Advertisement

பாலாவின் மௌனமே அவனின் எண்ணவோட்டத்தை படம்பிடித்து காண்பிக்க ஜீவாவின் இதழ்களில் குறுநகை.

“தென்றலை காப்பாத்தனும்னு மட்டும் தான் அந்த நிமிஷம் எனக்கு தோணுச்சு. உண்மையா அந்த நிமிஷம் வேற எதுவும் நினைக்கலை பாலா. அப்போ உங்களவு எனக்கு உங்க மேல…” என்றவளை முறைத்தான்.

“இப்ப இந்த விளக்கம் தேவையா? சும்மா பேத்தல் இதெல்லாம்…” என்று அவளின் வாயில் இரண்டு அடி வைக்க வாய்விட்டே சிரித்தாள் ஜீவா.

“செலன் போய்ட்டிருக்கு. தூக்கம் வந்தா தூங்குடி. எதுக்கு இத்தனை பேசிட்டு? நான் இங்க தான் இருப்பேன்…” என சொல்ல,

“இந்த பக்கம் வாங்களேன்…” என்றாள் தனது மறுபக்கம் அழைத்து.

அவன் வந்து மறுபக்கம் அமரவும் அந்த கையால் பாலாவின் கையை பிடித்துக்கொண்டாள்.

“கட்டு போட்டிருக்கறதால அந்த கையை அசைக்க முடியலை. அதான் கூப்பிட்டேன்…”

“ஏய் ரொம்ப பன்றடி நீ. தூங்குன்னு சொல்றேன்ல…” என்று அதட்டினான்.

“தூக்கம் வந்தா தூங்கறேன். இப்ப தூக்கம் வரலை. ப்ளீஸ் பாலா…” என கெஞ்சலாக சொல்லவும்,

“சரி கண்ணை மூடிட்டு கொஞ்ச நேரம் அப்படியே இரு. தூங்கிடுவ…” என்றான் நெற்றியை தடவிக்கொடுத்துக்கொண்டே.

மீறினால் எழுந்து சென்றுவிடுவானோ என அவனின் கையை பிடித்தபடி கண்ணை மூடினாள். ஆனால் பேச ஆரம்பித்துவிட்டாள் மெல்லிய குரலில்.

“லக்கில நான். நான் மட்டுமில்லை தென்றலுமே. ஏன் பாலா உங்களுக்கு என்னை பிடிச்சது? நான் நிறைய பார்த்துட்டே பாலா. நிறைய ஆட்களை, நிறைய ஆண்களை…”

“ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதம். நல்லா பழகிட்டே சந்தர்ப்பத்தை பார்க்கற  ஆட்களையும் பார்த்தேன். சந்தர்ப்பம் கிடைச்சாலும் கண்ணியமா விலகி நின்ன ஆட்களையும் பார்த்தேன்…”

“ப்ச், ஜீவா…” என்று அவளின் இதழ்களை அவன் கையால் மூட அதனை எடுத்துவிட்டு அந்த கையையும் பற்றிக்கொண்டாள்.

“யாரை சொல்றேன்னு தெரியாதுல. அம்மாவோட ப்ரெண்ட் ஒரு ஆன்ட்டி வீட்டுக்கு போனோம் இல்லையா அவங்களையும், அந்த அங்கிளையும் தான். அவங்களுமே ஒரு டாக்டர்…”

“அந்த அங்கிள் தான் எனக்கும் தென்றலுக்கும் ட்ரீட்மென்ட் பண்ணாங்க. ஆனா அந்த ஆன்ட்டிக்கிட்ட வீட்டுல நடந்த விஷயத்தை சொல்ல அவங்க அங்கிள்கிட்ட கூட எதையும் சொல்ல கூடாதுன்னு சொல்லிட்டாங்க. அவங்களுமே குடும்ப சண்டைன்னு சொல்லிட்டாங்க…”

“யார் எப்போ வேணா எப்படி வேணா மாறலாம். எதுக்கும் வாய்ப்பு தர கூடாதுன்னு சொன்னவங்க யாருக்கும் தெரியாம எங்களை இங்க அனுப்பிவச்சுட்டாங்க. போலீஸ்க்கு இந்த விவகாரம் போனா கேஸ் எப்படி வேணும்னாலும் திரும்பும். அப்போதைக்கு எங்க பாதுகாப்பு தான் முக்கியம்னு சொல்லிட்டாங்க…”

“ஒருநாள் நடுராத்திரி கிளம்பினோம். யார் என்னன்னு தெரியாம நிராதரவா இங்க வந்து சேர்ந்தோம். வாழ்க்கையில இனி எதுவுமே இல்லை. தென்றலோட படிப்பு முடிச்சு அவ நல்லபடியா இருந்தா போதும்ன்னு தோணுச்சு. அவ்வளவு தான் வாழ்க்கை, அதுவரைதான் எல்லாம்ன்னு நினைச்சு இருந்தோம்…”  

“ஜீவா போதும். தூங்கு. உன்னால பேச முடியல பாரு…” என்றான் பாலா. அதை அவள் கேட்டால் தானே?

“உங்களை மாதிரி ஆண்கள் மத்தியில் தான் எங்களுக்கு அப்பான்னு சொல்லிக்கிட்டவரும், அவரோட நண்பரும் மாதிரியான ஆண்களும் இருக்காங்க. ஆண் தேவதைகள்ன்னு வெளிப்படையா யாரும் காட்டிக்கறதை விட அவங்கவங்க மனசுக்குள்ள அதை உணரனும்….”

“அப்படி நினைக்கிற எல்லா ஆண்களுமே தேவதைகள் தான். ஒரு குழந்தை அம்மாவுக்கு அடுத்து பாதுகாப்பா உணரக்கூடிய முதல் உறவே அப்பா தான். எங்களுக்கு அது கிடைக்கலை. இரவலா கிடைச்ச அப்பா உறவும் பொய்யா போய்டுச்சு…” அவள் விழியோரம் நீர் கசிந்தது.

“நாங்க உருவாக காரணமா இருந்தவரும் ஒரு ஆண். எங்களை எடுத்து வளர்த்து ஆளாக்கறேன்னு கடைசியில காசுக்காக ஏலம் விட்டவரும் ஒரு ஆண். மகள் வயசு கூட இல்லாத பொண்ணை வக்கிரமான மனசோட பலவந்தப்படுத்தினதும் ஒரு ஆண்…” என்றவள்,

“இப்ப எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் எங்களை உங்க குடும்பமா மாத்தின நீங்களும் ஒரு ஆண். இந்த வானம் குழுமத்தை வைத்து சேவை செய்யும் ஆதிஷேஷன் ஸாரும், சசிகரனும் கூட. ஒவ்வொருத்தவங்களும் ஒவ்வொரு விதம் இல்லையா?..” என்றவள் குரல் மெல்ல மெல்ல தேய்ந்து மயக்கத்திற்கு சென்றது.

தொண்டைக்குழி ஏறி இறங்க ஏதேதோ பிதற்றியபடியே உறங்க ஆரம்பித்தாள் ஜீவா.

அவளின் பேச்சுக்களை எல்லாம் உள்வாங்கிக்கொண்டிருந்தவனுக்கு அவளின் காயங்கள் எக்காலத்திலும் ஆறாத ஒன்று என புரிந்துபோனது.

நிகழ்ந்துவிட்ட நினைவுகள் கனவாக கூட இனி அவளை தொடர கூடாதென்று நினைத்தான் பாலா.

ஜீவா மறுபடியும் ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்ல மெல்ல தனது கையை உருவிக்கொண்டு வெளியே வந்தான்.

தென்றல் வானதியின் மடியில் படுத்து உறங்கியிருந்தாள். அழுது களைத்த முகம். பார்க்க அப்படி ஒரு பரிதாபம். நெஞ்சை கீறியது அவளின் நிராதரவான தோற்றம்.

“ஸார்…” என்று பாலாவை பார்த்தாள் வானதி. எழுந்துகொள்ள முடியவில்லை அவளால்.

“உட்காருங்க வானதி, நீங்க எனக்கொரு ஹெல்ப்…”

“சொல்லுங்க கிருஷ்ணா ஸார்…”

“தென்றலை கொஞ்சம் கேர் பண்ணிக்க முடியுமா? ஐ மீன் நைட் உங்க கூட வச்சுக்கோங்க. அது மாதிரி ஸ்கூலுக்கும் போகனும். எக்ஸாம் வருது…”  

“நீங்க சொல்லனுமா ஸார். கண்டிப்பா நான் பார்த்துக்கறேன். நீங்க ஜீவாவை பாருங்க…” என்றாள் உடனே.

“ஓகே, நான் தென்றல்கிட்ட சொல்லிடறேன். அவளே வருவா…” என்றான்.

அதற்கு பின் பத்ரி அழைத்துவிட்டான். விஷயம் கேட்டதில் இருந்து ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை என அழைத்தபடி தான் இருந்தான்.

இப்போதும் கிளம்பி வரவா என்றவனை பாலா சமாதானம் செய்திருக்க போனில் பேசிக்கொண்டே இருந்தான்.

இரவு நேரமாகிவிட வினோதினி முதல் வேலையாக ஜீவாவை பார்க்கவென்று வந்துவிட்டாள் சோலையம்மாவுடன்.

அவர்கள் வந்து சிறிது நேரம் இருந்துவிட்டு வினோதினி வேலைக்கு செல்ல சோலையம்மாவுடன் வானதி தென்றலை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு கிளம்பினாள்.

முடியவே முடியாதென்று மறுத்த தென்றலை பேசி பேசி அனுப்பி வைத்தான் பாலா.

அவனின் பேச்சை மறுக்க முடியாமல் அவளுமே கிளம்பிவிட்டாள் வானதியுடன். செல்லும் முன் ஜீவாவை பார்த்துவிட்டு சிறிது நேரம் பேசிவிட்டே கிளம்பினாள்.

ஜீவாவும்  வானதியுடன் இருக்க சொல்லியிருக்க மறுக்க வேறெதுவுமில்லை. கிளம்பிவிட்டாள் அழுதுகொண்டே.

பத்து நாட்கள் எப்படி கடந்தன என்றே சொல்லமுடியாதளவிற்கு நாட்கள் ஓடிவிட்டன.

ஜீவாவை ஒரு வாரத்தில் டிஸ்சார்ஜ் செய்து பார்த்துகொள்கிறேன் என்றதற்கு மறுத்துவிட்டான் ஷேஷா.

ஷக்தி தனியாக வேறு அத்தனை திட்டு பாலாவிற்கு. என்னவென்று தனியாக சமாளிக்க முடியும் உன்னால் என கேட்டு பேச அதற்கு மேல் பாலாவும் மறுக்கவில்லை.

நீதிமன்றத்திலும் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளிகள் மரணமடைந்திருந்தாலும் வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து அவர்களுக்கான தண்டனையும் கொடுக்கப்பட்டது.

பெரிதாய் ஒரு வேலை முடிந்துவிட்டதென்று அவர்களால் இருக்கமுடியாது. இதை போல இன்னுமே வழக்குகள் வந்துகொண்டு தான் இருக்கும்.

இதோ ஜீவா வீட்டிற்கு வந்து முழுதாய் மூன்று மாதங்கள் கடந்துவிட்டது. அதற்குள் தென்றல் வெற்றிகரமாக பரிட்சை எழுதி முடித்திருந்தாள்.

அவளுக்கு நல்ல மதிப்பெண் கிடைத்திருக்க சசிகரன் டாக்டருக்கு படிக்க சொல்ல, பாலா உன் விருப்பம் என்றுவிட, ஜீவா பாலாவை வழிமொழிய தென்றல் எடுத்த துறையோ மாமனை கொண்டே.

வழக்கறிங்கராவதே தன் விருப்பம் என்றுவிட்டாள் அவள். அதுவும் ஜூனியராக பாலாவிடம் தான் பணிபுரிவேன் என சொல்லிவிட அவளின் ஆசைக்கு முழு சம்மதம் தெரிவித்தான் பாலா.

“உன்னோட சாய்ஸ் கரெக்ட். பெர்பெக்ட் டிசிஷன்…” என்று சொல்ல அதற்கு மேல் என்ன வேணும்?

ஆனால் அவள் சொல்லிய ஒரே கண்டிஷன் இங்கிருந்து படிக்கமாட்டேன் என்பது தான். அதை யாராலும் மறுக்கவும் முடியவில்லை.

இனி அச்சுறுத்தல்களுக்கு அஞ்சி வாழ முடியாதே? தென்றலின் படிப்பிற்கு அவள் எதையும் தனித்தே எதிர்கொள்ள வேண்டும் என்பதால் அவன் அவளின் ஆசைப்படி வெளியூரில் படிக்க ஆவன செய்தான்.

ஜீவாவை விட்டு பிரிய மனமின்றி தென்றலும் கிளம்பும் அன்று அவளுடனே சுற்றிக்கொண்டிருக்க இருவரையும் தேற்றுவதே பாலாவின் பெரும் கடமையாக போனது.

இத்தனை மாதங்களின் ஜீவா வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருக்க தென்றல் இருந்தவரை பொழுது போவது ஒரு குறையில்லை.

ஆனாலும் சோலையம்மாள், வானதி, சில நேரங்களின் வினோதினி கூட என்று மாறி மாறி வந்துகொண்டுதான் இருப்பார்கள்.

தென்றலும் கிளம்பியிருக்க அவளை சேர்த்துவிட்டு வர பாலா சென்றுவிட்டான். வானதி வந்து துணைக்கு இருந்தவள் மறுநாள் பாலா வரவும் தான் கிளம்பி சென்றாள்.

“காலேஜ் எல்லாம் செட் ஆச்சா? அங்க எப்படி இருக்கு? பிரச்சனை எதுவும் இல்லையே? கூட யார் இருக்காங்க? அவங்க நம்பர் எல்லாம் வாங்கிட்டீங்களா?…” என பாலாவின் பின்னே சுற்றிக்கொண்டே தான் வந்தாள் ஜீவா.

ஒவ்வொன்றிற்கும் பதில் சொல்லி சொல்லியே ஓய்ந்தவன் ஒருகட்டத்தில் பொறுமையே பறந்தது.

“ரொம்ப பன்றடி, மனுஷன் அலைஞ்சு திரிஞ்சு வந்து உட்கார கூட இல்லை. குளிக்க போனாலும் பின்னாடி வர. சாப்பிடும் போதும் தொனதொனக்கிற. எத்தனை தடவை ஒரே கேள்விக்கு திரும்ப திரும்ப பதில் கேட்ப?…”

Advertisement