Advertisement

மின்னல் – 27

                கிட்டத்தட்ட நான்கரை மணி நேரம் கடந்திருந்தது ஜீவன்யா கண் விழிப்பதற்கு.

அதற்குள் இரண்டுமுறை பாலா தென்றலுடன் உள்ளே சென்று பார்த்துவிட்டு வந்தான்.

ஜீவாவின் அருகிலேயே அமர்ந்திருக்க ஆசை தான். ஆனால் தென்றலை விட்டு சென்றால் ஏற்கனவே உடைந்திருப்பவள் இன்னுமே தனியா நின்றுவிட்டோமென எண்ணிவிடுவாளோ என யோசித்து வெளியே  அவளருகிலேயே தான் இருந்தான்.

ஆனால் மனதெல்லாம் ஜீவா மட்டுமே நிரம்பி இருந்தாள். இத்தனை வருடத்தில் எதன் மீதும் ஆசை வைத்தது கிடையாது.

கிட்டத்தட்ட வாழ்க்கையின் போக்கில் தான் வாழ்ந்துகொண்டிருந்தான் எனலாம்.

அப்படி இருந்தவனின் மனதில் ஏதோ ஒரு கணத்தில் சிறுவிதையாய் விழுந்தவள் இன்று அசைக்கமுடியாத விருட்சமாக வேரூன்றி இருந்தாள்.

அவளின் பிரச்சனை அறிந்து அவளை காப்பாற்றிவிடவேண்டும் என்ற முனைப்புடன் காப்பாற்றி தனக்கென பிடித்துக்கொள்ளவேண்டும் என்ற முனைப்பை தான் அதிகமாய் அவனுள் அவன் உணர்ந்தது.

இரு கைகளையும் கொண்டு முகத்தை தேய்த்துவிட்டவன் தலையை கோதிக்கொண்டு அமர்ந்திருந்தான்.

“பாலா…” ஷேஷாவின் அழைப்பில் நிமிர்ந்தவன் அவனருகே செல்ல,

“உட்கார்…” என தனதருகே அமர்த்திக்கொண்டான்.

“இந்த வீடியோவை பார்…” என்று தனது மொபைலை காண்பிக்க அதை பார்த்து அதிர்ச்சியானான்.

அது நேரலை செய்தி தொகுப்பு. நீதிமன்றத்தில் நடந்ததையும் தற்போது அங்கே உள்ள நிலவரத்தையும் காண்பித்து செய்திகளை பகிர்ந்துகொண்டிருக்க கீழே ப்ளாஷ் ந்யூசில் கொட்டை எழுத்தில் வந்துகொண்டிருந்ததை கண்டு திகைத்தான்.

வேகமாய் சசிகரனை திரும்பி பார்க்க தென்றலிடம் என்னவோ பேசிக்கொண்டிருந்தான் அவன்.

அருகே வானதியும் இருக்க பேச்சுக்கள் இருவரிடமும் சாதாரணமாகவே இருந்தது.

அவனுக்கு தெரியுமா இல்லையா என்பதே அவனின் முகபாவனையை வைத்து கண்டுபிடிக்கமுடியவில்லை.

“நீயே சொல்லிரு. சசிகரன் கண்டிப்பா அங்க இருக்கனும்…” ஷேஷா சொல்லவும்,

“ஹ்ம்ம் ஸார். நான் பேசறேன்…” என்றவன்,

“இங்கயே கூப்பிடறேன்…” என்ற பாலா,

“சசி…” என்று சத்தமாக அழைக்க,

“வெய்ட்…” என்ற சசிகரன்,

“தென்றல் இப்ப வந்திடறேன். பார்த்துக்கோங்க வானதி…” என சொல்லி எழுந்து சென்றான்.

“சொல்லு கிருஷ்ணா…” என்று நிற்கவும் அவனிடம் செய்தியை காண்பிக்க முகம் ஒருநொடி அதிர்ச்சியையும் பின் வேதனையையும் பிரதிபலித்தது.

அந்த செய்தியில், ‘நீதிமன்றத்தில்  நடந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குறிப்பிடத்தக்கவராக வழக்கறிஞர் அரங்கநாதனும் மரணித்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது’ என்று கீழே வந்துகொண்டிருக்க மயூரன், அரங்கநாதன் இருவரின் புகைப்படங்களையும் போட்டு இன்னும் பரபரப்பை தூண்டிக்கொண்டு இருந்தனர்.

“உனக்கு போன் வந்திருக்குமே?…” என பாலா கேட்டான்.

“சைலன்ட்ல போட்டுட்டேன் வரும் போதே…”

“ஓகே ஓகே. நீ கிளம்பு சசி…” என்றான் பாலா.

“எங்க?…” என சசி கேட்கவும் ஷேஷாவும், பாலாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

“என்ன எங்கன்னு தெரியாத மாதிரி கேட்டுட்டு இருக்க?…” பாலா அதட்ட,

“போகலாம். பார்மாலிட்டீஸ் முடியட்டும்…” என்று வெறுமையுடன் கூறினான்.

“சசிகரன்…” ஷேஷாவின் அழைப்பில் அவன் பக்கம் பார்த்தவன்,

“சொல்லுங்க ஸார்…” என்றான்.

“அரங்கநாதன் எப்படி இருந்தாலும் உங்க அப்பான்றதை மாத்த முடியாது இல்லையா? நீங்க மகனா சரியா இருக்கறது உங்களுக்கு நீங்களே குடுக்கற மரியாதை. புரியும் தானே?…” என்றான் ஷேஷா.

அதற்கு மேலும் மறுத்து அங்கே இருக்க முடியாமல் தலையசைத்தவன் பாலாவை பார்த்தான்,

“நீ கிளம்பு சசி….” பாலா அவனின் கை தொட்டு ஆறுதலாய் சொல்ல,

“உனக்கு புரியலைடா கிருஷ்ணா…” என்ற சசிகரன் ஜீவா இருந்த அறையை  பார்த்துவிட்டு,

“மயூரன் என்னை கொல்ல தான் டார்கெட் பண்ணான். ஆனா என்னை காப்பாத்த தென்றல் வந்து, கடைசில ஜீவாவுக்கு இப்படி ஆகிருச்சு. ஒருவகையில இதுக்கு அப்பாவும் ஒரு காரணம்டா…” என்று கலங்கி போய் சொல்ல,

“டேய் ச்சீ, இப்படியா நினைச்சிட்டு இருக்க? அதெல்லாம் எதுவும் இல்லை. இப்ப ஜீவாவும் நார்மல் ஆகியாச்சு. நீ கிளம்பு. உன்னோட கடமையை முடிச்சுட்டு வா. நாங்க எங்கயும் போகலை…” என்று சொல்லி அவனை அனுப்பி வைத்தான் பாலா.

அதன் பின்னர் ஜீவா விழித்துவிட்டாள் என்று தெரியவும் பாலா, தென்றலுடன் ஷேஷாவும் சென்று பார்த்துவிட்டு வெளியே வந்தவன் அங்கே சரோஜா கையை பிசைந்தபடி நிற்பதை கண்டு நெருங்கினான்.

“குட் ஈவ்னிங் ஸார்…” என்று அவனை பார்த்ததும் உதறல் எடுக்க வணக்கத்தை சொன்னார். அப்போதுதான் பணிக்கு வந்திருந்தார்.

“இங்க வேலை செய்யறதுல உங்களுக்கு பெரிய பிரஸ்டீஜ் இஷூ இருக்கும் போல?…” ஷேஷா கேட்க திடுக்கிடலுடன் பார்த்தார்.

“ரொம்ப கஷ்டப்பட்டு வேலை செய்ய வேண்டாம். இங்க வர நோயாளிகளுக்கு மட்டுமில்லை, வேலை செய்யறவங்களுக்கும் மனஅமைதி ரொம்ப முக்கியம். காட் இட்…”

“ஸாரி ஸார்…” என்றார் சரோஜா.

“அடுத்த முறை ஸாரி கேட்டுடலாம்ன்னு நினைக்க வேண்டாம். ஏனா அதுக்கு அவசியம் இருக்காம போய்டும்…” என சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான்.

அவன் சென்றதும் தான் நிம்மதியானது சரோஜாவுக்கு. இனி தன் வேலையை மட்டும் பார்ப்பது என முடிவேடுத்துக்கொண்டார்.

அவருக்கும் தெரிந்தது ஜீவாவிற்கு ஏற்பட்ட விபரீதம். ஆனால் போய் பார்க்க வேண்டும் என தோன்றினாலும் எந்த முகத்துடன் பார்ப்பது என்று விலகிக்கொண்டார்.

உள்ளே ஜீவாவை பார்க்க சென்ற வானதியும் தென்றலும் இரு நிமிடம் பேசிவிட்டு பாலாவை மட்டும் அவளிடம் விட்டுவிட்டு வெளியே வந்தனர்.

பாலாவின் கண்களின் ஓரம் கசிந்த நீரை பார்த்துக்கொண்டே சிறு புன்னகையுடன் அவனை ஏறிட்டாள்.

“பாலா…” என்று அவனை அழைக்க வாய் திறந்து பேசினான் இல்லை.

ஆனால் பார்த்தான், பார்த்தான். அவளை அன்றி வேறெங்கும் விழிகளுக்குள்ளிருந்த கருமணிகள் அசையவில்லை.

தேடாமல் கிடைத்த சொந்தம் ஒன்றை கை நழுவவிட்டுவிடுவோமோ என்னும் பரிதவிப்பு இன்னும் அடங்கவில்லை.

வெளியே மற்றவர்களிடம் தைரியமாக காட்டிக்கொண்டவனால் ஜீவாவிடம் அப்படி இருக்க முடியவில்லை.

“பாலா பேசுங்க…” என்று காய்ந்த இதழ்களை ஈரமாக்கியபடி அவள் மெதுவாய் பேச தன் கை நீட்டி கன்னத்தை வருடியவன் தலையை மட்டும் அசைத்தான்.

“லாயர் ஸார்…” இன்னும் அழுத்தமாய் சிரிப்பு கூட அழைத்தாள்.

“ஹ்ம்ம்…” அவ்வளவு தான் அவனின் எதிரொலி.

“நிஜமாவே பிள்ளைபூச்சி தான் நீங்க…” என்றவளின் புன்னகை மனதை ஊடுருவியது.

“வலிக்குதா?…” அவளின் தோளில் போடப்பட்டிருந்த கட்டை காண்பித்து கேட்க,

“ஆமா…” என்றவள்,

“கொஞ்சம் வாங்கிக்கறீங்களா?…” இப்போதும் புன்னகை தான் ஜீவாவிடம்.

வலித்ததற்கான சிறு முக சுணக்கம் கூட இன்றி அவள் பேச கையை லேசாய் நீவிவிட்டான்.

அன்றைக்கு முதன் முதலில் அவளை தூக்கி சென்ற அன்றே ஜீவாவின் மன வலிமையை நேரில் பார்த்து உணர்ந்தவனாகிற்றே.

அத்தனை ஜல்லி கற்களில் உடலெல்லாம் காயம் கொண்டு விழுந்த நேரத்திலும் முயன்று எழுந்து சென்றவள் தானே? இதையும் தாங்கிக்கொள்ள தான் செய்வாள்.

அதை தன்னால் தான் ஏற்க முடியவில்லை என்பதை மனதினோரம் பொத்தி  வைத்தான்.

“பாலா…”

“சொல்லு ஜீவா…”

“என்னை திட்டுனீங்க தானே? இப்ப பேசுங்க…” என்றாள் கிண்டலாக அவள்.

அந்த கனத்த சூழ்நிலையை மாற்ற விரும்பினாள். பாலாவை அப்படி பார்க்க அவளுக்கு பிடிக்காமல் போக அவளின் முயற்சியை படித்தவனாக தானும் உடல் தளர்ந்து இலகுவானான்.

இனி இந்த கஷ்டங்கள் எல்லாம் இத்துடன் களைந்து நிம்மதியாகிவிடவேண்டும் என்ற ஆசைகொண்ட இரு நெஞ்சங்களும் பிராத்தனை செய்தது மனதிற்குள் உயிர் உருக.

“கேட்டு திட்டு வாங்கற நீ? இப்ப திட்டி என்ன செய்ய? அதான் இங்க இப்படி வந்து படுத்திட்டியே? குணமாகி எழுந்து வா. வகையா கவனிச்சிருவோம்…” என்றான் லேசாய் வலிக்காமல் அவளின் கன்னம் கிள்ளி.

“அப்போ இப்போ?…”

“மாத்திரை மருந்து கவனிக்கும். நல்லா சாப்பிட்டு ரெஸ்ட் எடுத்துட்டு வா…” என்றான் அவளின் தலை கோதி.

“பாலா கோவமா?…” என்றால் மீண்டும்.

“இல்லடா. என்ன? எனக்கு என்ன கோவம்?…” மறுப்பாய் பதில் கூற,

“அம்மாவுக்காக தென்றலை காப்பாத்த முயற்சி பண்ணேன். ஆனா உங்களை யோசிக்கலைன்னு கோவம் வரலையா?…” என கேட்க மௌனமானான்.

வந்ததே. வந்த கோபமும் தீராத வலியை தந்தது என்பது தான் உண்மை. தன்னை இவள் நினைக்கவில்லையா? இவளின்றி தன் வாழ்க்கை என ஏன் அந்த நொடி தோன்றாமல் போனது என மனது கதறியது உண்மை தானே?

Advertisement