Advertisement

“ஜீவாவையும், தென்றலையும் வீட்டுக்கு அனுப்பிறலாமே? நான் கூட்டிட்டு போய் விட்டு போகட்டுமா?…” என சசி கேட்க,

“இல்லடா, இருக்கட்டும். பவன் இருக்கான். இன்னும் ரெண்டு செக்யூரிட்டி இருக்காங்க. இன்னைக்கு என்னவோ சரியில்லை. இந்த கேஸ் முடிஞ்சதும் கிளம்பிருவோம்…” என்றான் பாலா.

சாப்பிட்டு முடிக்கவும் அந்த வாகனம் உள்ளே வரவும் சரியாக இருந்தது.  அதை பார்த்துக்கொண்டே பாலா கையை கழுவிவிட்டு திரும்ப போன் வரவும் சசிகரனிடம் சொல்லிவிட்டு பவனிடம் சென்று நின்றான்.

அழைப்பு ஷேஷாவிடம் இருந்துதான். வெளியே வந்தவுடன் பாலா அழைத்திருக்க  வேறொரு இணைப்பில் இருந்தவன் அப்போது எடுக்காமல் இப்போது அழைத்துவிட்டான் பாலாவிற்கு.

“சொல்லு பாலா…” என்றதும் நடந்ததை சொல்ல,

“ஹ்ம்ம், மீட்டிங்க்ல இருந்தேன். அதான் பவன் மெசேஜ் மட்டும் ரிசீவ் ஆச்சு…”

“இப்ப தான் வந்திருக்காங்க. கீழ இறங்கி நின்னிட்டு இருக்காங்க ஸார்…”  பாலா சொல்ல,

“பவன் பக்கத்துல தானே? செக்யூரிட்டிஸ் எங்க இருக்காங்க?…”

“இங்க தான் ஸார். ஜீவாவும், தென்றலும் காருக்குள்ள இருக்காங்க…” என சொல்லி பவனிடம் திரும்பினான்.

ஒரு நொடிதான் என்ன நடந்தது என உணரும் முன் துப்பாக்கி சத்தத்தில் ஆட்கள் இங்கும் அங்குமாய் தெறித்து ஓட புழுதி பறந்தது.

அங்கே மக்களோடு மக்களாக ஊடுருவி இருந்த சில கூலிப்படைகளும் ஆட்களும் அங்கிருந்தவர்களுடன் கலந்து நின்றவர்களும் காவலர்களை அடித்து மயூரனை காப்பாற்ற முயன்றனர்.

நடந்த களேபரத்தில் பொதுமக்களும், அங்கிருந்தவர்களும் திசைக்கொருபுறமாய் ஓடினார்கள்.

“தென்றல்…” என்ற அலறலுடன் பாலா தென்றலை நோக்கி ஓட கண்ணிமைக்கும் நேரத்தில் தென்றல் காப்பாற்றப்பட்டு ஜீவா உடலில் துப்பாக்கிக்குண்டு துளைக்கப்பட்டது.

நிலைமை கட்டுக்குள் வர வைக்க காவலதிகாரிகளும் தங்களின் அதிகாரத்தை  காண்பிக்க வேண்டிய நேரமாகிவிட யார் யாரால் சுடப்பட்டனர் என்றே அறியாதளவுக்கு நிகழ்ந்துவிட்டிருந்தது அந்த அசம்பாவிதம்.  

சாப்பிட்டு முடித்து கை கழுவ என்று தென்றல் காரை விட்டு இறங்க உடன் ஜீவாவும் வந்தாள். அவர்களுக்கு பாதுகாப்பாக சசிகரனும்.

அவர்களை காப்பாற்ற என்று வந்தவனை குறி வைத்திருந்த துப்பாக்கியில் சசிகரன் நூலிழையில் உயிர்பிழைக்க எங்கிருந்து என்று திரும்பி பார்த்தால் மயூரன் நின்றிருந்தார் தூரத்தே.

இதை கொஞ்சமும் எதிர்பாராத சசிகரன் தடுமாறி கீழே விழுந்திருக்க சற்று தள்ளி இருந்த தென்றல் அவனை தூக்கிவிட வர அடுத்த குண்டும் அவனை நோக்கி பாய்ந்தது.

சசிகரனும், தென்றலுடன் உருண்டு தப்பிக்கும் முன் ஜீவா பதறி போய் அவ்விடத்தில் அவளை காப்பாற்றவென வந்ததும் அவளின் வலது தோள்பட்டையில் துளைத்தது இரண்டு குண்டுகள்.

அதற்குள் மயூரனின் கையில் இருந்த துப்பாக்கியை கைப்பற்ற முயல தப்பித்து போக பார்த்தவரின் காலில் சுட முயன்ற காவல் அதிகாரியின் கால் இடறி மயூரனின் நெற்றியை துளைத்தது துப்பாக்கி ரவை.

சிறிது நேரத்தில் அத்தனைபேரின் மூச்சையும் நிறுத்தும் வண்ணம் நடந்துவிட்ட சம்பவத்தில் கூலிப்படையில் சிலரும் மயூரனும் பலியாகி இருக்க சில நிமிடங்களில் நிலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

ஜீவாவை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல கண்ணை மூடி மூடி திறந்துகொண்டே தான் இருந்தாள் ஜீவா.

“ஏன் ஜீவா இப்படி பண்ணின? உன்னை யாருடி வெளில வர சொன்னா?…” என்று அத்தனை கோபமும், வலியும் பாலாவின் முகத்தில்.

தென்றல் அழுதுகொண்டே வர அவளை சமாதானம் செய்தபடி வந்தான் சசிகரன்.

அவர்களுடன் பவனும் இருக்க ஷேஷாவிடம் விஷயத்தை சொல்ல உடனடியாக மருத்துவமனையில் ஆப்பரேஷன் தியேட்டரை தயார் நிலையில் வைக்கும் படி சொல்லி அவனும் அங்கே வந்துவிட்டான் இவர்களுக்கு முன்பே.

ஆம்புலன்சில் அவளுக்கு முதலுதவி வழங்கிக்கொண்டிருக்க முடிந்தளவு ரத்தம் செல்லாமல் இருக்க கவனித்தனர்.

“சொன்னேன்ல கவனமா இருன்னு. கேட்டியாடி? என் உயிரை எடுக்கன்னே வந்தியா?…” என அத்தனை பேச்சு பேசினான்.

“பாலா, அம்மாவுக்கு தென்றல்னா ரொம்ப இஷ்டம். அவளை தத்தெடுக்க வந்தவங்க என்னை விட்டு தென்றல் இருக்க மாட்டான்னு சொல்லவும் என்னையும் சேர்த்து தத்தெடுத்துட்டு போனாங்க. நாங்க அங்க இருந்து கிளம்பும் போதும் அம்மா கடைசியா சொன்னது தென்றலை பார்த்துக்கோன்றது தான்…”

திணறி திணறி உயிரை கண்களில் தேக்கிக்கொண்டு அவனிடம் பேசிக்கொண்டே வந்தள ஜீவா.

எங்கே மயங்கிய பொழுதே அப்படியே தன்னுயிர் போய்விட்டால் என்ற பயத்துடன்.

“தென்றலை பார்த்துக்க நாங்க இல்லையா? என்ன சொன்னாலும் நீ செஞ்சது…” என்று சொல்லி அவளின் முகத்தை பிடித்துக்கொண்டே பேசிக்கொண்டே வந்தான்.

“என்ன பண்ணுதுடி? பேசிட்டே இரு. இப்ப ஹாஸ்பிட்டல் வந்திரும்…” என்று அவளிடம் பேச்சுக்கொடுத்துக்கொண்டே தான் வந்தான்.

நீதிமன்றத்தில் என்ன நடந்தது என்றெல்லாம் கவனிக்கும் நிலையில் அவன் இல்லை.

பவனுக்கு அத்தனை வருத்தம் பாதுகாப்பிற்கு தாங்கள் இருந்தும் இப்படி நடந்துவிட்டதே என்று.

அதிலும் பாலாவை பார்க்க பவன், சசிகரன் இருவருக்குமே தாள முடியவில்லை. இத்தனை வருடத்தில் இப்படி ஒரு பாலாவை பார்த்ததில்லை.

எதிலும் தைரியமாய் இருப்பவன் முகமே சொல்லியது அவன் எத்தனை உடைந்து போயிருக்கிறான் என்பதை.

மருத்துவமனைக்கும் வந்துவிட இவர்களுக்காக தயாராக இருந்த ஸ்ட்ரக்சரை வைத்துக்கொண்டு காத்திருக்க ஆம்புலன்ஸ் வரவும் முதலில் தென்றலும், சசிகரனும் இறங்கவும் கவனித்தாள் வானதி.

அதன் பின்னர் பாலா ஜீவன்யாவை தூக்கிக்கொண்டு ஸ்ட்ரக்சரில் கிடத்த கண்ணாடி வழியே பார்த்தவளுக்கு அதிர்ச்சியானது.

“ஜீவா…” என்று அன்றைக்கு தன்னுடன் இருந்த பெண்ணிடம் ஒரு பார்வை பார்த்துவிட்டு தன்னிடத்தை விட்டு ஓடி வர,

“வானதிக்கா…” என்று அழுதுகொண்டே தென்றல் வந்து அவளை கட்டிக்கொண்டாள்.

“என்னாச்சு? என்னாச்சு?…” என கேட்க அங்கே பதில் சொல்லும் நிலையில் யாருமில்லை.

தென்றலும் வானதியை பதட்டமும், பயமுமாய் கெட்டியாக பிடித்துக்கொண்டாள்.

தன்னால் தானே ஜீவாவிற்கு இப்படி? தான் இறங்கியிறாவிட்டால் இது நடந்திருக்காதே என்பதே அவளை நடுங்க செய்தது.

அதிலும் பாலா தன்னை கவனிக்கவும் இல்லை, ஜீவாவை அத்தனை பேசியதை பார்த்திருந்தவளுக்கு, ஜீவா பேசியதை கேட்டும் எதையும் ஜீரணிக்க முடியவில்லை.

“பாலா கூட இருங்க. போய்டாதீங்க…” என ஜீவா உள்ளே செல்லும் பொழுதும் அவனின் கையை இறுக்கமாய் பிடித்துக்கொண்டாள்.

“மயங்கவே இல்லையா இந்த பொண்ணு?…” என அங்கிருந்த மருத்துவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

“ஜீவா உனக்கொன்னும் ஆகாது. கண்டிப்பா எதுவும் ஆகாதுடி. நான் கூடவே இருக்கேன். எங்கயும் போகலை…” என்று சொல்ல அவள் கையை பிடித்துக்கொண்டே அதற்கு மேலும் விழிக்க முடியாமல் மயங்கியிருந்தாள்.

மருத்துவர்களுக்கோ ஷேஷாவும் அவ்விடத்தில் இருக்க இன்னும் பதட்டம் கூடியது.

அதுவே ஜீவா எத்தனை முக்கியம் என்பதை அவர்களுக்கு உணர்த்தியது. மொத்த மருத்துவமனையும் பரபரப்பானது.

பாலா துவண்டு ஓரிடத்தில் அமர நடுங்கிக்கொண்டே அவனருகே சென்றாள் தென்றல்.

“மாமா…” என்று அழைக்கவும் அவள் பக்கம் திரும்பினான்.

“நான் தான், ஸாரி, ஸாரி மாமா…” என,

“ஏன்டா? அதெல்லாம் இல்லை. சரியாகிடும்…” என்றான் கோபமின்றி.

“என்னால தான் அக்காவுக்கு இப்படி ஆச்சு. நான் இறங்கலைன்னா அக்காவுக்கு எதுவுமில்லை. என்னால தான் எல்லா கஷ்டமும். இப்ப உங்களுக்குமே. நான் வேணா எங்கையாவது போயிடட்டுமா?…” என்று உடைந்து போய் கதற,

“தென்றல் என்ன பேசற?…” என ஒரு கையால் ஆறுதலாய் அணைத்துக்கொண்டான்.

“உன்னால எதுவும் இல்லை. என்னோட கேர்லஸ்ன்னு கூட சொல்லலாம். சரியாகிடும். வந்திருவா பாரு…” என்று சொல்லி அவளை தேற்ற இன்னும் அழுதுகொண்டே தான் இருந்தாள் அவள்.

“தென்றல் இங்க வா…” என வானதி கூட தென்றலை அழைத்து பார்த்துவிட்டாள்.

பாலாவின் கையை பிடித்திருந்தவள் அவனை விட்டு எங்கும் நகர்வதாய் இல்லை.

“இருக்கட்டும் வானதி, ரொம்ப பயந்துட்டா. நான் பார்த்துக்கறேன்…” என்று சொல்லிவிட்டான் பாலா.

வானதியாலும் அங்கிருந்து அவர்களை அப்படி விட்டு செல்ல மனமின்றி அங்கேயே நின்றவள் பின் தனக்கு விடுப்பு சொல்லிவிட்டு வந்து தென்றலருகே இருந்துகொண்டாள்.   

ஷேஷாவும் அங்கேயே அமர்ந்துவிட்டான். பவன் என்ன நடந்தது என்று அவனிடம் விவரிக்க கேட்டுக்கொண்டே தலையசைத்தான்.

இந்த வழக்கு தான் தான் பாலாவை அழைத்து ஒப்படைத்தது. எப்போதும் செய்வது தான். இது இன்னும் பெரிதாகிற்றே.

அவனுக்கு ஷக்தி அழைத்து விஷயத்தை கேட்க அவளிடம் மெல்லிய குரலில் நடந்ததை விவரித்துக்கொண்டு இருந்தான் ஷேஷா.

அறுவைசிகிச்சை முடிந்து மருத்துவர்கள் வெளியே வரவும் அத்தனைபேரும் பரபரப்பாக எழுந்து நிற்க பாலாவையும் ஷேஷாவையும் மாறி மாறி பார்த்தனர்.

“வாட்?…” என்றான் ஷேஷா அவர்கள் இப்படி நின்றதில் கோபமுற்று.

“ஆப்பரேஷன் சக்ஸஸ் ஸார். குண்டை வெளில எடுத்துட்டோம். ஸ்டிச்சஸ் போட்டிருக்கு…” என ஷேஷா, பாலா இருவரையும் பார்த்துக்கொண்டே கூறினார்கள்.

“ஜீவா எப்படி இருக்கா?…” என்றான் பாலா.

“ஷி இஸ் சேஃப். மயக்கத்தில இருக்காங்க. மயக்கம் மூணுமணிநேரம் ஆகலாம் அதற்கு மேலையும் ஆகலாம். அரைமணி நேரம் கழிச்சு உள்ள போய் பாருங்க…” என்று சொல்ல பாலாவிற்கு போன உயிர் வந்ததை போல இருந்தது.

பாலாவின் தைரியம் மீண்டுவிட்டது அவனது முகத்தில் தெரிந்தது. ஆனாலும் சிறு அஜாக்கிரதையால் எத்தனை வலி? உயிருக்கு போராட்டம்?

கண்ணை மூடி தன்னை நிதானித்தவன் சுவற்றில் சாய்ந்து நிற்க தென்றலுக்கு அப்போது தான் மூச்சே வந்தது.

“அக்காவுக்கு எதுவுமில்லை. அக்காவுக்கு எதுவுமில்லை…” என்று சொல்ல,

“அவ்வளோ தான். அழாத. அப்பறம் ஜீவா வந்து திட்டுவா தென்றலை அழ வச்சியான்னு…” என அவளின் கண்ணீரை வானதி துடைத்துவிட அனைவருமே பார்த்துக்கொண்டு நின்றனர்.

“பாலா…” ஷேஷாவின் அழைப்பில் திரும்பியவன்,

“ஓஹ், ஸார்…” என்று அவன் நிமிர்ந்து நிற்க,

“ரிலாக்ஸ் மேன். ரிலாக்ஸ். நான் இங்க தானே இருக்கேன்…” என்று அவனோ தோளோடு அணைத்துக்கொண்டு நின்றான் ஷேஷா.

“எஸ்…” என்றவனின் முகத்தில் சிறு புன்னகை அரும்பியது.

“ஜீவாவை பார்க்க ரெடியா இரு…” என சொல்ல சிரிப்புடன் ஆமோதித்தான் பாலா.

Advertisement