் தானா? எப்ப பார்த்தலும் இதே?…” என்றவளின் இதழ்கள் மேல் தன் கன்னத்தை அழுத்தி வைத்து அவள் பேச்சை நிறுத்தினான்.  

“இன்னும் வாழ்க்கையில எதையுமே பார்க்கலைடி. இப்படி எனக்கு வாய்தா மேல வயதா குடுத்துட்டே இருக்க? இப்படியே போனா என்னைக்கு கேஸ் நடத்த?…” என அப்போதும் அவன் அப்படியே பேச அவனின் வாயில் சப்பென்று ஒரு அடி வைத்தாள்.

“வாய் வாய். நீங்கலாம் திருந்தவே மாட்டீங்க…” என்றவளின் பேச்சில் சன்னமான குரலில் சிரித்தான்.

“என்ன செய்ய சொல்ற? கல்யாணத்துக்கு முன்னாடி உன்னை விரும்பறேன்னு என்னை நான் உணர்ந்த நேரமும் சரி, கல்யாணம் ஆன நேரமும் அதை முழுமையா அனுபவிக்கவும் முடியாம கேஸ், கோர்ட் இப்படித்தான் நம்ம வாழ்க்கை ஓடிருச்சு…” என்றவன்.

“சொல்ல போனா அந்த நேரம் தான் நாம ஒருத்தரை ஒருத்தர் நல்லா புரிஞ்சிக்கிட்ட நேரம். ஒருத்தரையொருத்தர் அதிகமா தேடின நேரம். கிடைச்ச நேரத்தில உணர்வுகளை பரிமாறிக்கிற சமயம், ஒருத்தரை ஒருத்தர் அனுசரிச்ச தருணம். இந்த மொத்த வாழ்க்கைக்கும் தித்திப்பா நம்ம மனசுக்குள்ளயே கொண்டாடக்கூடிய காலம்…”

“வாவ்…” என்றாள் ஜீவா அவனின் பேச்சில் மற்றதை மறந்து.

“இப்போ என்ன தான் நாம மட்டும் இருந்தாலும் அப்போ இருந்தது, தென்றல் பார்த்திருவாளோன்னு பயந்து, பதறி, தெரியாம முத்தம் குடுத்தது, அணைச்சதுன்னு அது ஒரு பீல் இல்லையா ஜீவா?…” என்றான் ரசித்து, அனுபவித்த குரலில்.

“இந்தளவுக்கு நான் யோசிக்கலையே பாலா?…” என ஜீவா உண்மையை ஒப்புக்கொள்ள,

“நானே உனக்கும் சேர்த்து யோசிக்கறேன். நீ என்னை மட்டும் யோசி…” என்றவனின் செயல்கள் எல்லாம் அடுத்த கட்டத்திற்கு நடையிட்டது.

இதுவரை அவளுணர்ந்த அவனின் மென்மைகள் எல்லாம் எங்கோ ஒளிந்து போயிருக்க அன்றைக்கு அவள் உணர்ந்தது முற்றிலும் புதிதாய் ஒரு பாலாவை.

“பாலா…” என்றவளின் வெளிப்படுத்தல்களை கூட மொத்தமாய் புயலாய்  வாரி சுருட்டிக்கொண்டான் தனக்குள்.

அன்றைய ஆவேச அரங்கேற்றம் இருவரின் அத்தனை அலைப்புறுதல்களுக்கும் அடையாளமாய் மாறி போனது.

அவனின் களைத்த முகத்தில் கலந்த நிறைவு சிறு புன்சிரிப்பில் ஆர்ப்பாட்டமின்றி அடங்கி ஒளிர்ந்தது.

 “ஜீவா…”

“ஹ்ம்ம் இப்ப கூப்பிடுங்க ஜீவான்னு? இனி அடுத்த ஹியரிங் ஒரு வாரம் கழிச்சு தான்…”  என்றவளின் பேச்சில் அடக்கமாட்டாமல் சிரித்தவன்,

“இந்த ஜட்ஜோட ரூல்புக்ல பர்மிஷன் கிராண்டட் வேர்ட் ப்ளாக் பண்ணியாச்சு மிசஸ் ஜீவன்யா பாலமுரளிகிருஷ்ணா…” என சன்னமான சிரிப்புடன் அவளின் நெற்றியில் முட்டினான் பாலா.

“உங்ககிட்ட பேசி ஜெயிக்க முடியுமா?…”

“நீ தான் சொன்னியே பிள்ளைபூச்சின்னு. இப்ப சொல்லு…” என்று அவளை வம்பிழுக்க,

“எதுக்கு அதுக்கொரு வாய்தான்னு நிப்பீங்க. போதும்ப்பா…”  என்றவள் கையை தூக்கி கும்பிட போக பாலாவின் குறும்பான சிரிப்பில் கையை கீழே இறக்கியவள்,

“உங்களை வச்சுக்கிட்டு…” என்று அவனின் தோளில் அடித்தாள்.

“இப்பலாம் ஒன்னும் சொல்லமாட்டேன். நீ கும்பிடலாம்…” என்றான் கண்சிமிட்டி.

“போதும் போதும்…” என்றவள் அவனின் அனைப்பிற்குள் பாந்தமாய் பொருந்திக்கொண்டாள்.

————————————————

அன்று கோர்ட் வளாகத்தில் தலையை தொங்கப்போட்டபடி வெளியே வந்த ஆளவந்தானின் முன்னால் வந்து நின்றாள் தென்றல்.

“என்ன ஆளு? இன்னைக்கு எப்படி என்னோட எதிர்வாதம்?…” என்று கருப்பு நிற கவுனில் தன் முன்னால் பேசியவளை பார்த்தவர் முகம் கடுத்தது.

“என்னோட முதல் வெற்றி. அதுவும் உங்கக்கிட்டன்னும் போது ரொம்ப பெருமையா பீல் பன்றேன்…” என்றாள் நக்கலாக.

“ஏய் போயிரு பேசாம…”

“அதை நீங்க சொல்ல கூடாது ஓல்ட் மேன். எடுக்கறது ப்…” என்று கையை நீட்டி காண்பித்தவள் ஆளவந்தானின் முகத்தை பார்த்துவிட்டு,

“போக்கத்த கேஸ். இதுல வீராப்பு வேற?…” என்று சொல்லியவள்,

“என்ன வேற என்னவோ சொல்ல வந்தேன்னு நினைச்சீங்களோ?…” என்றாள்.

“அப்படியே மாமனை மாதிரியே வாயும், திமிரும்…” என ஆளவந்தான் சொல்ல,

“கங்க்ராட்ஸ் தென்றல்…” என்று அங்கே வந்தான் பாலா.

“கங்க்ராட்ஸ் தென்றல்…” என பத்ரியும் வர இருவரையும் பார்த்து பெருமிதமாக புன்னகைத்தாள்.

“டேய் நீ என்னடா வெறும் கங்க்ராட்ஸ் என்னை மாதிரி? உங்க கல்யாணத்துக்கு அப்பறம் வர முதல் பர்த்டே தென்றலோடது. இன்னைக்கு கேஸ் வின் பண்ணிருக்கா. இதுக்கே பெரிய ட்ரீட்டா குடுக்கற. ஆமா…”  என்றான் பத்ரியிடம்.

தென்றலை காதலுடன் பார்த்த பத்ரி பாலாவிடம் உடனே தலையசைத்து சிரித்தவன்,

“நீங்க கேட்கலைன்னாலே செய்வேன். கேட்ட பின்னாடியும் நோ சொல்லுவேனா ண்ணா? நாளைக்கு சாட்டர்டே, சண்டே ஹாலிடே. எங்க போகலாம்ன்னு தென்றலோட கேட்டுட்டு சொல்றேன்…” என்றான் பத்ரி.

“மசினங்குடி ரெசார்ட் போகலாம். ரெண்டுநாள் ஜாலியா இருந்துட்டு வரலாம்…” என்றாள் தென்றல் உடனடியாக.

அந்த பேச்சுவார்த்தையில் அவர்கள் இருக்க அப்படியே நழுவ போனார் ஆளவந்தான்.

“என்ன ஆளு அங்கிள், நீங்களும் வாங்களேன். அப்படியே ரெசார்ட் போய்ட்டு கொஞ்சம் குளுகுளுன்னு ஜாலியா இருந்துட்டு வருவோம்…” என்ற பாலா,

“நமக்கு தனி ரூம் புக் பண்ண சொல்லிடறேன் பத்ரிட்ட…” என சொல்லிவிட்டு,

“பத்ரி நான் வரனும்னா எனக்கும் என் ஆளுக்கும் தனி ரூம் தான் இப்பவே சொல்லிட்டேன்…” என்றான் விடாமல்.

“உங்களுக்கு இல்லாததா? அதுவும் என் வொய்ப் கேஸ்ல வாதாடி தோத்திருக்கார். தென்றல் வின் பண்ண அவரும் ஒரு காரணம் அதனால அவருக்கும் சேர்த்தே ட்ரீட் குடுத்திருவோம்…” என்றான் பத்ரி.

“என்ன நான் ஜெயிச்சதுக்கு இவர் காரணமா? நல்லா இருக்கே. நான் என் திறமையில ஜெயிச்சேன்….” என்றாள் தென்றல்.

“அப்ப என் ஆளுக்கு திறமை இல்லைன்னு சொல்றியா?…” என பாலா குதித்தான்.

“ஆமா அதை தான் எல்லாரும் சொல்றாங்களே? அவர் பிடிக்கிற கேஸ்ல இருந்தே தெரியலை?…” என்றாள் தென்றல் நக்கலாக.

“அவர் ஒருகாலத்துல எப்படி கொடிகட்டி பறந்தவர் தெரியுமா?…” என பத்ரியும் பேச,

“அந்த கொடியை நடு கம்பத்துல கட்டி பல வருஷம் ஆச்சு…” என்றாள் தென்றல் ஆளவந்தானை பார்த்து தீவிரமாக.

“டேய் நிறுத்துங்கடா…” என்று கத்திவிட்டார் ஆளவந்தான்.

“இதுக்கெல்லாம் பதிலடி குடுக்காம விடமாட்டேன். என்ன எல்லாருக்கும் ஏத்தமா போச்சா?…” என்று கேட்க,

Advertisement